ஏசுவின் முன்தோல், நெப்போலியனின் அந்தரங்க உறுப்பு, ஐன்ஸ்டீனின் மூளை - இவற்றைக் காண மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

அருங்காட்சியகங்கள் பின்னால் இருக்கும் மோசமான வரலாறு

பட மூலாதாரம், BonkersAboutPictures

    • எழுதியவர், டோனி பெரோட்டெட்
    • பதவி, பிபிசி டிராவல்

பழங்கால நினைவுச்சின்னங்கள் மீது சுற்றுலாப் பயணிகளுக்கு இருக்கும் நீண்டகால ஈர்ப்பை பல இன்ஸ்டாகிராம் ரீல்கள் எடுத்துக்காட்டுகிறது. ஆனால் பல நூற்றாண்டுகள் பழமையான அருங்காட்சியகங்கள் மனித எச்சங்களைக் காட்சிப்படுத்துவது மிகவும் சிக்கலானது என்று பலர் வாதிடுகின்றனர்.

பாரிஸ் நகரில் எடுக்கப்பட்ட ஒரு சமீபத்திய டிக்டாக் காணொளி பார்ப்பவர்களுக்கு ஒரு அமானுஷ்ய உணர்வை அளித்தது. வைரல் வீடியோக்களில் இருந்த சில சாகசப் பிரியர்கள் பாரிஸ் நகரத்தின் அடியில் உள்ள இடைக்காலத்தைச் சேர்ந்த பாதளக் கல்லறைகளில் நுழைவதைக் காண முடிந்தது.

இருள் நிறைந்த அந்த சுரங்கங்களில் தரையிலிருந்து கூரை வரை ஆறு மில்லியன் மக்களின் மண்டை ஓடுகளால் நிரம்பியுள்ளது என்பது அந்த அமானுஷ்ய உணர்வுக்கு காரணம்.

இந்த ரீல்ஸ் மோகத்தில் சிலர் சட்டவிரோதமாக இந்த இடங்களில் நுழைந்து, மனித எலும்புகளால் அடுக்கப்பட்ட அறைகளின் வழியே நடந்து செல்கிறார்கள், சில நேரங்களில் ஊர்ந்து செல்கிறார்கள். இருளில் சிறு விளக்குகளுடன் நகரின் சுமார் 300 கிமீ சுரங்கப் பாதைகளை ஆராய்கின்றனர், எப்போதாவது தொலைந்தும் போகிறார்கள்.

பாரிஸில் உள்ள சில விமர்சகர்கள் இதிலுள்ள அபாயங்கள் மற்றும் சாத்தியமான ஆபத்துகள் பற்றி எச்சரித்தாலும், இறந்தவர்களின் எலும்புகளோடு தங்கள் தோள்களைத் தேய்க்க ஆர்வம் காட்டும் பயணிகள் அதை கண்டுக்கொள்வதில்லை.

அருங்காட்சியகங்கள் பின்னால் இருக்கும் மோசமான வரலாறு

பட மூலாதாரம், Kristof Bellens/Alamy

மக்களை ஈர்க்கும் பழங்கால மனித எச்சங்கள்

எகிப்தின் கெய்ரோவில் உள்ள எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிறார்கள். ராம்செஸ் II (பைபிளின் ஃபாரோ) மற்றும் ராணி நெஃபெர்டிட்டி ஆகியோரின் எம்பாமிங் செய்யப்பட்ட சடலங்கள் அவர்களின் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.

பெய்ஜிங்கில் உள்ள தலைவர் மாவோ சேதுங், ஹனோயில் ஹோ சி மின் மற்றும் மாஸ்கோவில் உள்ள விளாடிமிர் லெனின் ஆகியோரின் சமாதிகளில் எம்பாமிங் செய்யப்பட்ட அவர்களது உடல்களைக் காண ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

19ஆம் நூற்றாண்டின் கடைசி மருத்துவ அருங்காட்சியகங்களில் ஒன்று பிலடெல்பியாவில் உள்ள முட்டர் அருங்காட்சியகம். இங்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையின் பகுதிகள், ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்டின் தாடையில் இருந்து அகற்றப்பட்ட புற்றுநோய் கட்டி, விக்டோரியன் காலத்து மண்டை ஓடுகளின் குவியல் போன்ற கொடூரமான விஷயங்களைக் காண ஆண்டுக்கு 135,000 பார்வையாளர்கள் வருகிறார்கள்.

கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியக ஆய்வுகள் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் மைக்கேல் பிக்கரிங் கூறுகையில், "மேற்கத்திய சமூகம் இது போன்ற கொடூரமானவற்றில் ஆர்வம் காட்டுகிறது" என்றார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனித எச்சங்கள் காட்சிப்படுத்தப்படுவது குறித்த சிக்கல்களை ஆய்வு செய்துள்ளார். "பழங்கால மனித எச்சங்களைப் பார்த்து மக்கள் உற்சாகம் அடைவதன் காரணம் மரணம் குறித்த தெளிவில்லாத அனுமானங்கள்" என்கிறார் மைக்கேல்.

அருங்காட்சியகங்கள் பின்னால் இருக்கும் மோசமான வரலாறு

பட மூலாதாரம், Jon G Fuller/VWPics/Alamy

உடல் உறுப்புகளை காட்சிப்படுத்துவது சரியா?

அதே நேரத்தில், அருங்காட்சியத்தில் உடல் உறுப்புகளை காட்சிப்படுத்துவது சமீபத்திய ஆண்டுகளில் நெறிமுறையற்றது என்று விமர்சிக்கப்படுகிறது. அக்டோபர் 2023இல் நியூயார்க்கில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் (AMNH) புதிய இயக்குனர் சீன் எம் டிகாடூர், மனித எச்சங்கள் பொதுக் காட்சியில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார்.

பலர், "வன்முறை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அடக்குமுறை, அடிமைத்தனத்தால் சுரண்டப்பட்டவர்களின் உடல்களை காட்சிப்படுத்துவது அந்த சுரண்டலை ஆதரிக்கிறது" என்று அருங்காட்சியகம் ஒப்புக்கொண்டது. அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்ட மனித எச்சங்கள் ஒரு பொருளாகக் கருதப்பட்டு, அவற்றை காட்சிப்படுத்துவது இறந்தவர்களின் கண்ணியத்தைப் பறிக்கிறது என்ற உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.

அந்த செயல்முறை இப்போது முழுமையடைந்துவிட்டது. சென்ட்ரல் பூங்காவிலிருந்து தெரு முழுவதும் அலைந்து திரிந்து, புனரமைக்கப்பட்ட கல்லறைகளில் வைக்கப்பட்டுள்ள 1,000 ஆண்டுகள் பழமையான மங்கோலிய போர்வீரனின் எலும்புக்கூட்டையோ அல்லது மனித எலும்புகளால் செய்யப்பட்ட 19ஆம் நூற்றாண்டின் திபெத்திய கவசத்தையோ இனி பார்க்க முடியாது.

இத்தகைய கண்காட்சிகளை மறைப்பது பொதுமக்களின் மதிப்புமிக்க கல்வி நுண்ணறிவைப் பறிப்பதாக விமர்சகர்கள் புகார் கூறுகின்றனர். ஆனால் முட்டர் உட்பட மற்ற நிறுவனங்களும் இந்த அழுத்தத்தை உணர்கிறது. இப்போதும் ஒரு கேள்வி நீடிக்கிறது, மனித எச்சங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியுமா அல்லது கல்லறைத் திருடர்கள் மற்றும் கடத்தல்காரர்களின் வேலையிலிருந்து அருங்காட்சியகங்கள் லாபம் ஈட்டுவதால், நாம் ஒரு மோசமான செயலில் ஈடுபடுகிறோமா?

அருங்காட்சியகங்கள் பின்னால் இருக்கும் மோசமான வரலாறு

பட மூலாதாரம், Martin Shields/Alamy

உடல் உறுப்புகளால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சுற்றுலா தலம்

மனித எச்சங்கள் நீண்ட காலமாக பயணிகளை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. இடைக்காலத்தில், கிறித்தவ யாத்ரீகர்கள் ஐரோப்பா முழுவதும் பல மாதங்கள் பயணம் செய்து ஜான் பாப்டிஸ்ட்டின் துண்டிக்கப்பட்ட தலையைக் காணச் செல்வார்கள் (இதை இப்போதும் ரோமின் கேபிட்டில் உள்ள சான் சில்வெஸ்ட்ரோவின் பசிலிக்காவில் காணலாம்).

மேலும், எகிப்தின் புனித மேரியின் நாக்கு (குரோஷியாவின் வோட்ஞ்சனில் உள்ள செயின்ட் பிளேஸ் தேவாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது) மற்றும் "பரிசுத்த நுனித்தோல்", இயேசு பரலோகத்திற்கு சென்ற பிறகு எஞ்சியிருந்த அவரது உடலின் ஒரே பகுதி. (விருத்தசேதனத்திற்குப் பிறகு சேமிக்கப்பட்டது, இந்த நினைவுச்சின்னம் ஐரோப்பா முழுவதும் பல தேவாலயங்களால் கோரப்பட்டது) ஆகியவற்றையும் காண பெரும் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த பழங்கால நினைவுச்சின்னங்கள் உலகின் முதல் சுற்றுலா தலங்களை உருவாக்க உதவியது. உடல் உறுப்புகளும் பெரிய வியாபாரமாக இருந்தன. கத்தோலிக்க திருச்சபை ஆடம்பரமான நினைவுச்சின்னங்களை உருவாக்கியது மற்றும் அவற்றைச் சுற்றி ஒரு சுற்றுலா தொழில்துறையை உருவாக்கியது. அவற்றை அருகில் காண பணக்கார கிறித்தவ பயணிகள் பணத்தை அள்ளி இறைத்தார்கள்.

அருங்காட்சியகங்கள் பின்னால் இருக்கும் மோசமான வரலாறு

பட மூலாதாரம், Sipa US/Alamy

காட்சிப்படுத்தப்படும் பிரபலங்களின் பதப்படுத்திய உடல்கள்

நவீன சகாப்தத்தில், புனிதர்களின் எச்சங்களை காட்சிப்படுத்துவதில் இருந்து மாறி பிரபலங்களின் உடல்களுக்கான முக்கியத்துவம் ஏற்பட்டது. படைப்பாற்றல் மேதைகளின் உடல் பாகங்கள் (உதாரணமாக, கவிஞர் ஷெல்லியின் இதயம் மற்றும் பீத்தோவனின் காது எலும்புகள்) அவற்றின் உரிமையாளர்களின் தெய்வீக திறமைகளுக்கு ஒரு தொடர்பை வழங்குவது போல் மக்களுக்கு தோன்றியது.

இன்று கலிலியோவின் நடுவிரலை இத்தாலியின் புளோரன்சில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் அலங்கரிக்கப்பட்ட, முட்டை வடிவ கண்ணாடிப் பந்தில் காணலாம்.

1821இல் பிரேத பரிசோதனையில் ஒரு இத்தாலிய மருத்துவரால் நெப்போலியனின் உடலிலிருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படும் நெப்போலியனின் ஆணுறுப்பு மிகவும் பிரபலமான நினைவுச்சின்னம் ஆகும். 1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சிறுநீரக மருத்துவர் ஜான் கிங்ஸ்லி லாட்டிமர் என்பவரால் பேரரசரின் உறுப்பு விலைக்கு வாங்கப்பட்டது. நியூ ஜெர்சி, பல பத்தாண்டுகளாக அவரது குடும்பம் அதை தீவிர ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே காட்டியது.

19ஆம் நூற்றாண்டில் மற்றொரு, மிகவும் பயங்கரமான மாற்றம் ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அருங்காட்சியகங்களில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி சேகரித்து காட்சிப்படுத்துவதற்காக விஞ்ஞானம் உதவியது.

இன்னும் சில மோசமான மானுடவியல் துறைகள், டெக்சாஸிலிருந்து தாஸ்மேனியா வரை இறந்த பழங்குடியினரின் எலும்புக்கூடுகளை 'அறுவடை' செய்ய குழுக்களை அனுப்பியது. புதைகுழிகள் அல்லது படுகொலைகளால் இறந்த பழங்குடிகளின் எலும்புகளைக் கொள்ளையடிக்கிறது அல்லது அலைந்து திரிந்த தொழில்முறை 'எலும்பு சேகரிப்பாளர்களிடமிருந்து' அவற்றை விலைக்கு வாங்குகிறது.

அருங்காட்சியகங்கள் பின்னால் இருக்கும் மோசமான வரலாறு

பட மூலாதாரம், Terry Harris/Alamy

பழங்கால மனித எச்சங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்படுவது ஏன்?

இவ்வாறு மனித எச்சங்கள் மீது மக்களும் அருங்காட்சியகமும் ஆர்வம் காட்டுவதற்கு காரணம் பல உலக அருங்காட்சியகங்கள் நிதி ரீதியாக சிரமப்படுகின்றன. அவை பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும். இதன் விளைவாக, அவை பொழுதுபோக்கு அரண்மனைகளாக மாறி தங்களது தரத்தை இழந்து, சீரழிகின்றன. அவற்றின் நோக்கம் கல்வி இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நெறிமுறைகள் குறித்த விவாதம் அருங்காட்சியக உலகில் தொடரும் என்பது உறுதி, ஏனெனில் உலகெங்கிலும் உள்ள கண்காணிப்பாளர்கள் தங்களின் மனித சேகரிப்புகளை மோசமான முறையில் கையாள்கின்றனர். ஆனால் மனசாட்சியின் படி முடிவெடுத்தால் கூட எகிப்திய மம்மிகளை கொண்ட லாபகரமான அருங்காட்சியங்களை மூடுவது சாத்தியமில்லை, அல்லது ரீல்ஸ் ஆர்வலர்கள் சட்டவிரோதமாக பாரிஸின் பாதளக் கல்லறைகளில் நுழைவதை முழுமையாக தடுக்கவும் முடியாது.

உயிருள்ள மனிதர்களுக்கு இறந்தவர்களுடன் நேரம் செலவிடுவதற்கு அதிகம் ஆர்வம் உள்ளதாக தெரிகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)