கேரளாவில் வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு அடிக்கடி வருவது ஏன்?

வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்? அங்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

கேரளாவில் 150 பேரை பலிகொண்ட நிலச்சரிவுப் பேரிடர், வயநாடு, இடுக்கி, மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் ஆகிய பகுதிகளுக்குப் புதிதல்ல என்றாலும் அந்த நிலப்பரப்பு ஏன் தொடர்ச்சியாக இத்தகைய பேரிடர்களை எதிர்கொள்கிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்தப் பகுதிகளில், கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

கடந்த 2018ஆம் ஆண்டு, கேரளா மொத்தமும் பெருவெள்ளத்தை எதிர்கொண்ட போது, வயநாடுதான் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தது. நிலச்சரிவு, அணைகளில் இருந்து உபரிநீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் எனப் பேரிடரின் வீரியம் கூடுதலானது.

வயநாடு மாவட்ட மண் பாதுகாப்பு அலுவலக பதிவுகளின்படி, 2018 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை சுமார் 200 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இவை மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் பதிவுகள் மட்டுமே. காடுகளுக்குள் ஏற்பட்டவை பதிவு செய்யப்படவில்லை என்று கேரள மாநில பல்லுயிர் வாரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயநாட்டின் முண்டகை, சூரல்மலை, மலப்புரத்தின் நிலாம்பூர் ஆகிய பகுதிகள் அப்போது அதிக சேதங்களைச் சந்தித்தன. இப்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவிலும் இந்த மூன்று பகுதிகளும் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளன.

வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏன்?

வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்? அங்கு என்ன பிரச்னை?

மேற்கு வயநாடு முழுக்க மலைப்பகுதியாக இருப்பதாலும் அப்பகுதியிலுள்ள மண் இயல்பாகவே கெட்டித்தன்மையற்று மிருதுவாக இருப்பதாலும் அங்கு எளிதில் நிலச்சரிவு ஏற்பட்டுவிடும் என்கிறார் தாவரவியல் ஆய்வாளர் பேராசிரியர் நரசிம்மன்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது அதிக பருவமழையைப் பெறும் மாநிலமாக கேரளா இருக்கிறது. புவியியல் ரீதியாக, கேரளா அதன் மேற்கே அரபிக்கடல் மற்றும் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலை என்ற வகையில் அமைந்திருப்பதால், அதிகளவிலான மழைப்பொழிவைப் பெறுகிறது.

இதனால் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில், வயநாடு, இடுக்கி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பகுதிகளில் நிலச்சரிவு அதிகளவில் ஏற்படுகிறது.

தனித்தன்மை வாய்ந்த மழைப்பொழிவு, பாலக்காடு கணவாயால் பிரிக்கப்பட்ட செங்குத்தான சரிவு போன்ற கட்டமைப்புகளின் காரணமாக, அங்குள்ள மலைத்தொடர் பகுதிகள் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரிடர்களை எதிர்கொள்கின்றன.

“அடிப்படையில் பருவகாலம் முழுக்கவே மிதமான ஆனால் தொடர்ந்து பரவலாகப் பெய்து கொண்டிருக்கும் மழை, ஈரப்பதம் நிறைந்த, குளுமையான காலநிலை என்பதே முன்னர் வயநாடு, இடுக்கி பகுதிகளின் தன்மையாக இருந்தது. ஆனால், அது முற்றிலுமாக மாறி, இப்போது பருவகாலம் முழுக்கப் பெய்யும் மழை ஒன்றிரண்டு நாட்களில் பெய்துவிடுகிறது. இந்த மாற்றம் அதிக நிலச்சரிவுகளுக்கு வித்திடுகிறது,” என்று விளக்கியுள்ளார் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் மரியம் ஜக்காரியா.

மழைப்பொழிவுக்கும் நிலச்சரிவுக்கும் என்ன தொடர்பு?

வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்? அங்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images

இந்திய வானிலை ஆய்வு மையத் தரவுகளின்படி, கேரள மாநிலத்தில் ஜூலை 1 முதல் ஜூலை 30 வரை சராசரி அளவிலேயே மழை பெய்துள்ளது. வயநாடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த 30 நாட்களில் சராசரியாக 13.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய கேரளா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நிலவியலாளர் சஜின் குமார், “இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், இந்த ஒரு மாத சராசரியில் பெரும்பகுதி மழை மொத்தமும் ஒன்றிரண்டு நாட்களிலேயே பெய்துவிட்டது,” என்றார்.

வயநாடு மாவட்டத்தின் கல்பெட்டாவில் அமைந்துள்ள சூழலியல் மற்றும் காட்டுயிர் உயிரியல் ஆய்வுக்கான ஹியூம் மையத்தின் இயக்குநர் விஷ்ணுதாஸ் அதை ஆமோதிக்கிறார். அவரது கூற்றுப்படி, நீண்டகால அளவில் சராசரியாகப் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துவிடுவதுதான் இங்கு முக்கியப் பிரச்னை.

இதற்கு சான்றாக கடந்த 2019ஆம் ஆண்டு பேரிடரின்போது புத்துமலா பகுதியில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவைக் கூறலாம். கல்பெட்டாவில் இருந்து 20 கி.மீ தொலைவில் மேப்பாடிக்கு அருகே அமைந்துள்ளது புத்துமலா கிராமம். அங்கு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று கடுமையான வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்? அங்கு என்ன பிரச்னை?

அந்த நிலப்பரப்பின் மையப்பகுதியில், மலையின் மீது சில நூறு மீட்டர் உயரத்தில் தொடங்கிய நிலச்சரிவு சுமார் 2 கி.மீ வரை நிகழ்ந்தது. இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் கடலோர வேளாண் ஆய்வு மையத்தைச் சேர்ந்த நீரியல் விஞ்ஞானியான முனைவர்.சுஜீத் தேசாய் இதுகுறித்த தனது ஆய்வுக்கட்டுரையில், இந்தச் சம்பவத்தில் மொத்தமாக 20 ஹெக்டேர் நிலப்பரப்பு மொத்தமாகக் கீழே சரிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேரிடருக்கு முந்தைய 24 மணிநேரத்தில் அப்பகுதியில் சுமார் 500 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.

இப்போதைய பேரிடரிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. “வயநாட்டில், 48 மணிநேரத்தில் 572 மி.மீ மழை பொழிந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மிதமான மழைப்பொழிவும் ஒருபுறம் இருந்துகொண்டே இருந்தது. இதனால் மலைப்பகுதி நன்கு ஈரப்பதம் கொண்டு நிறைவுற்றிருந்தது. ஆகவே, மலைச்சரிவுகளால் மேலதிக நீரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரியத் தொடங்கிவிட்டன,” என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் விஷ்ணுதாஸ்.

சஜின் குமாரின் கூற்றுப்படி, இங்குள்ள மண் அடர்த்தி மிக்கதாக இருப்பதால், நிலச்சரிவு ஏற்படும்போது அதனால் ஏற்படும் சேதங்களும் அதிகமாக இருக்கும்.

பேரிடர்களுக்கு வித்திடும் மனிதத் தலையீடுகள்

வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்? அங்கு என்ன பிரச்னை?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பருவமழையின் போது ஏற்படும் கடுமையான நிலச்சரிவுகளுக்குக் காரணமாக இத்தகைய பருவ காரணிகள் மட்டுமின்றி, மனிதத் தலையீடுகளையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வயநாடு, இடுக்கி ஆகிய பகுதிகளின் சிக்கலான நிலவியல் கட்டமைப்பில் கூடுதலாக மனிதத் தலையீடுகளும் ஒரு காரணியாக இருப்பதால், நிலச்சரிவு பாதிப்புகள் மேலும் தீவிரமடைகின்றன என்கிறார் ஹியூம் மையத்தின் இயக்குநர் விஷ்ணுதாஸ்.

வல்லுநர்களைப் பொறுத்தவரை, காலநிலை நெருக்கடியால் அதிகரிக்கும் அதீத பருவ நிகழ்வுகளோடு, திட்டமிடப்படாத வளர்ச்சி போன்ற மனிதக் காரணிகளும் இணைந்துகொள்வதால் பேரிடர்களின் எண்ணிக்கையும் அவற்றின் தீவிரமும் அதிகரிக்கின்றன. வயநாட்டில் கடந்த 2018, 2019, 2020 பேரிடர்கள் மட்டுமின்றி தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவுப் பேரிடரிலும் இந்தக் காரணிகள் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறுகிறார் விஷ்ணுதாஸ்.

ஒரு நிலவியலின் தன்மையை மாற்றியமைக்கும் போது, அதன் இயற்கையான பாதுகாப்புகள் வலுவிழக்கின்றன. தீவிர வானிலை நிகழ்வுகளின் போது அவை நிலச்சரிவு போன்ற பாதிப்புகளுக்கு எதிர் செயலாற்றும் திறனை இழந்துவிடுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, பேராசிரியர் மாதவ் காட்கில் மேற்குத்தொடர்ச்சி மலை குறித்த தனது ஆய்வறிக்கையில் இத்தகைய அபாயங்கள் உள்ள பகுதிகளை சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான மனித நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்? அங்கு என்ன பிரச்னை?

மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகள்

  • மாதவ் காட்கில் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கை, மேற்கு மலைத்தொடர் முழுவதையுமே மூன்று சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறது. சூழலியல் மண்டலம் 1-ல் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், சூழலியல் மண்டலம் 2-ல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் சூழலியல் மண்டலம் 3-ல் முக்கியமான சூழலியல் பகுதிகள். இதில், முதல் இரண்டு சூழலியல் மண்டலங்களில் மொத்த மலைத்தொடரின் 75 விழுக்காடு பகுதி வருகிறது.
  • மண் அரிப்பிற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் ஒற்றைப் பயிர் சாகுபடியைக் கைவிடவேண்டும்.
  • காலாவதியான அணைகள், அனல்மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதைத் தடுக்கவேண்டும்.
  • காட்டு நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குத் திருப்புதல், நதிகளின் போக்கை திசைதிருப்புதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.
  • அகழ்விடங்கள், சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் அனுமதிக்கவே கூடாது.
  • கேரளாவில் பாயும் சாலக்குடி நதியில் மாநில மின் வாரியம் திட்டமிட்டுள்ள அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
  • மலைத்தொடரின் பாதுகாப்பு கருதி, மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கவேண்டும்.
  • அந்த ஆணையம் மலைத்தொடரில் வாழும் மக்களையும் உட்படுத்தி, அவர்களின் ஆலோசனைகள், பங்கெடுப்புகளோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
  • பழங்குடி மக்களை காட்டிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர்த்து, காடுகள் பாதுகாப்பில் அவர்களுடைய பங்கெடுப்பை உறுதி செய்து அதற்கு ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும்.
  • இந்திய வன உரிமைச் சட்டத்தை மேற்கு மலைத்தொடர் முழுக்க முறையாக அமல்படுத்தவேண்டும்.

மாதவ் காட்கில் அறிக்கையை ஏற்க மறுப்பு

மாதவ் காட்கில் ஆய்வறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் கேரளா, கர்நாடகா உட்பட மேற்குத்தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாநிலங்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

அப்படிச் செய்வது அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதிக்கும் என்பதன் அடிப்படையில் அதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கர்நாடக அரசு கூறியது.

ஆனால், இதுகுறித்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதே காடழிப்பு, சுரங்கம், கட்டுமானங்கள் என சூழலியலுக்கு அபாயகரமான மனித நடவடிக்கைகள் இப்பகுதியில் அதிகரிக்க வழிவகுப்பதாக பிபிசி இந்தியிடம் பேசிய கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் சஜீவ் கூறுகிறார்.

இதே கருத்தை எதிரொலிக்கிறார் தாவரவியலாளர் நரசிம்மன். “இத்தகைய செயல்பாடுகள் ஏற்கெனவே எளிதில் நிலச்சரிவு ஏற்படும் வகையிலான மண்ணின் தன்மையை மேலும் தளர்த்துகின்றன. மலைப்பகுதியின் உறுதியற்ற தன்மைக்கு அவை இட்டுச் செல்கின்றன,” என்கிறார்.

அவரது கூற்றுபடி, மேற்கு தொடர்ச்சி மலையின் இயல் தாவரங்களுடைய வேர்கள் ஆழமாகச் சென்று மண்ணை கெட்டியாகப் பிடித்து வைக்கும் திறன் கொண்டவை. “ஒரு நிலம் அவற்றை இழந்தால், கடும் மழைப்பொழிவால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, மண்சரிவு ஏற்படும். மாதவ் காட்கில் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே இத்தகைய பேரிடர்களின் வீரியத்தை மட்டுப்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.”

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)