விண்வெளிக்குச் செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர் - யார் இவர்?

குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா

பட மூலாதாரம், Social Media

படக்குறிப்பு, இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா

இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, விரைவில் நாட்டின் இரண்டாவது விண்வெளி வீரராகும் வாய்ப்பை பெறவிருக்கிறார்.

இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா இணைந்து செயலாற்றவிருக்கும் கூட்டு விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தில் கேப்டன் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு எந்நேரமும் இவர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லலாம்.

ஒருவேளை கேப்டன் சுக்லா இந்த ஆராய்ச்சித் திட்டத்திற்காக விண்வெளி சென்றார் எனில், ராகேஷ் சர்மாவிற்கு அடுத்து கடந்த 40 ஆண்டுகளில் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் எனும் பெருமை அடைவார். 1984-ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் போது ராகேஷ் சர்மா விண்வெளி சென்றிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரு ககன்யான் விமானிகள்

ஆக்சியம்-4 திட்டத்திற்காக (Axiom-4 Mission) வெள்ளிக்கிழமை அன்று கேப்டன் சுபான்ஷு சுக்லா (39) உடன் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் (48) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதன்மை விண்வெளி வீரராகவும், ஒருவேளை சுக்லா செல்ல முடியாத நிலை ஏற்படும் எனில், அவருக்கு பதில் மாற்று விண்வெளி வீரராக நாயர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், இந்திய விமானப்படை, கேப்டன் சுக்லா மற்றும் கேப்டன் நாயருக்கு தனது வாழ்த்துகளை சமூல இணையதளமான எக்ஸ்-வில் பதிவிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இஸ்ரோ - நாசாவின் கூட்டு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இஸ்ரோ-வின் மனித விண்வெளி விமான மையம் (Human Space Flight Center (HSFC), நாசாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஆக்சியோம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் (Axiom Space Inc., USA) இணைந்து விண்வெளி விமான ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் பெயர் ஆக்சியம்-4 ஆகும்," என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், "இந்தத் திட்டத்தில் பங்குபெறுவதற்காக இரு ககன்யான் விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு முதன்மை விண்வெளி வீரர், மற்றும் முதன்மை வீரர் செல்ல முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில், அதற்காக ஒரு மாற்று வீரரையும் தேர்ந்தெடுத்துள்ளது தேசிய திட்ட ஒதுக்கீடு வாரியம் (National Mission Assignment Board). முதன்மை வீரராக கேப்டன் சுபான்ஷு ஷுக்லாவும், மாற்று வீரராக பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் தேர்வாகி உள்ளனர்," என்று தெரிவித்திருக்கிறது.

இஸ்ரோ செய்திக்குறிப்பு

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு

ககன்யான் திட்டம்

விண்வெளி வீரர்களுடன் சேர்த்து இந்த விண்கலம் தேவையான பொருட்களையும் தாங்கிச் செல்லும்.

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இந்தியாவின் முதல் விண்வெளி திட்டமான ககன்யானில் சுக்லா மற்றும் நாயர் ஏற்கனவே பங்குபெற்றுள்ளனர்.

இதன் கீழ் நான்கு இந்திய விமானப்படை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த விண்கலம் அடுத்த ஆண்டு விண்வெளியில் ஏவப்படும்.

இந்தத் திட்டத்தில் பங்குபெறுவதற்காக அடுத்த 8 வாரங்கள் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் பாலகிருஷ்ணன் நாயர் பயிற்சியில் பங்கெடுத்துக்கொள்ள உள்ளனர். ககன்யான் திட்டத்திற்குத் தேர்வான நான்கு வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்சியம் திட்டம்

பட மூலாதாரம், AXIOM

படக்குறிப்பு, ஆக்சியம் -3 திட்டத்தில் பயணித்த விண்வெளி வீரர்கள்

ஆக்சியம்-4 திட்டம்

தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஆக்சியம் ஸ்பேஸ்-இன் நான்காவது திட்டம் இது. இந்தத் திட்டத்தின் மூலம், குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார்.

இந்தத் திட்டம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து துவங்கவுள்ளது. இந்த விண்கலம் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் உடன் இணைந்து ஏவப்படும். குரூப் கேப்டன் சுக்லா உடன், போலந்து, ஹங்கேரி, மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களும் இந்த விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க உள்ளனர்.

இந்தத் திட்டம், கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தமான திட்டமாகும்.

இன்னும் ஆக்சியம்-4 திட்டம் துவங்கும் தேதியை நாசா நிர்ணயம் செய்யவில்லை. ஆயினும், இணையதளத்தில் இந்தத் திட்டம் அக்டோபர் 2024-க்கு முன் துவங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோதி, சுபான்ஷு ஷுக்லா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நரேந்திர மோதியுடன் குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா

யார் இந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா?

உத்தரபிரதேசத்தின் லக்னௌ நகரைச் சேர்ந்தவர் 39 வயதான குரூப் கேப்டன் சுபான்ஷுசுக்லா.

2006-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்ட ஃபைட்டர் பைலட் ஷுக்லா 2,000 மணிநேரம் வானில் பறந்த அனுபவம் உள்ளவர்.

சுக்லா இந்திய விமானப்படையின் ஃபைட்டர் விமானங்களான Sukhoi-30 MKI, MiG-21S, MiG-29S, Jaguar, Hawks Dorniers மற்றும் N-32 போன்றவற்றை இயக்கியுள்ளார்.

சுக்லா விமானப்படை அகாடமியில் இருந்து 'Sword of Honour' விருது பெற்றுள்ளார். இவர் பிரிவு-1 விமானம் இயக்கும் பயிற்றுவிப்பாளராகவும், சோதனை விமானியாகவும் இருந்துள்ளார்.

ககன்யான் திட்டம் துவங்குவதற்கு முன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுக்லா மற்றும் நாயரை அனுப்புவதன் நோக்கம் என்னவெனில், இதன் மூலம் இவர்கள் முன்னனுபவம் பெறுவர், அது ககன்யான் திட்டத்திற்கு உதவும் வகையில் இருக்கும் என்பதே ஆகும்.

ககன்யான், நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ககன்யான் பற்றி கேட்டறிந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

ககன்யான் திட்டம் என்றால் என்ன?

இந்தத் திட்டத்திற்காக நான்கு இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் கீழ், 3 விண்வெளி வீரர்கள் 400 கிலோமீட்டர் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பப்பட்டு, அடுத்த 3 நாட்களில் பூமிக்கு திரும்புவர்.

இந்தத் திட்டத்திற்குத் தயாராவதற்காக இஸ்ரோ தொடர்ச்சியான பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறது.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான சோதனையில், ராக்கெட்டில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும், குழுவினர் பாதுகாப்பாக வெளியேறலாம் என தெரியவந்தது.

ககன்யான் திட்டத்திற்காகத் தேர்வுசெய்யப்பட்ட விமானப்படை வீரர்கள் குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா, குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் மற்றும் குரூப் கேப்டன் அங்கத் பிரதாப்.

தேர்வு செய்யப்பட்ட சமயத்தில், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத், வீரர்களின் சீருடையில் தங்கத்திலான இறகு வடிவ பேட்ஜ்-களைப் பொருத்தி, அவர்களை 'இந்தியாவின் கௌரவம்' என்று குறிப்பிட்டனர்.

அப்போது பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "இவர்கள் வெறும் நான்கு நபர்கள் அல்ல, 140 கோடி இந்திய மக்களின் கனவினை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் சக்தி இவர்கள். 40 வருடங்களுக்குப் பிறகு ஒரு இந்தியர் விண்வெளிக்கு செல்லவிருக்கிறார். இது நமக்கான நேரம், நம்முடைய கவுண்டவுன், நம்முடைய ராக்கெட்," என்று கூறியிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)