தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் பதவியை உதறிவிட்டு தேர்தலில் போட்டியிடுவது சரியா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
18வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, நாட்டின் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. பிரதமர் மோதியின் தொடர் தமிழ்நாட்டு பயணங்கள், திமுக, அதிமுக, பாஜக கட்சிகளின் கூட்டணி குறித்த அறிவிப்புகள் என தமிழ்நாட்டிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை செளந்தரராஜன் நேற்று (மார்ச் 18) ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை, இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூவுக்கு அனுப்பியுள்ளார்.
“தீவிர மக்கள் பணிக்கு திரும்ப தான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கண்டிப்பாக புதுச்சேரியில் இல்லை, தமிழ்நாட்டில் தான் போட்டியிடுவேன். நேரடியான, நேர்மையான அரசியல் செய்ய வருகிறேன்” என்று நேற்று செய்தியாளர்களிடம் கூறினார் தமிழிசை செளந்தரராஜன்.
பாஜக ஆளாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலமாக தொடர்ந்து பல தடைகளை பாஜக உருவாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் பலமுறை எழுந்துள்ளன. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரளாவின் ஆளுநர் ஆரிப் முகம்மது கான், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன், முன்னாள் மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் (தற்போது இந்தியாவின் துணை ஜனாதிபதி) என பல ஆளுநர்கள் பாஜக சார்பாக செயல்படுகிறார்கள் என அந்தந்த மாநில அரசுகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அரசியலமைப்பு பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தான் செயல்படுகிறார்களா? ஒரு மாநிலத்தின் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தது சரியா? ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கும் ஒருவரை அரசமைப்பு பதவிகளில் நியமித்து, பின்னர் தேர்தல் நேரங்களில் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வது சரியா?

பட மூலாதாரம், @DRTAMILISAIGUV/X
இந்தியாவின் அரசியலமைப்பு பதவிகள்
இந்தியாவில், ‘அரசியலமைப்பு பதவிகள்’ என்பது இந்திய அரசியலமைப்பால் நிறுவப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட முக்கிய பதவிகள் அல்லது பொறுப்புகளைக் குறிக்கிறது. இந்த பதவிகள் இந்திய அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கும், நாட்டின் நிர்வாகத்திற்கும் மிகவும் அத்தியாவசியமானவை.
இத்தகைய பதவிகளில் இருப்பவர்கள், தங்களின் அரசியல் பாரபட்சமற்ற செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநிலங்களின் ஆளுநர்கள், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், தலைமை தேர்தல் ஆணையர், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சபாநாயகர்கள், அரசுத் தலைமை வழக்குரைஞர், போன்ற பதவிகள் இதற்கான உதாரணங்கள்.
1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ராஜாஜி. இந்தியாவின் முக்கியமான அரசியலமைப்பு பதவியை வகித்த இவர், பின்னர் 1952ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தலில் பல குழப்பங்களுக்கு இடையே தேர்தலில் போட்டியிடாமலே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியலமைப்பு பதவியிலிருந்து விலகி தேர்தல் அரசியலுக்கு வருவது சரியா?
“இது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை, ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசியலில் அதிகமாக தலையிடுகிறார்களே. மறைமுகமாக அவர்கள் யாருக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்கள் என தெரியும், இப்போது ஒருவர் நேரடியாக அரசியல் செய்யப் போகிறார், அவ்வளவு தான்” என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.
“அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பதவியில் இருந்து விலகிய பிறகு, தேர்தலில் போட்டியிடுவதில் சட்டரீதியாக எந்தச் சிக்கலும் இல்லை. அரசியலமைப்பு பதவிகளை வகித்தவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் ஒருமுறை பரிந்துரைத்தது. ஆனால் அது நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை” என்கிறார் அவர்.
“ஆளுநர் என்பவரை மத்திய அரசின் முகவராக தானே எல்லோரும் பார்க்கிறார்கள். இந்தியாவில் சில ஆளுநர்கள் எதிர்கட்சி போல செயல்படுகிறார்கள். ஆளுநர்கள், சபாநாயகர்கள் போன்ற பதவிகளுக்கான மாண்பை பலரும் மறந்துவிட்டனர். எனவே மக்களும் இதை எளிதாக கடந்து செல்கின்றனர்.
இதில் பாஜக, காங்கிரஸ் என வேறுபாடு இல்லை. சில தலைவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்க முடியாது என்பதால் எளிதாக ஆளுநர் பதவியை கொடுத்து விடுகிறார்கள். முக்கியமாக இது ஒரு ஓய்வு பதவி போல தான் பார்க்கப்படுகிறது” என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.

பட மூலாதாரம், CPRadhakrishnan/X
ஆளுநர்களாக நியமிக்கப்படும் ஆளும்கட்சி தலைவர்கள்
“இன்னொன்றை நாம் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் பெரும்பாலான ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால், ஆளும் கட்சியைக் சேர்ந்த தலைவர்களுக்கு தானே அந்த பதவி அளிக்கப்படுகிறது” என்கிறார் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்.
அசாம் மாநில ஆளுநராக இருக்கும் குலாப் சந்த் கட்டாரியா, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், திரிபுரா மாநில ஆளுநராக இருக்கும் இந்திரசேனா ரெட்டி, ஒடிஷா மாநில ஆளுநராக இருக்கும் ரகுபர் தாஸ், பீகார் மாநில ஆளுநர் இராஜேந்திர அர்லேகர், சட்டிஸ்கர் மாநில ஆளுநர் பிஸ்வபூசண் அரிச்சந்தன், என பாஜக தலைவர்களாக இருந்து ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் மிகவும் நீளம்.
“கட்சித் தலைவர்கள் தவிர்த்தும் சில நபர்களை அரசியலமைப்பு பதவிகளில் மத்திய அரசு நியமிக்கிறது. எனவே அவர்களும் தங்களுக்கு பதவி கொடுத்த ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பது இப்போது சாதாரணமாகிவிட்டது” என்கிறார் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்.
தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவில் மாநில பொதுச் செயலாளர், துணைத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். தொடர்ந்து 2014 முதல் 2019 வரை தமிழக பாஜக தலைவராகவும் இருந்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அடுத்த சில மாதங்களில் தமிழிசை சௌந்தரராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். பின்னர் புதுவை துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி ராஜினாமா செய்தபோது, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் அவர் கூடுதலாக வகித்து வந்தார்.

பட மூலாதாரம், @DRTAMILISAIGUV/X
அரசியலமைப்பு பதவிகளில் இருந்து விலகி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா?
“ஆளுநர் போன்ற ஒரு அரசியலமைப்பு பதவியிலிருந்து விலகி தேர்தலில் போட்டியிடுவது ஆரோக்கியமற்றது என்று சொல்ல முடியாது” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அரசியல் வரலாற்றில் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்களது கட்சி தலைவர்களை ஆளுநர்களாக நியமித்துள்ளன.
2019இல் கூட மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் ராஜினாமா செய்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இவ்வாறு போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பதே முக்கியமான கேள்வி.
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி கூட, ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் பல ஆளுநர்களை களமிறங்கியுள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலையை ஆரோக்கியமற்றது என்று சொல்ல முடியாது. ஆளுநராக இருந்து கொண்டு அரசியல்வாதியாக செயல்படுவது தான் ஜனநாயகத்திற்கு ஆபத்து” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம்.

பட மூலாதாரம், Getty Images
‘ஆளுநர் பதவியே தேவையில்லை’
“ஆளுநர் பதவி தேவையில்லை என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாது அரசியலமைப்பு பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் அல்லது ராஜினாமா செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடாது என விதிமுறை கொண்டு வரப்படும்” என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன்.
“ஆளுநராக இருப்பதற்கு தேவையான தகுதிகள் என்று பார்த்தால், இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், அவருக்கு 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளில் இருக்கக்கூடாது, என மிகவும் எளிமையான விதிகள் உள்ளன. எனவே இந்த சொகுசான பதவிக்கு தங்கள் கட்சி சார்பான நபர்களை நியமிக்கிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து தொடரும் ஒரு அலங்காரப் பதவி இது. எனவே இதை முற்றிலும் அகற்ற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட பல அரசியல் வழக்குகளில் ஆளுநர்களின் அதிகார வரம்புகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போல ஆளுநர்கள் நடந்துகொள்கிறார்கள்” என்கிறார் வில்சன்.
“ஆளுநர்கள் அரசியல் சார்பற்று இருக்க வேண்டும். ஆனால் இன்று அப்படி யார் இருக்கிறார்கள்? தமிழ்நாட்டைப் போல தாங்கள் ஆளாத மாநிலங்களில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவே ஆளுநர்கள் அனுப்பப்படுகிறார்கள். பின்னர் தேவையான சமயங்களில் இவ்வாறு நேரடி அரசியலிலும் ஈடுபடுகிறார்கள்."
“எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். அது அவர்கள் பதவி விலகிய பிறகு அமல்படுத்த வேண்டும். எந்த கட்சிக்கும் அவர்கள் ஆலோசகர்களாக கூட இருக்கக்கூடாது. இதையெல்லாம் விடச் சிறந்தது, ஆட்டுக்கு எதற்கு தாடி, மாநிலங்களுக்கு எதற்கு ஆளுநர் என அண்ணா கூறியது போல அந்தப் பதவியை முழுவதுமாக அகற்ற வேண்டும்” என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன்.

பாஜக கூறுவது என்ன?
கடந்த சில மாதங்களாக ஆளுநர் பதவியில் இருந்துகொண்டே தமிழக அரசியல் குறித்தும், திமுக குறித்தும் நேரடியாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார் தமிழிசை சௌந்தரராஜன்.
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதிய பிறகு, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை சௌந்தரராஜன்.
அப்போது, “மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து தான் போட்டியிடுகிறேன். எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும்” என்று கூறினார்.
இது குறித்து தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, “யார் வேண்டுமானாலும் மக்கள் பணிக்கு வரலாம் அல்லவா. சட்டரீதியாக எந்த சிக்கலும் இல்லாதபோது இதில் என்ன தவறு உள்ளது. தமிழிசை ஏற்கனவே தமிழக பாஜகவின் தலைவராக இருந்தவர் தானே. எனக்கு தெரிந்து அவர் ஆளுநராக இருந்தவரை மக்கள் பணியில் மட்டுமே ஈடுபட்டிருந்தார்.
அவர் இந்த ஐந்து ஆண்டுகளில், அவர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதை நான் உறுதியாக கூறுவேன். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை விரைவில் தலைமை அறிவிக்கும்” என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












