குஜராத் பல்கலைக் கழகத்தில் தொழுகை செய்த வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் - என்ன நடந்தது?

குஜராத் பல்கலைக்கழக விடுதியில் நமாஸ் செய்ததால் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டனரா?

பட மூலாதாரம், BBC/UGC

    • எழுதியவர், பிபிசி குஜராத்தி குழு
    • பதவி, நியூ டெல்லி

"எங்கள் படிப்பை எப்படி முடிப்போம் என்று நினைத்து நாங்கள் மிகவும் பயப்படுகிறோம்."

குஜராத் பல்கலைக் கழக விடுதியில் சனிக்கிழமை இரவு தொழுகை நடத்தியதாகக் கூறப்படும் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து, பிபிசி குஜராத்தி செய்தியாளர் ராக்ஸி கக்டேகர் சராவுடன் உரையாடியபோது, ​​ ஒரு மாணவர் தனது கவலையை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

பல்கலைக்கழக விடுதியின் ’ஏ’ பிளாக்கில் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் மீது 25 பேர் கொண்ட கும்பல் நடத்திய இந்த தாக்குதலில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிபிசி குஜராத்தி குழுவினர் அந்த இடத்தை அடைந்தபோது, ​​விடுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினரும் பல்கலைக்கழக அதிகாரிகளும் காணப்பட்டனர். இதுதவிர, கல்வீச்சு தாக்குதலை உணர்த்தும் வகையில் ஆங்காங்கே கற்களும் உடைந்த வாகனங்களும் காணப்பட்டன. மேலும் மாணவர்களும் பயந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர்களில் ஒருவரான நௌமன் பிபிசியிடம் பேசுகையில், “வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் இங்கு தங்குவது தற்போது பெரும் சவாலாக உள்ளது. சர்வதேச மாணவர்கள் தங்கும் விடுதி இது. இவர்கள் இங்கு எப்படி கூட்டம் கூட்டமாக வந்தனர் என்பது விசாரணைக்கு உரியது. அவர்கள் இங்கு அடிக்கடி வந்து, ’ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுங்கள், இல்லையென்றால் கத்தியால் குத்தி கொன்று விடுவோம்’ என்று கூறிய சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இங்கு பெரும் ஆபத்து உள்ளது” என கூறினார்.

இதுதொடர்பாக, ஆமதாபாத் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். எனினும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் சில வீடியோக்கள் சனிக்கிழமை இரவு முதல் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதில், தாக்குதல் கும்பல் மாணவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதையும் கற்களை வீசியதையும் காண முடிந்தது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மதவாத முழக்கங்களை எழுப்பியதையும் கேட்க முடிந்தது.

குஜராத் காங்கிரஸ் தலைவர் கியாசுதீன் ஷேக் மற்றும் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா ஆகியோர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, குஜராத் காவல்துறை மற்றும் அரசின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த சம்பவத்தை 'வெகுஜன தீவிரவாதம்' என தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் எம்.பி. அசாதுதீன் ஒவைசி, இதுகுறித்து பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும், குஜராத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நீரஜா குப்தா, இந்த முழு விஷயத்தையும் 'இரு குழுக்களிடையே ஏற்கனவே இருக்கும் கருத்து வேறுபாடுகள்' என்று குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “இரு குழுக்களிடையே ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், இந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. இது ஏன் நடந்தது என்பது இன்னும் விசாரணைக்கு உட்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் வெளியில் தொழுகை நடத்திய போது மற்றொரு கூட்டத்தினருடன் கைகலப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த முழு விஷயத்தையும் பல்கலைக் கழகம் தீவிரமாகக் கவனித்து வருகிறது. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாநில அரசின் உள்துறையும் ஆலோசனை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா மற்றும் முன்னாள் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களையும் சந்தித்தனர்.

தொழுகை செய்ததால் தாக்குதலா?

குஜராத் பல்கலைக்கழக விடுதியில் நமாஸ் செய்ததால் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டனரா?

ஞாயிற்றுக்கிழமை முழு விஷயமும் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, ஆமதாபாத் நகர காவல்துறை ஆணையர் ஜி. எஸ். மாலிக்கும் சம்பவ இடத்திற்கு வந்தார். இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

“இந்த விடுதியில் சுமார் 75 மாணவர்கள் தங்கியுள்ளனர். இரவில், சில மாணவர்கள் வராண்டாவுக்கு வெளியே தொழுகை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் வந்து மாணவர்களிடம் ஏன் இங்கு பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டனர்” என்கிறார் அவர்.

பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது என காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

குஜராத் பல்கலைக்கழக விடுதியில் நமாஸ் செய்ததால் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டனரா?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆமதாபாத் காவல்துறை ஆணையர் ஜி.எஸ். மாலிக்

இதுகுறித்து போலீசார் அளித்த விவரத்தின்படி, இரவு 10 மணிக்கு சம்பவம் நடந்த சுமார் 50 நிமிடங்களில் இந்த விவகாரம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக அங்கு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து கல்லூரியின் பாதுகாவலர் புகார் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மொத்தம் 25 பேர் கற்களை வீசியதாக காவல்துறை கூறுகிறது.

"இந்த விவகாரத்தில் நாங்கள் உடனடியாக 20-25 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம், மேலும் எங்களின் ஒன்பது குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன" என்று காவல்துறை ஆணையர் கூறினார்.

“இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கைது செய்யப்படுவர். இந்த நடவடிக்கை முழுவதையும் இணை ஆணையர் (குற்றப்பிரிவு) கண்காணிப்பார்” என்றார்.

இச்சம்பவத்தில், இலங்கை மற்றும் தஜிகிஸ்தானை சேர்ந்த தலா ஒரு மாணவர் என இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலிக் கூறினார்.

உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ்-இன் (Alt News) இணை நிறுவனர், இச்சம்பவம் தொடர்பாக வைரலான வீடியோக்களை சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஏ.ஐ.எம்.ஐ.எம் எம்.பி அசாதுதீன் ஒவைசியும் இதுதொடர்பாக விமர்சித்து ட்வீட் செய்தார்.

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில், “மகத்தான ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவில் குஜராத் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கில் நானும், எம்எல்ஏ இம்ரான் கெடவாலாவும் நீதி கேட்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

அசாதுதீன் ஓவைசி கூறியது என்ன?

குஜராத் பல்கலைக்கழக விடுதியில் நமாஸ் செய்ததால் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டனரா?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அசாதுதீன் ஒவைசி

முழு சம்பவத்தையும் விமர்சித்து ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி சமூக ஊடக தளமான எக்ஸ்-ல், "என்ன ஒரு அவமானம். ஒரு முஸ்லிம் அமைதியாக தனது மதத்தை கடைப்பிடிக்கும் போதுதான் உங்கள் பக்தியும், மத முழக்கங்களும் வெளிப்படுகின்றன. முஸ்லிம்களைப் பார்த்தாலே கோபம் வரும். இது வெகுஜன தீவிரவாதம் இல்லையா? இது நரேந்திர மோதி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். ஒரு வலுவான செய்தியை வழங்க அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிடுவார்களா?" என கேள்வி எழுப்பினார்.

ஒவைசி வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை ’டேக்’ செய்து, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு நாட்டின் நற்பெயரைக் கெடுக்கிறது என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார்.