திமுக, அதிமுக, நாம் தமிழர், பாமக: அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், DMK/Getty/NAAMTAMILARORG/ANBUMANI RAMADOSS
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
தேர்தல்களில் இந்தத் தேர்தல் அறிக்கைகள் எவ்வளவு முக்கியமானவை, இதை வைத்து மக்கள் வாக்களிக்கிறார்களா?
2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடும் புதுச்சேரியும் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவை எதிர்கொள்ளும் நிலையில், தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
தேர்தலுக்கு முன்பாக தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது எல்லா நாடுகளிலுமே வழக்கத்தில் இருக்கும் ஒரு நடைமுறைதான். அமெரிக்காவில் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் அவற்றின் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, நிர்வாகச் சீர்திருத்தங்கள், குடியேற்றக் கொள்கை தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெளியாகும் தேர்தல் அறிக்கைகளும் அக்கட்சிகளின் கொள்கைகளை வெளிப்படுத்தும். பூடானில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் ஒப்புதலுடனேயே அறிக்கைகள் வெளியிடப்படும். மதம், இனம், பிராந்தியம் சார்ந்த விஷயங்களை முன்வைத்து வாக்குறுதிகள் இருந்தால் அவை நீக்கப்படும்.
தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதைப் பொறுத்தவரை, பூடானில் மூன்று வாரங்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும். அமெரிக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும். மெக்ஸிகோவில் ஐந்து மாதங்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை எப்போது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆகவே தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் துவங்குவதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன. தேர்தல் பிரசாரத்தில் அந்தத் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட சில விஷயங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்வது வழக்கமாக இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று முதன்முதலில் பொதுத் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்தபோது காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கைளை வெளியிட்டன. இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் தேர்தல் அறிக்கைகளுக்குப் பெரிய முக்கியத்துவம் இருந்ததில்லை. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் பொதுத் தேர்தலை ஒட்டி தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன.
இப்படி வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில், அக்கட்சிகளின் பொதுவான கொள்கைகள் தவிர, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் போன்ற விஷயங்களும் இடம்பெற்றிருக்கும். சில பிரிவினருக்கு சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன. பல நேரங்களில் பொருளாதார ரீதியான அறிவிப்புகள் பெரும் விமர்சனத்தையும் எதிர்கொள்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஆளும் கட்சியான பா.ஜ.கவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் வெகுவாகக் கவனிக்கப்படும். இருந்தபோதும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி விரிவான தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன.
தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது வரை மாநிலக் கட்சிகளே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருப்பதால், அவற்றில் பெரிதும் மாநில உரிமை சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பல கோரிக்கைகள் ஒன்றுபோல் அமைந்துள்ளன. ஒன்றிரண்டு விஷயங்களில் மட்டுமே முரண்பாடு காணப்படுகிறது.
மத்திய - மாநில அரசுகள் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வது, உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்துவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவது, கச்சத் தீவை மீட்பது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெறுவது, நீட் தேர்விலிருந்து விலக்கைக் கோருவது, பொது சிவில் சட்டம் வராமல் தடுப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, இந்தியா முழுவதும் மகளிருக்கு உரிமைத் தொகை அளிப்பது (தொகை வேறுபடுகிறது) போன்ற விவகாரங்களில் இந்த நான்கு தேர்தல் அறிக்கைகளுமே ஒத்துப் போகின்றன.
வேறு சில விஷயங்களை சில கட்சிகள் ஒன்று போல் அணுகுகின்றன. உதாரணமாக, ஆளுநரை நியமிக்கும்போது மாநில அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என தி.மு.கவும் அ.தி.மு.கவும் தங்கள் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி ஆளுநர் பதவியையே நீக்க முயல்வோம் என்கிறது. நதிகள் இணைப்பை பாட்டாளி மக்கள் கட்சியும் அ.தி.மு.கவும் வலியுறுத்துகின்றன.
அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் அளிப்பது குறித்தும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க. ஆகியவை ஒன்றுபோல கருத்துகளை முன்வைக்கின்றன. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை தி.மு.க., அ.தி.மு.க,, பா.ம.க. ஆகிய கட்சிகள் வலியுறுத்துகின்றன. மாநில அரசுகளைக் கலைக்க ஏதுவாக உள்ள அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதில் தி.மு.க., நாம் தமிழர்கள் கட்சிகள் ஒன்றுபடுகின்றன.
மக்களவை இடங்களைப் பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டும் என்கிறது தி.மு.க. 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பதற்குப் பதிலாக, மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பதிலாக ஒரு நாடாளுமன்றத் தொகுதி என மாற்ற வேண்டும் என்கிறது நாம் தமிழர் கட்சி.
ஒவ்வொரு தேர்தல் அறிக்கையாக எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு கட்சியும் தாம் நீண்ட காலமாகப் பேசிவரும் விஷயங்களை இந்தத் தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளன.
திமுகவின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
தி.மு.கவின் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை,
- மத்திய - மாநில அரசுகளின் உரிமை குறித்து ஆராய்வதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட நான்கு ஆணையங்களின் பரிந்துரைகளைப் பரிசீலனை செய்து, மாநிலங்களுக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது.
- ஆளுநர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவை நீக்குவது
- மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகளையும் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளையும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்துவது.
- சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த மீண்டும் முயற்சிகளை மேற்கொள்வது
- மீண்டும் திட்டக் குழுவை அமைப்பது, யுபிஎஸ்சி தேர்வு கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவது
- ரயில்வே நிர்வாகத்தை மாநிலங்களிடம் ஒப்படைப்பது
- தேசிய கல்விக் கொள்கை - ஒரே நாடு ஒரே தேர்தல் முறை - அக்னி பாத் திட்டம் ஆகியவற்றைக் கைவிடுவது ஆகியவற்றை முன்வைக்கிறது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
அ.தி.மு.கவை பொறுத்தவரை,
- நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வேண்டும்
- குற்ற நடைமுறைச் சட்டங்களின் பெயர் மாற்றத்தைக் கைவிடவேண்டும்.
- இட ஒதுக்கீட்டிற்கான வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும்
- இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்
- எரிவாயு, பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்துவது.
- விவசாயிகளுக்கு ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம்
- கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை
- சென்னை முதல் விழுப்புரம் வரை மின்சார ரயில் நீட்டிப்பு, செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் விமான நிலையம்
- என்எல்சியில் புதிய சுரங்கப் பணிகள் கூடாது
- சிஏஏ சட்டத்தில் இஸ்லாமியர்களையும் ஈழத் தமிழர்களையும் உள்ளடக்குவது ஆகியவற்றை முன்வைத்திருக்கிறது.
பாமகவின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANBUMANI RAMADOSS / X
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை,
- இட ஒதுக்கீட்டிற்கு உள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்குவது, தனியார் துறையிலும் நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு, தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணிகளை மாநில மக்களுக்கு ஒதுக்க நடவடிக்கை.
- தொழில் திட்டங்களுக்கு வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்தத் தடை, என்எல்சியின் சுரங்க விரிவாக்கத் திட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதோடு, படிப்படியாக என்எல்சியை அகற்ற நடவடிக்கை, தமிழ்நாட்டை அணு உலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை.
- ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது, ஐஐடிக்கு இணையாக டிஐடி என்ற நிறுவனத்தை உருவாக்குவது, பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவது.
- ஜிஎஸ்டி வரி முறையை இரண்டு அடுக்குகளாக மாற்றுவது, பெட்ரோல் - டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது
- இந்தி பிரசார சபைக்கு இணையாக தமிழ் பரப்புரை அவை அமைக்க நடவடிக்கை
- ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும், தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்யப்படும்,
- அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆகிய விஷயங்களை முன்வைக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?

பட மூலாதாரம், NAAMTAMILARORG / X
இதில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை பல சுவாரஸ்யமான விஷயங்களை முன்வைக்கிறது.
- இந்தியாவில் குடியரசுத் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்குப் புதிது புதிதாக சின்னங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது எண்களை வழங்க வேண்டும்.
- ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடத் தடை விதிப்பது, வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது, ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் அடுத்த நிலையில் வாக்கு பெற்றவரை உறுப்பினராக்குவது, தங்கள் கட்சி சின்னத்திற்குப் பதிலாக, இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடத் தடை.
- மாநிலங்களுக்கு உட்பட்ட விவகாரங்களில் உயர்நீதிமன்றமே தலைமை நீதிமன்றமாக இருக்கும் நிலையை ஏற்படுத்துவது, நீதிபதி பதவிகளில் இருந்து ஓய்வு பெறுபவர்கள் அரசுப் பதவிகளிலோ, ஆளுநராகவோ, அரசியலிலோ சேரத் தடை விதிப்பது, மாநில நிலப்பரப்பின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை நீக்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவது.
- வடமாநிலத்தவர் பெருகுவதால் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல் உள்நுழைவுச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது, தேசிய புலனாய்வு முகமையைக் கலைக்க முயற்சிகள் மேற்கொள்வது, அண்டை நாட்டு கடற்படையின் வன்முறைத் தாக்குதல்களை முறியடிக்க நெய்தல் படை அமைப்பது, வேளாண் தொழில் சார்ந்த அனைத்தையும் அரசு வேலையாக அறிவிக்கத் தனி சட்டம் இயற்ற வேண்டும்.
- ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என சட்டமியற்றுவது போன்றவற்றை அக்கட்சி முன்வைத்துள்ளது.
தேர்தல் அறிக்கைகள் கட்சிகளின் வெற்றிக்கு உண்மையில் உதவுகிறதா?

பட மூலாதாரம், LINKEDIN
தேர்தல் அறிக்கைகளைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் இதற்கென ஒரு குழுவை அமைத்து, பல வாரங்கள் உழைத்து உருவாக்குகின்றன. செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி அவற்றை வெளியிடுகின்றன. ஆனால், கட்சிகளைத் தேர்வு செய்வதில் தேர்தல் அறிக்கைகள் எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கம் செலுத்துகின்றன?
"பெரிய அளவில் தாக்கம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால், வெகு சில தேர்தல்களில் அதுபோல நடக்கிறது," என்கிறார் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியவரான ராஜரத்தினம் கண்ணன்.
"உதாரணமாக 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாக வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் இருந்த வாக்குறுதி, மக்களால் வெகுவாக கவனிக்கப்பட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலின் ஹீரோ அந்தத் தேர்தல் அறிக்கைதான் என ப. சிதம்பரம் குறிப்பிடும் அளவுக்கு அந்தத் தேர்தல் அறிக்கை இருந்தது. அதற்குப் பலனும் கிடைத்தது," என்கிறார் அவர்.
ஆனால், அதே நேரத்தில் தேர்தல் அறிக்கைக்கு வெளியில் அளிக்கப்படும் சில வாக்குறுதிகள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுவிடுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"கடந்த 1967ஆம் ஆண்டில் ரூபாய்க்கு மூன்று படி அரசி என்பது தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. ஆனால், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அந்த வாக்குறுதியை அண்ணா அளித்தார். அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தவில்லையென்றால் எங்களைக் கேட்கலாம் என்றும் உறுதி அளித்தார். அதற்கும் பலன் இருந்தது," என்கிறார் கண்ணன்.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மாநிலக் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பு இருக்கிறது?
"மாநிலக் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளுக்குப் பெரிய மதிப்பு இல்லைதான். ஆனால், தங்களுடைய கூட்டணிக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும்போது தங்களால் அழுத்தம் தர முடியும் என்று சொல்வார்கள். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.
தமிழக கட்சிகள் அனைத்தும் மாநில சுயாட்சி, மாநில உரிமை குறித்துப் பேசுகின்றன. ஆனால், மற்ற மாநிலங்கள் இதைப் பற்றிப் பேசுவதே கிடையாது. அவற்றைப் பொறுத்தவரை, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தாலே போதும் என்றுதான் அவை நினைக்கின்றன," என்கிறார் கண்ணன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












