இந்தியா, ராமர் குறித்த ஆ.ராசா பேச்சு: திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்துமா?

ஆ ராசா, திமுக, பாஜக, நரேந்திர மோதி, உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஆ. ராசா ராமாயணம் குறித்தும், இந்திய நாடு குறித்தும் சமீபத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் பதிலளிக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன?

சில நாட்களுக்கு முன்பாக கோபிச்செட்டிபாளையத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கலந்துகொண்டு பேசினார். அந்தப் பேச்சின் சில பகுதிகள்தான் இப்போது சர்ச்சையாகியிருக்கின்றன.

"அன்புதான் கடவுள் என்று சொல்லுங்கள். மனிதனுக்கு மனிதன் காட்டுகிற இரக்க உணர்வில்தான் கடவுள் இருக்கிறான் என்று சொல்லுங்கள். கள்ளமில்லாத உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொல்லுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்லுங்கள். அப்படிப்பட்ட கடவுள் மீது எங்களுக்குக் கோபமில்லை. ஏன் பெரியாருக்கே கோபமில்லை,” என்று அவர் பேசினார்.

மேலும், 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானோவை பாலியல் வன்புணர்வு செய்தவர்களும் ஜெய் ஸ்ரீராம் என்றுதான் குறியதாகத் ராசா தெரிவித்தார். ஆனால், அந்த வழக்கில் இரட்டை அயுள் தண்டனை பெற்ற 16 பேரை குஜராத் மாநில அமைச்சரவையைக் கூட்டி, அவர்கள் 10 வருடம் தண்டனை அனுபவித்துவிட்டனர், அவர்களுக்கு தண்டனை போதும் என்று அவர்களை விடுதலை செய்ததாகவும் ராசா குறிப்பிட்டார்.

“அவர்கள் வெளியே வந்தபோது பா.ஜ.க காரர்கள் சென்று அவர்களிடம் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்லி வரவேற்றனர்,” என்றார் ராசா.

அதைத் தொடர்ந்து, “நீங்கள் சொல்கிற கடவுள் இந்தக் கடவுள் என்றால், இதுதான் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றால், இதுதான் 'பாரத் மாதா கி ஜெய்' என்றால், அந்த ஜெய் ஸ்ரீ ராமையும் பாரத மாதாவையும் ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாடு ஏற்காது,” என்றார்.

ஆ ராசா, திமுக, பாஜக, நரேந்திர மோதி, உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், X/A Raja

படக்குறிப்பு, சில நாட்களுக்கு முன்பாக கோபிச்செட்டிபாளையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசினார்

கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிப் பேசிய ஆ ராசா

“நீ வேண்டுமானால் சொல்லிப்பார், ராமனுக்கு எதிரி என. என்ன ராமனுக்கு எதிரி? என் தமிழாசிரியர் சொல்லிக்கொடுத்திருக்கிறார். ராமன் சகோதரர்கள் நான்கு பேர். சீதையைத் தேடி காட்டுக்குப் போகிறான். காட்டில் வசிக்கும் குகன் வருகிறான். குகன் ராமனைத் தொழுது தேனும் மீனும் கொடுக்கிறான். மீனை சாப்பிட மாட்டார் ராமர். அதனால், தேனை சாப்பிட்டுவிட்டு, ராமர் சொல்கிறான் நாங்கள் நான்கு பேர், குகனோடு ஐவரானோம் என்கிறான். நீ வேடுவன் என்றாலும் இவ்வளவு அன்போடு கானகத்தில் என்னைப் பார்த்துக்கொண்டாயே எனக்கு நீ சகோதரன் என்கிறான். அடுத்ததாக சுக்ரீவன் வருகிறான். போருக்கு துணை நிற்கிறான். குகனோடு ஐவரானோம், குன்று சூழ்வான் மகனோடு அறுவாரானோம் என்கிறான்,” என்று அவர் கம்பராமாயணத்தை மேற்கோள்காட்டிப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அப்புறம் வந்தான் விபீஷணன். குகனோடு ஐவரானோம், குன்று சூழ்வான் மகனோடு அறுவாரானோம் ஐய, நின்னொடும் எழுவர் ஆனோம் என்கிறான். எந்த ஜாதி, எங்கே பிறந்தான் என்பதைப் பார்க்கவில்லை.

மேலும், தனக்கு ராமாயணத்தில் நம்பிக்கையில்லை, ஆனால், இதுதான் கம்ப ராமாயணம், என்றும், நான்கு பேராகப் பிறந்து, ஒரு வேட்டுவரை, ஒரு குரங்கை, இன்னொரு நபரை சகோதரனான ஏற்கும் ராமாயணத்திற்குப் பெயர்தான் மனித நல்லிணக்கம் என்று பேசினார் ஆ. ராசா.

ஆ ராசா, திமுக, பாஜக, நரேந்திர மோதி, உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், X/BJP4TAMILNADU/X

படக்குறிப்பு, தி.மு.க. இருக்காது என பிரதமர் மோதி பேசியதைச் சுட்டிக்காட்டி ஆ ராசா பேசினார்

மோதியின் பேச்சு மீது விமர்சனம்

அவரது இந்தப் பேச்சு தவிர, தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என பிரதமர் மோதி பேசியதைச் சுட்டிக்காட்டி இன்னொரு கூட்டத்தில் பேசும்போது, "தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என்றால் இந்தியா இருக்காது. நாம் நமது அரசியல்சட்டத்தை மதச்சார்பற்றதாக கட்டமைத்திருக்கிறோம். இவர்கள் அந்த அரசியல் சட்டத்தைத் தூக்கியெறிய வேண்டுமென நினைக்கிறார்கள்," என்றார்.

மேலும், "நான் இந்தியா இருக்காது என்று சொல்வதற்குக் காரணம் என்ன? நீங்க திரும்ப ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லாவிட்டால் இந்தியா இருக்காது. இந்தியா இல்லாவிட்டால் தமிழ்நாடு இருக்காது. நாங்கள் தனியாகப் போய்விடுவோம். இதை விரும்புகிறதா இந்தியா என்பதைக் கேட்டுச்சொல்லுங்கள்," என்றும் குறிப்பிட்டார்.

ஆ ராசா, திமுக, பாஜக, நரேந்திர மோதி, உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், X/A Raja

படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியிருந்தது ஏற்கனவே சர்ச்சையாகியிருந்தது

சர்ச்சையைக் கையிலெடுத்த பா.ஜ.க

இப்போது இந்த இரண்டு பேச்சுகளும்தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. மார்ச் ஐந்தாம் தேதி அவரது இந்தப் பேச்சுகளின் சில பகுதிகளை பா.ஜ.கவின் ஐடி பிரிவின் பொறுப்பாளரான அமித் மால்வியா வெளியிட்டார்.

"தி.மு.கவிலிருந்து வெறுப்புப் பேச்சுகள் தொடர்கின்றன. சனாதன தர்மத்தை அழிக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் கூறினார். இப்போது ஆ. ராசா, இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்கிறார். பகவான் ராமரைப் பற்றி மோசமாகப் பேசுகிறார். மணிப்பூர் மக்களைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவிக்கிறார். இந்தியா ஒரு தேசம் என்ற கருத்தாக்கத்தை கேள்விக்கு உட்படுத்துகிறார்,” என்றார்.

“காங்கிரசும் இந்தியா கூட்டணியின் பிற அங்கத்தினர்களும் அமைதியாக இருக்கிறார்கள். ராகுல்காந்தியின் மௌனம் பொருள்மிக்கதாக உள்ளது," என்று குறிப்பிட்டு, ஆ. ராசா பேசிய சில பகுதிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வெளியிட்டார்.

ஆ ராசா, திமுக, பாஜக, நரேந்திர மோதி, உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் (வலது) ‘இது ராசாவின் தனிப்பட்ட கருத்துக்கள், கூட்டணியின் சிந்தனை அல்ல’ என்று தெரிவித்துவிட்டார்

இந்தியா கூட்டணி தலைவர்கள் சொன்னது என்ன?

இதற்குப் பிறகு இந்த விவகாரம் ஆங்கில ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் பதிலளிக்க வேண்டுமென பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்த ஆரம்பித்தனர்.

இதற்குப் பதிலளித்த பல தலைவர்கள், ஆ. ராசாவின் கருத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறி, விலகிக்கொண்டனர். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ‘இது ராசாவின் தனிப்பட்ட கருத்துக்கள், கூட்டணியின் சிந்தனை அல்ல’ என்று தெரிவித்துவிட்டார்.

தேசிய அளவில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே, இந்த அறிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார். “அவரது கருத்துடன் நான் உடன்படவில்லை. இதுபோன்ற பேச்சுகளை நான் கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், எங்கும் நிறைந்தவர் என்று நான் நம்புகிறேன். இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர் சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறேன். மக்கள் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்திருக்கிறார்.

ஆ ராசாவின் விளக்கம் என்ன?

ஆ. ராசாவிடம் இது குறித்துக் கேட்டபோது, "எனது பேச்சை முழுமையாகக் கேட்கட்டும். எல்லோரும் கேட்கட்டும். அதற்குப் பிறகு இதற்கெல்லாம் பதில் சொல்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார்.

ஆ ராசா, திமுக, பாஜக, நரேந்திர மோதி, உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்

‘இந்தியா கூட்டணிக்கு இது நெருக்கடிதான்’

தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்ற பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்கிறார் மூத்த பத்திரிகையாளாரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

"இது போன்ற பேச்சுகள் நிச்சயமாக இந்தியா கூட்டணிக்கு நெருக்கடியாகத்தான் இருக்கும். இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை மோதியை பிரதமர் பதவியிலிருந்து இறக்குவதுதான் ஒரே நோக்கம். அப்போதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். ஆனால், ஜனநாயகத்தைக் காப்பாற்ற அதுமட்டம் போதாது. ஜாதி ஆதிக்கம் போன்ற விஷயங்களில் ஒரு குறைந்த பட்ச செயல்திட்டம் தேவை,” என்கிறார்.

“அந்தக் கூட்டணியில் அப்படி ஏதும் இல்லாத நிலையில், இது போன்ற பேச்சுகள் தேவையற்றவை என்றுதான் சொல்வேன். இப்படிப் பேசினால், இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்படும் என்றால் அதைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் நெருங்கும் இந்தத் தருணத்தில் இதைப் பேசியிருக்கவேகூடாது. மோதியை பதவியிலிருந்து அகற்றுவதுதான் நோக்கம் என்றால், அதற்கு ஏதான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். இல்லாவிட்டால், இந்தியா கூட்டணியில் இல்லாமல் இருக்க வேண்டும்," என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

ஆ ராசா, திமுக, பாஜக, நரேந்திர மோதி, உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி
படக்குறிப்பு, மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.

'இந்தப் பேச்சை தவிர்த்திருக்கலாம்'

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான ப்ரியன்.

"இந்த விஷயத்தில் ஆ. ராசா இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசவேண்டியதில்லை. பா.ஜ.க. திரும்ப ஆட்சிக்கு வந்தால் பல ஜனநாயக அமைப்புகள் பின்னடைவைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. உதயநிதி சனாதனம் பற்றி பேசியதை எந்த அளவுக்குக் கொண்டுபோனார்கள் என்பதைப் பார்த்தோம். தி.மு.க. பல சோதனைகளைத் தாண்டி நீடித்து நிற்கும் கட்சி. பிரதமர் தி.மு.க. இருக்காது என்று சொன்னால், தங்கள் கட்சி எப்படி சோதனைகளை தாண்டி நீடித்து நிற்கிறது என்று விளக்கலாம்," என்றார்.

"பல்வேறு விஷயங்களில் தி.மு.க. குறிவைக்கப்படும் நிலையில், இதைப் பேச வேண்டியதில்லை. தி.மு.கவில் ஆ. ராசா உட்பட நான்கைந்து பேர் பேசுவதை தொடர்ந்து கண்காணித்து அதனை வைத்து சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இம்மாதிரி சூழலில் இதைத் தவிர்த்திருக்கலாம்," என்கிறார் ப்ரியன்.

ஆ ராசா, திமுக, பாஜக, நரேந்திர மோதி, உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி
படக்குறிப்பு, தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன்

‘ஆ ராசா பேசியதில் தவறில்லை’

ஆனால், ஆ. ராசா பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டன்டைன்.

"பா.ஜ.கவிடம் இந்தத் தேர்தலில் முன்வைக்க எதுவுமே இல்லை. எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆளும் கட்சியை குறைசொல்வார்கள். ஆளும் கட்சியாக இருப்பவர்கள், தங்கள் சாதனைகளைச் சொல்வார்கள். அடுத்த முறையும் தேர்தலைச் சந்திக்கும்போது சாதனைகளைத்தான் சொல்வார்கள். ஆனால், பா.ஜ.கவுக்கு அப்படிச் சொல்ல எதுவுமே இல்லை. அதனால், ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்," என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

மேலும், ஆ. ராசாவின் பேச்சு இந்தியா கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் பேசியதுதான் நாட்டுப்பற்று மிகுந்த பேச்சு என்றும் குறிப்பிடுகிறார் கான்ஸ்டைன்டீன். "இந்தியா கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளைப் பொறுத்தவரை, அது தி.மு.க-வின் கொள்கை, எங்களுக்கு உடன்பாடு இல்லை என சொல்லிவிடுவார்கள். கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளோடும் எங்களுக்கு கொள்கை உடன்பாடு இருக்கிறதா? நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு,” என்றார்.

மேலும், “ஆ. ராசா எதையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. 1963 மே மாதம் மாநிலங்களவையில் பேசிய அண்ணா இந்தியா ஒரு நாடல்ல, அது ஒரு துணைக் கண்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம், இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் குறிப்பிடுகிறது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டிற்கு ஆபத்து, இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதனால் அவர்கள் வரக்கூடாது என்கிறார். இதுதான் உண்மையான தேசப்பற்று," என்கிறார் கான்ஸ்டன்டைன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)