சுதந்திர இந்தியாவில் இன்னும் ஒருமுறை கூட வாக்களிக்காத கிராமம் - எனன காரணம்?
1952 முதல் இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஆந்திராவில் உள்ள கிரிஜனபுரம் கிராம மக்கள் இந்தத் தேர்தலில்தான் முதன்முறையாக வாக்கு செலுத்தவுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிரதிப்பாடு (Prathipadu) சட்டமன்ற தொகுதியிலுள்ள கிரிஜனபுர கிராம மக்கள், வாக்கு செலுத்துவது எப்படி என்பது குறித்த அனுபவம் தங்களுக்கு இல்லை எனக் கூறுகின்றனர்.
நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளைக் கடந்து கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இந்த கிராமம்தான் அவர்களின் பூர்வீகமாக உள்ளது. கொல்கத்தா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மலை மேலே அமைந்துள்ள கிரிஜனபுரம் கிராமத்திற்கு பிபிசி குழு சென்றது.
பெட்டிபலேம் கிராமத்தில் இருந்து பேருந்து மூலம் செல்வதுதான் இந்தக் கிராமத்தை அடையச் சிறந்தவழி. இல்லையென்றால், பெட்டபலேம் பகுதியிலிருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ மலையடிவாரம் வரை செல்லலாம். அங்கிருந்து நடந்து மலைப்பகுதிக்குச் செல்ல ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
இந்தக் கிராமத்தில் 30 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்தமாக சுமார் 50 பேர் வசிக்கின்றனர்.
இவர்கள் கோண்டா-டோரா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.
மரம் வெட்டுதல், நிலக்கரி விற்றல் போன்றவை இவர்களது வாழ்வாதாரம். இந்த கிராம மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற செய்தி சமீபத்தில்தான் வெளிச்சத்திற்கு வந்தது.
அதன்பின், தகுதியுள்ள 19 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் அதிகாரிகள் சேர்த்தனர். இதுவரை அவர்களுக்கு ஏன் வாக்களிக்கும் உரிமை இல்லை எனத் தங்களுக்குத் தெரியவில்லை என, பிரதிபாடு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியும் துணை மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீனிவாச ராவ் தெரிவிக்கிறார்.
பழங்குடியினர் துணைத் திட்டப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். பெட்டபுரம் வருவாய் பகுதிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் உள்ள பகுதிகளிலும் கோண்டா-டோரா பழங்குடியினரே பெரும்பான்மையாக உள்ளனர்.
ஆனால், கிரிஜனபுரம் கிராம மக்கள் மட்டும் இத்தனை ஆண்டுகளாக வாக்கு செலுத்தவில்லை.
இந்த கிராமத்தினருக்கு அடிப்படை வசதிகள் அரிதாகவே செய்யப்பட்டுள்ளன.
ஒரேயொருவர் மட்டும்தான் இங்கு மொபைல் போன் வைத்துள்ளார்.
கிராமத்தில் யாருக்கும் இதுவரை ஆதார் அட்டை இல்லை.
மலைப்பகுதியில் வசிப்பதாலும் வாக்குரிமை இல்லாததாலும் அரசு நலத்திட்டங்கள் தங்களுக்குக் கிடைப்பதில்லை என கிராமத்தினர் கூறுகின்றனர்.
கிரிஜனபுரத்தில் படித்தவர்கள் இருக்கின்றனர். இங்குள்ளவர்களும் அவர்களின் குழந்தைகளும் பள்ளிகளுக்கே சென்றதில்லை எனச் சொல்வார்கள்.
இங்கு வேறு பகுதியிலிருந்து இரு பெண்கள் மட்டுமே இங்குள்ள ஆண்களை திருமணம் செய்துள்ளனர். அவர்களுள் ஒரு பெண் 5ஆம் வகுப்பு வரையும் மற்றொரு பெண் 7ஆம் வகுப்பு வரையும் படித்துள்ளனர்.
ஏனெனில், இங்குள்ள குழந்தைகளால் பள்ளிகளுக்குச் செல்வது கடினமானதாக உள்ளதால், அடிப்படை கல்வி அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால், தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தருமாறு பிரதிப்பாடு கிராம வணிகர் சங்கத்தின் தலைவர் ஈஸ்வர ராவ் அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறார்.
செய்தியாளர்: சங்கர். வி
ஒளிப்பதிவு: ரவி பெடபோலு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



