ஹஜ் சென்ற முதல் இந்திய பெண் - 3 தலைமுறை முகலாய பேரரசர்களுடன் வாழ்ந்த இவர் யார்?

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், JUGGERNAUT

படக்குறிப்பு, குல்பதன், இந்தியாவின் முதல் முகலாயப் பேரரசர் பாபரின் மகள்.
    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்தி

முகலாயப் பேரரசின் முதல் மற்றும் ஒரே பெண் வரலாற்றாசிரியரான குல்பதன் பேகம், ஹுமாயூன்-நாமா’ என்னும் புத்தகத்தில் மூன்று தலைமுறை முகலாய பேரரசர்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதில் சில முக்கியமான சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த கட்டுரை..

குல்பதன் பேகம்.. இந்தியாவின் முதல் முகலாய பேரரசர் பாபரின் மகள், அவரது மகன் ஹுமாயூனின் ஒன்றுவிட்ட சகோதரி மற்றும் பாபரின் பேரனான அக்பருக்கு அத்தை.

பாபர், ஹுமாயூன் மற்றும் அக்பர் ஆகிய மூன்று முகலாய பேரரசர்களின் ஆளுமையை பற்றிய ஒரு பார்வையை வெளி உலகிற்கு வழங்கிய ஒரே பெண் வரலாற்றாசிரியர் இவர்தான்!

அக்பர் தனது அத்தை குல்பதன் பேகத்திடம் தனது தந்தை மற்றும் தாத்தாவைப் பற்றி எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் எழுதப்பட்டது தான் `ஹுமாயூன்-நாமா’. குல்பதன் எழுதிய இந்த புத்தகத்தில் அவரது ஆச்சர்யமளிக்கும் நினைவாற்றல் திறன் பிரதிபலித்தது.

`ஹுமாயூன்-நாமா’ புத்தகத்தில் ஹுமாயூன் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் குல்பதன் தெளிவாக விவரித்தார். இந்த புத்தகத்தின் விவரிப்புகளை, அபுல் ஃபசல் தான் எழுதிய 'அக்பர் நாமா' புத்தகத்தில் பயன்படுத்தி கொண்டார்.

குல்பதன் இந்த வரலாற்று சிறப்புமிக்கப் புத்தகத்தை எழுதும் போது அவருக்கு வயது 64. 1529 இல் காபூலில் இருந்து இந்தியா வந்தபோது, ​​அவருக்கு 6 வயதுதான். அவர் தன் சகோதரர் ஹுமாயூன் நாடு கடத்தப்பட்டதை நேரில் பார்த்தார்.

ராஜ வம்ச சிற்றூர்தியில் பயணம் செய்து, ஆபத்தான கைபர் கணவாய் மற்றும் சிந்து நதியை கடந்த முதல் முகலாயப் பெண் இவர் தான். அதன் பின்னர் தில்லியை அடைந்த குல்பதன், தன் தந்தை பாபருடன் சேர்ந்தார். அவர் தன் தந்தையை செல்லமாக 'பாபா' என்று அழைப்பது வழக்கம்.

ஹுமாயூனுக்காக தன் உயிரைக் கொடுக்கத் துணிந்த பாபர்

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜஹீருதீன் பாபர்

குல்பதனின் அன்புத் தந்தை பாபர் நீண்ட காலம் உயிர் வாழவில்லை. பாபர் தனது மகன் ஹுமாயூனை மிகவும் நேசித்தார். ஒருமுறை ஹுமாயூன் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இதனால் மனமுடைந்து போன பாபர், தனது அரசவையில் அனைவரிடமும் ஆலோசனைக் கேட்டார்.

இந்த சம்பவத்தை பற்றி குல்பதன் தன் புத்தகத்தில் விவரித்துள்ளார்: "அரசவையின் மதிப்புமிக்க பிரபுவான மிர் அப்துல் பாக்கா, பாபருக்கு ஓர் ஆலோசனையை வழங்கினார். மருத்துவர்களின் அனைத்து வைத்தியங்களும் தோல்வியுற்றால், நோய்வாய்ப்பட்டுள்ள ஹுமாயூனின் மிகவும் மதிப்புமிக்க பொருள் தானமாக வழங்கப்படும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யச் சொன்னார்.

பாபர் சற்றும் யோசிக்காமல், 'ஹுமாயூனின் மதிப்புமிக்க பொருள் நான் தான். அவருக்காக நான் என்னையே தியாகம் செய்வேன்.'' என்றார்.

அதன் பிறகு, ஹுமாயூனின் படுக்கையை பாபர் மூன்று முறை சுற்றிவந்து , கடவுளிடம் பிரார்த்தனை செய்தார், "உயிரைக் கொண்டு ஹுமாயின் உயிரைக் காப்பாற்ற முடியுமெனில், என் உயிரை அவருக்காக தியாகம் செய்வேன்” என்றார்.

"அன்றே ஹுமாயூன் உடல்நலம் தேறி, கண்களைத் திறந்தார். படுக்கையில் இருந்து எழுந்தார். ஹுமாயூனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட அதே சமயம், பாபரின் உடல்நிலை மோசமடைந்தது. அவர் அடுத்த மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார், இறுதியில் அவரின் உயிர் பிரிந்தது.” இவ்வாறு குல்பதன் தன் புத்தகத்தில் விவரித்திருந்தார்.

இரண்டு நாட்களுக்கு அரசராக்கப்பட்ட பிஷ்டி

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாபரின் மகன் ஹுமாயூன்

ஜூன் 1539 இல், முகலாயப் பேரரசர் ஹுமாயூன் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் வீரர் ஷெர்ஷா சூரி இடையே `சௌசா போர்’ நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஹுமாயூனின் இடது கையில் காயம் ஏற்பட்டது. அவரது வீரர்களில் ஒருவர் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து கொண்டு ஹுமாயூனை கங்கையை நோக்கி அழைத்துச் சென்றார்.

ஹுமாயூன் குதிரையை ஆற்றில் இறக்கி கடந்து செல்ல முயன்றார், ஆனால் அது அவரை தண்ணீரில் விழச் செய்தது. அப்போது ஒரு நாடோடி பிஷ்டி, விலங்கு தோலால் ஆன நீர் சேமிப்பு பையை சுமந்தபடி ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். ஹுமாயூனை பார்த்ததும், அவர் உடனடியாக மன்னரே என்று சொல்லி, ஆற்றைக் கடக்க அவருக்கு உதவினார்.

குல்பதன் இந்த சம்பவத்தை பற்றி விவரிக்கையில், "இந்த உதவிக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஹுமாயூன் பிஷ்டியை இரண்டு நாட்கள் தனது அரச சிம்மாசனத்தில் உட்கார வைத்தார். அவரது சகோதரர் கம்ரான், ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதி, இந்த முடிவு தவறானது என தனது எதிர்ப்பை தெரிவித்தார். ஷெர்ஷா உடன் போர் மூண்டிருக்கும் சூழலில் இதைச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கம்ரான் கேள்வி எழுப்பினார். ஆனால் ஹூமாயூன் சகோதரரின் பேச்சைக் கேட்காமல் பிஷ்டியை அரியணையில் அமர்த்தினார்.

இந்தப் போரில், ஹுமாயூனின் மனைவி பேகா பேகமை ஷெர்ஷா சிறைபிடித்தார்.

கே.ஆர்.குவனுங்கோ (K.R. Quanungo) தனது 'ஷெர்ஷா அண்ட் ஹிஸ் டைம்ஸ்' என்ற புத்தகத்தில், "ஷெர்ஷா பேகா பேகமை கண்டதும் குதிரையிலிருந்து கீழே இறங்கி மரியாதையுடன் நடந்து கொண்டார். முகலாயப் பெண்களை மரியாதையுடன் நடத்துமாறு தனது வீரர்களுக்குக் கட்டளையிட்டார்." என்று இந்த சம்பவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போரின்போது, ஹுமாயூனின் ஆறு வயது மகள் அகிகா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

அக்பரின் பிறப்பு பற்றிய கணிப்பு

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், ATLANTIC

அபுல் ஃபசல் 'அக்பர்நாமா' புத்தகத்தில், "ஹுமாயூனுக்கு எதிராக ஷெர்ஷா போர் தொடுத்த சமயத்தில், ​​ஹுமாயூனின் இளைய சகோதரர் கம்ரான் தன்னை பஞ்சாப் ஆளுநராக ஆக்குமாறு ஷெர்ஷாவுக்கு ஒரு செய்தி அனுப்பினார். ஷெர்ஷா அந்த வாய்ப்பை ஒரு உத்தியாக கருதி கம்ரானின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்." என்று விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குல்பதன் இந்த சம்பவத்தை பற்றி தனது புத்தகத்தில் வேறுபட்ட விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

"கம்ரான் ஷெர்ஷாவிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. ஹுமாயூனே முன்வந்து ஷெர்ஷாவிடம் லாகூர் வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். 'உனக்காக நான் ஹிந்துஸ்தான் முழுவதையும் விட்டுவிட்டேன்' என்று எழுதியிருந்தார். ஆனால் ஷெர்ஷா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 'நான் உங்களுக்காக காபூலை விட்டு வந்துள்ளேன். நீங்கள் அங்கு செல்லலாம்’ என்று ஷெர்ஷா பதில் அனுப்பினார். ”

குல்பதன் ' ஹுமாயூன் நாமா'வில் அக்பரின் பிறப்பைப் பற்றிய கணிப்பையும் எழுதியுள்ளார், "ஹுமாயூன் ஒரு நாள் சோர்வில் உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு நாள் கனவு கண்டார். ஒரு ஃபக்கீர் கனவில் தோன்றி ஹுமாயூனிடம், சோகமாக இருக்காதே. நான் அகமது. இன்னும் சில நாட்களில் கடவுள் உனக்கு ஆண் குழந்தையை கொடுப்பார். நீங்கள் அவருக்கு ஜலாலுதீன் அக்பர் என்று பெயரிடுவீர்கள்.’ என்றாராம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஃபக்கீரின் தீர்க்கதரிசனம் உண்மையாகிவிட்டது.

ஹுமாயூனிடமிருந்து குல்பதன் பிரிந்தார்

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்பர்

ஷெர்ஷாவின் தாக்குதலுக்குப் பிறகு, ஹூமாயூன் அவரை கன்னோஜில் எதிர்கொண்டார். ஆக்ராவை விட்டு வெளியேறுகையில், ​​ஆக்ராவின் அன்றாட நிர்வாகப் பொறுப்பை அவர் தனது தம்பி கம்ரானிடம் ஒப்படைத்தார். ஆனால் ஹுமாயூன் கங்கையைக் கடந்தவுடன், கம்ரான் லாகூருக்குத் தப்பிச் செல்ல முடிவு செய்தார்.

குல்பதன் இதனை தன் புத்தகத்தில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்.

"நாங்கள் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் கம்ரானின் உத்தரவு வந்தது. நான் அவருடன் லாகூருக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அவர் பல அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும் வேலையாட்களையும் தனது வாகனத்தில் லாகூருக்குச் வரும்படி வற்புறுத்தினார்."

குல்பதன் அந்த இடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் கண்ணீர் சிந்தினார். இங்கிருந்து போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் குல்பதன் முடிவை கம்ரான் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அவர் ஹுமாயூனுக்கு ஒரு கண்டன கடிதம் எழுதினார், "நீங்கள் என்னை உங்களிடமிருந்து இப்படி பிரிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை." என்று எழுதினார்.

ஹுமாயூன் உடனே பதில் கடிதம் எழுதினார், "தற்போது நாங்கள் ஷெர்ஷாவுக்கு எதிராக போரை முன்னெடுத்துள்ளோம். இந்த போர் முடிந்தவுடன், நான் உங்களை இங்கு அழைத்து கொள்வேன்." என்று எழுதியிருந்தார்.

குல்பதன் லாகூரை அடைந்த நேரத்தில், ஹுமாயூன் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் உயிருடன் தப்பித்துவிட்டார்.

ஹமீதாவுடன் ஹுமாயூன் திருமணம்

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்பர்

இந்த சமயத்தில் ஹுமாயூன் ஹமிதா பேகத்தை மணந்தார். 1542 இல் அவர்களுக்கு அக்பர் பிறந்தார். ஹுமாயூனுடனான ஹமீதாவின் திருமணம் குறித்து குல்பதன் மிகவும் சுவாரஸ்யமாக விவரித்துள்ளார்.

"அந்த காலகட்டத்தில் ஒரு பேரரசர் அல்லது இளவரசரின் திருமண விருப்பத்தை எந்த பெண்ணும் நிராகரிக்கமாட்டார்கள், ஆனால் 14 வயதான ஹமீதா பல வாரங்களாக ஹுமாயூனின் திருமண விருப்பத்தை ஏற்கவில்லை. இருப்பினும், ஒருகட்டத்தில் ஹுமாயூனை மணக்க அவர் ஒப்புக்கொண்டார். 40 நாட்களாக ஹூமாயூனின் திருமண விண்ணப்பத்தை எதற்காக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஹமீதாவே என்னிடம் சொல்லி மகிழ்ச்சி அடைந்தார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூவரும் காந்தஹாரை அடைந்தபோது, ​​ஹுமாயூனின் சகோதரர் அஸ்காரி அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அங்கிருந்து ஹுமாயூன் தனது 42 ஆதரவாளர்கள் மற்றும் அவரது மனைவி ஹமீதாவுடன் முன்னேறி சென்றார். அவர் அக்பரை இரண்டு மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சில நம்பகமான வீரர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டார். இறுதியில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இரானின் ஷாவின் உதவியுடன் காபூலை அடைவதில் ஹுமாயூன் வெற்றி கண்டார்.

தன் சகோதரரை தண்டித்த ஹுமாயூன்

ஹுமாயூனின் சகோதரர் கம்ரான் கைது செய்யப்பட்டார். அவரை என்ன செய்வது என்ற விவாதம் நடந்தது.

குல்பதன் இந்த சம்பவம் பற்றி தனது புத்தகத்தில், "ஹுமாயூன் தனது இளைய சகோதரர் கம்ரானைப் பற்றி தனது அரசவையில் இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்டார்.

அரசவையினர் அவரிடம் ஒருமித்த குரலில் - பேரரசராகவோ அல்லது அரசனாகவோ இருக்கும்போது, உறவுகளை பற்றி யோசிக்கக் கூடாது. அவர் உங்கள் சகோதரனாக இருப்பதால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. உங்கள் சகோதரரிடம் நீங்கள் தாராள மனதுடன் இருந்தால், அரசர் பதவியில் இருந்து விலகிவிடுங்கள் என்று சொன்னார்கள். கம்ரான் நாட்டுக்கு துரோகம் செய்திருப்பதால் அரசவையில் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது. ஹுமாயூன் தன் சகோதரர் கம்ரானின் கண்களை எடுக்க உத்தரவிட்டார்.

ஹுமாயூனின் மனைவி ஹமீதா தனது மகன் அக்பரை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபோது, ​​ஒரு சுவாரஸ்யமான காட்சியை ஹுமாயூன் நிகழ்த்தினார். குல்பதன் இதுகுறித்து விவரிக்கையில்,

"அனைத்து அரசப் பெண்களையும் ஒரே மாதிரியான ஆடைகள் மற்றும் துருக்கிய தொப்பிகளை அணியுமாறு ஹுமாயூன் கேட்டுக் கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இளவரசர் அக்பர் தனது தாயை அடையாளம் காண முடியுமா என்பதை சோதிக்கவே இந்த திட்டம். பல பெண்கள் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து அமர்ந்திருக்கும் அந்த அறைக்கு அக்பரை வேலைக்காரர் அழைத்துச் சென்றார். அக்பர் ஓடிவந்து நேராக தனது தாயின் மடியில் அமர்ந்தார். அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், JUGGERNAUT

படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து இறந்த ஹுமாயூன்

ஹுமாயூனால் இந்தியாவை நீண்ட காலம் ஆள முடியவில்லை.

பார்வதி ஷர்மா தனது 'அக்பர் ஆஃப் ஹிந்துஸ்தான்' புத்தகத்தில், ஹுமாயூன் தனது விருந்தினர்களை சிவப்புக் கற்களால் கட்டப்பட்ட 'ஷேர் மண்டலின்' மாடியில் சந்திப்பது வழக்கம் என்று எழுதியுள்ளார். ஹுமாயூனின் நூலகமும் அங்கேதான் இருந்தது. மொட்டை மாடியில் மக்களைச் சந்திப்பதன் நோக்கம் என்னவென்றால், அருகிலுள்ள மசூதியில் நமாஸ் செய்ய வருபவர்கள் ஹுமாயூனைப் பார்க்க முடியும்.

ஹுமாயூன் இறப்பு தொடர்பான விவரத்தை இவ்வாறாக பார்வதி ஷர்மா விவரித்துள்ளார், “ஒரு நாள் ஹுமாயூன் நூலகத்திலிருந்து படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். அருகிலிருந்த மசூதியிலிருந்து அஸான் சத்தம் கேட்டது. அந்த நொடியே அவர் சாஷ்டாங்கமாக மண்டியிட்டு `சஜ்தா’ செய்ய முயன்றார், ஆனால் அவரது கால் அவரது பைஜாமாவில் சிக்கி, அவர் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காதில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. படுக்கையில் இருந்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஜனவரி 27 அன்று ஹுமாயூன் உயிரிழந்தார்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், Getty Images

குல்பதனின் ஹஜ் யாத்திரை

அக்பர் பேரரசரான பிறகு, அவரது அத்தை குல்பதன் புதிதாக கட்டப்பட்ட ஃபதேபூர் சிக்ரி அரண்மனையில் வசிக்கத் தொடங்கினார். குல்பதன் உயரம் குறைவாகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தார்.

அக்பர் அவருக்கு முகலாய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முதிர் பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய உயர் மரியாதையைக் கொடுத்தார். முதல் இரண்டு முகலாயப் பேரரசர்களுடன் வாழ்ந்த குல்பதன், இப்போது தன் மருமகனின் அரண்மனையில் வசிக்கிறார்.

சிறுவயது முதலே பல்வேறு பயணங்களின் அனுபவம் பெற்ற குல்பதன் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடிவெடுத்தார்.

ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்த முதல் இந்திய பெண் இவர்தான். அக்பரிடம் குல்பதன் அனுமதி கேட்டார். அக்பர் தனது அத்தையின் முடிவை ஆதரித்தார். குல்பதன் யாத்திரை செல்ல பெண்களை திரட்டினார். அவரது அணியில் மொத்தம் 11 பெண்கள் இருந்தனர்.

பிரபல வரலாற்றாசிரியர் ரூபி லால் குல்பதனின் வாழ்க்கை வரலாற்றான 'வாகபாண்ட் பிரின்சஸ், தி கிரேட் அட்வெஞ்சர்ஸ் ஆஃப் குல்பதன்' (Vagabond Princess : The Great Adventures of Gulbadan) என்னும் புத்தகத்தில் இந்த யாத்திரை பற்றி எழுதி இருக்கிறார்.

“செப்டம்பர் 1576 இல், குல்பதன் பேகத்தின் தலைமையில் முகலாயப் பெண்கள் குழு இரண்டு படகுகளில் சூரத்திலிருந்து ஹஜ் புறப்பட்டது. அவரிடம் நன்கொடையாக சேகரிக்கப்பட்ட ஆறாயிரம் ரூபாய் இருந்தது. அவரது குழுவில் சில ஆண்கள் இருந்தனர். ஏனென்றால் அந்தக் காலத்தில் ஆண்கள் இல்லாமல் பெண்கள் பயணிப்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று.

ஆனால் இந்த பயணத்தின் போது குல்பதன் தான் அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுத்தார். குல்பதன் மக்காவில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அவர் அங்கு வந்த ஒரு வருடத்திற்குள், அந்த இடத்தை ஆண்ட சுல்தான் முராத் III, குல்பதனையும் அவரது தோழிகளையும் அங்கிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் குல்பதன் கேட்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1580 இல் மீண்டும் வெளியேற்றும் உத்தரவு வழங்கப்பட்டது. இதுபோன்று பிறப்பிக்கப்பட்ட ஐந்து உத்தரவுகள் இன்னும் துர்கியே தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அரேபிய ஆட்சியாளர் முராத் இவர்களை வெளியேற்ற நினைப்பதற்கு காரணம் இந்தப் பெண்கள் மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்த்ததுதான். குல்பதன் எங்கு சென்றாலும், அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடியது.

குல்பதன் மெக்காவில் மட்டுமின்றி, அரேபியாவின் பிற நகரங்களுக்கும் பயணம் செய்தார், மேலும் இரானில் உள்ள மஷாத் யாத்திரைக்கும் சென்றார்.

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்கா புனித காபா

இளவரசர் சலீம் அஜ்மீர் கொடுத்த வரவேற்பு

மார்ச் 1580 இல், குல்பதன் தனது முழு பரிவாரங்களுடன் 'தேஸ்ராவ்' என்ற படகில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து (Jeddah) இந்தியாவிற்கு புறப்பட்டார். ஆனால் ஏடன் அருகே படகு பழுதடைந்ததால் குல்பதன் தனது தோழர்களுடன் ஏடனில் ஏழு மாதங்களை கழிக்க வேண்டியதாயிற்று. அவர் சூரத்தை அடைந்தபோது, ​​அவர் இந்தியாவை விட்டு வெளியேறி ஏழு வருடங்கள் ஆகி இருந்தன.

சூரத்தை அடைந்த பிறகு, அவர் ஃபதேபூர் சிக்ரிக்கு புறப்பட்டாள்.

இரா முகோதி தனது 'சூரியனின் மகள்கள்' என்ற புத்தகத்தில், “பேரரசர் அக்பர் 13 வயது இளவரசர் சலீமை ஹஜ் விருந்தினர்களை வரவேற்க அஜ்மீருக்கு அனுப்பினார். அப்போது குல்பதன் வழியில் மொய்னுதீன் சிஷ்டியின் சமாதிக்கு சென்று பார்வையிட்டார்.

அக்பர் சிக்ரியில் இருந்து 37 மைல் தொலைவில் உள்ள கான்வாவுக்கு சென்று தனது அத்தையை வரவேற்றார். குல்பதன் சிக்ரியை அடைந்ததும், அவரை வரவேற்க மக்கள் தெருக்களில் திரண்டு வந்தனர். மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர்.

பாபர் முதல் அக்பர் வரை முகலாய வம்சத்தின் மூன்று தலைமுறைகளுடன் வாழ்ந்த இளவரசியின் கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபதேபூர் சிக்ரி

குல்பதன் சடலத்தை தோளில் சுமந்த அக்பர்

குல்பதன் தனது வாழ்க்கையின் அடுத்த 20 ஆண்டுகளை அக்பருடன் கழித்தார். அவர் 1603 இல் தனது 80 வயதில் இறந்தார். அப்போது அவரது மைத்துனியும் அக்பரின் தாயுமான ஹமீதா பேகம் அவர் அருகில் இருந்தார்.

குல்பதனை ஹமீதா செல்லமாக 'பேகம் ஜியோ' என்று அழைத்தார். குல்பதன் கண்களைத் திறந்து ஹமீதாவைப் பார்த்து, 'என் பயணம் முடிந்தது. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும்.’ என்றார்.

குல்பதனின் மரணம் அக்பரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் தன் அன்பு அத்தை குல்பதனின் சடலத்தை கல்லறைக்கு எடுத்துச் செல்ல தோள் கொடுத்தார். அடுத்த இரண்டு வருடங்கள், அக்பர் உயிருடன் இருந்த வரை, தனது அத்தையை பற்றி மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து வருந்தியுள்ளார்.

குல்பதன் மரணத்துக்கு பிறகு ஹமீதாவும் நீண்ட காலம் உயிர் வாழவில்லை. ஒரு வருடம் கழித்து, 1604 இல், அவர் உயிரிழந்தார். அந்த சோகத்தில் அக்பர் தன் தலைமுடி மற்றும் தாடியை சவரம் செய்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)