ராமர் கோவில் கட்டியும் அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர் அயோத்தியிலிருந்து
காவியால் நிறைந்த, பரந்த மற்றும் அழகான சாலைகள் அயோத்தி நகரத்திற்கு உங்களை வரவேற்கின்றன.
காவி நிறம் பூசப்பட்ட கட்டடங்கள், சுவர்களில் ராமாயணக் காட்சிகள் என பல இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அயோத்தியில் நுழைந்தவுடனேயே, ராமர் கோவில் கட்டிவருவதாக கூறும் ஆளும் பாஜக இங்கிருந்து தோற்க முடியுமா என்ற என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.
இக்கேள்விக்கான விடையை அப்பகுதி மக்களிடம் பேசினால் தெரிந்து கொள்ளலாம்.
லதா மங்கேஷ்கர் சௌக் எனும் பகுதியில் ஒரு பெரிய வீணை நிறுவப்பட்டுள்ளது. சுற்றிலும் மின்விளக்குகள் உள்ளன. போக்குவரத்து போலீசார் வாகனங்களை சோதனை செய்கின்றனர். பெண் பக்தர்கள் அருகில் உள்ள பூங்காவில் தங்கள் ஆடைகளை உலர விடுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பா.ஜ.கவின் தோல்வி
அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வரும் இவர்களுக்கு ஹோட்டலில் தங்க முடியாத நிலை உள்ளது. அவர்கள் திறந்தவெளியில் தங்கினாலும், ராமரைப் பார்த்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
சௌக்கிலிருந்து ஃபைசாபாத் நோக்கிச் செல்லும் புதிதாக கட்டப்பட்ட சாலையும் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அகலமான, சுத்தமான நடைபாதைகள் புதிதாக நிறுவப்பட்ட விளக்குகளால் ஒளிர்கின்றன. சுவர்களில் ராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள ஒரு தேநீர் கடையில் அமர்ந்திருந்த ஹிருத்திக் சிங், அயோத்தியில் பா.ஜ.கவின் தோல்வியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார்.
“பா.ஜ.க-வின் தோல்வியை கேட்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். ஆனால், நான் குடும்பத்தின் ஒரே மகன், இதை யாரிடமும் என்னால் சொல்லக்கூட முடியாது,” என்று ஹிருத்திக் கூறுகிறார்.
ஹிருத்திக் பேச்சை முடித்த போது, அவர் அருகில் அமர்ந்திருந்த சத்யம் திரிபாதி, "எதற்காக சோகமாக இருக்க வேண்டும்? எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அயோத்தி மக்களை புறக்கணித்ததன் விளைவு இது," என்று கூறினார்.

சத்யம் திரிபாதி கூறுகையில், "மக்கள் இடம்பெயர வேண்டியிருந்தது, கடைகள் இடிக்கப்பட்டன, ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை அல்லது அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. தங்களால் எதையும் செய்ய முடியும், மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கர்வத்தில் பா.ஜா.க தலைவர்கள் இருந்தனர்” என்கிறார்.
சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், 2014-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த பா.ஜா.கவின் லல்லு சிங்கை சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
ஜனவரி 22 அன்று, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது, இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட காவி கொடிகள் நாடு முழுவதும் ஏற்றப்பட்டன.
அரசமைப்புச் சட்டம் மாற்றப்படுமோ என்ற சந்தேகம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்த மண்டலத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகளையும் இழந்துள்ளது.
இந்தத் தோல்விக்கான சில காரணங்கள் இங்குள்ள உள்ளூர் மக்களிடம் பேசினால் புரியும்.
உதாரணமாக, ஃபைசாபாத் (அயோத்தி) பா.ஜ.க வேட்பாளர் லல்லு சிங் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே தன்னை வெற்றியாளராகக் கருதியதாக பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். அதீத நம்பிக்கையில் வாக்கு கேட்டுக்கூட அவர் வெளியே வரவில்லை என கூறுகின்றனர்.
பா.ஜ.க கூட்டணி 400 இடங்களுக்கு மேல் பெற்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்து, பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக மாற்றியது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தனர்.
உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் தங்கள் பிரச்னைகள் புறக்கணிக்கப்படுவதாக கோபமடைந்துள்ளனர்.
தற்போது அயோத்திக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு வியாபாரம் அதிகரித்துள்ளது. இவ்வளவு வளர்ச்சிப் பணிகள் இருந்தும் பா.ஜ.க எப்படி தோற்றது என பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
லதா மங்கேஷ்கர் சௌக்கில் பக்தர்களை புகைப்படம் எடுக்கும் சந்தீப் யாதவ், "இங்குள்ள சூழல் முழுவதும் காவிமயமாக இருந்தது, பாஜகவின் சத்தம் மட்டுமே இருந்தது, பா.ஜ.க தோற்றுவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை" என்கிறார்.
சந்தீப் யாதவ் கூறும்போது, "முதலில் நாங்கள் வேலையில்லாமல் இருந்தோம், பிறகு இந்த அரசு வந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இப்போது புகைப்படம் எடுப்பதைத் தவிர, நாங்கள் ஒரு டிராவல் ஏஜென்சியையும் நடத்துகிறோம். நாங்கள் மாதம் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் எளிதாக சம்பாதிக்கிறோம். என்னைப் போன்று வேலை கிடைத்த பலர் இருக்கின்றனர். ஆனால், பல வேலைகளைச் செய்தாலும், பா.ஜ.க தோற்றுவிட்டது” என்றார்.
அரசாங்கத்தின் பணிகள் நமக்குத் தெரிகின்றன. ஆனால், இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோபமாக உள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு இந்துத் துறவி பேசுகையில், “ஊடகங்கள் உள்ளூர் மக்களின் பிரச்னைகளுக்கு இடம் கொடுத்திருந்தால், ஒருவேளை அவை விவாதிக்கப்பட்டு தீவிரமாக எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தொலைக்காட்சிகளில் பா.ஜ.க ராமரைக் கொண்டு வந்ததாக மட்டுமே காட்டப்பட்டது. அயோத்தி மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை." என்றார்.
ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, நாடு முழுவதும் உள்ள இந்துக்களின் நம்பிக்கை மையமாக அயோத்தி மாறியுள்ளது.
முன்பை விட தற்போது பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வதால், ஏற்பாடுகளை செய்வது நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.
பா.ஜ.க ஆதரவாளரும், பாஜகவுக்கு வாக்களித்தவருமான எம்.கே.மிஸ்ரா கூறும்போது, “ராமர் கோவில் காரணமாக அயோத்தி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், அனைவரும் விளக்கு ஏற்றினார்கள். விரிவாக்கப் பணிகள் தொடங்கிய போது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அரசு மீண்டும் தன்னிச்சையாகச் செயல்பட்டது. யாருடைய பேச்சையும் கேட்கவில்லை, மக்களின் கடைகள் அகற்றப்பட்டன, ஆனால் அவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை. இது குறித்து உள்ளூர் மக்களிடையே நிறைய கோபம் இருந்தது, ஆனால் அதை யாரும் கேட்கவில்லை." என்கிறார்.
பல்வேறு இடங்களில் போலீஸ் தடுப்புகள்

பாதுகாப்புக்காக அயோத்தியில் பல்வேறு இடங்களில் போலீஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. நகருக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல பாஸ் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தடுப்புகளால் தாங்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மிஸ்ரா கூறுகையில், "மாலை 7 மணிக்கு வி.ஐ.பி.க்கள் வருவதாக இருந்தால் மதியம் 12 மணிக்கு போலீசார் தடுப்புகளை வைக்கின்றனர். குழந்தைகளை பள்ளியிலிருந்து கூட அழைத்து வர முடியாது. வீடு எதிரில் உள்ளது, ஆனால் திரும்பி வர நான்கு கிலோமீட்டர் நடக்க வேண்டும். இந்த பிரச்னையை உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பியிடம் கூறினால் அவர்கள் இதனை புறக்கணிக்கின்றனர். மக்களிடம் செல்லாமலேயே பிரதமர் மோதியின் முகத்தை வைத்தே ஜெயித்துவிடலாம் என நினைத்தனர். அயோத்தி மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை கேட்க யாரும் இல்லை” என்கிறார் அவர்.
லதா மங்கேஷ்கர் சௌக் வழியாக சரயு காட் மற்றும் ராமர் கோவிலை இணைக்கும் ராமர் பாதை இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருபுறமும் உள்ள கடைகளில் காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு எளிதில் செல்லலாம். சாலையோரத்தில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்திற்காக, நூற்றுக்கணக்கான கடைகளை இடிக்க வேண்டியிருந்தது.

நூற்றுக்கணக்கான மக்கள் பாதிப்பு
இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான கடைக்காரர்களுக்கு நில உரிமை இல்லை. இங்குள்ள சொத்துக்களில் பெரும்பாலானவை கோவில்கள் மற்றும் மடாதிபதிகளுக்கு சொந்தமானவையாக உள்ளன.
ஆனால் பல குடும்பங்கள் இங்கு பல தலைமுறைகளாக குத்தகைதாரர்களாக இருந்தனர், சிலர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக குத்தகைதாரர்களாக இருந்தனர். காலப்போக்கில் சிலர் நிலத்தைக் கைப்பற்றினர்.
விரிவாக்கத்தின் போது, ஏராளமானோர் சொத்தின் உரிமைக்கான ஆவணங்களைக் காட்ட முடியவில்லை, இதனால், அவர்களில் பெரும்பாலானோர் சந்தை விலையில் இழப்பீடு பெற முடியவில்லை.
தன் பெயரை வெளியிட விரும்பாத, இதனால் பாதிக்கப்பட்ட கடைக்காரர் ஒருவர், "எங்கள் கடை முழுவதையும் நாங்கள் இழந்துவிட்டோம். எங்களுக்கு இழப்பீடாக ரூ. 1.5 லட்சம் மட்டுமே கிடைத்தது. புதிய கடையை வாடகைக்கு எடுத்தபோது, வைப்புத்தொகை மட்டுமே ரூ. 20 லட்சத்திற்கு மேல் சென்றது. நாங்கள் இழந்த கடை எங்களிடம் மூன்று தலைமுறையாக இருந்தது. ஆனால், இப்போது நாங்கள் தெருவில் இருக்கிறோம். நாங்கள் பா.ஜா.கவை எங்களின் வாழ்நாள் முழுவதும் ஆதரித்துள்ளோம். ராமர் அயோத்திக்கு வந்தால் இங்கிருந்து சென்று விடுவோம் என்று நினைத்ததில்லை” என்றார்.
விரிவாக்கத்திற்காக வீடுகள், கடைகள் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் கதையும் இப்படித்தான் உள்ளது.
சமூக வலைதள விமர்சனங்கள்

அயோத்தியின் பெரும் பகுதி சரயு நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு பல தசாப்தங்களாக ஒரு காலனி உள்ளது.
இங்குள்ள மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரயு நதிக்கரையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக நோட்டீஸ் வருகிறது.
தங்களுக்கும் நோட்டீஸ் வந்ததாகக் கூறும் பலர், தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாமல், "புல்டோசர் வந்து, எங்கள் தலைக்கு மேல் உள்ள கூரை போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது. எங்களை இங்கிருந்து அகற்றுவது குறித்து பேசப்படுகிறது. ஆனால், எங்களை எங்கு மறுகுடியமர்த்துவார்கள் என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை” என தெரிவித்தார்.
ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியின் கீழ் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் நான்கில் பா.ஜ.க தோல்வியடைந்துள்ளது. அயோத்தியில் லல்லு சிங் சமாஜ்வாதி கட்சியின் வெற்றி வேட்பாளரை விட நான்காயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
ஃபைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோல்வியடைந்ததை அடுத்து, சமூக வலைதளங்களில் இந்துத்துவா ஆதரவாளர்களின் ட்ரோல்களுக்கு அயோத்தி மக்கள் பலியாகி வருகின்றனர். இதுபோன்ற செய்திகளால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜா சர்மா ஒரு பஜன் பாடகர். அவர் கூறுகையில், "ஸ்ரீராமர், மோதி, யோகி ஆகியோரின் மகிமையில் நூற்றுக்கணக்கான பஜனைகள் பாடியுள்ளேன். பா.ஜ.கவின் தோல்விக்குப் பிறகு பலரும் அயோத்தி மக்களைப் பற்றி கருத்து சொல்வது தவறு. இத்தகைய வார்த்தைகளை, ராமர் பெயரிலான அயோத்தி மக்கள் ஏற்பார்கள் என நான் நினைக்கவில்லை” என்றார்.
ராஜா கூறுகையில், “அயோத்தி மக்களிடையே வேட்பாளர் மீது கடும் அதிருப்தி இருந்தும், இந்த சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் கோபம் இருந்தும், பா.ஜ.கவுக்கு வாக்களித்தனர். இந்த தோல்விக்குக் காரணம் லல்லு சிங் தான், மக்கள் அல்ல. அவர் மக்களிடம் வாக்கு கேட்கக் கூட செல்லவில்லை” என்றார்.

லல்லு சிங்கை சந்தித்து அவரது தரப்பு கருத்தை அறிய பிபிசி முயன்றது. அவரது இல்லத்தில் அவரை சந்திக்க வருபவர்களில் பெரும்பாலானோர் சோகமாகவே உள்ளனர். அவர்கள் எதுவும் சொல்ல மறுக்கின்றனர். லல்லு சிங்கும் பிபிசியை சந்திக்கவில்லை.
பா.ஜ.கவின் தோல்வி இந்துத்துவா அரசியலின் தோல்வியாகவும் காட்டப்படுகிறது.
ஹனுமன்கர்ஹி கோவிலுடன் தொடர்புடைய இந்துத்துவா துறவி வருண் மகராஜ் கூறுகையில், "இது இந்துத்துவா அரசியலின் தோல்வியல்ல. தேர்தல்களில் உள்ளூர் பிரச்னைகளும் பங்கு வகிக்கின்றன. எங்கள் எம்.பி.யின் சில அறிக்கைகளால், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிந்தனர். விஐபி கலாசாரம், கட்டுக்கடங்காத அதிகாரிகளால் அயோத்தி மக்கள் அவதிப்படுகின்றனர்” என்றார்.
வருண் மகராஜ் கூறுகையில், "இன்று அயோத்தி மக்களைப் பற்றி கருத்துகள் கூறப்படுகின்றன, ஆனால் நாட்டில் இந்துத்துவா அலை அயோத்தியில் இருந்துதான் எழுந்தது என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள். அயோத்தி பா.ஜ.கவை ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளது. அயோத்தி மக்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் உண்மையில் ராமர் பக்தர்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இந்த தொகுதியில் வெற்றி பெற்றவரும் அயோத்தியை சேர்ந்தவர்தான்” என்றார்.
ஹனுமன்கடி கோவிலுடன் தொடர்புடைய தேவேஷ்சார்யா பா.ஜ.கவின் தோல்வியால் ஆச்சர்யப்படவில்லை.
மத நம்பிக்கை

தேவேஷ்சார்யா கூறுகையில், "தோல்வி காரணமாக நாங்கள் வருத்தமாக இருக்கிறோம். ஆனால், ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த தேர்தலில் உள்ளூர் பிரச்னைகள் பங்கு வகித்தன. அயோத்தி மக்கள் விஐபி கலாசாரத்தால் சிரமப்படுகின்றனர். எங்கள் எம்.பி., மக்களின் பேச்சைக் கேட்கவில்லை, வாக்கு கேட்க வெளியேவும் வரவில்லை. பிரதமர் நரேந்திர மோதியின் முகத்தை முன்வைத்து, இந்துத்துவா என்ற பெயரில் எவ்வளவு காலம் வெற்றி பெறுவார்கள்? ஜனநாயகத்தில் மக்களுக்கும் குரல் உள்ளது, அதைக் கேட்க வேண்டும்." என்றார்.
இரண்டு தசாப்தங்களாக ஃபைசாபாத்தில் பத்திரிகையாளராக இருக்கும் மூத்த பத்திரிகையாளர் அர்ஷத் அஃப்சல் கானும் இதே கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
பாஜகவின் தோல்விக்கான காரணத்தை விளக்கிய அர்ஷத் கான், "ராமர் கோவில் என்பது மத நம்பிக்கை, அயோத்தியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ராமர் கோவிலில் நம்பிக்கை உள்ளது. ராமர் கோவில் என்ற பெயரில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்று வெளியில் உள்ள மக்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த தேர்தலில் உள்ளூர் பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தின." என்றார்.
அர்ஷத் கான் கூறுகையில், "அயோத்தியில் நிறைய வளர்ச்சிப் பணிகள் நடந்தன, ஆனால் அது ராமர் கோவிலின் மூன்று-நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் மட்டுமே இருந்தது. அது ஃபைசாபாத் கிராமங்களைச் சென்றடையவில்லை. கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளாக இங்கு முழுக் கவனமும் ராமர் கோவிலின் மீதே இருந்தது. இதன் காரணமாக, அயோத்திக்கு வெளியே உள்ள கிராம மக்களின் பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டன. இது அதிருப்தியை உருவாக்கியது. பாஜகவின் தோல்விக்கு இது ஒரு காரணம்” என்றார்.

தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாத்தின் பின்னால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் வாக்குகள் ஒன்றிணைந்ததே ஃபைசாபாத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதற்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது.
அர்ஷத் கான் கூறுகையில், "அகிலேஷ் யாதவின் பிடிஏ ('PDA' or 'Pichde -backward classes or OBCs) கோஷம் இங்கே வேலை செய்தது. இந்துத்துவா வாக்காளர்கள் வாக்களிப்பதில் அலட்சியமாக இருந்தனர். ஆனால் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதுவும் ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றிக்கு ஒரு பெரிய காரணம்” என்றார்.
ஃபைசாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற அவதேஷ் பிரசாத், மில்கிபூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ ஆவார். இவர், சமாஜ்வாதி சார்பில் 9 முறை எம்.எல்.ஏ-வாகவும், பலமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
79 வயதான அவதேஷ் பிரசாத் கூறும்போது, "யாருக்கு தன்னுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று ராமர் கூறியுள்ளார். இது பா.ஜ.க ஈகோவின் தோல்வி. ராமரைக் கொண்டு வந்தோம், ராமரைக் கொண்டு வந்தோம் என்று இவர்கள் கூறுகின்றனர். நூற்றாண்டுகளாக அயோத்தியில் உள்ள ராமரை அவர்கள் கொண்டு வந்ததாக கூறுகின்றனர்” என்றார்.

தன் வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவதேஷ் பிரசாத், “மோதி ஜி அயோத்தியில் வாகன பேரணிகளை நடத்தினார். மோதி ஜி அயோத்தியில் இருந்து போட்டியிடுவார் என்று நான் நினைத்தேன், மோதி ஜி எனக்கு எதிராக போட்டியிட்டிருந்தாலும் தோல்வியடைந்திருப்பார், ஏனெனில் இந்த தேர்தல் என்னுடையது அல்ல, அயோத்தி மக்களுடையது. பாஜகவை தோற்கடித்த மக்கள் மோதியையும் தோற்கடித்து இருப்பர்” என்றார்.
அயோத்திக்கு அருகில் உள்ள பாசி (பட்டியலிடப்பட்ட சாதி) ஆதிக்க கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இளைஞர் ஒருவர் தனது பெயரை வெளியிடாமல், "இது எங்களின் மரியாதைக்குரிய தேர்தல். அகிலேஷ் யாதவ் எங்கள் சாதியைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத்துக்கு டிக்கெட் கொடுத்தார். அவரை வெற்றி பெற வைப்பது எங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான தலித் இளைஞர்கள் சமாஜ்வாதி கட்சியின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்தோம். நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம், அரசமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று பேசுபவர்களுக்கு பாடம் கற்பித்துள்ளோம், இனி யாரும் அரசமைப்பு சட்டத்துடன் விளையாடத் துணிய மாட்டார்கள்” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












