10.5% வன்னியர் இட ஒதுக்கீடு தந்த அதிமுகவை விடுத்து பாஜகவுடன் பாமக சேர்ந்தது ஏன்? பின்னணி என்ன?

பட மூலாதாரம், Annamalai/Facebook
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கு மாற்றாக, பா.ஜ.கவை அக்கட்சி தேர்வுசெய்தது ஏன்?
இதன் பின்னணியில் என்ன நடந்தது?
வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக பா.ம.க அறிவித்திருக்கிறது. திங்கட்கிழமையன்று (மார்ச் 18) மாலை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 19) காலை செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. இந்தியாவிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பெறும்," என்று தெரிவித்தார்.
பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பா.ம.க. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், இந்த முறை பா.ம.க எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

பட மூலாதாரம், X/K.Annamalai
முரணான தகவல்கள், திடீர் திருப்பம்
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக நடக்காத நிலையில், பா.ம.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி அமைக்கும் என்றும் அ.தி.மு.க-வுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்றும் செய்திகள் மாறிமாறி வெளிவந்த வண்ணமிருந்தன.
கடந்த வார இறுதியில் அக்கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணியை இறுதிசெய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அடுத்த நாளே அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஞாயிற்றுக் கிழமையன்று சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ அருள், எடப்பாடி கே. பழனிச்சாமியை அவரது சென்னை இல்லத்தில் சென்று சந்தித்த நிலையில் கிட்டத்தட்ட அ.தி.மு.க-வுடன் கூட்டணி இறுதிசெய்யப்பட்டதாகவே சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் திங்கட்கிழமையன்று மாலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், "கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்களுடனும் பேசினோம். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சேலத்தில் பிரதமர் நரேந்திர மோதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கக்கூடும்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், X/K.Annamalai
திங்கட்கிழமையன்று நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்த நிலையில், இறுதி முடிவு கட்சியின் நிறுவனரான டாக்டர் எஸ். ராமதாஸால் எடுக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். நிர்வாகிகளின் கூட்டத்தில் பலரும் அ.தி.மு.கவுடனான கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுப் பிரிவில், வன்னியர்களுக்கென 10.5% இட ஒதுக்கீட்டு அளிக்கப்பட்டது. இது பா.ம.கவின் நீண்ட காலக் கோரிக்கைக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே பார்க்கப்பட்டது. ஆகவே, அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணியே அமையும் ஊடகங்கள் தொடர்ந்து பேசிவந்தன. ஆனால், திடீர் திருப்பமாக பா.ஜ.கவுடன் கூட்டணியை அமைத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.

‘கட்சிக்குள் குழப்பம் ஏற்படலாம்’
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு பா.ம.க-வின் நிலைப்பாடுகள் எப்போதுமே இப்படித்தான் மாறிமாறி இருந்திருக்கின்றன, என்றார்.
“மாறிமாறி முடிவெடுப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி சளைத்ததல்ல. மருத்துவர் ராமதாஸைப் பொறுத்தவரை அ.தி.மு.க. பக்கம் போகவே விரும்பினார். ஆனால், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. பக்கம் போக விரும்பினார். திங்கட்கிழமை மாலை நடந்த கூட்டத்தில், இந்த முடிவெடுக்கும்படி என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இதனால் யாருக்கு லாபம் என்பதை தேர்தல் முடிந்த பிறகு அவர்களே உணர்வார்கள்,” என்றார்.
பா.ம.க, அ.தி.மு.கவுடன் பயணம் செய்திருந்தால், நிச்சயமாக பல மாவட்டங்களில் பலனளித்திருக்கும், என்கிறார் குபேந்திரன். “சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில் வலுவாக இருந்திருக்கலாம்," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.
பா.ம.க-பா.ஜ.க கூட்டணியால் பா.ம.வுக்குள் கலகம் வெடிக்கலாம் என்கிறார் குபேந்திரன். "இந்தக் கூட்டணியால் அ.தி.மு.க. மூன்றாவது இடத்திற்கெல்லாம் தள்ளப்படாது. பா.ஜ.க - பா.ம.க கூட்டணியில் பல குழப்பங்கள் வரும். வன்னியர் சங்கத்தினர் இது தொடர்பாக இருவேறு கருத்துகளை கொண்டிருப்பார்கள் எனக் கருதுகிறேன். ஆனால், பா.ம.கவின் வாக்கு வங்கியையும் சேர்த்து தன்னுடையதாகக் காட்ட பா.ஜ.க. முயலும். இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிட்டோம் எனக் கூறி திராவிடக் கட்சிகளை மிரட்டப் பார்ப்பார்கள். ஆனால், அதற்குள்ளாகவே இந்தக் கூட்டணிக்கு எதிராக பா.ம.கவில் எதிர்ப்புகள் வெடிக்கலாம்," என்கிறார் குபேந்திரன்.
இன்னொரு மூத்த பத்திரிகையாளர், இந்தக் கூட்டணியில் இருந்து அன்புமணி ராமதாஸ் வெற்றிபெறும் நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அதன் காரணமாகவே இந்தக் கூட்டணி அமைந்திருக்கும் என்கிறார்.
"அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக இருந்திருந்தால் தி.மு.க. கூட்டணிக்கு கடுமையான சவாலை தந்திருக்க முடியும். இல்லாவிட்டால் அ.தி.மு.க-வும் பா.ம.கவும் கூட்டணி அமைத்திருந்தால் தர்மபுரி, சேலம், சிதம்பரம் போன்ற தொகுதிகளில் கடுமையான போட்டியை உருவாக்கியிருக்கலாம் அல்லது வெற்றியைப் பெற்றிருக்கலாம். ஆனால், இப்படி ஒரு முடிவுக்குப் பின்னால் என்ன வியூகம் இருக்கிறதெனப் புரியவில்லை," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், FB/DR.S.RAMADOSS
தொடர்ந்து பா.ஜ.க இருக்கும் கூட்டணியில் இடம்பெற்று வரும் பா.ம.க
1998-ஆம் ஆண்டிலிருந்தே பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்று வந்திருக்கிறது. 1998-இல் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.கவும், பா.ம.கவும் இடம்பெற்றன. இதில் பா.ம.கவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.கவும் பா.ம.கவும் இடம்பெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் பா.ம.கவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதற்குப் பிறகு 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. அந்தக் கூட்டணியில் அதிக இடங்களை தே.மு.தி.க. எடுத்துக்கொள்ள, பா.ம.கவுக்கு 8 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதற்குப் பிறகு 2019-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. அக்கட்சிக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இப்போது 2024-இல் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகளைப் பொறுத்தவரை, 1998-இல் நான்கு இடங்களையும் 1999, 2004 ஆகிய வருடங்களில் தலா ஐந்து இடங்களையும் பா.ம.க. பெற்றது. 2014-இல் அக்கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது.

பட மூலாதாரம், DMDK
தே.மு.தி.க.வுக்கு லாபமா?
பாட்டாளி மக்கள் கட்சி பா.ஜ.க. கூட்டணிக்குச் சென்றுவிட்ட நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற தே.மு.தி.க. கூடுதலான நிபந்தனைகளை முன்வைக்கக்கூடும்.
"இந்த முறை தே.மு.தி.க-விற்கான கிராக்கி அதிகரித்திருப்பது உண்மைதான். பா.ம.க. தற்போது கூட்டணியில் இல்லாததால், கூடுதல் இடங்களை அக்கட்சி அ.தி.மு.கவிடம் கேட்கலாம். முன்னதாக தே.மு.தி.கவுக்கு மாநிலங்களவை இடத்தைக் கொடுக்க அ.தி.மு.க. மறுத்திருந்தது. இப்போது அதனை வலியுறுத்தலாம்" என்கிறார் அவர்.
ஆனால், அப்படி நடக்காது என்கிறார்கள் அ,தி.மு.க. வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். "தே.மு.தி.கவைப் பொறுத்தவரை என்ன அளிக்கப்படும் என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் வருவார்கள். இல்லாவிட்டால் இருக்கும் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்க கட்சித் தலைமை தயாராகவே இருக்கிறது," என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












