தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜகவின் சாதி அரசியல் கணக்குகள் என்ன?

- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சாதி ஒழிப்பாக இருக்கட்டும், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையாக இருக்கட்டும், தேர்தல் அரசியலில் சாதியின் முக்கியத்துவமாக இருக்கட்டும், சாதி என்ற கருத்தாக்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலில் எங்கும் நீக்கமற இருக்கிறது. இதே மாநிலம் தான், சாதிக்கு எதிராக நாட்டிலேயே வலுவான போராட்டங்களையும் கண்டுள்ளது. சாதி எதிர்ப்பின் அடையாளமாக ஒவ்வொருவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்கியதும் இதே தமிழ்நாடுதான்.
சுயமரியாதை இயக்கத்தின் தந்தையான பெரியார், சாதிப் பிரச்னையால் காந்தியுடன் முரண்பட்டு 1925ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். பிராமண மற்றும் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தனித்தனியாக உணவு வழங்குவதை எதிர்த்த பெரியார், அதை மாற்றியமைக்க முன்வரவில்லை என்றவுடன் கட்சியை விட்டு வெளியேறினார்.
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் சமூக நீதி, கூட்டாட்சி மற்றும் சுயமரியாதைக்கான சித்தாந்தங்களுடன் தேர்தல்களின் மிக முக்கியமான அம்சமாக சாதியும் தொடர்கிறது. குறிப்பிட்ட சமூகத்தினரின் குரலாக ஒலிக்கும் கட்சிகள் முதல் பிரதான கட்சிகள் வரை சாதியின் தாக்கம் இருக்கவே செய்கிறது, சில இடங்களில் இலைமறை காயாய், சில இடங்களில் பகிரங்கமாக. சாதி மட்டுமே இந்த தேர்தலை தீர்மானிக்கும் ஒற்றை காரணி இல்லை என்றாலும், சாதி கண்டிப்பாக அதன் பங்கை ஆற்றிக் கொண்டு தான் இருக்கிறது.
தேர்தலில் நீடிக்கும் சாதி அரசியல் கணக்குகள்
தலைநகர் சென்னை தவிர தமிழ்நாட்டின் பிற வட மாவட்டங்களில் வன்னியர்கள், மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்கள் அதற்கு அடுத்த படியாக நாயுடு உள்ளிட்ட சாதிகளும், தென் தமிழ்நாட்டில் தேவர், மறவர், அகமுடையார் என்ற முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூகத்தினர் வேட்பாளர்களாக களமிறக்கப்படுகின்றனர்.
தனித் தொகுதிகளை பொருத்தவரை, வட தமிழ்நாட்டில் பறையர் பிரிவினரும், தென் தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர் பிரிவினரும் நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே சமயம் தேர்தல் களத்தை பொருத்து இந்த சூழல் மாறலாம். பொது தொகுதிகளில் தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவதை சில சமயங்களில் கட்சிகள் முயற்சித்துள்ளன. ஆதிக்க சாதி அல்லாத மற்ற சாதிகளை நிறுத்தியும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்த கணக்குகளை மனதில் வைத்துக் கொண்டே, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும், தங்கள் வேட்பாளர்களை தேர்த்நெடுக்கும் போது, அந்த தொகுதியின் பிரதான சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்தியுள்ளன. சென்னை நகர்ப்புற தொகுதிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
"மேற்குலகில் வகுப்பு பிரிவினை போல இந்தியாவில் சாதி"
தலித் விவகாரங்கள் குறித்த ஆய்வாளரும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் மையத்தின் முன்னாள் பேராசிரியர் சி லக்ஷ்மணன் “மேற்கத்திய நாடுகளில் தேர்தல்களில் எப்படி வகுப்பு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறதோ அது போல இந்தியாவில் சாதி ஒரு முக்கியமான தீர்மானிக்கும் சக்தியாகவே தேர்தல்களில் இருக்கிறது.
ஒரு தொகுதியில் எது பெரும்பான்மையான சாதியோ அந்த சமூகத்தின் வேட்பாளர் தான் எல்லா தரப்பிலிருந்தும் நிறுத்தப்படுவார். மிக அரிதாகவே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் இருப்பதை காண முடியும். அப்படி இருந்தால் அதுவும் இரண்டாவது பெரிதாக ஒரு இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பெறுவதற்காகவே நிறுத்தப்படுவார்”என்கிறார்.

பட மூலாதாரம், X/@RamaAIADMK
இந்த தேர்தல் களத்தில் பணியாற்றி வரும் பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் பிரமுகர் ஒருவர் கூறும் போது, “இந்த முறை கோவையில், திமுக மற்றும் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அதிமுக வேட்பாளர் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்.
கொங்கு பகுதியில் கவுண்டர்கள் மத்தியில் அதிமுகவிற்கு அதிக செல்வாக்கு இருந்தாலும் வேற்று சமுதாய வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் அது தன் மேல் சாதி பிம்பம் வராமல் பார்த்துக் கொள்கிறது. அதே சமயம் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி போன்ற தலைவர்களுக்காக விழும் கவுண்டர் வாக்குகளும், வேட்பாளர் தேர்வின் காரணமாக பிற சமுதாய வாக்குகளையும் கணிசமாக திரட்ட முடியும்” என்றார்.

பட மூலாதாரம், X/@annamalai_k
அரசியல் களத்தில் பாமக
இந்தியாவின் பிற பகுதிகளை போல தமிழ்நாட்டிலும் 90களில் சாதி ரீதியிலான அமைப்புகள் அரசியல் கட்சிகளாக உருவெடுக்க ஆரம்பித்தன.
1980 களில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களாக இருந்த வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்களை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. 1980 களின் இறுதியில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வகைப்படுத்தி இட ஒதுக்கீடு வழங்கியது.
வன்னியர் வாக்குகளை கூடுதலாக பெற்ற பாமக, தனித்து வெற்றிபெற மற்ற சாதியினரின் வாக்குகளும் அவசியம் என்பதை கண்டது. எனவே ‘சாதி கட்சி’ என்ற அடையாளத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றது. ஆனாலும், சாதி வன்முறை, ஆணவக் கொலைகள் ஆகியவற்றில் மேற்கொள்ளும் நிலைப்பாடுகள் அதனை சாதிய கட்சியாகவே மக்களிடையே பதிவு செய்கின்றன.
தலித் ஆண்கள் ஜீன்ஸ் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து பெண்களை கவர்கிறார்கள் என்று அவர்கள் முன்வைத்த வாதம் கடும் விமர்சனங்களை எழுப்பியது. தலித் அல்லாத சாதிக் கட்சிகளை திரட்டியதன் மூலமும், நத்தம் காலனி வன்முறை, இளவரசன் வழக்கு போன்றவற்றில் அந்த கட்சி மேற்கொண்ட நிலைப்பாடுகளும் சாதிய ரீதியான அணி திரட்டல் நோக்கத்துடனே அமைந்தன.
திமுக கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளாக பாமக இடம் பெறாததற்கு, தலித் மக்களின் அரசியல் பிரதிநிதியாக கருதப்படும், விசிக இடம்பெற்றிருப்பதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பேராசிரியர் சி லக்ஷ்மணன் “பட்டியலின மக்களுக்கு என தனித் தொகுதிகள் இருந்தாலும் பட்டியலினத்தவரை முழு சுதந்திரத்துடன் செயல்பட பெரிய கட்சிகள் அனுமதிக்கவில்லை. எனவே தான் சாதி அமைப்புகளாக இருந்தவை 1990களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உருவாக காரணமாக இருந்தன” என்கிறார்.
தமிழகத்தில் பிரதானமாக மூன்று முக்கிய தலித் சாதிகள் உள்ளன. முதலாவதாக, மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பறையர் சாதி பெரும்பான்மையாக உள்ளது. திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
இப்போது தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதிகள் மாநிலத்தின் தெற்கிலும் கடலோர டெல்டா மாவட்டங்களிலும் உள்ளனர். டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் இவர்களை ஓரளவு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
அருந்ததியர்கள் மற்ற இருவருடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்கள். விசிக மற்றும் புதிய தமிழகம் இரண்டும் தத்தமது செல்வாக்கு உள்ள பகுதிகளில் அரசியல் கட்சி கட்டமைப்புக்களை கணிசமாக நிறுவியுள்ளன.
“கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் விசிக இரண்டு பொதுத் தொகுதிகள் உட்பட ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது. நான்கு தனித் தொகுதிகளில் பட்டியலின வேட்பாளர்களை நிறுத்திய விசிக, பொதுத் தொகுதிகளில் அவர்களை நிறுத்தவில்லை. தலித் அல்லாத வேட்பாளர்கள் தான் பொதுத் தொகுதிகளில் நிறுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட திமுக போன்ற அதே ஃபார்முலாவை தான் விசிக கையாள நினைக்கிறார்கள்” என்றார் லக்ஷ்மணன்.

சரத்குமார், கருணாஸ் வேட்பாளரானது எப்படி?
மேற்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதி அமைப்பில் இருந்து 2009 ஆம் ஆண்டு புதிதாக கொங்கு நாடு முன்னேற்ற கழகம் என்ற கட்சி உருவானது. அந்த கட்சி உடைந்து (2013) கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை புதிதாக உருவாக்கினார் இஞ்சினியர் ஈஸ்வரன். கவுண்டர் சமூகத்தினருக்கு அரசு வேலைகளில் கூடுதல் இடம் வழங்க வேண்டும், மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு கூடுதலான கவனம் உள்ளிட்ட கோரிக்கைகளை அந்த கட்சி வைக்கிறது.
அரசியல் அறிவியல் மூத்த பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறுகையில், "சாதியை வைத்து வேட்பாளர் தீர்மானம் செய்யும் போதே, அது வாக்குவங்கி அரசியலாகிவிடுகிறது. பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்துவதும், சமரச அரசியலும் தொடங்கி விடுகிறது. ஆதிக்க சாதி மட்டுமல்லாமல் அந்த சாதியில் பணக்காரர் ஒருவரை தான் வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.
நடிகர் கருணாஸ் வேட்பாளராக்கப்பட சாதி என்ற அடையாளத்தை தவிர வேறு என்ன தகுதி இருந்தது?. அவர் அதிமுக அணியில் போட்டியிட்டு எம் எல் ஏ ஆனார். இது பெரிய கட்சிகள் செய்யும் தவறாகும்.

சரத்குமாரால் தனியாக ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா? அவர் சமூகத்தினரே அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் திமுக அதிமுக பாஜக என எல்லா கட்சிகளும் அவருக்கு உதவி தான் வருகின்றன. இவரை பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் சந்தர்ப்பவாதிகள் என்றால், அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் சரத்குமார் அவர்களை விட மேலும் சந்தர்ப்பவாதியாவார். ராதிகாவின் நாயுடு பின்புலத்தையும் சினிமா அறிமுகத்தையும் கொண்டு விருதுநகரில் வாக்கு பெற நினைக்கிறார்கள்" என்றார்.

கொங்கு மண்டலத்தில் சாதியின் தாக்கம்
சமீபத்தில் வள்ளி கும்மியாட்டத்தின் போது திண்டுக்கல்லில் குழுமியிருந்த பெண்களிடம் தங்கள் சமுதாய மணமகனையே திருமணம் செய்து கொள்வோம் என வாக்குறுதி பெற்றார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி.பாலு. அவர் 2021ம் ஆண்டு திமுக கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். தற்போது திமுக கூட்டணியில் நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூர்யமூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன் சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையானதால், வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
சேலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரான 2017ம் ஆண்டுக்கு பிறகு கவுண்டர் சமூகத்தின் அணி திரட்டல் வலுவானது.
தேர்தல் களத்திலிருந்து நம்மிடம் பேசிய அரசியல் பிரமுகர் அரசியல் பிரமுகர் “கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் 12 இடங்களில் போட்டியிட்டு எந்த இடத்தில் வெற்றிபெறவில்லை. ஆனால் ஆறு லட்சம் வாக்குகள் பெற்று, அதன் பின் வந்த தேர்தல்களில் தங்களுக்கான இடங்களைப் பெற அது உதவியது.
பாமகவுக்கு ஒட்டுமொத்தமாக 5% வாக்குகள் இருக்கின்றன என்றாலும், வன்னியர்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் அது 10% ஆக இருக்கும். நிச்சயமாக சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அவர்கள் இருப்பார்கள். இவர்களால் பிற சாதிகளின் வாக்குகளை பெறுவது கடினமே.
தொகுதியில் கொங்கு கட்சி சார்பாக தலித் வேட்பாளர் ஒருவரை நிறுத்தினாலும் கவுண்டர் சமூகத்தினர் வீட்டு சுவர்களில் தலித் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறாது. கட்சி சின்னம் மட்டுமே இடம் பெறும்” என்றார்.

பட மூலாதாரம், PV Kathiravan
முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு?
சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய கட்சி பார்வர்ட் பிளாக். தமிழ்நாட்டில் அது முத்துராமலிங்க தேவரின் காலத்திலிருந்து பார்வர்ட் பிளாக், அதன் தேவர் பிணைப்புகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த கட்சி தற்போது அதிமுக அணியில் உள்ளது. முத்துராமலிங்க தேவர் தனது காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக அறியப்பட்டவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான சசிகலாவின் சாதிப் பின்னணி, அந்த கட்சிக்கு முக்குலத்தோர் ஆதரவை பெற்றுக் கொடுத்தது. இப்போது அதே முக்குலத்தோர் வாக்குகளை பெற வேண்டும் என டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் விரும்புகிறார்கள். அப்போதுதான் அதிமுகவில் தங்கள் செல்வாக்கை மீட்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
“முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவு தனக்கு இருக்கிறது என நிரூபிக்க அவர்கள் அதிகபட்சமாக இருக்கும் தேனியில் நின்று அவர்களின் வாக்குகளை ஒன்றிணைக்க நினைக்கிறார் டிடிவி தினகரன். அதே போன்று, ராமநாதபுரத்தில் நிற்கும் இஸ்லாமிய வேட்பாளரை எதிர்த்து தேவர் வாக்குகளை திரட்டிவிட முடியும் என ஓ பி எஸ் நினைக்கிறார். இதன் மூலம் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும். அதன் மூலம் கட்சியில் தாங்கள் தான் முக்குலத்தோர் சமூக பிரதிநிதி என்று நிரூபிக்க வேண்டும்.” என்றார்

பட மூலாதாரம், Facebook
நாடார் சமூகத்தினர் வாக்குகள் யாருக்கு?
தென் தமிழ்நாட்டில் நாடார், தேவேந்திர குல வேளாளர் இருவருக்கு மத்தியிலும் செல்வாக்கை விரிவாக்க பாஜக விரும்புகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது அரசியல் தளத்தை வலுப்படுத்திய பாஜக, நாடார்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கை வலுப்படுத்தி பிற மாவட்டங்களில் நுழைய விரும்புகிறது. நாடார் வாக்கு வங்கியை நம்பியே உருவான நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைக்கப்பட்டது.
திமுக அதிமுகவிற்கும் நாடார் மத்தியில் கணிசமான செல்வாக்கு உள்ளது. இருப்பினும், கனிமொழி கருணாநிதியை தூத்துக்குடி தொகுதியில் நிறுத்தும் முடிவிற்கு அவரது தாயாரின் நாடார் சமூக பின்னணியும் ஒரு காரணம் என்று அரசியல் பர்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் அவர்களுக்கான கவனிப்பு சற்று குறைவாகவே உள்ளது. ஒரு இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தினால் எதிரில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை திரட்டி விட முடியும் என்ற சூழல் உள்ளது. கிறித்தவர்கள் அதிகம் இருக்கும் கன்னியாகுமரியில், கிறித்துவ வேட்பாளரை நிறுத்தாமல் காங்கிரஸ் விஜய் வசந்தை நிறுத்தியுள்ளது. விஜய் வசந்த் நாடார் வாக்குகளையும் பெற முடியும், காங்கிரஸ் வேட்பாளர் என்பதால் கிறித்தவர்களின் வாக்குகளையும் பெற முடியும்.” என்றார் அரசியல் பிரமுகர்.
"ஒரு சமூகம் சார்ந்த தலைவர்கள் தனது சமூக மக்களுக்காக உழைத்தால் கூட பரவாயில்லை. அதையும் செய்வதில்லை. அந்த சாதியில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே தான் இருக்கிறார்கள்" என குறிப்பிட்டார் ராமு மணிவண்ணன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












