தேர்தல் பத்திரம்: பாஜக, காங்கிரசுக்கு பணம் கொடுத்தது யார்? திமுக, அதிமுக போல் பெயரை வெளியிடாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், உமங் போட்டார்
- பதவி, பிபிசி சட்ட விவகார செய்தியாளர்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) பதிவேற்றம் செய்தது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கு விசாரணையின் போது, அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
அதன்படி, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் யார், அதன் மதிப்பு என்ன, எந்த வங்கிக் கணக்குக்கு அது அனுப்பப்பட்டது, அந்த பத்திரங்கள் எப்போது பணமாக்கப்பட்டன என்பன போன்ற தகவல்களை அரசியல் கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் பெற வேண்டும்.
தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. இந்த தகவல்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
தங்களுக்கு யார் எத்தனை ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வழங்கினர், அதனை தாங்கள் எப்போது பணமாக பெற்றோம் என்ற முழுமையான தகவல்களை சில கட்சிகள் சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சிகள் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர்.
கட்சிகள் அளித்த தகவல்கள் என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES
முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர்.
சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி போன்ற ஒப்பீட்டளவில் சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்று கூறியுள்ளன.
அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய கட்சிகள் 2019ஆம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023 இல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தபோது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை.
இவை தவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை.
தேர்தல் பத்திரங்களின் மதிப்பு மற்றும் அவை எப்போது பணமாக்கப்பட்டன என்பதை மட்டும் அக்கட்சிகள் கூறியுள்ளன. மேலும், சில இடங்களில் தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதியையும் அதனை தாங்கள் பெற்ற தேதியையும் அக்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்காத கட்சிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் அடங்கும்.

பட மூலாதாரம், ANI
பாஜகவும், காங்கிரசும் நன்கொடையாளர்கள் பெயரை குறிப்பிடாதது ஏன்?
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகை குறித்த தகவல்களை சேகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் 2019 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் கூறியது.
அப்போது பல ஆய்வாளர்கள், இந்த உத்தரவு தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்காது என்றும், இவை `தாங்கி` பத்திரங்கள் (அதாவது அதற்கு பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் இல்லை) என்பதால் அவற்றை வாங்கியது யார் என்பது குறித்த தகவல் அதில் குறிப்பிடப்பட்டிருக்காது என்றும் கூறினர்.
இந்த சூழ்நிலையில், எந்த தேர்தல் பத்திரத்தை யார் வழங்கியது என்று தெரியவில்லை என எந்தவொரு கட்சியும் கூறலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
நிபுணர்களின் இந்த வாதம், கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களில் பிரதிபலிக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஆளும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் 2019 இல் அளித்த பதிலில், இந்த பத்திரங்கள் 'தாங்கி' பத்திரங்கள் என்றும் அதனை வாங்கியவர்களின் தகவல்கள் அவற்றில் அச்சிடப்படவில்லை என்றும் கூறியது.
இந்த பத்திரங்கள் அக்கட்சியின் அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டதாகவோ அல்லது அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் போடப்பட்டதாகவோ அல்லது தங்கள் கட்சியை ஆதரிப்பவர்கள் பெயர்களை வெளியிட விரும்பாத நிலையில், வேறு யாராவது மூலமாக அனுப்பியதாகவோ திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், "இந்த பத்திரங்களை வாங்கியவர்கள் குறித்த தகவல் எங்களிடம் இல்லை” என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும், "தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அதிகாரம் கொண்டதும், அவற்றை ஏற்றுக்கொண்டு டெபாசிட் செய்யும் வங்கியுமான பாரத ஸ்டேட் வங்கி அத்தகைய தகவல்களை வைத்திருக்கலாம்" என்றும் அக்கட்சி கூறியது.
பாஜகவும் காங்கிரஸும் சொன்னது என்ன?

பட மூலாதாரம், @BJP4TAMILNADU/X
பாரதிய ஜனதா கட்சி 2023 இல் அளித்த பதிலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவது தொடர்பான பல்வேறு சட்டங்களில் உள்ள விதிகளை மேற்கோள் காட்டியது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட தொகையின் விவரங்களை மட்டுமே பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், அந்த பத்திரங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்ற தகவலை அல்ல என்றும் பாஜக கூறியுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் கீழ் இவ்வளவு தகவல்களை மட்டுமே தர வேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது.
தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் பெயர்கள் மற்றும் இதர தகவல்களை வைத்திருக்க வேண்டிய அவசியம், இச்சட்டத்தின் கீழ் கட்சிக்கு இல்லை என்றும், எனவே அந்த விவரங்கள் தன்னிடம் இல்லை என்றும் பாஜக கூறியது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கியவர்கள் குறித்து தகவல் தெரிவிக்காததற்கு இதே காரணத்தைக் கூறியுள்ளன.
காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் பற்றிய தகவல்களைத் தர முடியாததற்கு தெளிவான காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இக்கட்சிகள் தேர்தல் பத்திரங்களை எப்போது பணமாக்கினார்கள், அவர்களின் கணக்கில் எவ்வளவு தொகை வந்தது என்பதை மட்டுமே தெரிவித்துள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












