நாடாளுமன்றத் தேர்தல்: தோல்வியைத் தழுவிய பாஜகவின் 13 மத்திய அமைச்சர்கள்

பட மூலாதாரம், SOCIAL MEDIA
இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த 10க்கும் மேற்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், இதரவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகளோடு இனைந்து பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஜக அரசின் கடந்த மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரும்கூட இந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதில் முக்கியத் தலைவர்களான ஸ்மிருதி இரானி முதல் தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் வரை அடங்குவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
ஸ்மிருதி இரானி (அமேதி)

பட மூலாதாரம், SMRITIIRANI / INSTAGRAM
அமேதி தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வென்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
அதுமட்டுமின்றி மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியை, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா 167,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

பட மூலாதாரம், L. MURUGAN / X
எல். முருகன் (நீலகிரி)
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான எல். முருகன் இந்த முறை நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா உள்ளிட்ட வேட்பாளர்களை எதிர்த்துக் களம் கண்டார்.
ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. 232,627 வாக்குகள் மட்டுமே பெற்ற முருகன், 473,212 வாக்குகள் பெற்ற ஆ.ராசாவிடம் 240,585 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
ராஜீவ் சந்திரசேகர் (திருவனந்தபுரம்)

பட மூலாதாரம், RAJEEV CHANDRASEKAR / INSTAGRAM
மத்திய அமைச்சரவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த ராஜீவ் சந்திரசேகர், இந்த முறை காங்கிரசின் பிரபலமான தலைவர் சசி தரூரை எதிர்த்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்கினார்.
ஆனால், 358,155 வாக்குகள் பெற்ற சசிதரூர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜீவ் சந்திரசேகரை தோற்கடித்தார். ராஜீவ் சந்திரசேகர் ஒட்டுமொத்தமாக 342,078 வாக்குகளை பெற்றுள்ளார்.
அர்ஜுன் முண்டா (குந்தி)

பட மூலாதாரம், ARJUN MUNDA / INSTAGRAM
ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சருமான அர்ஜுன் முண்டாவும் இந்த முறை தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி தொகுதியில் போட்டியிட்ட அர்ஜுன் முண்டா, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கலி சரண் முண்டாவைவிட 149,675 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார். அவர் வாங்கிய மொத்த வாக்குகள் 361,972.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
ஆர்கே சிங் (அர்ரா)

பட மூலாதாரம், R K SINGH / X
பாஜக அமைச்சரவையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சராகப் பதவி வகிக்கும் ராஜ்குமார் சிங் இந்த முறையும் பிகாரின் அர்ரா தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால், இந்த முறை அவரால் வெற்றி வாய்ப்பைப் பெற முடியவில்லை. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) (எல்) கட்சியின் வேட்பாளர் சுதாமா பிரசாத் 529,382 வாக்குகள் பெற்று, 59,808 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அஜய் குமார் மிஸ்ரா (கெரி)

பட மூலாதாரம், AJAY MISRA / FACEBOOK
உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கெரி சம்பவத்தைப் பலரும் மறந்திருக்க மாட்டோம். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கெரி தொகுதியில் போட்டியிட்ட அஜய் குமார் மிஸ்ரா, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உத்கர்ஸ் வர்மாவிடம் 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். உத்கர்ஸ் வர்மா 557,365 வாக்குகளும், அஜய் குமார் 523,036 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பட மூலாதாரம், kailashbaytu / Instagram
கைலாஷ் செளத்ரி (பர்மர்)
மத்திய அமைச்சரவையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கைலாஷ் செளத்ரி ராஜஸ்தானின் பர்மர் தொகுதியில் களம் கண்டார். ஆனால், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இருவர் இவரை மூன்றாம் இடத்திற்குத் தள்ளிவிட்டனர்.
அந்தத் தொகுதியின் வெற்றியாளரான காங்கிரஸ் கட்சியின் உம்மேதா ராம் பெனிவால் 704,676 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளரான 586,500 வாக்குகளையும், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள கைலாஷ் செளத்ரி 286,733 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மகேந்திர நாத் பாண்டே (சண்டௌலி)

பட மூலாதாரம், MAHENDRA NATH PANDEY / INSTAGRAM
மத்திய கனரக தொழில்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் மகேந்திர நாத் பாண்டே உத்தர பிரதேசத்தின் சண்டௌலி தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்துக் களம் கண்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரேந்திர சிங் 474,476 வாக்குகள் பெற்று, 21,565 வாக்குகள் வித்தியாசத்தில் மகேந்திர நாத் பாண்டேவை வெற்றி பெற்றுள்ளார். மகேந்திர நாத் பெற்ற மொத்த வாக்குகள் 452,911.

பட மூலாதாரம், SADHVI NIRANJAN JYOTI / X
சாத்வி நிரஞ்சன் ஜோதி (ஃபதேபூர்)
உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தோல்வியைத் தழுவியுள்ளார். இவர் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் இணை அமைச்சர் ஆவார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் நரேஷ் சந்திர உத்தம் பட்டேலைவிட 33,199 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார் நிரஞ்சன் ஜோதி. நரேஷ் சந்திர உத்தம் பட்டேல் 500,328 வாக்குகளையும், நிரஞ்சன் ஜோதி 467,129 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
சஞ்சீவ் பால்யன் (முஸாஃபர் நகர்)

பட மூலாதாரம், SANJEEV BALYAN / X
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரான சஞ்சீவ் பால்யன் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அதே முஸாஃபர் நகர் தொகுதியிலேயே இந்த முறையும் போட்டியிட்டார்.
ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் ஹரேந்திர சிங் மாலிக் 470,721 வாக்குகள் பெற்று, 24,672 வாக்கு வித்தியாசத்தில் சஞ்சீவை தோற்கடித்தார். சஞ்சீவ் பால்யன் ஒட்டுமொத்தமாக 446,049 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், V. MURALEEDHARAN / X
வி. முரளிதரன் (அட்டிங்கல்)
கேரளாவின் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிட்ட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சரும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சருமான வி. முரளிதரன் மூன்றாமிடம் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.
இந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அடூர் பிரகாஷ் 328,051 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி ஜாய் 327,367 வாக்குகளையும், வி. முரளிதரன் 311,779 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பட மூலாதாரம், SUBHAS SARKAR / X
சுபாஷ் சர்க்கார் (பங்குரா)
மேற்கு வங்கத்தின் பங்குரா தொகுதியில் போட்டியிட்ட மத்திய கல்வித்துறை இணை அமைச்சரான சுபாஷ் சர்க்காரும் தோல்வியடைந்துள்ளார். 609,035 வாக்குகள் பெற்றுள்ள இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் அரூப் சக்ரபூர்த்தியைவிட 32,778 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

பட மூலாதாரம், NISITHPRAMANIK / INSTAGRAM
நிஷித் பிராமனிக் (கூச்பெஹார்)
மத்திய உள்துறை இணையமைச்சரான நிஷித் பிராமனிக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். மேற்கு வங்கத்தின் கூச்பெஹார் தொகுதியில் போட்டியிட்ட இவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஜெகதீஷ் சந்திர பர்மா பசுனியாவிடம் தோற்றுள்ளார்.
திரிணாமூல் வேட்பாளர் 788,375 வாக்குகளையும், நிஷித் பிராமனிக் 749,125 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












