50 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த கடுகளவு சிறிய உயிரினம் விஞ்ஞானிகளை வியக்கவைப்பது ஏன்?

500 மில்லியன் ஆண்டு பழமையான லார்வா நுண்ணுயிர் புதைபடிமம்

பட மூலாதாரம், Emma J Long

    • எழுதியவர், விக்டோரியா கில்
    • பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி

52 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, கடுகளவு சிறிதான ஓர் அரிய வகையிலான நுண்ணுயிரனத்தின் உடலின் உட்புற அமைப்பினை மிக நுண்ணிய அளவில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த புதைபடிமத்தை சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்துள்ளனர்.

பிரசித்திபெற்ற அறிவியல் சஞ்சிகையான ‘நேச்சர்’-இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளில், அந்த உயியினத்தின் மிக நுண்ணிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றிய தெளிவான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

இந்த உயிரினம், இன்றைய பூச்சிகள், சிலந்திகள், மற்றும் நண்டுகளின் மூதாதையாக ஆரம்ப காலத்தில் தோன்றிய முதல் உயிரினம். இந்த ஆய்வு அதன் உடலின் உட்பகுதி தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மிக அரிதான கண்டுபிடிப்பு

இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளரான டாக்டர் மார்ட்டின் ஸ்மித், இந்தப் புதைபடிவம் மிக அரிதானது என்றார். இது ஏனெனில், அந்த நுண்ணுயிரி முழுமையாக வளராத ல்ஆர்வா பருவத்தில் இருந்தபோது புதைபடிவமாக மாறியிருக்கிறது.

“இந்த லர்வா புதைபடிவத்தை ஆராய்வதன் மூலம் இவை எப்படி வளர்ந்து முதிர்ந்த வடிவங்களாக ஆயின என்பதை அறிந்துகொள்ள முடியும். அவை இளமையாக இருந்த போது எப்படி இருந்தன என்பதை காண வேண்டியது மிகவும் முக்கியம். இது, காலப்போக்கில் இவை எப்படி உடல் வடிவத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றன என்பதை அறிய உதவும்,” என்று அவர் கூறினார்.

“ஆனால், இந்த லார்வாக்கள் அளவில் மிகவும் சிறியவை, எளிதில் உடையக்கூடியவை, புதைபடிவ நிலையில் இவற்றைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அரிது,” என்கிறார்.

லார்வா புதைபடிமம்

பட மூலாதாரம், Emma J Long

படக்குறிப்பு, இந்த புதைபடிவமானது இயற்கையால் மிகச்சரியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஊசி முனையில் வைத்து ஆராய்ச்சி

டாக்டர் ஸ்மித் குழுவினர், வட சீனாவில் உள்ள மிகப் பழமையான பாறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது இந்தப் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.

"அந்தப் பாறைகள் சுமார் 50 கோடி (500 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை. அவற்றில் சிறிய புதைபடிவங்கள் இருந்தன. பழைய, கடினமான அழுக்குக் குவியலில் இந்தப் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது,” என்கிறார்.

"சீனாவில் எங்களோடு பணிபுரிபவர்களிடம் இந்தப் பழைய பாறைப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் அதை அமிலத்தில் கரைத்து இந்த புதைபடிவங்களைப் பிரித்தெடுக்கின்றனர்,” என்கிறார் டாக்டர் ஸ்மித்.

யுனான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, சிறிய பாறைத் துண்டுகளில் இருந்து புதைபடிவங்களைப் பிரித்து எடுக்க நிறைய ஆண்டுகள் செலவிட்டனர்.

டாக்டர் ஸ்மித் சீனா சென்றிருந்த போது இந்தக் குறிப்பிட்டப் புதைபடிவத்தை நுண்ணோக்கியின் கீழ் ஆராய்ச்சி செய்தார். அப்போது ​​​​அது மிகவும் முக்கியமானது என்று அவர் அறிந்தார். அதை இன்னும் உன்னிப்பாக ஆய்வு செய்ய, இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லலாமா என்று கேட்டார்.

விஞ்ஞானிகள் அந்தப் புதைபடிவத்தை ஒரு சிறிய ஊசியின் நுனியில் வைத்து அதன் உள்ளே பார்க்க மிகவும் வலுவான எக்ஸ்-ரேக்களைப் பயன்படுத்தினர். இதற்காக ஆக்ஸ்போர்டில் உள்ள டயமண்ட் லைட் சோர்ஸ் (Diamond Light Source) என்ற சிறப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தினார்கள். அப்போது தான் புதைபடிவத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்று அவர்கள் கண்டறிந்தனர்.

டாக்டர் ஸ்மித், “புதைபடிவத்தின் உள்ளே இருக்கும் அற்புதமான விஷயங்களைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டோஂ,” என்றார்.

பிறகு ஆராய்ச்சிக் குழுவினர் அதன் முப்பரிமாணப் புகைப்படங்களை உருவாக்கி, அதனுடைய மிகச்சிறிய மூளைப் பகுதிகள், செரிமானச் சுரப்பிகள், கால்கள், கண்கள் மற்றும் நார்மபுகளின் தடையங்களைக் கண்டனர்.

500 மில்லியன் ஆண்டு பழமையான நுண்ணுயிர் புதைபடிமம்

பட மூலாதாரம், Martin R Smith/Emma J Long

படக்குறிப்பு, ஆய்வளார்களால் உயிரினத்தின் உடற்கூறியல் மூலம் செரிமான பாதை, மூளை உட்பட குறிப்பிட்ட பகுதிகளை பிரித்து காண முடிந்தது

ஆரம்பகால உயிரினத்தின் மூளை எப்படி இருந்தது?

இந்த உயிரினத்தின் மூளை இருக்கும் இடம், பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் மூளையின் ஆரம்பத் தோற்றம் எப்படி இருந்தது என்பதைக் கண்டறிய முடிந்தது. இது இன்றைய பூச்சிகள், சிலந்திகள், மற்றும் நண்டுகளின் தலை எவ்வாறு உருவாகத் தொடங்கியிருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் அறிய இது உதவியது. பின்னாட்களில் இந்த நவீன உயிரினங்களின் உணர்கொம்புகள் (antennae), கண்கள், வாய், போன்ற இணை உறுப்புக்கள் பரிணாம வளர்ச்சி எப்படி நடந்தது என்பதையும் இது விளக்குகிறது.

ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வின் இணை-ஆசிரியர் டாக்டர் கேத்தரின் டாப்சன், “இந்தப் புதைபடிவமானது இயற்கையால் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

நிறைய பாஸ்பரஸ் உள்ள கடல் தண்ணீரில் இந்த உயிரினம் சிறிது காலம் வாழ்ந்து, இறந்திருக்கலாம் என்று டாக்டர் ஸ்மித் கூறினார். இது அதன் உடலை புதைபடிவமாகப் பாதுகாக்க உதவியிருக்கலாம்.

“புதைபடிவத்தின் மீது நிரம்பியிருந்த பாஸ்பரஸ், இதனைப் படிகம்போலக் கடினமானதாக உருவாக்கியிருக்கலாம்,” என்கிறார் டாக்டர் ஸ்மித்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)