இந்த தவளை மட்டும் தலைகீழாக நின்று முட்டையிடுவது ஏன் தெரியுமா?

வித்தியாசமாக இனச் சேர்க்கையில் ஈடுபடும் தவளை இனம் : அந்தமான் தீவுகளில் கண்டறியப்பட்ட ஆச்சரியம்
படக்குறிப்பு, புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரின் நினைவாக பெயரிடப்பட்ட `சார்லஸ் டார்வின்’ தவளை இனம், அந்தமானில் உள்ள சில தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய அந்தமான் தீவுகளில், தனித்துவமான தவளை இனம் ஒன்று, இனச்சேர்க்கையின் போது தலைகீழாக நின்று முட்டையிடும் வழக்கத்தை கொண்டிருப்பதை ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரின் நினைவாக பெயரிடப்பட்ட இந்த 'சார்லஸ் டார்வின்' தவளை இனம், அந்தமானில் உள்ள சில தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.

தனித்துவமான இந்த தவளை இனத்தை பற்றி ஆய்வு மேற்கொண்ட இந்தியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில், “ஆண், பெண் சார்லஸ் டார்வின் தவளைகள், மரத்தில் உள்ள துளைகளின் சுவர்களில் தலைகீழாகத் தொங்குகின்றன, அவற்றின் உடல் பகுதி முற்றிலும் தண்ணீருக்கு வெளியே உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

தலைகீழாக தொங்கிய நிலையிலேயே இந்த தவளை இனம் முட்டையிடுகிறது. அதன் பிறகு, அந்த முட்டைகள் கீழே உள்ள தண்ணீரில் விழுகின்றன, அங்கு அவை டாட்போல் (tadpole) நிலையை எட்டி சுதந்திரமாக நீந்தத் தொடங்கும்.

“இது மிகவும் விசித்திரமான நடத்தை. தலைகீழாக முட்டையிடுவது இந்த தவளை இனத்தின் மிகவும் தனித்துவமான தன்மையை பிரதிபலிக்கிறது. வேறு எந்தத் தவளை இனமும் மரத்துளைகளின் உட்புற சுவர்களில் தலைகீழான தோரணையில் முட்டையிட்டதாக இதுவரை கண்டறியப்படவில்லை” என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்டி பிஜு. இவர் தற்போது ஹார்வர்ட் ராட்கிளிஃப் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.

"இந்த ஆராய்ச்சி மூலம் தனித்துவமான தவளை இனம் அதன் சூழல்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதும் அவை உயிர் வாழ்வதற்கு எந்த மாதிரியான வாழ்விடங்கள் அவசியம் என்பதையும் புரிந்து கொள்வதற்கு இந்த கண்டுபிடிப்பு அடிப்படையானது" என்று அவர் விவரித்தார்.

உலகின் கிட்டத்தட்ட அனைத்து 7,708 தவளை இனங்களும் நீர் மற்றும் பிற நிலப்பரப்பு வாழ்விடங்களில் இனச்சேர்க்கை செய்து முட்டையிடுகின்றன.

அவை வெளிப்புறக் கருவுறுதல் முறைகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்படி பெண் தவளை இனச்சேர்க்கையின் போது முட்டைகளை இடுகிறது, அதே நேரத்தில் ஆண் தவளை அவற்றை கருத்தரிக்க விந்தணுக்களை வெளியிடுகிறது.

டெல்லி பல்கலைக்கழகம், இந்திய விலங்கியல் ஆய்வு, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மினசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மற்றும் அமெரிக்க உயிரியலாளர்கள் அடங்கிய ஆராய்ச்சிக் குழு மூன்று ஆண்டுகளாக டார்வின் தவளைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகளின் பருவமழை காலகட்டத்தின் போது, 55 இரவுகளுக்கு அந்தமான் தீவுகளில் முகாமிட்டு, சார்லஸ் டார்வின் தவளைகளின் ரகசிய இனப்பெருக்க நடத்தையை ஆய்வு செய்தனர்.

ஆராய்ச்சிக் குழுவின் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு, அறிவியல் இதழான ப்ரெவியோரா (Breviora)- இன் சமீபத்திய பதிப்பில் வெளிவருகிறது.

வித்தியாசமாக இனச் சேர்க்கையில் ஈடுபடும் தவளை இனம் : அந்தமான் தீவுகளில் கண்டறியப்பட்ட ஆச்சரியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்தமான் தீவுகளின் வெப்பமண்டல மழைக்காடுகள் தான் `சார்லஸ் டார்வின்’ தவளை இனத்தின் தாயகம்

பெண் தவளைகளை இனச்சேர்க்கைக்கு அழைக்க சிக்கலான ஒலிகளை எழுப்பும் ஆண் தவளை

இந்த விசித்திர இனங்களின் தனித்துவம் அவை எவ்வாறு இணைகின்றன என்பதோடு முடிவதில்லை - அவற்றின் இனச்சேர்க்கைக்கான அழைப்புகள் கூட வித்தியாசமாக தான் உள்ளது.

பெரும்பாலான தவளை இனங்களின் இனச்சேர்க்கை அழைப்பு ஒலிகள் எளிமையாக இருக்கும். மேலும் ஒரே வகையான ஒலியை தான் எழுப்பும். இருப்பினும் சில தவளை இனங்கள் வித்தியாசமான அழைப்பு (complex) பாணியைக் கொண்டுள்ளது.

தங்கள் இனச்சேர்க்கை ஆர்வத்தில், சார்லஸ் டார்வின் ஆண் தவளைகள் பெண் தவளைகளை கவர்ந்திழுக்க மூன்று வகையான "சிக்கலான" அழைப்பு ஒலிகளை உருவாக்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

"ஆக்ரோஷமான" அழைப்புகள் (aggressive) : பெண் தவளைகளை கவர்ந்து இனச்சேர்க்கையில் ஈடுபடுத்த ஆண் தவளைகள் போட்டியிடும். அவ்வாறான போட்டியில் வெற்றிபெறும் ஆண் தவளையிடம் பிற தவளைகள் சண்டையிடத் தொடங்குகின்றன - உதைத்தல் மற்றும் கைகள் மற்றும் கால்களை பயன்படுத்தி பாக்ஸிங் செய்வது மற்றும் உடல் பாகங்கள் அல்லது முழு தலையையும் கடிப்பது போன்ற ஆக்ரோஷமான நடத்தைகளில் அவை ஈடுபடுகின்றன.

பெண் தவளைக்காக சண்டை போடும் ஆண் தவளைகள்

ஆண் தவளை வெற்றிகரமாக ஒரு பெண் தவளையை இனச்சேர்க்கையில் ஈடுபடுத்தினால், அருகில் இருக்கும் இளம் ஆண் தவளைகள் இனச்சேர்க்கை செய்யும் ஜோடியுடன் சண்டையிடும். அவை அந்த ஜோடியின் உடல்களுக்கு இடையில் தங்கள் தலையை செருக முயற்சி செய்யும், அவற்றை பிரிக்க முயற்சிக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

"நாங்கள் கவனித்தவரை, இந்த சண்டையில் தவளைகளின் உயிருக்கு ஆபத்து நேரிடுவதில்லை. அரிதாகவே மரணங்கள் நிகழும். இந்த இனத்தில் காணப்பட்ட ஆக்ரோஷ நடத்தையை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அவை சண்டையிடுகையில் உடல் உறுப்புகள் மற்றும் முழு தலையையும் கூட நீண்ட நேரம் கடித்துக் கொள்கின்றன. இது எங்களை ஆச்சர்யப்படுத்தியது" என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய பிஜு கூறுகிறார்.

"மேலும், தவளை இனங்களின் இனச்சேர்கைக்கான சண்டைகள் பெரிய திறந்த நீர்நிலைகளில் நிகழ்கின்றன. ஆனால் இந்த தவளைகள் சிறிய அளவிலான மழைநீரால் நிரம்பிய ஒரு சிறிய மரத்தின் துவாரத்தில் சண்டையிடுகின்றன.” என்று விளக்கினார்.

"இந்த தவளைகள் இத்தகைய தனித்துவமான உத்திகளை எவ்வாறு உருவாக்கியது என்பது ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.

ஆக்ரோஷமான இளம் ஆண் தவளைகளுக்கு இனச்சேர்க்கை ஜோடியை இடைமறித்து முட்டையிடுவதைத் தடுக்கக்கூடும் என்பதால், இனப்பெருக்கத்தில் ஈடுபடும் தவளைகள் தலைகீழாக இனச்சேர்க்கை செய்யும் நடத்தையை செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.

வித்தியாசமாக இனச் சேர்க்கையில் ஈடுபடும் தவளை இனம் : அந்தமான் தீவுகளில் கண்டறியப்பட்ட ஆச்சரியம்
படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் தவளைகளின் நடத்தையை ஆய்வு செய்ய உயிரியலாளர்கள் 55 இரவுகள் தீவுகளில் முகாமிட்டனர்

தவளைகள் பிளாஸ்டிக் கலன்களில் முட்டையிடும் அவலம்

ஆய்வில் அங்கம் வகித்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாங்கன் கூறுகையில், "இந்த கண்டுபிடிப்பு, விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாத நிலநீர் வாழ்வன உயிரினங்களின் இனப்பெருக்க நடத்தைகளின் வியக்கத்தக்க பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. குறிப்பாக வெப்பமண்டலமான ஆசியாவின் அறியப்படாத பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்தின் தன்மையை காட்டுகின்றன” என்றார்.

புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரின் பெயரால் அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் தவளை இனம், அந்தமான் தீவுகளில் உள்ள சில தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது, இது வேறு எங்கும் காணப்படுவதில்லை. இது அசாதாரணமான தன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பிட்ட வன வாழ்விடங்களில் மட்டுமே வசிக்கிறது. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) "பாதிக்கப்படக்கூடியது" (vulnerable) என பட்டியலிடப்பட்டுள்ளது.

காடுகளின் மனித நடத்தைகளால் இடையூறு இருக்கும் பகுதிகளில், செயற்கையான தளங்களில் இந்த தவளைகள் இனப்பெருக்கம் செய்வதை விஞ்ஞானிகள் கவனித்தனர். காடுகளுக்கு அருகின் இருக்கும் தாவர நர்சரிகளின் பிளாஸ்டிக் பைகள், காடுகளில் குப்பைகளாக கொட்டப்பட்ட மழை நீரால் நிரம்பி இருக்கும் கொள்கலன்கள் போன்றவற்றில் தவளைகள் முட்டையிடுகின்றன.

"தவளைகள் இனப்பெருக்கத்திற்காக குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் கொள்கலன்களை பயன்படுத்துவது ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது. நாம் அதன் காரணங்களையும் நீண்டகால விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும், மேலும் இந்த உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு முக்கியமான இயற்கையான இனப்பெருக்க தளங்களைப் பாதுகாப்பதற்கான வழிகளை வகுக்க வேண்டும், ”என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சோனாலி கார்க் கூறுகிறார்.

வாழ்விட இழப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களுக்கான போட்டி காரணமாக போதுமான இனப்பெருக்க தளங்கள் இல்லாததால், அத்தகைய இயற்கைக்கு மாறான இடங்களில் தவளைகள் இனப்பெருக்கம் செய்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)