ரோகித் சர்மாவுடன் 2 மாதங்களாக பேசாத புதிய கேப்டன் ஹர்திக்; மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன நடக்கிறது?

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் டி20 சீசனை மாறுபட்ட கோணத்தில் அணுக இருக்கிறது. புதிய வீரர்கள், திறமையை வெளிக்காட்டாத பல வீரர்கள் வெளியேற்றம், பல கோடி ரூபாய் பரிமாற்றத்துக்குப்பின் கிடைத்த புதிய கேப்டன் ஆகிய அம்சங்களுடன் அணுக இருக்கிறது.

ரோஹித் சர்மா தலைமையில் 5 முறை பட்டம் வென்றுள்ள அந்த அணி, 2020ம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல முடியாமல் தடுமாறுகிறது. அதனால்தான் என்னவோ மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்று அந்த அணிக்கு சாம்பியன்ஷிப் பெற்றுக் கொடுத்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீண்டும் அழைத்து வந்துள்ளது.

வைரலாகும் பேட்டி

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அளித்த பேட்டிக்குப் பின், ஹர்திக் பெயரும், மும்பை இந்தியன்ஸ் பெயரும் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டபின் முதல்முறையாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடிவிட்டு, அவர் தற்போது உங்கள் தலைமையின் கீழ் விளையாடுவதால் ஏதேனும் “ஈகோ” பிரச்சினை வருமா என்று கேட்டனர்.

"தோளோடு தோள் சேர்ந்து பயணிப்பேன்"

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம், Getty Images

அதற்கு ஹர்திக் பாண்டியா அளித்த பதிலில் “ அனைத்து சீசன்களிலும் ரோஹித் சர்மா என் தோள் மீது கைபோட்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். கேப்டன் ரோஹித், சாதாரண வீரர் ரோஹித் என்ற வேறுபாடு இன்றி பழகுவார். எனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அவரிடம் கேட்பேன்.

அவர்தானே இந்திய அணியின் கேப்டன். அவரின் ஆலோசனை எனக்கு எப்போதும் உதவியாக இருக்கும். ஏனென்றால், மும்பை அணி அவரின் தலைமையில்தான் சாதித்துள்ளது. அவர் சென்ற பாதையில் நானும் செல்வேன், இதில் கூச்சப்பட என்ன இருக்கிறது, ரோஹித் பாய் தலைமையில் 10 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன்." என்றார்.

"2 மாதங்களாக இருவரும் பேசவில்லை"

மேலும் தொடர்ந்த ஹர்திக், "ரோஹித் சர்மா இந்திய அணிக்காக விளையாடுவதில் பரபரப்பாக இருந்ததால், கடந்த 2 மாதங்களாக இருவரும் பார்த்துப் பேசிக் கொள்ளவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் வியூகம் பற்றிக்கூட இருவரும் பேசவில்லை. ஆனால் ஐபிஎல் தொடருக்கு அனைவரும் ஒன்று சேரும்போது, ஓய்வறையில் நிச்சயம் இருவரும் பேசிக் கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம், Getty Images

வெற்றிக் கேப்டனுக்கு இந்த நிலையா?

ஒரு பக்கம் இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமை, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் என்ற அடையாளத்துடன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியுள்ளார்.

மும்பை அணி நிர்வாகம், தனக்குக் கீழ் பல சீசன்கள் ஆடிய ஹர்திக் பாண்டியாவை அழைத்துவந்து அவருக்கு கீழ் தன்னை விளையாட வைத்துவிட்டது என்று ரோஹித் சர்மா நினைக்கவும் வாய்ப்புண்டு.

உலக கிரிக்கெட்டில் இந்திய அணியை டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மெட்டிலும் சிறப்பாக செயல்பட வைத்து சபாஷ் வாங்கி வருபவர் ரோஹித் சர்மா. வெற்றிகரமான கேப்டனாக உலக கிரிக்கெட் அணிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோஹித் சர்மாவை, மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கவில்லையா என்ற கேள்வி கேப்டன் மாற்றத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரசிகர்களின் போட்டி

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒருபுறம் ரோஹித் சர்மாவுக்கான பெரும் ரசிகர்கள் பட்டாளம், மற்றொரு புறம் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு என ரசிகர்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பிரிவினையோடு மும்பை இந்தியன்ஸ் இந்த முறை களம் காண்கிறது.

ரசிகர்கள் ஆதங்கப்படுவதைப் போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013ம் ஆண்டு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்ற பின்புதான் அந்த அணியால் முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை முத்தமிட முடிந்தது. அதற்கு முன்புவரை மும்பை அணியில் சச்சின், ரிக்கி பாண்டிங், ஜெயசூர்யா உள்ளிட்ட ஏராளமான ஜாம்பவான் வீரர்கள் இருந்தும், ஒருவராலும் கோப்பைக்கு அருகே அழைத்துச் செல்ல முடியவில்லை என்பதே நிதர்சனம்.

ஆனால், 2013ல் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றபின், ஒருமுறை அல்ல 2013, 2015, 2017, 2019, 2020 என 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கோப்பையை வெல்லும் ஆட்டத்துக்கு வீரர்களின் தனிப்பட்ட பங்களிப்புகள் இருந்தாலும், அதை வெளிக்கொணரும் வகையில் செயல்பட்ட ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிக்கு சபாஷ் கூறியாக வேண்டும். ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் 50 சதவீதத்துக்கு மேல் வெற்றி சதவீதத்தை ரோஹித் சர்மா தனது கேப்டன்சியில் வைத்துள்ளார் என்கிறது புள்ளிவிவரம்.

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம், Getty Images

ஒரு உறைக்குள் இரு கத்தி

ஆனாலும், ஒரே உறையில் இரு கத்திகள் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஏன் இதற்கு முன் தோனி கேப்டன்சியில் சச்சின் விளையாடவில்லை, கோலி கேப்டன்சியில் தோனி விளையாடவில்லையா என்று கேட்கலாம். ஆனால் அப்போதெல்லாம் ஒருவர் இந்திய அணிக் கேப்டனாக இருக்கும்போது, ஐபிஎல் தொடரில் அவரது கேப்டன் பதவியை பறித்துவிட்டு, தனக்கு கீழ் ஆடிய ஒரு வீரரின் கேப்டன்சியில் விளையாடும் நிலை வரவில்லை என்ற உண்மையை உணர வேண்டும்.

தோனி கேப்டனாக இருந்தபோது, சச்சின் எந்த அணியிலும் கேப்டனாக இல்லை. கோலி கேப்டனாக இருந்தபோது, சிஎஸ்கே அணியில் மட்டும்தான் தோனி கேப்டனாக இருந்தார். இந்திய அணி கேப்டன் என்பது மிகப்பெரிய கவுரவ அடையாளம், அந்த கவுரவத்தை சுமந்திருக்கும் ஒருவரை, ஐபிஎல் அணி நிர்வாகம் திடீரென நீக்கிவிட்டு, வேறு ஒரு வீரரை நியமித்திருப்பது சற்று அதிர்ச்சிக்குரியதுதான்.

இந்த மாற்றம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எத்தகைய சவால்களை வரும் சீசனில் உருவாக்கும், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எத்தகைய பிரச்னைகள், சவால்கள் இருக்கின்றன என்பது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் பகிர்ந்துள்ளனர்.

"பிரச்னை வராது"

எம்ஆர்எஃப் பவுண்டேஷனில் பந்துவீச்சு துணை பயிற்சியாளராக இருந்துவரும் எட்வின் கென்னடி பிபிசி செய்திகளிடம் பேசுகையில் “ ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்து, ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு எந்தவிதத்திலும் குறையாது. இந்த பக்கம் இந்திய அணியின் கேப்டன், அந்தப் பக்கம் மும்பை அணியின் கேப்டன் என்ற குழப்பத்துடன் வீரர்கள் விளையாட மாட்டார்கள்.

ஒருவீரரின் திறமைதான் அவரை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். ஆதலால், ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும், ஹர்திக் பாண்டியாவுக்கு சார்பாக நடக்க வேண்டும் என்ற சார்புநிலை அணிக்குள் இருக்காது, வீரர்களிடத்திலும் இருக்காது என்பது எனது கருத்து. ரோஹித் சர்மா, சூர்யகுமார், பும்ரா தவிர மற்ற வீரர்கள் இளம் வீரர்கள் என்பதால், ஹர்திக் பாண்டியாவுக்கு அவர்களை கையாள்வதில் சிரமம் இருக்காது.

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம், Getty Images

"ரோஹித் பேட்டிங் இனி பட்டையை கிளப்பும்"

என்னைப் பொருத்தவரை ரோஹித் சர்மா இனிமேல்தான் சுமையின்றி, அழுத்தமின்றி பேட் செய்வார். இதற்கு முன்புவரை கேப்டன் பதவி என்ற கிரீடம் இருந்தது, அதை கழற்றிவிட்டு இனிமேல் சுதந்திரமாக பேட் செய்யும்போது, அவரின் பேட்டிங் வேறுவிதத்தில் மாறும். அது மும்பை அணிக்கு பலமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

"ரோஹித்தை நீக்கியது தவறான முடிவு"

விளையாட்டுத்துறையில் மூத்த பத்திரிகையாளர் முத்துக்குமார் பிபிசி செய்திகளிடம் கூறுகையில் “ மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது தவறான உதாரணம். இந்திய அணிக்கு மோசமான கேப்டனாக ரோஹித் செயல்பட்டால் ஐபிஎல் தொடரில் அவரை நீக்கிவிட்டு மும்பை அணி புதிய கேப்டனை கொண்டுவரலாம். ஆனால், வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் வலம் வரும்போது, மும்பை அணி கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம், Getty Images

”ஒய்வறை பிரச்னை”

இந்த சீசனில் மும்பை அணி வித்தியாசமான பிரச்னைகளை சந்திக்கும் என எனக்குத் தெரிகிறது. அதிலும் ஒய்வறை தொடர்பான சிக்கல்களை சந்திக்கலாம். ஏனென்றால், சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா இருவருமே அனுபவ வீரர்கள். அவர்கள் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு குடைச்சல் கொடுக்க நினைத்தாலே பிரச்னைகள் கிளம்பிவிடும். அதிலும் இம்பாக்ட் பிளேயராக விளையாடுவேன் என சூர்யகுமார் அல்லது ரோஹித் முரண்டு செய்தால், ஹர்திக் பாண்டியாவுக்கு சிக்கலாகிவிடும்." என்றார்.

"ஈகோ சிக்கல் வரலாம்"

மேலும் தொடர்ந்த அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஈகோ சிக்கல் வரலாம் என்றார். "அதிலும் சூர்யகுமார் யாதவ் ஏற்கெனவே தன்னை இந்திய அணியில் எடுக்காத விராட் கோலி கேப்டன்சியை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து சிக்கலில் சிக்கியவர். மும்பை அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியாவும் சென்றுவிட்டநிலையில் அடுத்த கேப்டனாக தன்னை நிர்வாகம் தேர்ந்தெடுக்கலாம் என சூர்யகுமார் நினைத்திருக்கலாம். அதை அனைத்தையும் ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்ததன் மூலம் உடைந்துவிட்டதால் மறைமுகமாக சூர்யகுமார் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். இது களத்தில் ஒவ்வொரு வீரரின் பேட்டிங் திறமை, பந்துவீச்சை பார்த்தாலே தெரிந்துவிடும்.

அது மட்டுமல்ல, ஈகோ பார்ப்பது மனிதர்களின் இயல்பு. இதில் கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கல்ல. மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கலாம், ஆனால், இந்திய அணிக்கு நான்தானே கேப்டன், ப்ளேயி்ங் லெவனில் நான்தானே உன்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா நினைக்கவும் வாய்ப்புண்டு.

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக் மனநிலை எப்படி?

ஹர்திக் பாண்டியா அவ்வப்போது வீரர்களிடம் கடிந்து பேசக்கூடியவர் என்ற குற்றசாட்டு இருக்கிறது. அணியில் ஒரு பேட்டர் 3வது வரிசையில் களமிறங்கி வருகிறார் என்றால், திடீரென அந்த வரிசையில் ஹர்திக் பாண்டியா முன்அறிவிப்பின்றி களமிறங்கக் கூடியவர். இது அணிக்குள் வீரர்களிடத்தில் மனக்கசப்பை ஏற்படுத்தும். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இந்தச் சிக்கல் வந்தது . அதேபோல, மும்பை அணியில் சூர்யகுமார் களமிறங்கும் வரிசையை மாற்றலாம், முன்வரிசையில் ஹர்திக் பாண்டியா களமிறங்கினாலும் வியப்பில்லை.

ஆதலால் இந்த சீசனில் மும்பை அணியில் ஓய்வறை தொடர்பான பிரச்னைகள் மறைமுகமாக வெடிக்கலாம். இதையெல்லாம் ஹர்திக் பாண்டியா எவ்வாறு கையாளப் போகிறார் என்பதில்தான் அவரின் கேப்டன்சி வெற்றி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)