மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கம் ஏன்? பின்னணி என்ன?

ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

மே 30, 2023.

நள்ளிரவைத் தாண்டி நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டியில் மோஹித் ஷர்மாவின் அந்தக் கடைசி பந்தை, ஷார்ட் ஃபைன் லெக்கில் நாசூக்காக தட்டிவிட்டு ஜடேஜா அந்த பௌண்டரியை அடிப்பதற்கு முந்தைய நொடி வரை, ஐபிஎல்-இல் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இருந்தது மும்பை இந்தியன்ஸ்தான்.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கிய 2008ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்து சீசன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை என்பது கனவாகத்தான் இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி 2013ஆம் ஆண்டுதான் முதல்முறையாக கோப்பையை வென்றது. அந்த சீசனில் தான் ரோகித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்றார்.

சச்சினுக்கு ஐபிஎல் கோப்பைக் கனவு கானல் நீராகிவிடுமோ என்ற சூழல் இருந்தபோது, அவரது கடைசி சீசனில் கோப்பையோடு வழியனுப்பி வைத்தார் ரோகித் சர்மா.

அங்கே தொடங்கிய ரோகித்தின் வெற்றிப் பயணம், இதோ இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் ரோகித் ஷர்மா.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் ரோகித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்ட்யாவுக்கு சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 11 சீசன்களில் தொடர்ச்சியாக கேப்டன் பொறுப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த ரோகித் ஷர்மா தற்போது ஐபிஎல்-இல் தனது கேப்டன் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

மூன்று ஆண்டுகளாக சறுக்கலில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி

ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

இந்த 11 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு முறை பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றது. அதிலும் குறிப்பாக 2013 முதல் 2020 வரையிலான சீசன்களில் மட்டும் ஐந்து முறை கோப்பையை வென்று அசத்தியது.

இந்தக் காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்-இல் அபார வலிமைமிக்க அணியாக விளங்கியது. எனினும் கடந்த மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லவில்லை. குறிப்பாக 2021, 2022 சீசன்களில் லீக் சுற்றிலேயே வெளியேறியது.

ரோகித் ஷர்மா தலைமையில் 158 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 67 போட்டிகளில் வென்றுள்ளது. மேலும் ரோகித் தலைமையில் இறுதிப்போட்டிக்குச் சென்ற போதெல்லாம் ஒருமுறைகூட கோப்பையைத் தவறவிடவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.10 லட்சத்துக்கு ஹர்திக் பாண்ட்யாவை ஏலத்தில் வாங்கியது. அங்கிருந்துதான் ஹர்திக் பாண்ட்யா என்ற பெயரே வெளியே தெரியத் துவங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் அணியில் முக்கியமான இடத்தை பாண்ட்யா பெற்றார்.

எனினும், ஹர்திக் பாண்ட்யவை 2022 மெகா சீசனுக்கான ஏலத்தையொட்டி அணியில் இருந்து விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்.

இதன் பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் சுமார் 15 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா. அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் 2022 சீசனில் கோப்பையை வென்றது குஜராத். 2023 சீசனில் இறுதிப் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஹர்திக் பாண்ட்யாவின் பயணம்

ஹர்திக் பாண்ட்யா

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில்தான் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவதாக ஐபிஎல் நிர்வாகம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா எம் அம்பானி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் அவரை இணைப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான ஹர்திக் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அவரது வருகை எங்களுக்கு உற்சாகமளிக்கிறது,” எனத் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அந்த அணியின் உலகளாவிய செயல்திறன் தலைவர் மகிளா ஜெயவர்தனே, சச்சின் முதல் ஹர்பஜன் வரை, ரிக்கி பாண்டிங் முதல் ரோஹித் வரை சிறந்த தலைமைகளால் மும்பை இந்தியன்ஸ் அணி ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

"இவர்கள் உடனடி வெற்றிக்குப் பங்களிக்கும் அதே வேளையில் எதிர்காலத்திற்கான அணியை வலுப்படுத்துவதில் எப்போதும் கவனமாக இருந்தனர். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்," என்றார்.

முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டிய அவர், "ரோஹித் ஷர்மாவின் சிறந்த தலைமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2013ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரது பதவிக்காலம் அசாதாரணமானது அல்ல.

அவரது தலைமை அணிக்கு இணையற்ற வெற்றியைத் தந்தது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவரது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது," என்றார்.

மேலும், ரோஹித் அளித்த வழிகாட்டுதலின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் மிகவும் வெற்றிகரமான மற்றும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக மாறியது. மும்பை இந்தியன்ஸ் அணியை மேலும் வலுபடுத்த களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவரது அனுபவத்தையும் வழிகாட்டுதல்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அணியாக விளங்கி வந்தது இந்தியா. அதிரடி பேட்டிங், அபார கேப்டன்சி என ரோகித் ஷர்மா நாயகனாக ஜொலித்தார்.

இறுதிப்போட்டியில் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த அவர் தவறவில்லை. எனினும் ஆஸ்திரேலியா எந்தவித சிரமுமின்றி எளிதாக இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

சமீபத்தில் தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித் ஷர்மா, "உலகக்கோப்பை தோல்வியில் இருந்து எப்படி வெளியே வருவது என முதல் சில நாட்கள் எனக்குத் தெரியவில்லை. எனது குடும்பத்தினர், நண்பர்கள்தான் மிகவும் உதவினர். இது எளிதாக ஜீரணயிக்கக்கூடியது அல்ல. உண்மையில் இதைக் கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இல்லை," என்றார்.

மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியது ஏன்?

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஆக்குவதற்கு ஆதரவாகவும் சிலர் வாதாடி வருகின்றனர்.

பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் ஆய்வாளர்கள், ரோஹித் சர்மாவுக்கு 36 வயது என்றும், ஹர்திக்கிற்கு 30 வயது என்றும் கூறியுள்ளனர்.

உலகக் கோப்பையில் ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். ஆனால் ஹர்திக் பாண்டியா மிகக் குறுகிய காலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரையும் இவரது தலைமையில் வென்றது. கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ரோஹித் சர்மா ஒரு கவர்ச்சியான கேப்டன் என்பதில் சந்தேகமில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து முறை சாம்பியனாக்கியுள்ளார்.

ஆனால் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மறுபுறம், பாண்டியா தலைமையில், குஜராத் டைட்டன்ஸ் ஒரு சிறந்த அணியாக உருவெடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐந்தாவது கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார். இவருக்கு முன், ரோகித் சர்மா, ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி

பட மூலாதாரம், TANISH SINGH/X

இன்ஸ்டாகிராமில் குறையும் 'ஃபாலோவர்ஸ்'

சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கம்

பட மூலாதாரம், SURYAKUMAR YADHAV/INSTAGRAM

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராேகித் ஷர்மா மாற்றப்பட்டதன் அதிருப்தியின் வெளிப்பாடாக, அணியின் அனைத்து சமூக ஊடக பக்கங்களிலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதில் குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதற்கிடையே, சூர்யா குமார் யாதவ், தனது சமூக ஊடக பக்கங்களில், ஹார்ட் ப்ரேக்கிங் எமோஜியை பதிவிட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கான காரணத்தைப் பதிவிடவில்லை. இதற்கும் அணியின் கேப்டன் மாற்றப்பட்டதே காரணம் என சமூக ஊடகத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதேபோல, கேப்டனை மாற்றியதால் அதிருப்தியில் உள்ள ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை தீயிட்டுக் கொளுத்தி, அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)