விளாதிமிர் புதின்: கேஜிபி உளவாளியாக இருந்தவர் ஜோசப் ஸ்டாலினுக்கு நிகரான ஆட்சியாளராக உருவெடுத்தது எப்படி?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், GAVRIIL GRIGOROV/POOL/AFP

விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராகவிருக்கிறார்.

ரஷ்யாவில் 2000-ஆம் ஆண்டு முதல் அவர் அதிகாரத்தில் உள்ளார்.

சோவியத் யூனியனின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு எந்தவொரு ரஷ்ய தலைவரும் இவ்வளவு நீண்டகாலம் ரஷ்யாவின் தலைமைப் பொறுப்பில் இருந்ததில்லை.

ரஷ்ய அதிபர் தேர்தல் முடிந்து, 71 வயதாகும் புதின் ஐந்தாவது முறையாக அதிபராகத் தயாராகி வரும் நிலையில், அவரை எதிர்க்க ரஷ்யாவில் யாரும் இல்லை என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் விரும்பினால், 2036 வரைகூட அதிபராக நீடிப்பதைத் தடுக்க முடியாது.

ஆனால், புதின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலும் தற்செயலானது.

கேஜிபி என்றழைக்கப்படும் சோவியத் யூனியன் உளவுத்துறையின் முன்னாள் பணியாளரான புதின், அவருக்கு முன் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சினின் உள்வட்டத்தில் சரியான நேரத்தில் இணைந்தார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, புதின், ஜூடோ, சாம்போ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார்

‘நான் ஒரு போக்கிரியாக இருந்தேன்’

விளாதிமிர் புதின் தனது குழந்தைப் பருவத்தை, கம்யூனிஸ்ட் லெனின்கிராட் நகரில் உள்ள ஒரு பொதுக் குடியிருப்பில் கழித்தார்.

அந்நாட்களில் தெருக்களில் தன்னைவிட பெரிய, வலுவான சிறுவர்களுடன் அவர் சண்டை போடுவார். அந்நாட்களைத் நினைவுகூர்ந்து, தான் ‘போக்கிரித்தனமாக’ இருந்ததாக அவரே கூறியிருக்கிறார்.

அந்த நினைவுகளைப் பற்றி 2015-இல் பேசிய அவர், “அந்த தெருச்சண்டைகள் முக்கியமான ஒன்றை எனக்குக் கற்றுக்கொடுத்தன. சண்டையைத் தவிர்க்க முடியாதெனில், நாம் தான் முதல் அடியை அடிக்க வேண்டும்,” என்றார்.

பின்னாட்களில் ஜூடோ, சாம்போ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார். தனது பால்யகால நண்பர்களான அர்காடி ரோட்டன்பர்க் மற்றும் போரிஸ் ரோட்டன்பர்க் ஆகியோருடன் இன்று வரை நெருக்கமாக இருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், OTHER

படக்குறிப்பு, 1985-ஆம் ஆண்டு, கேஜிபி-யின் கிழக்கு ஜெர்மனி பிரிவில் பணியமர்த்தப்பட்டார் புதின்

கேஜிபி புலனாய்வுப் பிரிவில் பணி

லெனின்கிராட் மாநிலப் பல்கலைக்கழகத்தில் தனது சட்டப் படிப்பை முடித்தபின் சோவியத் உளவுத் துறையில் பணிக்குச் சேர்ந்தார். அப்பணி அவருக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

1985-ஆம் ஆண்டு, கேஜிபி-யின் கிழக்கு ஜெர்மனி பிரிவில் பணியமர்த்தப்பட்ட அவர், 1989-ஆம் ஆண்டு அந்த கம்யூனிஸ்ட் அரசின் வீழ்ச்சியை நேரில் கண்டார்.

கிளர்ச்சியாளர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது அவர்களை எச்சரித்துத் துரத்தினார். ஆனால் அவருக்கு ரஷ்ய அரசிடமிருந்து எந்த உதவியும் வரவில்லை.

அடுத்த ஆண்டு அவர் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது, ரஷ்ய கம்யூனிச அரசியல் கட்டமைப்பே ஒரு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது.

புதினால் கேஜிபி-யில் பெரும் பதவிகளுக்குச் செல்ல முடியவில்லை. அவரது உயரதிகாரியாக இருந்த நிகோலாய் லியோனோவ், புதினை பெரும் திறமைகளற்ற சாதாரணமான பணியாளர் என்று கருதினார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், POOL/AFP

படக்குறிப்பு, அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெலிட்சினின் (இடது) நிர்வாகத்தில் பணியமர்த்தப்பட்டார் புதின்

அதிவேக அரசியல் வளர்ச்சி

1991-ஆம் ஆண்டு புதின், அப்போது லெனின்கிராட் நகரத்துக்கு புதிய மேயராகப் பொறுப்பேற்ற அனடோலி சோப்சாக் என்பவருக்குக் கீழ் துணை மேயரானார்.

சோப்சாக் பதவியிழந்தபின், புதின் மாஸ்கோவில் அதிபர் போரிஸ் யெல்ட்சினின் நிர்வாக அலுவலகத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டார். அதன்பின் வந்த வருடங்களில்தான் அவரது அரசியல் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

அவர் சிலகாலம் கேஜிபி-க்கு பதிலாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு பாதுகாப்புச் சேவைக்குத் தலைமை தாங்கினார். அதன்பின் அதிபருக்குக் கீழ் இயங்கிய பாதுகாப்புக் குழுவின் செயலாளரானார்.

1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உடல்நிலை குன்றியிருந்த அதிபர் போரிஸ் யெல்ட்சின், தனது பிரதம மந்திரியை நீக்கிவிட்டு, அப்பதவியில் புதினை அமர வைத்தார்.

2000-ஆம் ஆண்டில் வரவிருந்த அதிபர் தேர்தலுக்கு முந்தைய சீர்திருத்தங்களை புதின் கவனித்துக் கொண்டார்.

அப்போது மாஸ்கோ நகரில் பல குண்டுவெடிப்புகள் நிழந்தன. அதைத் தொடர்ந்து செச்னியா மாகாணத்தில் கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்தை அனுப்பினார். அதில் பல செச்னிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் புதினின் முயற்சி வெற்றியடைந்தது.

இந்தக் காலகட்டத்தில் அவர் வேகமாக பிரபலம் அடைந்தார். 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பொறுப்பு அதிபராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். சில மாதங்கள் கழித்து தேர்தலுக்குப் பிறகு முதல்முறை முழுநேர ரஷ்ய அதிபரானார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, புதினின் அதிபர் பதவியின் ஆரம்ப வருடங்கள் பல அசம்பாவித நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தது

அதிபர் பதவியின் ஆரம்ப நாட்கள்

அதிபர் புதினுக்கு முதல் சவால் வந்தது 2000-ஆம் ஆண்டில்.

குர்ஸ்க் எனப்பட்ட ரஷ்ய அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல் பேரன்ட்ஸ் கடலில் மூழ்கியது. அப்போது புதின் விடுப்பில் இருந்தார். மேற்கத்திய நாடுகளின் உதவியை மறுத்தார். கப்பலில் இருந்த 118 பேரும் மீட்கப்படக் காத்திருந்த நிலையிலேயே இறந்தனர்.

நான்கு ஆண்டுகள் கழித்து செச்னிய கிளர்ச்சியாளர்கள் வடக்கு ஒசெடியா எனும் இடத்தில் இருந்த ஒரு பள்ளியில் 1,000 ரஷ்ய மக்களைப் பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருந்தனர். இதில் பலர் குழந்தைகள். ரஷ்ய காவலர்கள் அங்கு நுழைந்து தாக்குதல் நடத்தியதில், 330 பேர் இறந்தனர்.

செச்னிய கிளர்ச்சியாளர்களின் திட்டம் குறித்து ரஷ்ய உளவுத்துறை முன்பே அறிந்திருந்தும் செயல்படவில்லை என்று பின்னாளில் தெரியவந்தது.

புதினின் அதிபர் பதவியின் ஆரம்ப வருடங்கள் இப்படி பல அசம்பாவித நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தது.

புதின், 1990-களில் அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திவந்த பெரும்பணக்காரர்களை அழைத்து, அரசியலில் இருந்து விலகியிருந்து, தன்னை மட்டும் ஆதரித்தால், அவர்களது சொத்துகள் பாதுகாக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தார். இப்படியாக அவர்களை ‘வழிக்குக் கொண்டுவந்தார்’. மறுபுறம் மக்கள் ஆதரவையும் அவர் சம்பாதித்தார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், TIMM SCHAMBERGER/DDP/AFP

படக்குறிப்பு, முதலில் மேற்கத்திய நாடுகளுடன் புதின் நட்புறவைப் பேணினாலும் பின்னாட்களில் அந்த உறவு கசந்தது

மேற்கத்திய நாடுகளுடன் உறவுகள்

ஆரம்ப நாட்களில் புதின் மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவைப் பேணினார்.

2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை முதன்முதலில் அழைத்துப் பேசிய தலைவர்களில் ஒருவர் புதின்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மேல் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு உதவவும் செய்தார் புதின்.

அப்போது அமெரிக்க அதிபர் புஷ், புதினை ‘மிகவும் நம்பத்தகுந்தவர்’ என்றழைத்தார்.

ஆனால் விரைவிலேயே இந்த நட்புறவு கசப்பாக மாறியது.

2006-ஆம் ஆண்டு புதினை எதிர்த்து வந்த அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ என்ற முன்னாள் கேஜிபி அதிகாரி இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்டபோது, இங்கிலாந்துடனான புதினின் உறவு கசப்பானது.

2007-ஆம் ஆண்டு, ம்யூனிக் பாதுகாப்புக் கூட்டத்தில், அமெரிக்கா தனது எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதாகக் குற்றம்சாட்டினார் புதின்.

இது மீண்டும் ஒரு பனிப்போர் சூழ்நிலையை உருவாக்கியதாக அப்போது கருதப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, புதின் நேரடியாகத் தனக்குக் கீழ் வேலைசெய்யும் ஒரு தேசிய காவல்படையைக் கட்டமைத்துள்ளார்

மேற்கத்திய உலகுக்கு மேலும் நெருக்கடி கொடுத்த புதின்

2008-ஆம் ஆண்டு, மூன்றாவது முறையாகத் தொடர்ந்து அதிபராக இருக்க ரஷ்ய அரசியல் சட்டம் அனுமதிக்காததால், அவர் பிரதம் மந்திரியாக அதிகாரத்தில் இருந்தார். ஆனாலும் அவர் மிக அதிகப்படியான அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.

இந்தக் காலகட்டத்தில், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இருந்த முன்னாள் சோவியத் நாடுகளின் மீது ராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

உதாரணமாக ஜார்ஜிய ராணுவத்தை தோற்கடித்து, அப்காஸியா, தெற்கு ஒஸெட்டியா ஆகிய பகுதிகளின் தன்னாட்சியை ரஷ்ய ராணுவம் நிலைநிறுத்தியது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், ALEXEY DRUZHININ/SPUTNIK/AFP

படக்குறிப்பு, புதினின் ஆதரவோடு பல வருடங்கள் இயங்கிவந்த யெவ்ஜெனி ப்ரிகோசின் 2023-ஆம் ஆண்டு புதினுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்தார். அது முறியடிக்கப்பட்டது. பின்னர், ப்ரிகோசின் ஒரு மர்மமான விமான விபத்தில் இறந்தார்

எதிர்ப்பை முற்றிலும் ஒழித்த புதின்

கடந்த 2021-ஆம் ஆண்டு, மூன்றாவது முறை தொடர்ந்து அதிபராவதைத் தடுக்கும் சட்டத்தை வளைத்து, தான் ஐந்தாவது மற்றும் ஆறாவது முறையும் அதிபர் ஆவதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தினார்.

புதினை விமர்சிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் காலப்போக்கில் காணாமல் போயிருக்கிறார்கள்.

2011-இல் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்திய போரிஸ் நெம்ட்சோவ், 2015-இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புதினை மிகக் கடுமையாக எதிர்த்துவந்த அலெக்ஸெய் நவால்னி மீது, 2020-இல் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் சிறையில் அடைக்கப்படார். அவர், கடந்த மாதம் (பிப்ரவர்ய் 2024) இறந்தார். நவால்னியின் மனைவி, புதின்தான் நவால்னியைக் கொலைசெய்துவிட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

புதின் ஆதரவோடு பல வருடங்கள் இயங்கிவந்த யெவ்ஜெனி ப்ரிகோஜின் 2023-ஆம் ஆண்டு புதினுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்தார். அது முறியடிக்கப்பட்டது. பின்னர், ப்ரிகோஜின் ஒரு மர்மமான விமான விபத்தில் இறந்தார்.

புதின் ரஷ்ய பழமைவாத தேவாலயத்தின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.

நேரடியாகத் தனக்குக் கீழ் வேலைசெய்யும் ஒரு தேசிய காவல்படையைக் கட்டமைத்துள்ளார்.

ரஷ்ய ஊடகங்கள் பெரும்பாலும் புதினின் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன.

புதின் 2014-இல் க்ரைமியா தீபகற்பத்தைக் கைப்பற்றிய போதே யுக்ரேன் மீதான புதினின் யுத்தம் துவங்கிவிட்டது என்கின்றனர் நிபுணர்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்கினார். அந்தப் போர் இன்றுவரை தொடர்கிறது.

இந்நிலையில்தான் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராகவிருக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)