தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி: தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய தரவுகளில் என்ன இருக்கிறது?

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், ANI

அரசியல் கட்சிகள் சீலிடப்பட்ட உறைகளில் சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

இந்தத் தரவுகளில் தேதி, வகை, வங்கிக் கிளை, டெபாசிட் செய்யப்பட்ட தேதி மற்றும் தேர்தல் பத்திரத்தின் ரசீது ஆகியவை அடங்கும்.

இருப்பினும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது யார் என்பதை தெரிந்து கொள்ள உதவும் எண்கள் இந்த தரவில் இல்லை. அந்த எண்கள் இருந்தால் மட்டுமே எந்தக் கட்சியால் எந்தத் தேர்தல் பத்திரம் பணமாக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியும்.

முன்னதாக மார்ச் 14 அன்று, தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை வெளியிட்டது, அதில் எந்த நிறுவனம் மற்றும் நபர் எவ்வளவு தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன, எந்தக் கட்சியால் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன என்பது தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் பத்திரங்களில் உள்ள அந்த பிரத்யேக எண்கள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது.

தேர்தல் ஆணைய அறிக்கையின்படி, "அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மார்ச் 15, 2024 அன்று, உச்சநீதிமன்ற பதிவுத்துறை இந்த தரவுகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

எஸ்பிஐ

பட மூலாதாரம், Getty Images

பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தனிப்பட்ட எண்னெழுத்துக் குறியீட்டை (alphanumeric code) ஏன் வெளியிடவில்லை என்று கேட்டு பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்.பி.ஐ) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தக் குறியீட்டின் மூலம், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர்களையும் அரசியல் கட்சிகளையும் பொருத்திப் பார்க்க முடியும். அதாவது, எந்தெந்த அரசியல் கட்சிக்கு தேர்தல் நன்கொடையாக எந்த நிறுவனம் அல்லது நபர் எவ்வளவு தொகை வழங்கியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எஸ்.பி.ஐ.யிடம், "தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து முக்கியத் தகவல்களையும் வெளிடுமாறு கேட்டிருந்தோம். பத்திரத்தை வாங்குபவர், பத்திரத்தின் அளவு மற்றும் வாங்கிய தேதி ஆகியவை இதில் அடங்கும். பத்திரத்தின் வரிசை எண்ணை நீங்கள் குறிப்பிடவில்லை. எங்களின் முடிவில் அனைத்து தகவல்களையும் வெளியுடிமாறு கேட்டிருந்தோம்,” என்றார்.

மேலும், சந்திரசூட் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, எஸ்.பி.ஐ நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று ஏமாற்றம் தெரிவித்தார்.

அரசியல் சார்ந்த நன்கொடைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டது. இதன் மூலம் தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் மீது போடப்பட்டிருந்த பெரும் திரை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை.

யார் யார் எவ்வளவு பத்திரம் வாங்கினார்கள், எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கிடைத்தது உள்ளிட்ட தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. ஆனால் வாங்கிய பத்திரத்தின் பிரத்யேக எண்ணோ, பத்திரங்களை யார் பணமாக்கினார்கள் என்ற விவரமோ கொடுக்கப்படவில்லை. இந்த பிரத்யேக எண்கள் இருந்தால் மட்டுமே, யார் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி அளித்த தரவுகளின்படி, 2019 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரை ரூ.12,156 கோடி அரசியல் நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளன. பத்திரங்களை வாங்கிய உயர்மட்ட நன்கொடையாளர்கள், ரூ.5830 கோடியை வழங்கியுள்ளனர், இது மொத்த அரசியல் நன்கொடையில் 48 சதவிகிதமாகும்.

தேர்தல் பத்திர திட்டம் 2018-இல் நரேந்திர மோதி அரசால் தொடங்கப்பட்டது. இது அரசியல் நிதி பற்றிய தகவல்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் என்று கூறப்பட்டது. ஆனால், பத்திரம் வாங்கியவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற பணம் குறித்த விவரங்களில், யார் யாருக்கு பணம் கொடுத்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியவில்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நிதி அளிப்பதன் பின்னணியில் உள்ள நன்கொடையாளரின் உள்நோக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ள முடியாது.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017 பட்ஜெட் உரையில், தேர்தல் பத்திரங்கள் தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறியிருந்தார். இந்த வெளிப்படைத்தன்மை இல்லாமல், சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் சாத்தியமில்லை. ஆனால், தேர்தல் நிதி குறித்து இன்னும் முழுமையான வெளிப்படைத்தன்மை எட்டப்படவில்லை என்பதே உண்மை.

தேர்தல் பத்திர விவகாரத்தில், மனுதாரர் ஏடிஆர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், 'எக்ஸ்' பக்கத்தில், "தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்திருக்கும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களில், பத்திரங்களின் பிரத்யேக வரிசை எண்கள் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டிருந்தால், யார் யாருக்காக பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவல் வெளிப்பட்டிருக்கும்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், ANI

இதற்கு பதிலளித்த ஸ்டேட் வங்கி தரப்பு, 'பிரமாணப் பத்திரத்தில் இந்த தகவல்கள் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன," என்று விளக்கம் கொடுத்தது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இதுகுறித்து 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில், "எஸ்.பி.ஐ., தேர்தல் கமிஷனுக்கு அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில், பத்திரத்தை வாங்கியவர், எந்த கட்சிக்காக வாங்கினார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்," என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த தகவல்களை வழங்க ஜூன் 2024 வரை கால அவகாசம் கேட்டிருந்தது எஸ்பிஐ.

குரேஷி எழுதியிருந்த கட்டுரையில், "நாட்டு மக்கள் இந்த தகவல்களை அறிய விரும்புவதால், ஜூன் மாதத்திற்குள் முழுத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். இது அரசாங்கத்திற்கும், இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா இல்லையா என்பதை வெளிப்படுத்தும்.”

“2018 க்கு முன், இந்த விஷயத்தில் முழு ஒளிவுமறைவு இருந்தது என்பதே உண்மை. அரசியல் நிதிகள், 70% பணமாக வழங்கப்பட்டது. ஆனால், 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தால், தேர்தல் கமிஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும், அந்த நிதிக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.”

“ஆனால் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தேர்தல் நிதி பற்றிய தகவல்கள் மேலும் ரகசியமாக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு நன்கொடை வழங்கினார்கள் என்று தெரியவில்லை, இங்குதான் அரசியல் கட்சிகளுக்கும், நன்கொடை வழங்கியவர்களுக்கும் தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது," இவ்வாறு குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசின் முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்துக்கு கொடுத்தப் பேட்டியில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகள் குறித்து கேள்விகளை எழுப்பி, யார் எவ்வளவு பத்திரங்கள் வாங்கினார்கள் என்பதை மட்டுமே இது காட்டுகிறது, ஆனால் எந்த கட்சிக்காக வழங்கப்பட்டது, யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

எஸ்பிஐயிலும் இது குறித்த தரவுகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துடன் அதனை பெற்றவர் யார் என்பதை பொருத்தி பார்ப்பது இயலாத காரியம். இவ்வாறு பொருத்தியிருக்கும் தகவல்கள் வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றாலும், இதற்காக மூன்று மாத கால அவகாசம் கேட்டிருக்கிறது எஸ்பிஐ.

உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ பொய்யான சாக்குப்போக்கை முன்வைப்பதாக கார்க் தெரிவித்துள்ளார். கார்க் குறிப்பிடுகையில், “யார் எவ்வளவு தொகைக்கு பத்திரங்களை வாங்கினார்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அனைத்து பத்திரங்களும் எஸ்பிஐ இடமிருந்து மட்டுமே வருவதால், யார் எந்த பத்திரத்தை வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அனைத்து பத்திரங்களையும் பார்க்க முடிந்தாலும், ஒரு குறிப்பிட்ட பத்திரத்தை யார் வாங்கினார்கள், யார் டெபாசிட் செய்தார்கள் என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது.” எனக் கூறியுள்ளார்.

“பத்திரம் வாங்கியவர்களையும் பணத்தை பெற்றவர்களையும் பொருத்தி தகவல் வெளியிட அதிக நேரம் தேவை என்று எஸ்பிஐ கூறுகிறது என்றால், எஸ்பிஐ அதை ஒருபோதும் செய்ய முடியாது. இது ஒரு பொய்யான சாக்கு. “

இந்த வழக்கில், மனுதாரர் ஏடிஆர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், இந்தியன் எக்ஸ்பிரஸிடம், பத்திர எண் மற்றும் அதை வாங்கிய நபர் பற்றிய தகவல் குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும் என்று கூறினார். இதன் மூலம், நன்கொடை வழங்கியவர், எந்தக் கட்சிக்காக குறிப்பிட்ட பத்திரத்தை வாங்கியுள்ளார் என்பதை அறிய முடியும்.

தேர்தல் பத்திரங்கள்

பட மூலாதாரம், ANI

உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

தேர்தல் ஆணையம் மார்ச் 14 அன்று தனது இணையதளத்தில் தேர்தல் பத்திர விவரங்களை பொதுவில் வெளியிட்டது. 763 பக்கங்கள் கொண்ட இரண்டு பட்டியல்கள் பதிவேற்றப்பட்டன. ஒன்றில் பத்திரங்கள் வாங்கியவர்கள் பற்றிய தகவல்களும் மற்றொன்றில் அரசியல் கட்சிகள் பெற்ற பத்திரங்களின் விவரங்களும் உள்ளன.

12 ஏப்ரல் 2019 முதல் 11 ஜனவரி 2024 வரையிலான தரவுகள் வெளியிடப்பட்டன. சான்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சேவை நிறுவனம்தான் அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் மட்டும் ரூ. 1,368 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளன. இந்த பத்திரங்கள் அக்டோபர் 21, 2020 மற்றும் ஜனவரி 24 க்கு இடையில் வாங்கப்பட்டுள்ளன.

கட்சிகளைப் பொறுத்த வரையில் பா.ஜ.க தான் அதிகபட்ச நன்கொடைகளைப் பெற்றுள்ளது. தரவுகளின்படி ரூ. 6,060 கோடி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, அ.தி.மு.க, பி.ஆர்.எஸ், சிவசேனா, டி.டி.பி, ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ், தி.மு.க, ஜனதா தளம் எஸ், என்.சி.பி, ஜே.டி.யு மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளன.

மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இந்த விவரங்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மார்ச் 12, 2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் தரவுகளைச் சமர்ப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய கெடு

தேர்தல் பத்திரங்களின் தனிப்பட்ட எண் இல்லாமல், நன்கொடைகள் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை இணைத்துப் பார்க்க முடியாது என்பதால், அந்தப் பத்திரங்களின் எண்களையும் சேர்த்து வரும் மார்ச் 17-ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, " இந்த தகவலில் பத்திரங்களின் எண் இல்லை, எனவே முழு தகவலையும் வழங்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் திங்களன்று இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிட்டுள்ளது."

நோட்டீஸுக்கு வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று எஸ்பிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் கபூரிடம் நீதிமன்றம் கூறியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)