அரிசியா, கோதுமையா? - எதை சாப்பிடுவது உடலுக்கு நல்லது?

அரிசி மற்றும் கோதுமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரிசி, கோதுமை எது சிறந்தது?
    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

உணவுச்சண்டை என்ற சொல்லை பலரும் கேட்டிருக்க வாய்ப்புண்டு. யார் அதிக உணவை அதிக வேகத்தில் உண்கிறார்கள் என்பதுதான் போட்டியே. ஆனால், உணவுகளுக்குள் சண்டை என்பதை யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நீண்ட காலமாகவே அரிசிக்கும், கோதுமைக்கும் அப்படி ஒரு சண்டை சத்தமே இல்லாமல் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆம், உடல்நலத்திற்கு அரிசி சிறந்ததா அல்லது கோதுமை சிறந்ததா என்பதே அந்த சண்டை.

எடைக்குறைப்பு செய்ய விரும்புபவர்கள், சர்க்கரை உள்ளிட்ட ஒரு சில உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் அரிசி சோறைத் தவிர்த்துவிட்டு, கோதுமை உணவுகளை எடுத்துக் கொள்ளுவதை நாம் அறிவோம். மருத்துவர்கள் பலரும் கூட இந்த உணவுமுறையை பரிந்துரைக்கிறார்கள்.

ஆனால், தானிய வகையை சேர்ந்த இரு பொருட்களான அரிசி மற்றும் கோதுமைக்குள் என்ன வேற்றுமை உள்ளது? உண்மையில் அரிசியை விட கோதுமையில் சத்து அதிகமா? அதை சாப்பிடுவதால் பலன் கிடைக்குமா?

மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

அரிசி மற்றும் கோதுமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “அரிசி மட்டும் கோதுமை இரண்டிற்குள்ளும் மாவுச்சத்து ஒரே அளவில்தான் இருக்கும்"

அரிசி மற்றும் கோதுமை

பெரும்பாலும் பலரும் அரிசியை விட கோதுமையில் குறைவான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) உள்ளதால் தான் அதை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணரான விஜயஸ்ரீ இரண்டிலுமே கிட்டத்தட்ட ஒரே அளவிலான மாவுச்சத்து தான் இருக்கும் என்கிறார்.

“அரிசி, கோதுமை இரண்டிற்குள்ளும் மாவுச்சத்து ஒரே அளவில்தான் இருக்கும். சிறிதளவு வேறுபடலாமே தவிர பெரும்பாலும் அவை ஒன்றுதான்” என்கிறார் அவர்.

அரிசி மற்றும் கோதுமையில் என்னென்ன சத்துக்கள், என்னென்ன அளவில் கிடைக்கும் என்பதை கீழ்வருமாறு விளக்குகிறார் அவர்.

தேசிய ஊட்டச்சத்து அமைப்பின் அளவுகளின்படி, “100 கிராம் அரிசியில் 350 கலோரியும், 100 கிராம் கோதுமையில் 347 கலோரியும் கிடைக்கின்றன. அதே அளவு அரிசியில் 6 – 7% முதல் தர புரதமும், கோதுமையில் 12% இரண்டாம் தர புரதமும் காணப்படுகிறது.”

மேலும், இவை இரண்டிலுமே கொழுப்புச்சத்து மிக குறைவாகவே உள்ளதாக குறிப்பிடுகிறார் இவர்.

அரிசி மற்றும் கோதுமை

பட மூலாதாரம், MGM HEALTHCARE

படக்குறிப்பு, உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ

அரிசியிலும் நார்ச்சத்து

அதிக நார்ச்சத்து தன்மை கொண்டிருப்பதால் எடை குறைக்க விரும்புபவர்கள் முதல் சர்க்கரை நோயாளிகள் வரை கோதுமையே முதன்மை தேர்வாக இருக்கிறது.

ஆனால், அரிசியிலும் நார்ச்சத்து உள்ளதாக கூறுகிறார் விஜயஸ்ரீ. ஆனால், பதப்படுத்தும் செயல்முறையில் அந்த சத்து காணாமல் போகிறது. கோதுமையில் இந்த செயல்முறை இல்லாத காரணத்தால் நார்ச்சத்து அதிகமாக கிடைப்பதாக குறிப்பிடுகிறார்.

அரிசி மற்றும் கோதுமையில் என்னென்ன சத்துக்கள் கிடைக்கின்றன?

உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ கருத்துப்படி, “அரிசியில் மாவுச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாலிஷ் செய்யாத அரிசியில் மட்டும் தையாமின், நார்ச்சத்து” ஆகியவை காணப்படுகின்றன.

“கோதுமையில் மாவுச்சத்து, புரதச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் அரிசியை விட இரண்டு மடங்கு அதிகமான இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து” ஆகியவை உள்ளன.

அரிசி மற்றும் கோதுமை

பட மூலாதாரம், SIMS

படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் வினிதா கிருஷ்ணன்

சர்க்கரை அளவை அரிசி கூட்டுகிறதா?

மருத்துவர் பரிந்துரையின்படி பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி உணவு குறைவாகவே பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கான காரணம் குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான வினிதா கிருஷ்ணனிடம் பேசினோம்.

இதற்கு பதிலளித்த அவர், “ கோதுமையில் கரையாத நார்ச்சத்து உள்ளது. அதுவே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால், அரிசியில் நார்ச்சத்து இல்லாத காரணத்தால் உடனடியாக சர்க்கரை அளவை அதிகரிக்கிறது” என்கிறார் அவர்.

இதே கேள்விக்கு பதிலளித்த உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ, “ அரிசி உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால் எளிதில் செரிமானமாகி அது ரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர காரணமாகிறது. இதனால்தான் மருத்துவர்கள் நார்ச்சத்து கொண்ட தினை வகைகள் மற்றும் கோதுமை ஆகியவற்றை பரிந்துரைக்கிறார்கள்” என்கிறார்.

அரிசி மற்றும் கோதுமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “பரோட்டா மற்றும் சப்பாத்தியை உருட்டும்போது அதில் உண்டாகும் நெகிழ்வான இழுசக்திக்கு காரணம் இந்த குளூட்டன் தான்”

கோதுமையால் புதிய நோய் ஏற்படுமா?

சமீபத்திய ஆய்வுகளின்படி, “சர்க்கரை நோய் உள்ளவர்கள் நீண்ட நாட்களாக கோதுமை உணவுகளை உட்கொண்டு வருவதால் சீலியாக்(Celiac) என்னும் நோய்க்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளதாக” தெரிவிக்கிறார் மருத்துவர் வினிதா கிருஷ்ணன்.

அதற்கு காரணமாக, கோதுமையில் காணப்படும் குளூட்டன் என்ற சத்தை முன்வைக்கிறார் அவர்.

எளிமையாக சொல்லவேண்டுமெனில், “பரோட்டா மற்றும் சப்பாத்தியை உருட்டும்போது அதில் உண்டாகும் நெகிழ்வான இழுசக்திக்கு காரணம் இந்த குளூட்டன் தான்” என்கிறார்.

இதுகுறித்து பேசிய விஜயஸ்ரீ, “கோதுமையின் ஒரே பிரச்னை இந்த குளூட்டன் தான். வெறும் கோதுமையை மென்று தின்றால் முடிவில் ஒரு பபுள் கம் போல வரும். அதுதான் குளூட்டன்” என்கிறார்.

மேலும், குளூட்டன் என்பது ஒரு புரதச்சத்து தான். பலவகையான புரதச்சத்துக்கள் உள்ளன. அதில் ஒன்றான இது இரண்டாம் தர புரதச்சத்து என்கிறார் அவர்.

ஆனால், இந்த குளூட்டன் என்பது எல்லாருக்கும் ஒவ்வாதது என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும், ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் தரும் கூறாக மட்டுமே இது இருப்பதாகவும் குறிப்பிடுகிறார் விஜயஸ்ரீ.

அரிசி மற்றும் கோதுமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “ சீலியாக் என்ற நோய் உள்ளவர்களுக்கு குளூட்டன் அழற்சி இருக்கும்."

யாருக்கெல்லாம் குளூட்டன் அழற்சி ஏற்படலாம்?

சமீப காலமாகவே குளூட்டன் சகிப்பின்மை பலரிடம் அதிகரித்துள்ளதாக கூறும் விஜயஸ்ரீ அதற்கு காரணம் பரோட்டா உள்ளிட்ட பல வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதுதான் என்கிறார்.

“ஏற்கனவே குளூட்டன் அதிகமாக உள்ள எந்த சத்தும் இல்லாத இவற்றில் டால்டா உள்ளிட்டவற்றை சேர்க்கிறோம். இதனால் உடலுக்குள் அதிக கொழுப்பு, மாவுச்சத்து ஆகியவை சேர்ந்து நமக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்னையை ஏற்படுத்துகிறது” என்கிறார் அவர்.

மேலும், “ சீலியாக் என்ற நோய் உள்ளவர்களுக்கு குளூட்டன் அழற்சி இருக்கும். சமீபத்தில் கூட குளூட்டன் சாப்பிடுவதால் தான் அதிக இன்சுலின் சென்சிட்டிவிட்டி ஏற்படுகிறது, நீண்ட நாட்களாக கோதுமை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.” என்று குறிப்பிடுகிறார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.

அதே சமயம் சோரியாசிஸ் , ஆர்தரைடிஸ் இருப்பவர்களுக்கு இந்த குளூட்டன் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர் வினிதா.

குளூட்டன் காணப்படும் உணவுகள் என்ன?

பொதுவாக குளூட்டன் தானியங்களில் தான் காணப்படுகிறது.

உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ கருத்துப்படி, “குளூட்டன் கோதுமை, மைதா, பார்லி, ஓட்ஸ் உள்ளிட்ட உணவுகளில் உள்ளது. அதைத்தாண்டி காய்கறிகள் போன்றவற்றில் இவை காணப்படுவதில்லை” என்கிறார்.

அரிசி மற்றும் கோதுமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "மைதா கெமிக்கல்கள் மூலம் பதப்படுத்தப்படுவதால் அதிலுள்ள அனைத்து சத்துக்களும் நீங்கி வெறும் கார்போ ஹைட்ரேட் மட்டுமே மிஞ்சுகிறது"

மைதா மற்றும் ரவை நல்லதா?

கோதுமை, மைதா, ரவை என அனைத்தும் ஏறக்குறைய ஒன்றுதான் என்கிறார்கள் பெரும்பாலான உணவியல் நிபுணர்கள். கோதுமையில் இருந்து துணை தயாரிப்புகளாக உருவாக்கப்படுபவைதான் இந்த மைதா மற்றும் ரவை. இவற்றில் நீண்டகாலமாகவே மைதாவால் பல விதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய மருத்துவர் வினிதா, “மைதா கெமிக்கல்கள் மூலம் பதப்படுத்தப்படுவதால் கோதுமையில் உள்ள நல்ல சத்துகள் நீங்கி வெறும் கார்போ ஹைட்ரேட் மட்டுமே மிஞ்சுகிறது. இதே கோதுமை ரவை என்பது கோதுமையை உடைத்து தயார் செய்யப்படுவதால் அதில் சிறிது நார்ச்சத்து காணப்படுகிறது” என்கிறார்.

மைதாவில் கார்போஹைட்ரேட் மட்டுமே மிஞ்சுவதால் எந்த வகையிலும் பயனளிக்காத ஒன்றாக இருப்பது மட்டுமின்றி, அதிலுள்ள இதர கூறுகள் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கும் வழிவகுப்பதாக தெரிவிக்கிறார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)