நேரு நவீன இந்தியாவின் சிற்பியா, அல்லது இன்றைய பிரச்னைகளுக்கு காரணமானவரா?

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், துஷார் குல்கர்னி
    • பதவி, பிபிசி மராத்தி

லாந்தர் விளக்கோடு தள்ளுவண்டியை ஒருவர் தள்ளிக்கொண்டு வந்தார். அவரை நிறுத்தி,

"ஏன் இந்த நேரத்தில் விளக்கை ஏற்றி வைத்திருக்கிறீர்கள்?”

என்று கேட்டேன்.

"இன்று பேரிருளாக இருக்கிறது," என்று அவர் பதிலளித்தார்.

இதுதான் நேரு இறந்த நாளின் கதை.

1964, மே 27ஆம் தேதி அன்றைய பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு இறந்த நாளன்று புகழ்பெற்ற கவிஞர் நாராயண் சர்வே பாடிய வரிகள் இவை. அன்று மக்கள் மத்தியில் நிலவிய உணர்வை இந்த வரிகள் வழியாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் மக்கள் மத்தியில் நேருவின் ஈர்ப்பு காணப்பட்டது. மகாத்மா காந்திக்கு பிறகு நேருவை தாண்டி வேறெந்த தலைவரும் இவ்வளவு பிரபலம் இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று அவர் ஆற்றிய 'Tryst with Destiny' (விதியோடு ஒரு ஒப்பந்தம்) உரை அந்த நள்ளிரவிலும் ஏராளமான மக்களுக்கு எழுச்சியூட்டிய ஒன்றாக அமைந்தது.

அவர் எப்போதும் பாரம்பரியமான ஷெர்வானி உடையை அணிவதையே பழக்கமாக வைத்திருந்தார். பின்னாட்களில் அதுவே நேரு உடை என்று பெயர் பெற்றது மட்டுமின்றி இன்று வரையிலும் பிரபலமான உடையாக வலம் வருகிறது.

இந்தியாவில் அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் நேரு. தொடர்ந்து 16 ஆண்டுகள் அவர் பிரதமராக பணியாற்றியுள்ளார். உண்மை என்னவெனில் இரண்டு முறை பிரதமராக இருந்த அவருக்கு மூன்றாவது முறை அந்த பதவியை வகிப்பதில் விருப்பமில்லை. ஆனாலும், அவர் இறக்கும் வரையிலும் அவர்தான் பிரதமராக பதவி வகித்தார்.

கேரள இலக்கிய விழாவில் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், நேரு-இன்வென்ஷன் ஆஃப் இந்தியா புத்தகத்தை எழுதியவருமான சசி தரூர், " 1958-ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சில மாதங்கள் இமயமலைக்குச் செல்ல முடிவு செய்தார் நேரு. நாட்டிற்காக பல ஆண்டுகள் சேவை செய்த பிறகு, இது ஓய்வு பெறுவதற்கான நேரம் என்று கருதினார் அவர். எனவே இந்த பொறுப்பை வேறு யாராவது எடுத்துக்கொள்ளுமாறு கேட்டு காங்கிரசின் செயற்குழுவுக்கு கடிதம் எழுதினார்” என்று கூறினார்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜவஹர்லால் நேரு

“பிரதமர் ஜவஹர்லால் நேரு ராஜினாமா செய்த போதிலும், யாருமே அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவர்கள், நாட்டு மக்கள் மற்றும் அன்றைய அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் என அனைவருமே நேருவை ராஜினாமா செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.”

“அனைத்து தரப்பிலும் இருந்து அழுத்தம் வந்ததை தொடர்ந்து தனது முடிவை மாற்றிக்கொண்டார் நேரு. அதே சமயம் ஓய்வெடுப்பதற்காக 6 மாதங்களுக்கு இமயமலை செல்லவும் முடிவெடுத்திருந்தார் அவர். ஆனால், மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக 15 நாட்களில் அவர் திரும்பி வர வேண்டியிருந்தது”

இதிலிருந்தே மக்கள் மத்தியில் நேருவுக்கு இருந்த செல்வாக்கையும், அவரது புகழையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோதி ஒரு கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவின் வீழ்ச்சிக்கு நேருவே காரணம் என்று குறிப்பிட்டார்.

அதிலிருந்து விவாதங்களில் நேருவின் பெயர் முக்கியமானதாக மாறியுள்ளது.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் கூட அவரது படங்கள் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு பேசுபொருளாகியுள்ளது. பலர் அவருக்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் பேசி வருகின்றனர். இது இன்றும் அவரது முக்கியத்துவத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியா? அல்லது மோதி கூறுவது போல இன்றைய பிரச்னைகளின் காரணகர்த்தாவா? இந்த கட்டுரை வழியாக நேரு என்றால் யார்? என்பதை விரிவாக அலசி ஆராயப் போகிறோம்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேருவின் தந்தையான மோதிலால் நேரு அலஹாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.

நேருவின் இளமைப் பருவம்

ஒருவரது வாழ்க்கை குறித்து நீங்கள் அறிந்துக்கொள்ள விரும்பினால், முதலில் அவரது குழந்தைப்பருவம் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தனது குழந்தைப்பருவம் குறித்து தானே கூறியுள்ள நேரு. அதை ‘கொண்டாட்டங்கள் ஏதுமில்லாதது’ என்று குறிப்பிடுகிறார்.

நேருவின் தந்தையான மோதிலால் நேரு அலஹாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். அவர் தொழிலில் மட்டுமின்றி அரசியலிலும் முத்திரை பதிப்பவராக இருந்தார். நேருவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையில் பெரிய வயது இடைவெளி இருந்தது. அந்த சமயத்தில் அவரது வீட்டில் யாருமே அவரது வயதொத்தவர்களாக இல்லை.

அவர்கள் எப்போதும் தங்களது உறவினர்கள் குறித்து புறணி பேசுபவர்களாக இருந்தனர். இதுவே அந்த சமயத்தில் இருந்த சூழல் மற்றும் அது குறித்து நேருவுக்கு என்ன உணர்வு இருந்தது என்பது குறித்த புரிதலை தருகிறது.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இளைய நேரு

அந்த நேரத்தில், பிரிட்டிஷ் அரசு இந்தியர்களை ஒடுக்கிக் கொண்டிருந்ததை பார்த்து நேரு கோபம் கொண்டார்.

அலஹாபாத்தின் பூங்காக்களில் ஆங்கிலேயர்களுக்கான இருக்கைகள் என தனியாக இருந்தது. அதில் இந்தியர்கள் அமரக்கூடாது. இதை தனது சுயசரிதையில் நேரு பதிவு செய்துள்ளார்.

நேருவுக்கு வீட்டிற்கே வந்து ஆசிரியர்கள் கல்வி கற்றுக்கொடுத்தனர். அவருக்கு சிறு வயதிலிருந்தே கற்பதில் ஆர்வம் இருந்தது. வெறும் பாடப்புத்தகம் மட்டுமின்றி இதர புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

குழந்தைப் பருவத்தில் அரேபிய இரவுகள், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புத்தகங்களோடு பல்வேறு விதமான நாட்டுப்புற கதைகளை படிப்பதில் அவருக்கு விருப்பம். அலஹாபாத்தின் கங்கா-ஜமானி கலாசாரம் அவரது சிறுவயதில் இருந்தே அவர் மீது செல்வாக்கு செலுத்தி வந்தது வெளிப்படையாகவே தெரிந்தது.

மேலும், அவர்களது குடும்பம் மத சார்பின்மை மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் கொள்கையோடு வாழ்ந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். அது தீபாவளியோ, ஜென்மாஷ்டமி அல்லது மொஹரம் என எந்த பண்டிகையாக இருந்தாலும் அனைத்திலும் பங்கேற்பவர்களாக அவர்கள் இருந்தனர்.

வீட்டிலிருந்த ஆண்கள் மத சார்பற்றவர்களாகவும், அதே சமயம் பெண்கள் கடவுளை வணங்குபவர்களாகவும் இருந்ததாக அவர் கூறுகிறார்.

நேரு தனது மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு ஹேரோ போர்டிங் பள்ளியில் சேர்ந்தார்.

பின்னர் அவரது 20வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அப்போதே அந்த பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களின் அரசியல் விவாதங்களில் பங்கேற்பதில் ஆர்வமிக்கவராக இருந்தார் நேரு. அங்கு விவாதிக்கப்பட்ட உலகளவிலான அரசியல் கருத்துக்களின் மூலமாகவே அவரது உலகம் குறித்த பார்வை மெருகேறியது.

நாட்கள் செல்லச் செல்ல இங்கிலாந்தின் அறிவியல் சிந்தனையாளர்களின் வழியாக தனது அறிவை மேலும் வளர்த்துக்கொண்டார்.

பட்டம் பெற்ற பிறகு என்ன செய்வது என்ற கேள்வி அவர் முன் வந்து நின்றது. இந்நிலையில் அவருக்கு பட்டயத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அதற்காக அவர் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

காரணம் அந்த தேர்வில் பங்கேற்க 23 வயது நிரம்பியிருக்க வேண்டும். எனவே மூன்று வருடங்கள் காத்திருப்பது சரியாக இருக்காது என்றே அவர் முடிவெடுத்தார்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1912ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு, தனது தந்தையுடன் வழக்கறிஞர் பணியை தொடங்கினார் நேரு.

காந்தியைச் சந்தித்த நேரு

அந்த சமயத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலை இருந்தபோதிலும், ஐசிஎஸ் பணியில் சேருவது குறித்து அவர் சிந்திதுள்ளார். அதுகுறித்த சிந்தனை தனக்கு எழுந்ததாக பிற்காலத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.

இறுதியாக தனது அப்பாவின் பணியையே செய்ய முன்வந்தார் நேரு. அதற்காக அவர் சட்டபடிப்பையும் முடித்தார். இந்த காலத்தில் ஒவ்வொரு தேர்வாக அடுத்தடுத்து வெற்றிபெற்றார்.

சட்டப்படிப்பு ஒன்றும் கடினமாகவும் இல்லை, அதே சமயம் எளிமையானதாகவும் இல்லை. எனவே எந்த சிரமும் இல்லாமல் தான் தேர்ச்சி பெற்றதாக கூறியுள்ளார் நேரு. ஆனாலும், இந்த தேர்வுகளில் பெரியளவிலான வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.

1912ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு, தனது தந்தையுடன் வழக்கறிஞர் பணியை தொடங்கினார் நேரு. அந்த நேரத்தில் முதல் உலகப்போர் தொடங்கியிருந்தது. அப்போது பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட், கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் இந்தியாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர்.

பால கங்காதர திலகர் மட்டுமின்றி கோகலே மீதான மரியாதையின் காரணமாக அரசியலுக்கு ஈர்க்கப்பட்டார் நேரு. இவரது தந்தையும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இருவரும் பல்வேறு அரசியல் கூட்டங்களில் பங்கேற்றனர்.

1916ஆம் ஆண்டு இவர் மகாத்மா காந்தியை சந்தித்தார். அப்போது அவர் ஆப்பிரிக்காவில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களுக்காக செய்திருந்த பணிகள் மற்றும் சத்தியாகிரகம் ஆகியவை குறித்து நன்றாக அறிந்திருந்தார் நேரு.

அவரது சேவைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நேரு, தேசியவாதம் குறித்த சரோஜினி நாயுடுவின் உரையால் காந்தி ஒரு தீவிர தேசியவாதி என்பதையும் புரிந்துக்கொண்டார்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரசியிலில் ஒரு செயற்பாட்டாளராக நுழைந்த நேரு, அடுத்தடுத்து ஒவ்வொரு இயக்கமாக முன்னெடுக்க தொடங்கினார்.

சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்கு

ஆரம்ப காலத்தில் இருந்தே நேரு சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றிருந்தார். நிர்வாகம் சார்ந்த அவரது பின்னணி அவருக்கு பெரிதும் உதவியது. மேலும் அவரது அனுபவம் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் பிரச்னைகளை உடனடியாக புரிந்துகொண்டு அதற்கு உடனடி தீர்வு காணவும் உதவியது.

அரசியிலில் ஒரு செயற்பாட்டாளராக நுழைந்த நேரு, அடுத்தடுத்து ஒவ்வொரு இயக்கமாக முன்னெடுக்க தொடங்கினார்.

தனது வாழ்நாளில் அதிக முறை சிறையில் அடைக்கப்பட்ட பிரதமராகவும் இவர் அறியப்படுகிறார். ஒட்டுமொத்தமாக நாட்டின் விடுதலைக்காக 9 முறை சிறைக்கு சென்றுள்ளார் நேரு.

1920ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் பேரணி உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. மெத்த படித்த இளம் விவசாயி ஒருவர் போராட்டத்தில் குதிப்பதை இந்தியா பார்ப்பது ஒன்றும் அது முதல் முறையல்ல.

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தி, சம்பரணில் இருந்து இந்திய விவசாயிகளுக்கான சத்தியாகிரகத்தை தொடங்கினார்.

ஆனால், பலருக்கும் ஏன் நேரு இந்த இயக்கித்திலிருந்து தனது சுதந்திர போராட்ட பயணத்தை தொடங்கினார் என்று ஆச்சரியம் இருக்கலாம்.

அதற்கான பதிலை அவரே தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

“1921 நம் அனைவருக்கும் தனித்துவமான ஆண்டு. தேசியவாதம், அரசியல், மதம், இறையுணர்வு மற்றும் மத அடிப்படைவாதம் ஆகியவற்றின் தனித்துவமான கலவையை இந்த ஆண்டில் கண்டோம். இவை அனைத்திற்கும் பின்னால் நமது நாட்டின் விவசாய பிரச்னைகள் மற்றும் பெருநகரங்களில் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியை நம்மால் காணமுடிந்தது.”

வெறுமனே விடுதலை பெறுவது மட்டும் நேருவின் நோக்கமாக இருக்கவில்லை. அவர் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றம் குறித்து கனவுகண்டார். அதற்காகவே அவர் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் இயக்கங்களிலும் பங்கேற்றார்.

1920-22 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் போது அவர் இருமுறை சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேரு காந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்டிருந்தாலும் கூட, இயக்கம் நிறுத்தப்பட்ட சமயத்தில் தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

1921-22 காலகட்டத்தில் ஒத்துழையாமை இயக்கம் அதன் உச்சத்தில் இருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் சௌரி சௌராவில் இருந்த காவல்நிலையம் ஒன்றிற்கு தீ வைத்தனர். இதில் 3 பொதுமக்களும், 22 காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி அந்த இயக்கத்தை நிறுத்தி விட்டார்.

இதனால், நேரு மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் வருத்தமடைந்தனர். அந்த இயக்கத்தை திரும்ப பெற்றதால் நேரு கோபமடைந்தார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த இயக்கத்தை நிறுத்திய பிறகு காங்கிரஸ் தலைவர்கள் வருத்தமடைந்தனர் மற்றும் இந்தியாவின் இளைஞர்கள் மேலும் கிளர்ச்சி மனநிலைக்கு சென்றுவிட்டனர்” என்று கூறினார்.

“எங்களது அனைத்து நம்பிக்கைகளும் சிதைந்து விட்டது. இதுபோன்ற சூழலில் இந்த உணர்வு இயல்பானதுதான். ஆனால். இதில் மிகவும் வலியை ஏற்படுத்தக் கூடிய விஷயம் என்னவென்றால், இந்த இயக்கத்தை நிறுத்துவதற்கு சொல்லப்பட்ட காரணமும் அதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களும்தான்” என்று நேரு தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. நேரு காந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்டிருந்தாலும் கூட, இயக்கம் நிறுத்தப்பட்ட சமயத்தில் தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி, சுதந்திர இலட்சியத்தை அடைவதற்காக நாம் வன்முறை இல்லாத அகிம்சை பாதையை தேர்வு செய்துள்ளோம். ஆனால், நிச்சயமாக அதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேரு சுதந்திரத்திற்கு பிறகு, அவர் இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவியேற்றார்.

காந்திக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தார் அவர்.

அதே சமயம் காந்தியின் அகிம்சை கொள்கை என்ன, அதை இயக்கும் தத்துவம் என்ன என்பதையும் நேரு பார்க்க தவறவில்லை. கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும் கூட காந்தி வழிநடத்திய இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார் நேரு.

இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த சமயத்தில், காங்கிரசின் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் நேரு. அவர் காங்கிரசின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். அப்போது உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்த அவர், இந்தியாவின் பாத்திரம் குறித்து அந்நாடுகளுக்கு எடுத்துரைத்தார்.

சுதந்திரத்திற்கு பிறகு, அவர் இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவியேற்றார். அந்த சமயத்தில் அவர் வகுத்துக் கொடுத்த கொள்கைகளே இன்றும் நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளின் உயிர்நாடியாக பார்க்கப்படுகிறது.

1929 ஆண்டு லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நேரு தலைவராக பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக சுயாட்சியே காங்கிரசின் முழக்கமாக இருந்தது. ஆனால், நேருவின் தலைமையின் கீழ் இந்த கோரிக்கை சுயாட்சி மற்றும் பூரண சுதந்திரம் என மாற்றம் பெற்றது.

காங்கிரஸ் மற்றும் சுதந்திர போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட இந்த பெரும் மாற்றம் இவரது தலைமையின் கீழ் தான் கொண்டுவரப்பட்டது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

காந்தி தலைமையேற்று நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்துக் கொண்டார் நேரு. அவரது சிந்தனையும், சேவையும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக பரவியது.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1935ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது தனது சுயசரிதையை எழுதி முடித்தார் நேரு. அது 1936ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

1930ஆம் ஆண்டு காந்தி உப்பு சாத்தியாகிரகத்தை தொடங்கினார். இதன் மூலம் சாமானிய மக்களின் கோரிக்கையும் விடுதலை இயக்கத்தின் முக்கிய கோரிக்கையாக மாற முடியும் என்று உணர்த்தினார் அவர்.

அதிகாரத்தில் இல்லாத போதும் தயக்கமின்றி தனது போராட்டத்தை தொடங்கியது காங்கிரஸ். இந்த இயக்கத்தின் போது பல முறை கைது செய்யப்பட்டார் நேரு. சிறையில் இருந்தவாறே ஏரளாமாக எழுதவும் செய்தார் அவர்.

1935ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது தனது சுயசரிதையை எழுதி முடித்தார் நேரு. அது 1936ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் வெறும் நேருவின் நினைவுகள் மற்றும் வாழ்க்கை குறிப்பாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக விடுதலைக்கு முந்தைய சமூகம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் முக்கிய ஆவணமாகவும் கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக காந்திஜி நடத்திய தனிநபர் சாத்தியாகிரக போராட்டத்திலும் பங்கேற்றார் நேரு. இதில் முதலில் பங்கேற்றவர் வினோபா பாவே. இரண்டாவதாக நேருவும் பங்கேற்றார். அதன் பிறகு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்றார் நேரு. இதன் காரணமாக 1942ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு அஹமதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார் அவர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஆசாத் ஹிந்த் சேனாவை உருவாக்கினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்நிலையில் அந்த இயக்கத்தை சேர்ந்த பலரும் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்காக 1945ஆம் ஆண்டு நேரு தானாக முன்வந்து வழக்கெடுத்து வாதாடினார். ஆனால், அந்த வழக்கில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும் இதன் வழியாக சுபாஷ் சந்திர போஸுக்கான நேருவின் ஆதரவையும், அவரது நாட்டுப்பற்றையும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காந்தி யாரை முடிவு செய்கிறாரோ அவரே பிரதமர் என்ற நிலை இருந்தது.

நேரு இந்தியாவின் பிரதமரானது எப்படி?

பல்வேறு எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் நேரு பிரதமராக பதவியேற்றார். அந்த சமயத்தில் இரும்பு மனிதர் வல்லபாய் படேல் அல்லது மகாத்மா காந்தி போன்ற நபர்கள் இருந்த போது ஏன் நேரு பிரதமராக ஆக்கப்பட்டார் என்ற கேள்வியும் பரவி வந்தது.

இதில் முரண் என்னவென்றால் நேருவின் ஆதரவாளர்களோ அல்லது படேலின் ஆதரவாளர்களோ, இருவருமே அதிகாரம் காந்தியின் கைகளில் தான் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கின்றனர். காந்தி யாரை முடிவு செய்கிறாரோ அவரே பிரதமர் என்ற நிலை இருந்தது. எனவே, ஏன் காந்தி படேலை விட்டுவிட்டு நேருவை தேர்வு செய்தார் என்ற புள்ளியில் இருந்து இந்த விவாதத்தை தொடங்குவோம்.

நேரு மற்றும் படேலுக்கு இடையில் பல வேறுபாடுகள் உள்ளது. குறிப்பாக சின்ன விஷயங்களிலும் கூட வேறுபாடுகள் இருந்தன.

ஆனால், இரண்டு தலைவர்களுமே ஜனநாயகவாதிகள் தான், இருவருமே சாதாரண மக்களின் முன்னேற்றத்தில் சமமான அக்கறை கொண்டவர்கள் தான். இருவரது தலைமை பண்புமே சுதந்திர போராட்டத்தின் பல்வேறு இயக்கங்கள் வழியாக மெருகேற்றப்பட்டது தான்.

அப்படியான சூழலில் ஏன் சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் முதல் உள்துறை அமைச்சராகவும், நேரு பிரதமராகவும் பொறுப்பேற்றனர்?

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1946 ஏப்ரல் 29 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்பட இருந்தார். அதே நபர் இந்தியாவின் தற்காலிக பிரதமராகவும் பொறுப்பேற்க வேண்டும்.

சர்தார் வல்லபாய் படேல் பிரதமராக தேர்வு செய்யப்படாதது ஏன்?

1929ஆம் ஆண்டே தனது அரசியல் வாரிசு யார் என்பதை தெளிவு படுத்திவிட்டார் மகாத்மா காந்தி. அந்த காலகட்டத்தில் சுதந்திரம் குறித்த எந்த ஒளியும் தென்படாத போதிலும் கூட அதுகுறித்து பேசியிருந்தார் காந்தி. அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பல வரலாற்றாளர்களும் விவாதித்து வருகின்றனர்.

நேருவால் ஆங்கிலேயர்களுடன் திறம்பட பேச்சுவார்த்தை நடத்த முடிந்ததாகவும், நாட்டின் பல நுட்பமான பிரச்னைகளை அவரால் நுட்பமாக அணுக முடிந்தது எனவும் அன்றைய தலைவர்கள் மத்தியில் ஒரு கருத்து இருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி, பல உலக நாடுகளும் கூட அவரை வளர்ந்து வரும் தலைவராகவே பார்த்தன.

இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் நேருவுக்கு 56 வயதும், சர்தார் வல்லபாய் படேலுக்கு 71 வயதும் ஆகியிருந்தது. பிரதமர் போன்ற ஒரு பதவிக்கு வயது குறைந்தோரே சரி என்று காந்தி முடிவெடுத்ததை அவரது கடித பரிமாற்றம் வழியாக நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. உடல்நிலையை கருத்தில் கொள்ளாததற்காக படேலை திட்டினார் அவர்.

மூத்த பத்திரிகையாளர் தயாசங்கர் ஷுக்லா சாகர் பிபிசி இந்தியில் எழுதிய கட்டுரை ஒன்றில், எது படேலை விட நேருவை சிறப்பானவர் ஆக்கியது என்று விவரிக்கையில், முஹமது அலி ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த படேல் தான் சரியானவர் என காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர். ஆனால், காந்தியோ நேருவை தேர்ந்தெடுத்தார் என்கிறார்.

அந்த கட்டுரையில், மகாத்மா காந்தியின் புத்தகம் ஒன்றை சுட்டிக்காட்டும் அவர், மௌலானா ஆசாத்தை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக சொல்லி அவருக்கு காந்தி கடிதம் எழுதியதை குறிப்பிடுகிறார். காங்கிரசின் தலைவர் பொறுப்பில் இருப்பவரே, நாட்டின் பிரதமர் பதவியிலும் இருப்பார் என்பது அப்போது வெளிப்படையாக தெரிந்தது. எனவே, காந்தி ஆசாத்துக்கு கடிதம் எழுதினார்.

அதில் எந்த தயக்கமும் இன்றி, “என்னிடம் ஆலோசனை கேட்டல் நான் நேருவின் பெயரையே பரிந்துரைப்பேன். அதற்கு பல காரணங்கள் உண்டு, ஆனால் அவரை குறிப்பிடுவது சரியாக இருக்காது” என்று நேரடியாகவே கூறினார் காந்தி.

இந்த கடிதத்திற்கு பிறகு காந்தி நேரு பிரதமராக விரும்புகிறார் என்ற செய்தி கட்சிக்குள் பரவியது. 1946 ஏப்ரல் 29 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்பட இருந்தார். அதே நபர் இந்தியாவின் தற்காலிக பிரதமராகவும் பொறுப்பேற்க வேண்டும்.

காங்கிரஸ் மாகாணக்குழுக்களின் தலைவர்கள் ஒப்புதலோடு காங்கிரசின் தலைவர் தேர்வு செய்யப்படுவார். மொத்தம் 15 மாகாணக்குழு தலைவர்களில் 12 பேர் படேல் தான் தலைவராக வேண்டும் என விரும்பினர்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் காரியக்கமிட்டி தலைவராக பொறுப்பேற்றார் நேரு. அதே போல் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் தற்காலிக பிரதமராகவும் பொறுப்பேற்றார்.

தலைவரை தேர்வு செய்வதற்கான முன்மொழிவை தயாரித்த காந்தி அதில் நேரு மற்றும் படேலின் பெயர்களை சேர்த்திருந்தார். நேருவை பார்த்து உங்கள் பெயரை யாரும் முன்மொழியவில்லையா என்று காந்தி கேட்க, அதற்கு மௌனமாக இருந்தார் நேரு. அது காந்தி முடிவெடுக்க வேண்டிய நேரம். காந்தி வேறு ஒரு திட்டத்தை முன்னெடுத்தார்.

படேல் பின்வாங்கினால் மட்டுமே தேர்தல் போட்டியின்றி நடக்கும் என்று அவருக்கு தெரியும். அதற்காக எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளின் விளைவாக காந்தி விரும்பியது போல் நேரு போட்டியின்றி காங்கிரசின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வரலாற்று தகவல்கள் காங்கிரசின் பொதுச்செயலாளராக இருந்த ஆச்சார்யா கிருபளானியால் அவரது ‘காந்தி வாழ்க்கை மற்றும் சிந்தனைகள்’ புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எழுதியுள்ளார் தயாசங்கர் ஷுக்லா சாகர்.

அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் காரியக்கமிட்டி தலைவராக பொறுப்பேற்றார் நேரு. அதே போல் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் தற்காலிக பிரதமராகவும் பொறுப்பேற்றார்.

அவரது எதிராளிகளையும் கூட தன்னுடைய முதல் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார் நேரு. டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் நேருவின் கொள்கைகளை விமர்சித்து வந்தார்.

அவருக்கும் அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதே சமயம் இந்து மகாசபையின் தலைவர் டாக்டர் ஷியாம்பிரசாத் முகர்ஜிக்கும் அந்த அமைச்சரவையில் இடம் கிடைத்தது. இந்த இரு தலைவர்களின் கல்வி மற்றும் அரசியல் அறிவுக்கு ஏற்ற பதவிகளை வழங்கினார் நேரு. நாம் பெற்றுள்ள சுதந்திரம் காங்கிரஸுக்கானது மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமானது என்பதே அவரது நிலைப்பாடாக இருந்ததால், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார் அவர்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோதிலால் நேருவின் அரசியல் மரபு காரணமாக அவரை தன்னுடைய அரசியல் வாரிசாக கருதிய மகாத்மா காந்தி, தற்காலிக பிரதமராகவும் அவர் பதவியேற்க வேண்டும் என்று நினைத்தார்.

நேரு மீதான முரண்பாடு

நேரு பிரதமரான சமயத்தில் அவரது தொண்டர்களிடையே பெரிய ஆரவாரம் எதுவும் இல்லை. அப்போது நிலைமையே வேறு மாதிரியானதாக இருந்தது.

மோதிலால் நேருவின் அரசியல் மரபு காரணமாக அவரை தன்னுடைய அரசியல் வாரிசாக கருதிய மகாத்மா காந்தி, தற்காலிக பிரதமராகவும் அவர் பதவியேற்க வேண்டும் என்று நினைத்தார். அதோடு சேர்த்து வேறு சில விஷயங்களும் கூட இருந்தன.

தேசப்பிரிவினை, அதனை தொடர்ந்து கலவரங்கள், பாகிஸ்தான் உருவாக்கம், அதனைத் தொடர்ந்து இரு நாடுகள் மீதான அழுத்தம், மகாத்மா காந்தி கொலை மற்றும் கலவரம், அந்த சமயம் நாட்டில் நிலவிய படிப்பறிவின்மை விகிதம், வறுமை, அரசியலமைப்பு உருவாக்கம், மொழிகளுக்கான அங்கீகாரம், பெண்கள் உரிமைகளுக்கு எதிராக இருந்த ஆணாதிக்க மனநிலை, நீர்ப்பாசனம் இல்லாததால் ஏற்பட்ட விவசாய நெருக்கடி, ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு சியாச்சின் மீதான சீனாவின் உரிமைகோரல் போன்றவையோடு சேர்த்துதான் அவருக்குப் பிரதமர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

இந்த பிரச்னைகளை தீர்க்காமல் இருந்தது அல்லது அவற்றை அதிகரிக்காமல் இருந்த காரணத்திற்காகவே நேருவின் எதிராளிகள் அவரை பொறுப்பாக்குகின்றனர்.

இந்த ஒவ்வொரு பிரச்னைக்கும் நேரு பொறுப்பேற்க வேண்டுமெனில், அதோடு சேர்த்து இந்த பிரச்னைகள் எங்கிருந்து தொடங்கின என்பதற்கான பதிலை கண்டுபிடிப்பதும் அவசியம்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜவஹர்லால் நேரு

இந்தியாவின் பிரச்னைகளுக்கு நேருதான் காரணமா?

நேரு எடுத்த பல முடிவுகளுக்கு எதிர்ப்பு உள்ளது. அதில் முக்கியமான இரண்டு என்றால், அது காஷ்மீர் பிரச்னையை ஐநா சபை வரை கொண்டுசென்றது, சீனாவுடனான போரில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.

ஆனால், நேருவை இது போன்ற பல பிரச்சனைகளுக்குப் பொறுப்பாக்கும்போது, "இந்தியாவின் முதல் பிரதமராக நேரு எதிர்கொண்ட பிரச்சனைகள் பலவிதமானவை என்பதையும், ஒவ்வொரு பிரச்சனையும் மிகவும் சிக்கலானதாகவும், கடினமானதாகவும் இருந்தது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்” என்று கூறுகின்றனர் நேரு: ஏக் மகோவா என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் ராஜூர்கர் மற்றும் பேராசிரியர் நர்ஹர் குருந்த்கர்.

“இந்தியாவின் பிரச்னைகள் திடீரென்று உருவானவை இல்லை. பல நூற்றாண்டுகளாகவே குவிந்து வருபவை. அதுவும் 150 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியில் இவற்றில் பல முற்றிப்போயின. மக்களின் விருப்பம் மிகவும் எளிமையானது மற்றும் ஒரே வரியில் சுருக்கிவிடக் கூடியது”

மேலும் , “அவர்களது அனைத்து கேள்விகளுக்குமே உடனடி தீர்வை எதிர்ப்பார்க்கின்றனர். புதிதாக சுதந்திரம் பெற்ற எந்த நாட்டு மக்களுக்கும் அந்த ஆர்வமும், ஆசையும் இருக்கும். அப்படித்தான் இந்தியர்களுக்கும். இந்த எதிர்பார்ப்புகளுக்காக அவர்களை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று குறிப்பிடுகின்றனர்.

“ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது மனித சக்திக்கும் அப்பாற்பட்டது. நேருவின் மகத்துவம் என்னவென்றால், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே அவர் இந்தியா எதிர்கொள்ளும் கேள்விகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி, அவற்றைத் தீர்ப்பதற்குத் தனது மனதிற்குள் சில பாதைகளை அமைத்துக் கொண்டார்" என்று இருவரும் தங்களது புத்தகத்தில் எழுதியுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேரு தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சி தோராயமாக 490 மக்களவைத் தொகுதிகளில் 364, 371 மற்றும் 361 இடங்களைக் கைப்பற்றியது.

நாட்டின் முதல் தேர்தல்

நாட்டின் முதல் தேர்தல் தொடங்குவதற்கு முன்பே சர்தார் வல்லபாய் படேல் மரணமடைந்தார். நாட்டில் உள்ள நிறுவனங்களை ஒருங்கிணைப்பதில் இருந்த மிக கடினமான சிக்கலை அவர் தீர்த்து வைத்ததாகவும், அதற்காக நேரு எப்போதும் அவரை பாராட்டி வந்ததையும் அவரின் கடிதத் தொடர்புகளின் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

மகாத்மா காந்தி பிரதமர் ஆக்கியதால் மட்டுமே நேரு பிரதமர் ஆனார் என்ற கருத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் 1952, 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும், நேரு தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சி தோராயமாக 490 மக்களவைத் தொகுதிகளில் 364, 371 மற்றும் 361 இடங்களைக் கைப்பற்றியது.

இவற்றில் நேருவின் நோக்கம் வெறும் தேர்தல்களில் பங்கேற்பது மட்டுமில்லை. அதை தாண்டி ஜனநாயக விழுமியங்களை நாட்டில் புகுத்துவதம், தனது பிரச்சார கூட்டங்களின் வழியாக தன்னால் முடிந்தளவு மக்களை சந்தித்து அரசியலமைப்பை பரப்புவதும், அவர்களை மைய நீரோட்டத்திற்கு அழைத்து வருவதும் இருந்தது.

நேரு தவிர்க்கவே முடியாத பிரபலமாக இருந்தார். ஆனால் அதுவே அவர் மக்களுக்கு உகந்த முடிவுகளை எடுப்பார் என்ற அர்த்தமில்லை. சில நேரங்களில் அவர் பல கடுமையான முடிவுகளையும் எடுத்தார். அது அவரது பிரபலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அமைந்தது. நேரு மொழியின் அடிப்படையில் பிராந்தியமயமாக்கலுக்கு எதிரானவர். ஒரு நாட்டிற்குள் இருக்கும் பிரிவினைகளை கடந்து மாநிலங்கள் பல மொழிகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர் பல ஆண்டுகளாக அதே கருத்தையே கொண்டிருந்தார். ஆனால் பொட்டி ஸ்ரீராமலு தனி ஆந்திரப் பிரதேசம் உருவாக்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தபோது, மக்களின் விருப்பப்படி மொழி வாரியாக பிராந்தியமயமாக்கலை அனுமதித்தார்.

இந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின், நாட்டில் முதல் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றி பெற்றது. இது நாட்டு மக்கள் நேருவை குறிப்பிட்ட நிகழ்வுகளின் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், அவரது ஒட்டுமொத்த ஆளுமை, நடத்தை, ஜனநாயகத்தின் மீதான அவரது பற்று ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் பார்த்தனர் என்பதையே காட்டுகிறது.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்து மதம் நலிவடைகிறது என்று சொன்னவர்களிடம், ஒவ்வொரு தனிமனிதனின் நிலையை மேம்படுத்துவதே மதத்தின் சேவை என்று நேரு கூறினார்

நேருவும் ஜனநாயகம் மீதான அவரது பற்றும்

முதல் தேர்தலில் நேரு எவ்வாறு பிரச்சாரம் செய்தார் என்பது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹா கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

“அதில் நேரு தனக்கு முன்னாள் இருந்த சவால்களை பார்க்கவே இல்லை. மாறாக, ஒவ்வொருவரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்தால், நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகும் என்று அனைவரிடமும் கூறினார். மதவெறி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மீது அவர் எரிச்சலடைந்தார். மதத்தின் பெயரால் ஒருவர் இன்னொருவருடன் சண்டையிட்டால், அதுபோன்ற போக்குகளுக்கு நான் எப்போதும் எதிராக இருப்பேன் என்றார். அது அரசாங்கத்திற்குள் இருந்தோ அல்லது வெளியில் இருந்து வந்தாலோ எதுவாக இருந்தாலும் எதிர்ப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார்”

இந்து மதம் நலிவடைகிறது என்று சொன்னவர்களிடம், ஒவ்வொரு தனிமனிதனின் நிலையை மேம்படுத்துவதே மதத்தின் சேவை என்று அவர் கூறினார். மேலும் பெண்களின் பிரச்சினைகளை குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார் மற்றும் எல்லாவற்றிலும் மதத்தை திணிப்பவர்களிடம் அது ஒரு குறுகிய மனப்பான்மை என்று கூறினார். அவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் என்றும் கூறினார்.

நேரு தேர்தலில் போட்டியிட்டது மட்டுமின்றி, நாட்டில் மிகப்பெரிய உள்கட்டமைப்புகளையும் உருவாக்கினார். அது பக்ரா நங்கல் திட்டத்தின் வெற்றியாகட்டும் அல்லது மும்பையில் அணு ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டதாகட்டும், ஐஐடிகள், ஐஐஎம்கள், இஸ்ரோ, ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறை தொழிற்சாலைகள் போன்ற பல லட்சியத் திட்டங்களை அவரது 16 ஆண்டுகளில் நிறைவு செய்திருப்பதைக் நாம் காண்கிறோம்.

அவரது திட்டத்தின் அடிப்படையிலேயே நமது நாடு முன்னேறியிருப்பதை நம்மால் காணமுடிகிறது. அதனால்தான் அனைத்து கட்சிகளிலும் அவர் மீது மரியாதை கொண்டவர்களை பார்க்க முடிகிறது.

ஜனதா அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக அடல் பிஹாரி வாஜ்பாய் இருந்தபோது, வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து நேருவின் புகைப்படம் நீக்கப்பட்டது. அதை வாஜ்பாய் விரும்பவில்லை. நேருவின் படம் எங்கே போனது என்று அவர் அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு பதில் எதுவும் வரவில்லை. ஆனால், மீண்டும் அதே இடத்தில் நேருவின் படம் வைக்கப்பட்டது.

நேரு நவீன இந்தியாவின் சிற்பியா அல்லது இன்று நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமா என்று இரு தரப்பிலும் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர் யார் என்பது முற்றிலும் தனிப்பட்ட நபரின் முடிவு.

ஆனால் நேரு ஜனநாயகத்தையும் நாட்டு மக்களையும் எந்தளவுக்கு நேசித்தார் என்பதைப் புரிந்துகொள்ள பின்னால் வரும் ஒரு சம்பவம் போதுமானதாக இருக்கும்.

நேரு ஒரு மக்கள் தலைவராக இருந்தார், அவர்களின் உணர்வுகளை அவர் எப்போதும் மதித்தார். அவர் மீது எவ்வளவு கோபத்தை வெளிப்படுத்தினாலும், மக்கள் மீதான அவரது அன்பும், ஜனநாயகத்தின் மீதான விசுவாசமும் என்றும் தளரவில்லை. இந்நிலையில் நேரு குறித்து ஒரு கதை சொல்லப்படுகிறது. பிபிசி ஹிந்தி நிருபர் இக்பால் அஹமது இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை பெண் ஒருவர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்து, அந்த சமயம் அங்கு வந்த நேரு காரை விட்டு இறங்கிய போது, அவர் முன் வந்து நின்ற அந்த பெண் நேருவின் காலரைப் பிடித்து இழுத்து, இந்தியா சுதந்திரம் அடைந்தது, நீங்கள் நாட்டின் பிரதமர் ஆனீர்கள், ஆனால், இந்த மூதாட்டிக்கு என்ன கிடைத்தது என்று கேட்டாராம். இதற்கு பதிலளித்த நேரு, "நாட்டு பிரதமரின் சட்டை காலரை பிடிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதே" என்று கூறினாராம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)