உத்தரபிரதேசம்: பசுவின் பெயரால் கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு 6 ஆண்டுக்குப் பின் கிடைத்த நீதி - என்ன தெரியுமா?

உ.பியில் பசுவின் பெயரால் கொலை செய்யப்பட்ட காசிம் - ஆறு ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், BBC/SANDEEP YADAV

படக்குறிப்பு, சமய்தீன் (இடது) மற்றும் நக்மா (வலது)
    • எழுதியவர், அன்ஷுல் சிங்
    • பதவி, ஹபூரிலிருந்து பிபிசி செய்தியாளர்

மாலையில் நோன்பு திறக்க மசூதியிலிருந்து அழைப்பு வந்தவுடன், நக்மா தனது குடும்பத்துடன் இஃப்தார் (நோன்பு முடிந்ததும் மாலையில் உண்பது) சாப்பிடத் தொடங்குகிறார்.

இந்தக் குடும்பத்தில் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால், நக்மாவின் அப்பா இல்லை.

ரமலான் பண்டிகை நெருங்கும் போது, ​​நக்மாவிற்கு அவரது தந்தை காசிமின் நினைவுகள் இன்னும் அதிகமாகும்.

நக்மா கூறுகையில், "என் அப்பாவை பற்றி நினைக்கும் போது எங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை யாரிடமும் சொல்ல முடியாது. ரமலான் பண்டிகை முடிந்தபின் என் அப்பா கொல்லப்பட்டார். ரமலான் வரும் போதெல்லாம் அவரை மிகவும் ’மிஸ்’ செய்கிறோம். பண்டிகையின் போது எல்லோரும் இருப்போம், ஆனால் எங்களுடன் அப்பா மட்டும் இல்லை” என்றார்.

2018-ம் ஆண்டில், நக்மா தனது தந்தை காசிமுடன் கடைசியாக ரமலான் கொண்டாடினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் பசுவின் பெயரால் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹபூரில் நடந்த இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என சமீபத்தில் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த முடிவுக்காக காத்திருந்தவர்களின் கண்களில் சோகமும் பயமும் சேர்ந்து இன்னும் பல கேள்விகளும் உள்ளன.

உ.பியில் பசுவின் பெயரால் கொலை செய்யப்பட்ட காசிம் - ஆறு ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், BBC/SANDEEP YADAV

படக்குறிப்பு, காசிமின் மனைவி நசீமா (வலது) மற்றும் மகள் நக்மா (இடது)

என்ன நடந்தது?

தேதி: 18 ஜூன் 2018.

இடம்: உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள பஜேதா குர்த் கிராமம்.

அன்றைய தினம், பசுவைக் கொன்றதாகக் கூறி 45 வயது காசிமை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றது.

காசிம் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

சம்பவத்தன்றும் காசிம் மாடுகளை வாங்க வெளியே சென்றுள்ளார்.

அந்த நேரத்தில், பஜேடா கிராமம் அருகே ஒரு வன்முறை கும்பல் அவரை துரத்திச் சென்று தாக்கியது.

உ.பியில் பசுவின் பெயரால் கொலை செய்யப்பட்ட காசிம் - ஆறு ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், BBC/SANDEEP YADAV

படக்குறிப்பு, காசிம் (இடது) தன் தம்பி சலீமுடன் (வலது)

சம்பவத்தை நேரில் கண்ட ஒரே சாட்சியும் பாதிக்கப்பட்ட நபருமான சமய்தீன், அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது தானும் மிக மோசமாக தாக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

தாக்குதலுக்குப் பிறகு, காசிம் மற்றும் சமய்தீன் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு காசிம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பல நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சமய்தீன் காப்பாற்றப்பட்டார்.

ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு, 12 மார்ச் 2024 அன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 58,000 ரூபாய் அபராதமும் விதித்து ஹபூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த 10 குற்றவாளிகள் – யுதிஷ்டிர், ராகேஷ், கானு, சோனு, மங்கேரம், ரிங்கு, ஹரியோம், மனிஷ், லலித் மற்றும் கரன்பால் ஆவர்.

உ.பியில் பசுவின் பெயரால் கொலை செய்யப்பட்ட காசிம் - ஆறு ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், BBC/SANDEEP YADAV

படக்குறிப்பு, காசிமின் குடும்பம் அவரது தம்பி சலீமுடன் வசிக்கிறது.

'நீதி வேண்டும்'

நீதிமன்ற உத்தரவு வந்த பின்னர், ஹபூரின் பில்குவாவிற்கு பிபிசி சென்றது.

சாதிக்புரா வட்டாரத்தில் ஒரு தெருவில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு சிறிய வீடு உள்ளது.

இந்த வீட்டில் காசிமின் குடும்பத்தினர் அவரது தம்பி சலீமுடன் வசித்து வருகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்பு வந்த நாள் முழுவதும் தனது மொபைல் ஒலித்துக் கொண்டே இருந்ததாக சலீம் கூறுகிறார்.

இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.

சலீம் கூறுகையில், "நாங்கள் விரும்பியிருந்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையைக் கோரியிருக்கலாம். ஆனால், நாங்கள் ஆயுள் தண்டனையை கோரினோம். மரண தண்டனையை நாங்கள் கோரியிருந்தால் அவர்களுக்கும் (வன்முறைக் கும்பலுக்கும்) எங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். நாங்கள் பழிவாங்க விரும்பவில்லை, ஆனால் நீதியை விரும்பினோம்.

ஆனால், நீதி கிடைக்க தாமதம் ஏற்பட்டதா என்ற கேள்வி, சலீமின் நெற்றியில் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் தாமதம் ஏற்படுவதாகவும், பல வழக்குகளில் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பால் சலீம் நிம்மதி அடைந்தாலும் பயமும் இருக்கிறது. சலீம் உள்ளூர் சந்தையில் பழங்கள் விற்பனை செய்துவருகிறார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து கடையை தற்போது மூடியுள்ளார். தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வெளியே செல்வதைக் கூட தவிர்த்து வருகிறார் சலீம்.

உ.பியில் பசுவின் பெயரால் கொலை செய்யப்பட்ட காசிம் - ஆறு ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், BBC/SANDEEP YADAV

படக்குறிப்பு, இந்த சாலை மடப்பூர் முஸ்தபாபாத் கிராமம் வழியாக பஜேதா குர்த் கிராமத்திற்கு செல்கிறது.

”காசிம் தண்ணீர் கேட்ட போதெல்லாம் அடித்தார்கள்”

பஜேதா குர்த் கிராமம் பில்குவாவில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது. அங்குதான் காசிம் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

பிரதான சாலையில் பஜேதா குர்த் கிராமத்தின் பலகை உள்ளது. இது பஜேதா குர்த், ராஜ்புத் ஆதிக்க கிராமம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த கிராமத்திற்கு அடுத்தபடியாக மதப்பூர் முஸ்தபாபாத் கிராமம் உள்ளது. இது முஸ்லிம் பெரும்பான்மை மக்களைக் கொண்ட கிராமமாகும்.

பஜேதாவுக்குச் செல்லும் சாலை மடப்பூர் கிராமத்தின் வழியாகச் செல்கிறது. சம்பவத்தின் போது தாக்கப்பட்ட சமய்தீன் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்.

விவசாயியான சமய்தீன், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்.

உ.பியில் பசுவின் பெயரால் கொலை செய்யப்பட்ட காசிம் - ஆறு ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், BBC/SANDEEP YADAV

படக்குறிப்பு, மடப்பூர் முஸ்தபாபாத் கிராமத்தின் மசூதி.

அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த சமய்தீன், "வழக்கம் போல், நான் எனது கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க எனது பண்ணைக்கு சென்றிருந்தேன். அப்போது எனது பண்ணைக்கு அருகில் உள்ள காலியான ராஜ்வாஹாவில் (பெரிய கால்வாயில்) காசிம்-ஐ பார்த்தேன். அவர் அலறிக்கொண்டே ஓடினார். அவரை அந்த கும்பல் துரத்தியது" என்றார்.

"அப்போது என் பண்ணையைச் சேர்ந்தவர்கள் காசிமைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். நான் தலையிட்டு ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் எனக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் என்னையும் அடிக்க ஆரம்பித்தார்கள்" என்றார்.

மேலும், “ஏன் காசிமை அடித்தீர்கள்? ஏன் என்னையும் அடிக்கிறீர்கள்? என் தவறு என்ன என்று அவர்களிடம் கேட்டேன். நீங்கள் இருவரும் பசுவைக் கொன்றவர்கள் என்று கூறி எங்கள் பேச்சைக் கேட்காமல் அவர்கள் முன்பை விட அதிகமாக அடிக்க ஆரம்பித்தார்கள்” என்றார்.

சமய்தீன் கூறுகையில், "தடி, செங்கல், கற்கள், மட்டைகளால் எங்களை அடித்தனர். இரண்டு கைகளும் உடைந்தன, இரண்டு கால்களும் உடைந்தன, தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது" என்கிறார்.

சமய்தீன் தனது வாக்கியத்தை முடிப்பதற்குள், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.

அவர் கண்ணீருடன், "எல்லாவற்றையும் தாங்க வேண்டும், நான் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். நான் உயிர் பிழைத்துவிட்டேன், ஆனால் பாவம், காசிம் இறந்துவிட்டார்" என்றார்.

"காசிம் தாக்கப்பட்ட போது தன் கைகளை கூப்பி, பல முறை தண்ணீர் கேட்டார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. காசிம் தண்ணீர் கேட்கும் ஒவ்வொரு முறையும், அவர்கள் அவரை அடித்தனர்" என்கிறார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பளித்துள்ளது. இதனால், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தனக்குத்தானே சமய்தீன் செய்துகொண்ட வாக்குறுதியும் நிறைவேறியது.

சமய்தீன் கூறுகையில், "நான் மருத்துவமனையில் இருந்த போது, ​​என் சகோதரர் யாசினிடம் பேசுவது வழக்கம். வழக்கின் நடவடிக்கைகள் குறித்து அவர் எனக்கு தகவல் கொடுத்தார்” என்கிறார்.

"நான் எல்லாவற்றையும் என் கண்களால் பார்த்தேன். கடவுள் என்னை வாழ வைத்திருக்கிறார். எனவே, நான் உண்மையை நீதிமன்றத்திற்கு சொல்ல வேண்டும் என நினைத்தேன்” என்றார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, அவரது இளைய சகோதரர் யாசின் அவரை உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் விருந்தா குரோவரை சந்திக்கச் செய்தார். அப்போதிலிருந்து நீதிக்கான போராட்டம் தொடங்கியது.

குற்றவாளிகளின் உறவினர்கள் என்ன சொல்கிறார்கள்?

குற்றவாளிகள் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டதாக, அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரில் லலித் ஒருவர். இந்த முடிவு குறித்து லலித்தின் மனைவி சங்கீதாவிடம் பிபிசி பேசியது.

இதுகுறித்து சங்கீதா கூறும்போது, ​​“சம்பவத்தன்று, எனது கணவர் வீட்டில் இருந்தார். வீட்டின் கட்டுமான வேலைகள் செய்து கொண்டிருந்தார். என் கணவர் சண்டை போட்டதில்லை. அவரை பற்றி இந்த கிராமம் முழுவதும் நீங்கள் கேட்கலாம். என் கணவர் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்றார்.

மற்றொரு குற்றவாளியான ஹரியோமின் மூத்த சகோதரர் சதேந்திரா கூறுகையில், ”எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இதுதொடர்பாக நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்” என தெரிவித்தார்.

’முன்னுதாரணமான தீர்ப்பு’

உ.பியில் பசுவின் பெயரால் கொலை செய்யப்பட்ட காசிம் - ஆறு ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, 2018-ம் ஆண்டு காசிம் தாக்கப்பட்ட பிறகு அவரை இழுத்துச் செல்லும் வன்முறைக் கும்பலுடன் நடந்து செல்லும் காவலர்கள்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் விருந்தா குரோவர் இந்த வழக்கில் இரு குடும்பங்களுடனும் இணைந்து நீண்ட சட்டப் போராட்டம் நடத்தினார்.

ஹபூர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை காசிமின் குடும்பம் மற்றும் சமய்தீன் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்திய சில வழக்குரைஞர்களில் விருந்தாவும் ஒருவர்.

பிபிசியிடம் பேசிய விருந்தா குரோவர், "இது மிக முக்கியமான தீர்ப்பு. இது, சமய்தீன் மற்றும் காசிம் ஆகியோருக்கு நீதி வழங்குவது மட்டுமல்லாமல், சமூகத்திற்கு ஒரு பெரிய செய்தியையும் அளிக்கிறது” என்றார்.

"பசுவின் பெயரால் ஒரு கும்பலை உருவாக்கி அப்பாவி முஸ்லிம்களை கொல்லலாம் என நினைப்பவர்கள் வாழ முடியாது. கும்பல் கொலை செய்தவர்கள் இன்று ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.

“தலைவர்களுடனான தொடர்பால் கொலை வழக்குகளிலிருந்து தப்பித்து விடலாம் என்று நினைக்கும் கும்பல்களுக்கு இந்தச் செய்தியை நாடு முழுவதும் அனுப்ப வேண்டும்” என்றார்.

காசிமின் குடும்பத்தினரும் சமய்தீனும் இந்த முழு விஷயத்திலும் மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்தினர் என்றும் இந்த முடிவு எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் விருந்தா குரோவர் கூறுகிறார்.

காவல்துறையின் பங்கு குறித்து கேள்வி

சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, அதுதொடர்பாக புகைப்படம் ஒன்று வெளியானது. அதில், ஒரு கும்பல் காசிமை இழுத்துச் செல்லும்போது, உடன் போலீசார் மூன்று பேர் இருந்தனர்.

இதுதொடர்பாக பலரும் விமர்சித்தனர். இதையடுத்து, உத்தர பிரதேச காவல்துறை மன்னிப்பு கேட்டு மூன்று காவலர்களுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கின் ஆரம்ப எஃப்.ஐ.ஆரில், ஹபூர் போலீசார், சாலையில் நடைபெற்ற தகராறு (road rage) என வழக்குப் பதிவு செய்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான சமய்தீன், தனது சகோதரர் யாசின் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும், அவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.

எஃப்.ஐ.ஆர் விவகாரம் குறித்து வழக்குரைஞர் விருந்தா குரோவர் கூறும்போது, ​​“எஃப்.ஐ.ஆர் நகலை பார்த்தபோது பொய் வழக்கு போட்டிருந்தது தெரியவந்தது.

"மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின் சமய்தீன், உண்மையில் என்ன நடந்தது என்று என்னிடம் கூறினார். விரைவில் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், போலீசார் சமய்தீனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து முழு விசாரணையையும் காவல்துறை தலைவர் மீரத்திடம் ஒப்படைத்தனர். உச்ச நீதிமன்றத்தால் இந்த விசாரணை மீண்டும் சரியான பாதையில் செல்ல முடிந்தது” என்றார்.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், விசாரணை அதிகாரி மற்றும் பிற காவல்துறையினரின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் சம்பந்தப்பட்ட சி.டி. உடைக்கப்பட்டது மிகவும் ஆட்சேபனைக்குரியது.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தடிகள் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படவில்லை.

முதல் அறிக்கை அழுத்தத்தின் கீழ் தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று வாதியும் நேரில் கண்ட சாட்சியும் கூறுகிறார்கள். இதுவும் விசாரணைக்கு உரியது.

'அதுவொரு கனவு போன்று உள்ளது'

உ.பியில் பசுவின் பெயரால் கொலை செய்யப்பட்ட காசிம் - ஆறு ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், BBC/SANDEEP YADAV

படக்குறிப்பு, சம்பவத்திற்குப் பிறகு அவரது உடல் நலிவால் விவசாயம் உட்பட எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை என சமய்தீன் கூறுகிறார்.

ஆறு வருடங்கள் கடந்துவிட்டன, காசிம் மற்றும் சமய்தீன் குடும்பங்கள் நிறைய இழந்துவிட்டன.

காசிம் தனது மனைவி மற்றும் ஆறு குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார்.

நீதிமன்ற வழக்குகள் காரணமாக இரண்டு குழந்தைகள் படிப்பை பாதியில் கைவிட நேரிட்டதாக சமய்தீன் கூறுகிறார்.

சலீம் தனது சகோதரனை இழந்தார், ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு வெறுப்பு சூழ்நிலை மாறும் என்று அவர் நம்புகிறார்.

அவர் கூறுகையில், "விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில் எங்களுக்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவு கிடைத்தது. சூழல் மாறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.

நீதிக்காக தனது 300 கெஜ நிலத்தை விற்க நேரிட்டதாகவும், கும்பல் படுகொலை சம்பவத்தின் நினைவு, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், ஒரு கனவு போல வந்து தனக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தருகிறது என்றும் சமய்தீன் கூறுகிறார்.

"எல்லாவற்றையும் ஒருவர் தாங்கிக்கொள்ள வேண்டும். மனம் புண்பட்டுள்ளது. இன்றும் அச்சம்பவத்தை நினைத்து பயமாக இருக்கிறது" என்கிறார் சமய்தீன்

"இரவில் தூங்கும் போது கூட சில சமயங்களில் அந்த விஷயத்தின் நினைவு எழுகிறது. நாம் இறந்துவிடுவோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. எழுந்து பார்த்தால், அதுவொரு கனவு போன்று இருக்கும்” என்றார்.

உ.பி.யில் மத அடிப்படையிலான வன்முறை வழக்குகள்

தற்போது, ​​வெறுப்பு குற்றங்கள் குறித்த அரசாங்க புள்ளிவிவரங்கள் நாட்டில் இல்லை. எனவே, சில ஆண்டுகளுக்கு முன்பு பிபிசி 2016 மற்றும் 2021-க்கு இடையில் உத்தர பிரதேசத்தில் மதத்தின் அடிப்படையில் கும்பல் வன்முறையின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தது.

2016 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் தொடர்பாக 11 கடுமையான வழக்குகள் இருப்பதாக பிபிசி கண்டறிந்தது.

அதேசமயம், 2021-ம் ஆண்டில், ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 24 ஆகும்.

2016-ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான தரவுகள் அப்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் காலத்திலிருந்தும், 2021-ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான தரவுகள் தற்போதைய யோகி அரசாங்கத்தின் பதவிக் காலத்திலிருந்தும் ஆகும்.

பிபிசி தனது விசாரணையில் உத்தர பிரதேசத்தில் இருந்து தீவிரமான வழக்குகளை மட்டுமே சேர்த்திருந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)