ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - தாலிபன் அரசுடன் என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பாகிஸ்தானிலிருந்து கரோலின் டேவிஸ் & லண்டனிலிருந்து ஃப்ளோரா ட்ரூரி
- பதவி, பிபிசி
ஆப்கானிஸ்தானில் ஒரே இரவில் 2 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எட்டு பேர் கொல்லப்பட்டதாக தாலிபன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திங்கள்கிழமை (மார்ச் 18) உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் நடந்த இந்த "பொறுப்பற்ற" தாக்குதல்களில், பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள வீடுகள் தாக்கப்பட்டதாக, தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் துருப்புகள் 7 பேரை அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் கொன்றதற்காக, “வலுவான பதிலடியை கொடுப்போம்” என, அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி உறுதியளித்ததைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடந்துள்ளது.
உயிரிழந்த பாகிஸ்தான் படையினர் இருவரின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆசிஃப் அலி சர்தாரி, இதற்கு காரணமானவர்கள் “யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்தார்.
வடக்கு வசீரிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவ தளத்தின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்தின்படி, இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை சமீப மாதங்களாக அதிகரித்து வருகின்றன.
பாகிஸ்தான் துருப்புகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாகவே இன்று ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் தாக்குதல் நடைபெற்றதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத உள்ளூர் அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு தாலிபன் பதிலடி
தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் பிரதேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்ய யாரையும் அனுமதிக்காது. இந்த தாக்குதல்களில் கிழக்கு எல்லையான கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர்", என்று குறிப்பிட்டுள்ளார்.
தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளை அதன் பாதுகாப்புப் படைகள் குறிவைத்ததாகக் கூறியுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக அல்ஜசீரா மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம்

பட மூலாதாரம், Reuters
ஆனால், தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "கட்டுப்பாடு இல்லாதது மற்றும் தங்கள் பிரதேசத்தில் உள்ள பிரச்னைகளுக்கு ஆப்கானிஸ்தானை குறை கூற வேண்டாம்" என்று பாகிஸ்தானை எச்சரித்தார்.
”இதுபோன்ற சம்பவங்கள், பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றும் அவர் கூறினார்.
இந்த தாக்குதல்களில் "மக்கள் குடியிருந்த வீடுகள்" தாக்கப்பட்டதாகவும் இதில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
2021-ம் ஆண்டில் தாலிபன்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில், பாகிஸ்தான் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. பாகிஸ்தானில் தங்குவதற்கு அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லை என அந்நாடு கூறியது. பல அகதிகள் மற்றும் புகலிடம் கோரி வந்தவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்தன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இதைச் செய்ததாக அந்த நேரத்தில் பாகிஸ்தான் காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு, அதனை ஆயுதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஆயுதக் குழுக்களை ஆதரிக்கவில்லை என தாலிபன்கள் மறுத்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












