இட ஒதுக்கீடு முதல் அமலாக்கத் துறை வரை: மோதி ஆட்சியில் இந்தியா கண்ட 8 முக்கிய மாற்றங்கள்

இந்தியா கண்ட 8 மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், உமாங் போடார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த 10 ஆண்டுகளில், மோதி தலைமையிலான பாஜக அரசு, மத்தியிலும், தான் ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. காலனித்துவ கால விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு பதிலாக அல்லது அதில் மாற்றம் செய்யும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளது பாஜக.

அதில் பல சட்டங்கள் மக்களின் உரிமைகளை மறுக்கின்றன, இன்னும் சில சட்டங்கள் அரசாங்கத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன என எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

மாற்றப்பட்ட அல்லது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சில முக்கிய சட்டங்கள் குறித்தும், அவை மக்களின் அன்றாட வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன அல்லது இனி ஏற்படுத்தலாம் என்பதைக் குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 10 ஆண்டு மோதி ஆட்சியில் கண்ட 8 முக்கிய மாற்றங்கள் என்ன?

பொது சிவில் சட்டம் முதல் ஆர்டிஐ வரை

பட மூலாதாரம், Getty Images

1. புதிய குற்றவியல் சட்டங்கள்

150 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மூன்று அடிப்படை குற்றவியல் சட்டங்களை 2023 டிசம்பரில் மத்திய அரசு மாற்றியது. இவை இந்திய தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 மற்றும் சாட்சியச் சட்டம், 1872.

இதற்கு அரசாங்கம் கூறிய காரணம், “காலனித்துவத்தின் அடிப்படையில், ஆங்கிலேயர்களால் ஆளப்பட வேண்டிய குடிமக்களாக இந்தியர்களை கருதும் வகையில் வடிவமைக்கப்பட்டவை இந்த சட்டங்கள்”.

ஆனால், இந்த சட்ட மாற்றங்களில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலாவதாக, பெரும்பாலான சட்டங்கள் ஒரே மாதிரியானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தற்போதுள்ள சட்டங்களில் ஒரு திருத்தம் செய்திருந்தால் அதுவே சிறப்பாக செயல்பட்டிருக்கும் என்கிறார்கள்.

நிபுணர்களின் கூற்றுப்படி, தவறாகப் பயன்படுத்தக் கூடிய பல புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ‘தேசத்துரோகம்’ என்பதை முழுமையாக அகற்றுவதற்குப் பதிலாக, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலான செயல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த செயல்களின் வரையறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கும்பல் கொலைகள் போன்ற சில குற்றங்கள் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றிற்கு ஆயுள் தண்டனை வரை தண்டனையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில் மிகப்பெரிய மாற்றமாக காவல்துறை விசாரணைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இது 15 நாட்களாக இருந்தது. இப்போது குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து 60 அல்லது 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது

அதே வேளையில் பிற மாற்றங்களும், பொருத்தமான உள் கட்டமைப்புடன் செயல்படுத்தப்படும் போது பயனுள்ளதாக இருக்கும் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். அதாவது அனைத்து குற்றங்களுக்கும் கட்டாய தடயவியல் சான்று சேகரிப்பது, விசாரணையின் அனைத்து நிலைகளிலும் தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்துதல், விசாரணைகள் மற்றும் தீர்ப்புகளை வழங்குவதற்கான கட்டாய கால வரம்புகள் போன்றவை.

மசோதாவின் மீதான மற்றொரு விமர்சனம் அவை நிறைவேற்றப்பட்ட விதம், அந்த நேரத்தில் சுமார் 150 எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபாநாயகரால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இன்றுவரை பாராளுமன்றத்தின் ஒரே அமர்வில் இத்தனை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதில்லை. இதன் பொருள், அதிகளவிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன் இதுவரை மசோதாக்கள் விவாதத்திற்கு வைக்கப்படவில்லை.

பொது சிவில் சட்டம் முதல் ஆர்டிஐ வரை

பட மூலாதாரம், Getty Images

2. உணவு தேர்வுகள் மீதான கட்டுப்பாடுகள்

குறைந்தபட்சம் பாஜக ஆட்சி செய்யும் ஐந்து மாநிலங்களில் மாடுகளை வெட்டுவதையோ அல்லது கொண்டு செல்வதையோ தடை செய்ய புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன அல்லது ஏற்கனவே உள்ள பசு பாதுகாப்பு சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, 1964ஆம் ஆண்டு சட்டத்தை மாற்றியமைத்து, 2020இல் ஒரு பசு வதை சட்டத்தை நிறைவேற்றியது கர்நாடகா. முன்னதாக பசுவை வெட்டுவது தடை செய்யப்பட்ட நிலையில், 13 வயதுக்குட்பட்ட எருதுகள் மற்றும் எருமைகளை வெட்டவும் கர்நாடகா அரசு தடை விதித்தது.

ஆறு மாதங்களில் இருந்து அதிகபட்சம் ஏழு ஆண்டுகளாக தண்டனை அதிகரிக்கப்பட்டது.

நிபுணர்களின் கூற்றுப்படி, “சட்டம் கூறவில்லை என்றாலும் கூட, இது மாட்டிறைச்சி நுகர்வு மீதான இயல்புநிலை தடை தான்”. அதுமட்டுமின்றி, கால்நடை வியாபாரம், போக்குவரத்து போன்ற வணிகங்களையும் இது பாதித்துள்ளது.

ஹரியாணா, குஜராத், அசாம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களிலும் இதே போன்ற மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குஜராத்தில், பசுவைக் கொல்வதற்கான தண்டனையை ஏழு ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாக ஆயுள் தண்டனையாக உயர்த்தியது இந்தச் சட்டம்.

மாட்டிறைச்சியை எடுத்துச் செல்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நடத்தப்படும் கொலைகளும் மாட்டிறைச்சி உண்பது குறித்த அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

பாஜக அரசாங்கத்தால் ஆளப்படும் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களைத் தடை செய்தது, உணவுப் பொருட்கள் தொடர்பாக கொண்டு வரப்பட்ட மாற்றங்களின் பிற உதாரணங்களாகும்.

இருப்பினும், இந்தியாவின் கேரளா, மேகாலயா மற்றும் நாகாலாந்து போன்ற சில மாநிலங்கள் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை அனுமதிக்கின்றன.

சில மாநிலங்களின் மாட்டிறைச்சி தடைச் சட்டங்கள் குறித்து இன்னும் சட்டச் சவால்கள் உள்ளன.

2016ஆம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கில், மகாராஷ்டிராவிற்கு வெளியே வெட்டப்பட்ட மாட்டிறைச்சியை வைத்திருந்தால் அபராதம் விதிப்பது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை அனுமானிப்பது என்பது அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறிய பாம்பே உயர்நீதிமன்றம், அந்தச் சட்டத்தின் மற்ற திருத்தங்களை உறுதிப்படுத்தியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது.

பொது சிவில் சட்டம் முதல் ஆர்டிஐ வரை

பட மூலாதாரம், Getty Images

3. இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடை

2021ஆம் ஆண்டில், மத்திய அரசு ‘2021- இடைநிலை விதிகளை’ இயற்றியது, சமூக ஊடகங்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் கூட எந்த வகையான தகவல்களைப் போடலாம் என்பதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது இந்த விதிகள்.

செய்தி இணையதளங்கள் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற ஓடிடி இயங்குதளங்கள் எந்த வகையான உள்ளடக்கத்தை வெளியிடலாம் என்பதற்கான கடுமையான கட்டுப்பாட்டையும் இது பரிந்துரைக்கிறது. இவை அரசியலமைப்புக்கு முரணானவை என்று பல உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமையான பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகக் கூறி இரு உயர் நீதிமன்றங்கள் இந்த விதிகளின் சில பகுதிகளுக்கு தடை விதித்துள்ளன.

உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான உத்தரவுகளும் அதிகரித்துள்ளன.

உதாரணமாக, 2022இல் 3,417 எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) உரலிகளைத் (URL) தடுத்தது இந்திய அரசு, 2014இல் எட்டு ட்விட்டர் உரலிகள் மட்டுமே தடுக்கப்பட்டன.

இந்த உத்தரவுகள் அரசு நிர்வாகத்தால் முழுமையாக இயக்கப்படுகின்றன என்று விமர்சிக்கப்பட்டது. முதல் முறையாக, 2022இல் 39 கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடுத்தது எக்ஸ் நிறுவனம். 2021இல் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ட்வீட்களை பதிவிட்ட ஒரு கணக்கு முடக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது.

இணைய முடக்கங்களும் அதிவேகமாக அதிகரித்துள்ளன. உலகம் முழுவதும் நடைபெற்ற இணைய முடக்கங்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, உலகில் பாதிக்கும் மேற்பட்ட இணைய முடக்கங்கள் இந்தியாவில் தான் நடந்தன என்பதே இதற்கு காரணமாகும்.

இணையத்தை முடக்குவதற்கான அரசாங்க உத்தரவுகள் போராட்டங்களைக் கட்டுப்படுத்தவும் அல்லது தேர்வுகளில் மோசடி செய்வதை நிறுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

இணைய முடக்கங்களைக் கண்காணிக்கும் ஆராய்ச்சி நிறுவனமான மென்பொருள் சுதந்திர சட்ட மையம் ( SFLC ) அறிக்கையின்படி, 2014இல் 6 இணைய முடக்கங்கள் நடந்தன. அதேசமயம் 2023இல் 80 இணைய முடக்கங்கள் நடந்துள்ளன.

பொது சிவில் சட்டம் முதல் ஆர்டிஐ வரை

பட மூலாதாரம், Getty Images

4. தனியுரிமை பாதுகாப்பு

ஏறக்குறைய பத்தாண்டு கால விவாதங்களுக்குப் பிறகு அரசாங்கம் 2023இல் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது, ஆனால் இந்த சட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

நடைமுறையில் இந்தச் சட்டத்தை புறக்கணிக்கக் கூடிய வகையில் பல விதிவிலக்குகளை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்பது மிகப்பெரிய விமர்சனங்களில் ஒன்றாகும். உதாரணமாக, எந்தவொரு தனிப்பட்ட தரவையும் செயலாக்கும்போது, ​​இந்தியாவின் ஒருமைப்பாடு, பொது ஒழுங்கைப் பராமரித்தல் போன்ற பல காரணங்களுக்காக மத்திய அரசு மற்றும் அதன் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்பது.

அதுமட்டுமின்றி, இந்தச் சட்டத்தின்படி புகார்கள் மீது முடிவு எடுப்பது, அபராதம் விதிப்பது போன்ற அனைத்து முடிவுகளும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட வாரியத்தின் மூலமே செயல்படுத்தப்பட வேண்டும் என்ற விதி.

குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம் 2022இன் படி, ஒருவர் குற்றவாளி எனக் கருதப்பட்டால் அல்லது கைது செய்யப்பட்டால் அல்லது ஏதேனும் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்தால், அந்த நபரின் பயோமெட்ரிக் தரவு, உயிரியல் மாதிரிகள் போன்ற பல தரவுகளை காவல்துறை சேகரிக்கலாம். அரசாங்கத்தின் கூற்றுப்படி, குற்றங்களை விசாரிக்க உதவும் சட்டத்தை புதுப்பிக்க இது தேவைப்பட்டது.

இருப்பினும் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த சட்டம் அரசாங்கத்திற்கு மக்களின் முழுமையான சுயவிவரங்களை உருவாக்க உதவுகிறது. மேலும் இது மக்களின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

பொது சிவில் சட்டம் முதல் ஆர்டிஐ வரை

பட மூலாதாரம், Getty Images

5. திருமணம் மற்றும் விவாகரத்து

2017இல் இருந்து, குறைந்தது ஏழு மாநிலங்களாவது (இந்த அனைத்து மாநிலங்களும் பாஜகவால் ஆளப்படுபவை) தங்கள் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை வலுப்படுத்தியுள்ளன அல்லது திருமணத்தை நிர்வகிக்கும் புதிய சட்டங்களை இயற்றியுள்ளன.

இவை அனைத்திலும் மிகப்பெரிய மாற்றம் என்னவெனில், திருமணத்தின் காரணமாகவோ அல்லது திருமணத்திற்காகவோ மத மாற்றத்தையும் தடை செய்கின்றனர். முஸ்லீம் ஆண்கள் இந்துப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர்களை மதம் மாற்றுவதாக இந்துத்துவா தரப்பால் எழுப்பப்பட்ட பரவலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டங்களின் காரணமாக, இப்போது இரு மதங்களைச் சேர்ந்த தம்பதிகள் திருமணம் செய்ய வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகார சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும். யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் கொடுக்கும் வகையில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் வரை நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.

பல அறிக்கைகளின்படி, இந்தச் சட்டங்கள் பெரும்பாலும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜோடிகளைக் குறிவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை.

இந்த சட்டங்கள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் இரண்டு உயர் நீதிமன்றங்களாவது அந்தந்த மாநிலங்களில் உள்ள மதமாற்றத் தடைச் சட்டங்களின் பல்வேறு விதிகளுக்குத் தடை விதித்துள்ளன. திருமணத்திற்கு அதிகார ஒப்புதல் தேவை மற்றும் முன் அறிவிப்பு போன்ற விதிகளுக்கு. இவை விருப்பமான நபரைத் திருமணம் செய்யும் உரிமையைப் பாதிக்கிறது, இதனால் வாழ்வதற்கான அடிப்படை உரிமையும் பாதிக்கப்படுகிறது.

மற்றொரு பெரிய மாற்றம் பாஜகவின் உத்தரகாண்ட் அரசாங்கத்தால் பொது சிவில் சட்டம் (UCC- யுசிசி) இயற்றப்பட்டது. யுசிசி என்பது பாஜகவின் நீண்டகால வாக்குறுதியாகும்.

இந்தச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று, இப்போது ஒன்றாக வாழும் தம்பதிகள் கூட அதை பதிவு செய்து அரசாங்கத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இது தவிர இந்தச் சட்டத்தின்படி இருதார மணம் என்பது சட்டவிரோதமானது.

பொது சிவில் சட்டத்தின் மீதான மற்றொரு விமர்சனம், இதன் விதிகள் பெரும்பாலும் இந்து சட்டங்களிலிருந்து பெறப்பட்டது. இருப்பினும், இந்த சட்டம் வெவ்வேறு மதங்களைச் சமமாக நடத்துவதை உறுதி செய்யும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு கூறுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

6. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாற்றங்கள்

கடந்த சில ஆண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அரசு அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான முக்கிய சட்டமாகும்.

இதில் புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் தான் மிகப்பெரிய மாற்றமாக இருக்கிறது.

2023ஆம் ஆண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டபோது, ​​ஆர்டிஐஇன் கீழ் வெளியிடப்படும் அனைத்து தரவுகளும் தனிப்பட்ட தகவல்களின் சில அம்சங்களைக் கண்டிப்பாக கொண்டிருக்கும். எனவே ஒரு தனிநபருடன் தொடர்புடையது என்ற காரணத்தைக் கூறி அந்தத் தகவலை வெளியிட அதிகாரிகள் எவ்வாறெல்லாம் மறுக்க முடியும் என்ற அடிப்படையில் பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.

2019இல், ஆர்டிஐ சட்டம் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, முன்னர் நிர்ணயிக்கப்பட்ட தகவல் ஆணையர்களின் நியமன விதிமுறைகளை மத்திய அரசு இப்போது தீர்மானிக்க முடியும்.

கமிஷனர்களுக்கான சம்பளம் மற்றும் சேவை விதிமுறைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் இது அரசாங்கத்திற்கு வழங்குகிறது. இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இடஒதுக்கீடுகள் குறித்த மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

7. இடஒதுக்கீடுகள் குறித்த மாற்றங்கள்

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று பொதுப் பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் இந்த 10% இடஒதுக்கீடு, பட்டியல் சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற எந்த முன் பாதுகாக்கப்பட்ட குழுவையும் விலக்கி வைக்கிறது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்தது. 1992இல் உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50% வரம்பை மீறுவதாகக் கூறி இந்தத் திருத்தம் ரத்து செய்யப்படுமா என்பது ஒரு பிரச்னை.

ஒரு நீதிபதி, “50% உச்சவரம்பு என்பது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பின் உறுப்பினர்களுக்கு இருக்கும் இடஒதுக்கீடுகளுக்கு மட்டுமே பொருந்தும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் (EWS) இடஒதுக்கீட்டுக்கு அல்ல” என்று கூறினார்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம், மகாராஷ்டிர சட்டசபையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் மராத்தியர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பு, எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் 50% உச்சவரம்பை மீறியதற்காக உச்ச நீதிமன்றத்தால் இது நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பல மாநிலங்கள் இதற்கு முன்பும் 50% உச்சவரம்பை மீறியுள்ளன. உதாரணமாக, தமிழ்நாட்டில் 69% இடங்கள் மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு உள்ளது. இதைத் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடுமையாக்கப்பட்ட பணமோசடி சட்டம்

பட மூலாதாரம், Getty Images

8. கடுமையாக்கப்பட்ட பண மோசடி சட்டம்

2019ஆம் ஆண்டில், பாஜக 2002ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்புச் சட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. சட்டத்தின் நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியது. ஆரம்பத்தில் இருந்தே சட்டம் கடுமையாக தான் இருந்தது. இருப்பினும், சட்ட வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துப்படி இது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, பணமோசடி குற்றங்களை விசாரிக்கும் மத்திய அமைப்பான அமலாக்க இயக்குனரகம், முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) இல்லாமலே சொந்தமாக விசாரணையைத் தொடங்கலாம்.

முன்னதாக உச்ச நீதிமன்றம் 2017இல் கடுமையான ஜாமீன் நிபந்தனைகளை ரத்து செய்தது. இந்த நிபந்தனைகள் என்பது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ‘அத்தகைய குற்றத்தில் குற்றவாளி அல்ல’ மற்றும் ‘ஜாமீனில் இருக்கும்போது எந்த குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை’. இருப்பினும், இவை 2019இல் மீண்டும் கொண்டுவரப்பட்டன.

இந்த மாற்றங்கள் 2022இல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டன. இருப்பினும், இந்தத் தீர்ப்பு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சட்ட வல்லுனர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது, தற்போது இது மதிப்பாய்வில் உள்ளது.

இந்த சட்டத்தின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டில், அமலாக்கத்துறை 195 வழக்குகளை பதிவு செய்தது. 2020இல், அது 981 வழக்குகளை பதிவு செய்தது. 2004-14க்கு இடையில், ரூபாய் 5,346 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இணைத்து, 104 குற்றப்பத்திரிகைகள் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது. இதனுடன் ஒப்பிடுகையில், 2014-22க்கு இடையில், ரூபாய் 99,356 கோடி சொத்துக்கள், 888 குற்றப்பத்திரிகைகளை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

அமலாக்கத்துறை வலைத்தளத்தின்படி, 2023 ஜனவரி வரை பணமோசடி தடுப்பு சட்டம், 2002 திட்டத்தின் கீழ் 45 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் பல எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, நவாப் மாலிக் போன்ற அரசியல்வாதிகள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)