முத்தமிழ் முருகன் மாநாடு: இந்து வாக்குகளை கவரும் 'தந்திரமா'? கடவுள் பற்றி திமுகவின் கொள்கை என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
(தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்றும் நாளையும் (ஆக. 24, 25) பழனியில் உள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் முருகன் குறித்துப் பேசவுள்ளனர். இசை, நடனம், நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டையொட்டி, கடந்த மார்ச் 16 அன்று வெளியான இக்கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)
தமிழ்நாட்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கடந்த மார்ச் மாதம் அறிவித்தபோது, இதை பாஜக மட்டுமல்லாமல், ‘முருகன் தமிழர்களின் இறைவன்’ என்ற முழக்கத்தைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நாம் தமிழர் கட்சியும் விமர்சித்தது. இந்து வாக்குகளைக் கவர்வதற்காகன ’அரசியல் தந்திரம்’ என்று அக்கட்சிகள் தெரிவித்தன. இதுகுறித்த அறிவிப்பு வந்தது முதல் இது சர்ச்சையாவது ஏன்?
அமைச்சர் சேகர்பாபு அச்சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகளவில் இருக்கும் முருக பக்தர்கள், முருக கோவில்களைப் பராமரிப்பவர்களை தமிழகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் மாநாடு நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே தமிழ்நாடு பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன், “முதலில் பாஜக மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக காட்டிக்கொண்டு ‘ஸ்டிக்கர்’ ஒட்டியது. முருகனை தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரை உலகம் முழுவதிலும் வழிபடுகின்றனர். இத்தகைய சூழ்ச்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் சிக்க மாட்டார்கள்,” எனத் தெரிவித்திருந்தார்.
இம்மாநாட்டை நடத்துவதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் ஆட்சி அமைத்ததில் இருந்தே முருகன் கோவில்களுக்காகப் பலவித திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
”திருச்செந்தூர் முருகன் கோவிலைப் புணரமைக்க தமிழக அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார். இதையொட்டித்தான் அச்சமயத்தில் சர்ச்சை எழுந்தது.
'அரசியல் ஆதாயம்'
முருகனுக்கு மாநாடு நடத்துவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், "இது நிச்சயம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான்," என்று விமர்சித்தார்.
தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்குக்கூட முதலமைச்சர் வாழ்த்து கூறியதில்லை. முருகனுக்கு முக்கிய நிகழ்வான தைப்பூசத்திற்குக்கூட வாழ்த்து கூறியதில்லை.
அப்படியிருக்கும்போது, இப்போது முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? சனாதனம் குறித்துப் பேசிய உதயநிதிக்கு எந்தவித கண்டிப்பும் தெரிவிக்காத முதல்வர் இதை நடத்துவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
'பாஜகவின் ஏ டீமா?'

பட மூலாதாரம், @SEEMANOFFICIAL
'முப்பாட்டன் முருகன்', 'குறிஞ்சி தந்த தலைவன்', 'இன மூதாதை' என முருகன் 'தமிழ்க்கடவுள்', 'தமிழர்களுக்கான கடவுள்' என்ற வாதத்தை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது நாம் தமிழர் கட்சி. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அக்கட்சி சார்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் 'இந்து கடவுள் அல்ல, தமிழர் கடவுள்' என்பது அக்கட்சியின் வாதம்.
இம்மாநாடு தொடர்பாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், "திராவிடத்தை விடுத்து, தமிழர்களின் கடவுளைக் கொண்டாடினால்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற புரிதல் திமுகவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறது.
நாங்கள் முருகனைக் கொண்டாடியதற்கு எங்களை பாஜக 'பி டீம்' என்றனர். இந்துத்துவத்திற்கும் வேலுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், எங்களை நோக்கி ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு அமைப்பு என்றனர். இப்போது இவர்கள் பாஜகவின் ‘ஏ’ டீமா?" என்றார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த அறிவிப்பை திமுக முன்கூட்டியே அறிவித்ததாக அவர் விமர்சித்திருந்தார். "இது அக்கட்சியின் அரசியல் உத்தி எனச் சொல்வதைவிட தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்," எனக் கூறுகிறார் காளியம்மாள்.
'பாஜகவுக்கு பயம்'

பட மூலாதாரம், GETTY IMAGES
இந்த விமர்சனங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "அறநிலையத்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தான் இவை. இந்து சமய விதிகளுக்கு உட்பட்டு கோவில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்தான். அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வியெழுப்புகிறார்.
மேலும், "நாங்கள் முருகன் குறித்துப் பேசினால் பாஜகவுக்கு ஏன் கோபம் வருகிறது? அவர்கள் இதை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார்கள் போல. அதனால் பயப்படுகிறார்கள் என நினைக்கிறேன்.
திமுகவின் கொள்கைகளைத் தெரிந்துகொள்ளாமல் பாஜக பேசுகிறது. இதற்கும் இந்துத்துவத்திற்கும் சம்பந்தமில்லை. எல்லா மதங்களுக்கும் அமைப்பு இருக்கிறது," என்றார்.
முஸ்லிம்கள் நலன்களுக்கென வக்பு வாரியம் இருப்பதையும் ஆர்.எஸ். பாரதி சுட்டிக்காட்டினார்.
முருகனும் தமிழக அரசியல் கட்சிகளும்

பட மூலாதாரம், L MURUGAN TWITTER
முருகனை முன்வைத்து யாத்திரை செல்வதோ, முருகனைக் கொண்டாடுவதோ தமிழக அரசியல் கட்சிகளுக்குப் புதிதல்ல.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, 2020ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவரும் தற்போதைய மத்திய இணையமைச்சருமான எல். முருகன், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை முருகனின் அறுபடை கோவில்களை மையமாக வைத்து ‘வேல் யாத்திரை நடத்தினார்.
அதேபோன்று, 2021ஆம் ஆண்டு ஜனவரியில், திமுக நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது. இதை, தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் தங்களின் வேல் யாத்திரை வெற்றி பெற்றதை இது காட்டுவதாகவும் எல். முருகன் அப்போது தெரிவித்திருந்தார்.
பாஜக தவிர்த்து ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை அதிமுகவும் விமர்சித்தது.
''உண்மையான பிரார்த்தனை செய்யவேண்டும். நாம் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்பவர்கள். ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்றாகவும், உள்ளே நினைப்பது ஒன்றாகவும் இருப்பதால், அவர் வேலை கையில் எடுத்தாலும், முருகனின் அருள் அவருக்குக் கிடைக்காது,'' என, எடப்பாடி பழனிசாமி அப்போது தெரிவித்திருந்தார்.
இத்தகைய விமர்சனங்களுக்கு அச்சமயத்தில் பிபிசியிடம் பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "தமிழ்நாட்டில் முதலில் வேலுக்காக யாத்திரை நடத்தியவர் கலைஞர் கருணாநிதிதான். 1982இல் திருச்செந்தூர் கோவில் வேல் காணவில்லை என்பதை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஏற்க மறுத்தார்.
திருச்செந்தூர் கோவில் வேல் மீட்கப்பட வேண்டும், திருடப்பட்ட வேல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றவர் கருணாநிதி. இறுதியில், வேல் கண்டறிய அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை எம்ஜிஆர் வெளியிடவில்லை. கலைஞர் தனது திறமையால் அந்த அறிக்கையை வெளியில் கொண்டு வந்தார்,'' எனத் தெரிவித்தார்.

தமிழ் கலாசாரத்தில் முருகன்
இம்மாநாட்டை பாஜகவின் இந்துத்துவ அரசியலுடன் பொருத்திப் பார்ப்பது பொதுபுத்தியால் விளைந்தது என்கிறார், மூத்த பத்திரிகையாளரும் 'கருணாநிதி - எ லைஃப்' உள்ளிட்ட புத்தகத்தின் ஆசிரியருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
"பெரியாருடன் 1930களில் முதல் மொழிப்போரிலிருந்து உடன் இருந்தவர் மறைமலை அடிகளார். அவர் சைவ அறிஞர். தமிழ் மெய்யியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் திருமூலரும் வள்ளலாரும்தான் இருக்கின்றனர். தமிழ் மரபில் இங்கிருக்கும் முதன்மை இசை வடிவம் காவடி சிந்துதான். இது 2,000 ஆண்டுகால மரபின் நீட்சி. முருகனுக்கு மாநாடு எடுப்பதை இதனுடன் தான் பொருத்திப் பார்க்க வேண்டும்" என்றார்.
முருகன் தமிழ் கலாசாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒரு கருப்பொருள் எனக் கூறும் பன்னீர்செல்வன், முக்கிய இசை வடிவமான 'காவடிச் சிந்து' பாடல்களில் அதிகமான பாடல்கள் முருகனுக்காக பாடப்பட்டுள்ளதை உதாரணமாகக் காட்டினார். "முருகன் தமிழ் கலாசாரத்தின் அடையாளம்" என்றார் அவர்.
"சமபந்தியும் சாதி மறுப்பு திருமணமும்தான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை. முருகனுக்கும் குறத்திக்குமான உறவு சாதி மறுப்பைத்தான் பேசுகிறது. அதேபோன்று, இந்த இரண்டையும் பாஜக எங்கே பேசுகிறது" என அவர் கேள்வி எழுப்பினார்.
திருவாரூர் தேரைச் சரிசெய்து இயக்கியது, கோவில்களில் அதிகமான குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நடத்தியது போன்றவற்றையும் குறிப்பிட்ட பன்னீர்செல்வன், இந்து சமய அறநிலையத்துறையே நீதிக்கட்சியின் நோக்கங்களுள் ஒன்றுதான் என்றார்.
பாஜக இதுகுறித்துப் பேசுவது பெரிய விஷயமாக பார்க்கப்படுவதெல்லாம் இந்த தேர்தல் வரைதான் என்றும் சிறிய தோல்வி ஏற்பட்டாலும் அக்கட்சியின் இத்தகைய பேச்சுகள் மக்கள் களத்தில் எடுபடாது என்றும் அவர் கூறினார்.
திமுகவும் கடவுளும்

பட மூலாதாரம், TWITTER
பெரியார் 1950களில் விநாயகர் சிலைகளை உடைத்தபோது, திராவிடர் கழகத்தின் வழிவந்த திமுக தலைவர் அண்ணா, "பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என்றார்.
"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதுதான் கடவுள் குறித்த திமுகவின் நிலைப்பாடாக அண்ணா கூறியது.
"கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது" என 'பராசக்தி' திரைப்படத்தில் வசனம் எழுதினார் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி.
தற்போது, "இந்துக்களுக்கு எதிரானது திமுக" என்ற வாதத்திற்கு எதிராக அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பலமுறை கருத்து தெரிவித்துள்ளார்.
"எங்கள் கட்சியில் 90% இந்துக்களே உள்ளனர். கோவில்களுக்குச் சென்று வழிபடுவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். திமுக இந்து விரோத கட்சி அல்ல" என்றார்.
தங்கள் குடும்பத்தினர் கோவில்களுக்குச் செல்வது அவர்களின் தனியுரிமை சார்ந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












