ஜி.எஸ்.டி.க்கு பிறகு சிறு, குறு தொழில்களின் நிலை என்ன? கோவை, திருப்பூரில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில்களின் நிலை என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. பிபிசி தமிழிடம் பேசிய பலதுறையைச் சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோர் தாங்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள், சிக்கல்களை பகிர்ந்து கொண்டனர். மத்திய, மாநில அரசுகளின் வரிகள் மற்றும் கட்டணங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மட்டுமின்றி, அதே அரசுகளின் திட்டங்களால் பெற்ற பலன்களையும் அவர்கள் சுட்டிக்காட்ட தயங்கவில்லை.
சிறு, குறு தொழில்முனைவோர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் பதில் என்ன? கோவை, திருப்பூரில் சிறு, குறு தொழில்களின் நிலை என்ன? ஜி.எஸ்.டி.க்குப் பிறகு என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வில் தெரியவந்த உண்மைகளை பார்க்கலாம்.
தமிழ்நாட்டு வளர்ச்சியில் கொங்கு மண்டலம்
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், மாநில பொருளாதார பங்களிப்பிலும், கோவை மற்றும் திருப்பூரை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது
தென்னிந்தியாவின் `மான்செஸ்டர்` என அழைக்கப்படும் கோவையில், கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான நூற்பாலைகள், இயந்திர மற்றும் வாகன தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள், மோட்டார் பம்பு செட் மற்றும் கிரைண்டர் உற்பத்தி தொழில்கள் நடைபெற்று வருகின்றன.
கோவையின் நூற்பாலைகளில் தயாரிக்கப்படும் நூல், இந்தியாவின் ‘டாலர் சிட்டி’ என அழைக்கப்படும் திருப்பூரில், துணியாக மாற்றப்பட்டு ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
பல முன்னணி ஆடை நிறுவனங்களுக்காக திருப்பூரில் ஆடைகள் தயாரிக்கப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பின்னலாடை தொழிலை நம்பி, கோவையைப் போன்று திருப்பூரிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், வடமாநிலத்தவர்கள் என பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
கொங்கு மண்டலத்தின் சிறு, குறு தொழில்களின் உண்மையான நிலை என்ன, மத்திய, மாநில அரசுகளிடம் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
இரும்பு தளவாட பொருட்கள் தயாரிப்பு, நூற்பாலை, மோட்டார் பம்பு செட் மற்றும் கிரைண்டர், பின்னலாடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று தொழில்முனைவோரை சந்தித்தது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு, சாதகமான தொழில் கொள்கைகள் இல்லாதது, பருத்தி உற்பத்தி குறைவு, பருத்தி விலையில் நிலையற்ற தன்மை போன்ற பல காரணங்களால் தொழில் பாதித்து, 50 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் நம்மிடம் தெரிவித்தனர்.
‘ஜி.எஸ்.டியால் சிறு, குறு தொழில்கள் அழிக்கப்பட்டு வருகிறது’

பிபிசி தமிழிடம் பேசிய கோவை கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ், ’’கோவையில் இன்ஜினியரிங் பொருட்கள் தயாரிப்பில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் (ஜாப் ஆர்டர்) உள்ளன. இதில், 5-6 லட்சம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். குண்டூசி முதல் ராக்கெட்டின் போல்ட் நட் வரையில் நாங்கள் தயாரிக்கிறோம்.
தற்போது, போதிய வேலை ஆர்டர்கள் கிடைக்காததால் தொழில்கள் நலிவடைந்து, 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருந்த இந்த தொழிற்சாலைகள் தற்போது, 12 மணிநேரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. 50 சதவீதம் தொழிற்சாலைகள் நடத்த முடியாமல் பூட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின் ‘ஜாப் ஆர்டர்’ தொழில்களுக்கும் ஜிஎஸ்டி விதித்துள்ளனர். இதனால், தொழிற்சாலைகள் கடுமையாக பாதித்துள்ளன. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின்பு `ஜாப் ஆர்டர்` தொழில் மட்டுமல்ல, கோவையின் அடையாளமான மோட்டார், பம்பு செட் தொழில் என ஒட்டுமொத்த சிறு, குறு தொழில்களும் அழிக்கப்பட்டு வருகிறது. MSME எனப்படும் சிறு, குறு தொழில் துறையை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்தாமல், போதிய உதவிகளைச் செய்யாமல் எங்களை கண்டுகொள்ளாமல் உள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக தொடர் சரிவைத்தான் சந்தித்து வருகிறோம்,’’ என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் ஜேம்ஸ்.
தமிழ்நாடு மாநில அரசு 430 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியதால் கடுமையாக பாதித்துள்ளதாகவும் இந்த மின் கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் ஜேம்ஸ் கூறுகிறார்.
ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்வதுடன், சாதகமான தொழில் கொள்கைகளை மேம்படுத்தி கூடுதல் சிட்கோ அல்லது சிப்காட் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் ஜேம்ஸ் முன்வைக்கிறார்.

‘கோவை என்றாலே கிரைண்டர் தான் – ஆனால் இன்று?’
கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் பாலச்சந்திரன், ‘‘கோவை என்றாலே கிரைண்டர் உற்பத்தி தான் முதன்மையானது. கோவையில் தயாரிக்கப்படும் கிரைண்டருக்கு நாங்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளோம். முன்பு 500 தொழிற்சாலைகள் இருந்த நிலையில், தொழில் நலிவடைந்து தற்போது 200-க்கும் குறைவான கிரைண்டர் தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன.
ஆரம்பத்தில் எங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசிடம் போராடி நாங்கள் ஜிஎஸ்டியை குறைத்துள்ளோம். கொரோனா பாதிப்புக்குப்பின் மூலப்பொருட்கள் விலை உயர்வு, தற்போதைய மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் லாபம் வெகுவாக குறைந்துள்ளது. மக்கள் கடைகளில் இட்லி மாவு வாங்கிக்கொள்வதாலும் கிரைண்டர் விற்பனை சரிந்துள்ளது.
இங்கு தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது, வட மாநிலத்தவர்களை நம்பியே தொழில் நடக்கிறது. தமிழக அரசு இங்குள்ளவர்களுக்கு சிறு, குறு தொழில்கள் குறித்து பயிற்சி கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நாங்கள் அரசுகளிடம் சலுகைகள் ஏதும் கேட்கவில்லை, இருக்கின்றவற்றில் கட்டணம், வரியை மத்திய, மாநில அரசு உயர்த்தாமல் இருந்தாலே போதும்,’’ என்கிறார் பாலச்சந்திரன்.
கோவையின் ஜாப் ஆர்டர், கிரைண்டர், மோட்டார் தொழில்முனைவோர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில், நூற்பாலை மற்றும் பின்னலாடை தொழில்துறையினர் நிலையற்ற பருத்தி விலை, பருத்தி தட்டுப்பாடு காரணமாக தொழில் பாதிப்பதாக தெரிவிக்கின்றனர்.
‘பருத்தி விளைச்சலை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பிபிசி தமிழிடம் பேசிய இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரபு தாமோதரன், ‘‘நூற்பாலைகளுக்கு இருக்கிற மிகப்பெரிய சவாலே பருத்தி விலையில் குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றம் தான். வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து பருத்தி விலையை உயர்த்துவதால் பாதிக்கப்படுகிறோம்.
இந்தப் பிரச்னையை சரிசெய்ய, மற்ற நாடுகளைப் போல ஏக்கருக்கு ஆயிரம் கிலோ பருத்தி மகசூல் பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைச்சல் அதிகரித்தால் மூலப்பொருளான பருத்தி போதிய அளவில் கிடைக்கும், சிண்டிகேட் தவிர்க்கப்படும். மத்திய அரசு தற்போது பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியை துவங்கியுள்ளது. இப்பணிகளை 2-3 ஆண்டுகளில் முடித்து பருத்தி உற்பத்தியை சாத்தியப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப ரீதியில் இயந்திரங்கள் மேம்படுத்தினால் உற்பத்தி செலவு குறையும். தற்போது, தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழில்கள் தங்களை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்திக் கொள்ள திட்டங்களை ஒதுக்கியுதுள்ளது. இதற்கான நிதியை அதிகரிக்க வேண்டும்,’’ என்கிறார் அவர்.
மேலும் தொடர்ந்த பிரபு தாமோதரன், ‘‘கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு உருவாக்கிய முத்ரா கடன் திட்டம், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை, ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களால் சிறு, குறு தொழில்முனைவோருக்கு பெரும் உதவியாக உள்ளது. மாநில அரசு பருத்திக்கு வரி குறைத்ததும் லாபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
தற்போது, மத்திய அரசு தமிழகத்தில் தலா 1,000 ஏக்கர் பரப்பளவில் ஏழு ஜவுளி பூங்கா அமைக்கும் பணியை துவங்க உள்ளது,’’ என, மத்திய, மாநில அரசின் சில திட்டங்கள் உதவியாக இருப்பதாக பிரபு தாமோதரன் தெரிவிக்கிறார்.
‘மத்திய, மாநில அரசுகள் பின்னலாடை தொழிலை வஞ்சிக்கின்றன’

ஆனாலும், பருத்தி தட்டுப்பாடு மற்றும் திடீர் விலை மாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாக தெரிவிக்கிறார், திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம்.
நம்மிடம் பேசிய முத்துரத்தினம், ‘‘திருப்பூரில் 25 ஆயிரம் பின்னலாடை தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இதில், 90 சதவீதம் சிறு, குறு தொழிற்சாலைகள் தான். இவற்றை நம்பி 15 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாகவே பின்னலாடை தொழில் மிகக்கடுமையாக பாதித்துள்ளது, நாளுக்கு நாள் சரிவை நோக்கி பயணிக்கிறது.
இன்றைய சூழலில் திருப்பூரில், பெரிய அளவில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 50 சதவீதத்திற்கும் மேலான சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கவில்லை. செயல்படுகிற தொழிற்சாலைகளிலும் ஷிப்ட் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பின்னலாடை தொழிலை முற்றிலுமாக வஞ்சிக்கின்றன,’’ என்கிறார் முத்துரத்தினம்.
மத்திய, மாநில அரசுகளிடமிருந்து போதிய உதவி கிடைக்காததால் மற்ற மாநிலங்கள் மற்றும் வங்கதேச உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியவில்லை. இதனால், லாபம் குறைவதாகவும் முத்துரத்தினம் தெரிவிக்கிறார்.
‘ஜவுளி கொள்கைகளை மேம்படுத்த வேண்டும்’

தொழிற்சாலைகள் பூட்டப்பட்டதற்கான காரணங்களையும் அவர் முன்வைக்கிறார்.
மேலும் தொடர்ந்த முத்துரத்தினம், ‘‘பின்னலாடை தொழிலுக்கு அடிப்படையான பருத்தியின் விலையில் திடீர் மாற்றம், பருத்தி தட்டுப்பாடு காரணமாக நஷ்டத்தை சந்திக்கிறோம்.
இந்திய அரசின் பருத்தி நிறுவனம் (Cotton Corporation Of India) முறையாக செயல்பட வேண்டும். பருத்தியை நேரடியாக நூற்பாலைகளுக்கு வழங்கும்படி ஏற்பாடு செய்தால் மட்டுமே, இடைத்தரகர்கள் செயற்கையாக பருத்தி விலையை ஏற்றி இறக்குவதை தவிர்க்க முடியும்.
பருத்திக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும், ஜவுளிக் கொள்கையை இரு அரசுகளும் மேம்படுத்த வேண்டும். சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழில் கொள்கைகளை வகுக்க வேண்டும். இவையெல்லாம் எங்களின் நீண்டகால கோரிக்கைகள். இவை நிறைவேற்றப்படாமல் உள்ளதால் தான் பின்னலாடை தொழில் பாதித்து வருகிறது,’’ என்கிறார் முத்துரத்தினம்.
மத்திய, மாநில அரசுகள் கூறுவது என்ன?

தொழில்துறையினரின் குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் அன்பரசன், ‘‘அதிமுக ஆட்சியில் தமிழக சிறு, குறு தொழிலுக்கு 410 கோடி ரூபாய் வரையில் மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இதை 1,500 கோடியாக உயர்த்தியுள்ளோம். இதுவரை, 36,974 தொழில் முனைவோரை உருவாக்கியுள்ளோம், இதில், 14,884 பேர் பெண்கள். இவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம், 1,265 கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளோம்.
சிறு, குறு தொழிலுக்காக அண்ணல் அம்பேத்கர் திட்டம், TN Treds, போன்ற பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், மின் கட்டண உயர்வுக்காக பீக் ஹவர்ஸ் கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைத்துள்ளோம், ஸ்பாட் மீட்டர் அகற்றப்பட்டுள்ளது. திமுக அரசு சிறு, குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்துவதால், Start-up India வரிசையில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது,’’ என விளக்கம் அளித்துள்ளார்.
‘பாஜக அரசு பல உதவிகளைச் செய்துள்ளது’

மத்தியில் ஆளும் பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, பிபிசி தமிழிடம் பேசிய போது , ‘‘பாஜக அரசு கடந்த பத்து ஆண்டுகளில் சிறு, குறு தொழில்களுக்கு தேவையான பல உதவிகளை செய்துள்ளன. `மேக் இன் இந்தியா` திட்டம் மூலம் இந்தியாவில் உற்பத்தியாகும், ஜவுளி, தளவாடங்கள் என பலவகை பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வரிச்சலுகைக்காக நான்கு ஐந்து நிறுவனங்களை தனியாக நடத்திக் கொண்டிருந்தவர்களை, ஒரே நிறுவனமாக மாற்றுவதற்காக ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்துள்ளதால் அவர்கள் பாதிப்பதாக வேண்டுமென்றே கூறுகின்றனர்.
உண்மையில் ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு இல்லை. கொரோனா காலத்தில் கடன் உதவி, சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய பட்ஜெட்டில் கூட சிறு, குறு தொழில்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சிறு, குறு தொழில்களை மேம்படுத்தியுள்ளது,’’ என, விளக்கம் அளித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












