'கைலாசா நாட்டில் வரியே கிடையாது' - எங்கே உள்ளது என்று நித்தியானந்தா புதிய தகவல்

பட மூலாதாரம், kailaasaa.org
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தன்னையே கடவுள் என்று அறிவித்துக்கொண்டுள்ள நித்யானந்தா வெகு காலமாக பேசி வந்த கைலாசா என்ற தனது 'நாட்டைப்' பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் மீதுள்ள பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸாரால் தேடப்பட்டும் வரும் நபர் நித்யானந்தா.
கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார்.
இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. தற்போதும் கைலாசா எங்குள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. சில கூடுதல் தகவல்களை மட்டும் வெளியிட்டுள்ளார் நித்யானந்தா.

பட மூலாதாரம், Getty Images
நித்யானந்தா மீதுள்ள வழக்குகள்
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாலியல் தொந்தரவு வழக்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் சிலவற்றில் விசாரிக்கப்பட்டு வந்தவர் நித்யானந்தா.
2019-ம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியினர் தங்களது இரு மகள்களை நித்யானந்தா சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார் என்று வழக்கு தொடுத்திருந்தனர். 2010ம் ஆண்டு பெங்களூரூவில் தொடுக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் நித்யானந்தா. ஜாமீனில் வெளிவந்த நித்யானந்தா, 2019ம் ஆண்டு முதல் அந்த வழக்கு தொடர்பான எந்த விசாரணைக்கும் நேரில் ஆஜராகவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவர், 2020ஆம் ஆண்டில் திடீரென தாம் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அங்கு இந்து சமயத்தை தழுவிய தேசத்தை உருவாக்கியிருப்பதாகவும் கூறி அதற்கென ஒரு கொடி, நாணயம், ஆட்சி முறை போன்றவற்றை வெளியிட்டிருந்தார்.
2019ம் ஆண்டு அவரால் தேசம் என அழைத்துக் கொள்ளப்படும் கைலாசாவுக்கு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்திய நித்யானந்தா, ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் அங்கிருந்து கைலாசாவுக்கு அழைத்துச் சென்று 15 நாட்கள் ஆன்மிக அனுபவத்தை கொடுத்து பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிலேயே விட்டு விடுவோம் என்று கூறினார். தமது தேசத்தில் வந்து போகும்வரை அனைத்து செலவையும் தமது நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்று கூறி ஒரு காணொளியை நித்யானந்தா வெளியிட்டார்.
அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் நிலையில், இப்போதும் தனது யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.
கைலாசா எப்படி இருக்கும்?
கைலாசவாசியாக இருக்க, இந்து வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் எவரும் தகுதியானவர் என்றும், இந்துவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர், இயற்கை பேரிடர், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இடம் பெயர்ந்தவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் மூலம் அகதியாக பதிவு செய்து கைலாசாவுக்கு வரலாம் என்றும் நித்தியானந்தா சார்பில் கூறப்பட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைலாசா “ஒரு பக்கம் கடலும், மறு புறம் பனிமலையும் சூழ” அமைந்திருக்கும் நாடு என்று விவரித்திருந்தார்.
“கைலாசாவில் எனக்கு என்று தனி அறை கிடையாது. பிரதான அரங்கில் எனது ஊஞ்சல் இருக்கும். நான் அங்கேயே தான் இருப்பேன். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து என்ன வேண்டுமானாலும் பேசலாம்” என்றும் பேசியிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பு என்ன?
தற்போது, நித்தியானந்தாவின் யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்படும் வீடியோக்கள் ஒன்றின் மூலம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடலோரப் பகுதிகள், மலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு புவியியல் அம்சங்களை உள்ளடக்கிய, உலகம் முழுவதும் உள்ள இறையாண்மை கொண்ட மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் 'கைலாசா' இருப்பதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைலாசா பல நாடுகளுடன் பரஸ்பர உறவுகளை ஏற்படுத்தியிருப்பது , சர்வதேச சமூகத்தில் அதன் அங்கீகாரத்தை குறிக்கிறது என்றும் கைலாசா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைலாசா தற்போது 149 நாடுகளில் உள்ள 108-க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைலாசத்தில் ஏழு அமைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் சந்நியாசிகளுக்கான இருப்பிடம் ராமகிருஷ்ண மடத்தின் அடிப்படையிலும், பெண் சந்நியாசிகளின் இருப்பிடம் சாரதா மடத்தின் அடிப்படையிலும், திருமணமானவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள ஆரோவில் போன்ற இருப்பிடமும் அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரியும் இல்லை, காவல்துறையும் கிடையாது
கல்விக்கான குருகுலம், நித்யானந்தா இந்து பல்கலைகழகம், தொழில் செய்வதற்கான இந்து உலக வர்த்தக மையம் அமைக்கப்படுகிறது. இதன் ஆன்மிக மற்றும் நிர்வாக மையமாக அமையும் மஹாகைலாசாவில் தான் வசிக்கப் போவதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
கைலாசாவில் உணவு, தங்குமிடம், உடை , மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என அறிவித்திருக்கும் நித்யானந்தா ராணுவமோ, காவல்துறையோ கைலாசத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கைலாசாவில் வரி விதிப்பு முறை இல்லை என்றும் இந்து வர்த்தக மையத்தின் மூலம் கிடைக்கும் வருமானமும், உலகம் முழுவதிலிருந்தும் கிடைக்கும் நன்கொடையும் கைலாசாவை நடத்த பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறித்தவர்களுக்கு வாடிகன் இருப்பது போல, இந்து மதத்தின் அடிப்படையிலான நாடுகள் இயங்கி வந்தன என்றும்,மீண்டும் அப்படி ஒரு அமைப்பு இருந்தால் தான் இந்து சனாதன தர்மத்தை உயிருடன் வைத்திருக்க முடியும் என்றும் நித்யானந்தா கூறுகிறார்.

பட மூலாதாரம், kailaasa.org
உலக நாடுகளை ஏமாற்றிய நித்யானந்தா
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியின் நெவார்க் நகரம் கைலாசாவுடன் கலச்சார, சமூக பரிமாற்றங்களுக்கான ஒப்பந்தம் போட்டது பெரும் சர்ச்சையை எழுப்பியது. ஒரு கைலாசா என்ற நாடு இருப்பதாகக் கூறி தங்களை ஏமாற்றி ஒப்பந்தம் போடப்பட்டதாக நெவார்க் நகர நிர்வாகம் பின் தெளிவுப்படுத்தியது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு கூட்டங்களில் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் என்று கூறி பங்கேற்றவர்களின் உரையை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னதாக தெரிவித்திருந்தது.

பட மூலாதாரம், United Nations
ஒருவரால் தனி நாடு அறிவிக்க முடியுமா?
ஒருவரிடம் நிறைய பணம் இருந்தால், எந்த நாட்டிலாவது தீவுகளை விலைக்கு வாங்கலாம். அந்தத் தீவை ஒரு நாடாக அறிவிக்கலாம். ஆனால், அதற்கு தீவை விலைக்குக் கொடுக்கும் நாடும் சம்மதிக்க வேண்டும்.
பிற நாடுகள் அல்லது ஐக்கிய நாடுகள் அவை போன்றவை அதை அங்கீகரிக்கின்றனவா என்பதுதான் "நாடு" என்ற அங்கீகாரம் பெறுவதில் முக்கியமான அம்சம். இவை இல்லாமல் பல 'நாடுகள்' உலகில் இருக்கின்றன.
லட்சங்களில் மக்கள்தொகை கொண்ட பல சிறிய தீவு நாடுகள் உள்ளன. அந்த நாட்டு அரசுகள் சம்மதித்தால், பணம் கொடுத்து அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
நிலத்தில் கிடைக்கவில்லை என்றால் தண்ணீரில் கொடியை நட்டு ஒரு நாட்டை அமைக்கலாம். சர்வதேச கடல் பரப்பு எந்தவொரு நாட்டின் அதிகார வரம்புக்கும் உட்பட்டது அல்ல. எனவே, கடலில் ஒரு தீவை செயற்கையாக உருவாக்கி ஒரு நாடாக அறிவிக்கலாம்.
பிரிட்டனுக்கு அருகில் வடக்கு கடலில் உள்ள 'பிரின்சிபாலிட்டி ஆஃப் சீலாண்ட்' என்ற சுய-அறிவிக்கப்பட்ட நாடு உள்ளது. இது பிரிட்டனின் கடற்கரையில் இருந்து சுமார் 12கிமீ தொலைவில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது நாஜி விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ள பிரிட்டன் விமான எதிர்ப்புத் தளங்களை உருவாக்கியது. அங்கு சுமார் 300 பிரிட்டிஷ் வீரர்கள் பணியாற்றினார்கள். 1956இல் பிரிட்டன் அங்கிருந்து வெளியேறியது.
முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ராய் பேட்ஸ் 1967இல் ஹெச்எம் ஃபோர்ட் ரஃப்ஸை கோட்டையைக் கைப்பற்றினார். அதன்பிறகு அதை அவர் ஒரு தேசமாக அறிவித்தார். அவர் அதற்கு சீலாண்ட் என்று பெயரிட்டு தன்னை இளவரசர் என்று அழைத்துக்கொண்டார்.

பட மூலாதாரம், Facebook
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சுயாஸ் தீட்சித் என்பவர் 2017ஆம் ஆண்டு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாக அறிவித்தார். எகிப்துக்கும் சூடானுக்கும் இடையே உள்ள பிர் தவில் என்ற இடத்தில் 'தீட்சித் ராஜ்ஜியம்' நிறுவப்பட்டதாக அவர் கூறினார்.
சுமார் 2,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட பிர் தவில் பகுதியில் எந்தவொரு நாட்டிற்கும் உரிமை இல்லை. அங்கு தனது ராஜ்ஜியத்தை நிறுவிய சுயாஸ் தன்னை ராஜாவாக அறிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












