எண்ணூர்: எண்ணெய் கழிவில் மூழ்கிய ஊரும் வீடுகளும்; கருவிலுள்ள சிசுவுக்கும் ஆபத்தா?

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு, தினக்கூலி என்ற அடிப்படையில் இந்த பகுதி மக்கள் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட போதிலும் எண்ணூர் பகுதி மக்களின் வாழ்க்கை 10 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பித்துள்ளது. கடந்த 5ம் தேதி சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து கசிந்ததாக கூறப்படும் எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து எண்ணூர் முகத்துவாரம் தொடங்கி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை பரவியுள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். ஆனால், எண்ணெய் தங்கள் நிறுவனத்தில் இருந்து கசியவில்லை என்று மறுக்கிறது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்.

இந்நிலையில் ஆற்றுப்பகுதியில் உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் இதே பகுதியை சேர்ந்த 8 மீனவ கிராம மக்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாளி மற்றும் பேப்பர் கொண்டு தினசரி நூறு படகுகள் மூலமாக இந்த மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகின்றனர். இதில் 17, 18 வயதை சேர்ந்த இந்த பகுதி கல்லூரி மாணவர்களும் அடங்குவர். இந்த எண்ணெய் கழிவுகள் மீனவ கிராமங்களை தாண்டி ஆற்றை சார்ந்து வாழாத மக்களின் குடியிருப்புகளையும் கூட கடுமையாக பாதித்துள்ளது.

இதன் தாக்கம் எந்தளவு எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இதன் உடனடி மற்றும் நீண்டகால தாக்கங்கள் என்ன என்பது குறித்தும் பிபிசி கள ஆய்வு செய்துள்ளது.

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு, எண்ணூரில் 8 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எண்ணூரில் கடும் பாதிப்பு

கடந்த 4ம் தேதி எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர், ஜோதிநகர் பகுதிகளில் உள்ள பக்கிங்காம் கால்வாய் வழியாக வெள்ள நீரோடு சேர்த்து எண்ணெய் கழிவுகள் எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் நுழைந்துள்ளது. இதில் ஆற்றோர பகுதிகளான காட்டுக்குப்பம், சிவன்படை வீதி, தாளான்குப்பம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம் ஆகிய 8 கிராமங்களின் கரை வரை எண்ணெய் பரவியுள்ளது.

இது தவிர பிருந்தாவன் நகர், ஆதிதிராவிடர் காலனி, திருவீதியம்மன் கோவில், கிரிஜா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் எண்ணெய் புகுந்துள்ளது. இதனால் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்த பகுதி மக்கள் கடுமையான விளைவுகளை சந்தித்து வருகின்றனர்.

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு, எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த 8 மீனவ கிராம மக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

எண்ணெய் அகற்றும் பணியில் மாணவர்கள்

எண்ணெய் கழிவுகள் ஆற்றில் கலந்து முதல் 5 நாட்கள் யாரும் வரவில்லையென்றும் அதன் பின்னரே அரசு மீட்பு பணிகள் உதவிக்கு வந்ததாகவும் கூறுகின்றனர் இந்த பகுதி மக்கள். எண்ணூர் முகத்துவாரம் முதல் 20 சதுர கிலோமீட்டர் வரை பரவியிருப்பதாக கூறப்படும் எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த 8 மீனவ கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையே பயன்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.

இதற்காக ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்கள் மீனவர்களை படகுகளுடன் அனுப்பியுள்ளதாகவும், எந்த நவீன இயந்திரங்களும் வரவில்லை. கையால் சிறிய வாளியைக் கொண்டு அள்ளியே எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்தி வருவதாகவும் கூறுகிறார் ஊர் தலைவர் குமாரவேல்.

இதில் இதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களும் அடக்கம். 13ம் தேதி எண்ணூர் முகத்துவார பகுதிக்கு சென்ற போது அங்கிருக்கும் சிதிலமடைந்த கப்பல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் தியாகராய கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிக்கும் 17 வயது மாணவர் அஜய். அவரோடு அவர் வயதை ஒத்த மாணவர்கள் சிலரும், படித்து முடித்த சில இளைஞர்களும், மற்ற மீனவர்களும் அந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எண்ணூர் எண்ணெய் கசிவு

வாளியில் எண்ணெயை அள்ளும் மீனவர்கள்

தினக்கூலி என்ற அடிப்படையில் இந்த பகுதி மக்கள் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். “முதலில் சிபிசிஎல் கொடுத்த பஞ்சு போன்ற காகிதத்தை எண்ணெயில் முக்கி எடுத்து 220 லிட்டர் பேரல் ட்ரம்மில் பிழிய சொன்னதாக கூறுகிறார்” மீனவர் ஆறுமுகம்.

பின்னர் இது சாத்தியமற்ற ஒன்று என்று அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகே இந்த மக்களுக்கு சிறிய வாளி வழங்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு படகிற்கும் மூன்று பணியாளர்கள் இருப்பார்கள். தினசரி ஒரு படகு ஒரு ட்ரம்மை நிரப்ப வேண்டும். இதற்காக குறைந்தது 6 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த மீனவர்கள் குனிந்து அந்த எண்ணெயை அள்ளி ட்ரம்மில் நிரப்ப வேண்டும்” என்று கூறுகிறார் அவர்.

சிறிய வாளி, ஜக் மற்றும் பேப்பர் மூலம் மீனவ மக்களையே எண்ணெய் கழிவுகளை அகற்றச் சொன்னது ஏன் என்ற கேள்வியை சுற்றுசூழல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் கேட்டிருந்தோம். ஆனால், மூன்று நாட்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு, ஆற்றை சார்ந்து வாழாத மக்களின் குடியிருப்புக்குள்ளும் எண்ணெய் புகுந்துள்ளது

குடியிருப்புகளுக்குள் புகுந்த எண்ணெய்

ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளை தாண்டி பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றை சார்ந்து வாழாத மக்களின் குடியிருப்புக்குள்ளும் எண்ணெய் புகுந்துள்ளது. இதனால், பிருந்தாவன் நகர், ஆதிதிராவிடர் காலனி, திருவீதியம்மன் கோவில், கிரிஜா நகர் பகுதிகளில் நீர் ஆதாரமாக உள்ள ஒட்டுமொத்த கிணறுகளிலும் எண்ணெய் கலந்துள்ளது.

மேலும், வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் புகுந்ததால் கழிவறை, பைப் இணைப்புகள் என அடிமட்டம் வரை பரவியுள்ளது. இது இன்னும் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாத நிலையே நிலவுகிறது. இந்த மக்களும் மீனவ மக்களை போலவே உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

மனிதர்கள் மட்டுமல்ல

இந்த எண்ணெய் கசிவினால் மனிதர்கள் மட்டுமல்ல, இந்த பகுதியை சார்ந்து வாழும் பிற உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் விஷாந்த். “சுவாசிக்க முடியாமல் மீன்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் பலவும் இறந்து விட்டது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் நீண்ட காலத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார் அவர்.

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு, நுரையீரல் மருத்துவர் திருப்பதி மற்றும் தோல் மருத்துவர் ஷர்மதா

நீண்ட நாள் உடல் உபாதைகள்

எண்ணெய் கழிவுகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்ததால் அதன் நெடியாலும் மற்றும் உடலில் அதிகம் பட்டதாலும் இப்பகுதி மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அந்த எண்ணெயை அகற்றும் பணியில் இந்த மீனவர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தோல் நோய்கள், சுவாசக்கோளாறுகள் என பல நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளனர் அவர்கள்.

இதுகுறித்து நுரையீரல் மருத்துவர் திருப்பதி கூறும்போது, "இந்த பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் எண்ணெய் கழிவுகளில் காணப்படும் ஹைட்ரோ கார்பனை சுவாசிப்பதால் அது சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகிறார். இதனால் உடனடி பிரச்சனைகளாக இருமல், காய்ச்சல், சுவாச கோளாறு உள்ளிட்டவை ஏற்படலாம் என்றும், நீண்ட நாள் பிரச்சனைகளாக ஆஸ்துமா மற்றும் அரிதாக புற்றுநோய் கூட ஏற்படலாம்" என்று தெரிவிக்கிறார்.

மேலும், "இந்த எண்ணெய்க் கழிவில் முக்கியமாக ஹைட்ரோகார்பன் என்ற பெட்ரோலிய பொருள் உள்ளது. இதனால் நீண்டகால அளவில் பார்த்தோமானால், அப்பகுதியில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அல்லது தாயின் கருவில் கடைசி மூன்று மாத கால அளவில் இருக்கும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிற்காலத்தில் ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை இந்த எண்ணெய்க் கழிவுகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது," என்றும் எச்சரித்தார்.

மேலும் அடர்த்தி மிகுந்த எண்ணெயில் நேரடியாக நமது சருமம் படும்போது அதில் உள்ள வேதியியல் கூறுகள் பூஞ்சை தொற்று, படர் தாமரை, தேமல், அலர்ஜி உள்ளிட்ட தோல் பிரச்னைகள் ஏற்படலாம் என்று கூறுகிறார் தோல் மருத்துவர் ஷர்மதா.

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு, எண்ணெய் கழிவுகளால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துவிட்டன.

பொருளாதார ரீதியாக இழப்பு

எண்ணூர் பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்களில் 1000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். தற்போது எண்ணெய் கழிவுகளால் 700க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. மேலும் டன் கணக்கில் வலைகள் நாசமாகியுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு படகையும் முறையாக நவீன முறையில் சுத்தப்படுத்தி மறுகட்டமைப்பு செய்யவே குறைந்தது 50,000 முதல் 1,00,000 ரூபாய் செலவாகும் என்று கூறுகிறார் மீனவர் வெங்கடேசன்.

“இது மீன்களின் இனப்பெருக்க காலம். எண்ணெய் கழிவுகளால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துவிட்டன. மீதமுள்ள மீன்களும் ஆழ்கடலை நோக்கி சென்றுவிட்டன. இதனால் அடுத்த 1 ஆண்டில் தொடங்கி 5 ஆண்டுகள் வரை சாதாரண மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது கடினம்” என்கிறார் குமாரவேல். அப்படியே ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடித்து வந்தாலும் இந்த பகுதியில் இருந்து வரும் மீன்களில் எண்ணெய் கழிவின் பாதிப்பு இருக்கக் கூடும் என்று யாரும் வாங்க முன்வருவதில்லையாம். இது முழுவதுமாக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே பாதித்துள்ளது.

'ஒரு விஷ பாட்டில் கொடுங்கள்'

“இப்படி நாங்கள் இயற்கையோடும் போராடுறோம், இது போன்ற செயற்கை விபத்துகளையும் எதிர்கொண்டு வாழ்கிறோம். இதற்கு பதில் அரசே ஒரு பாட்டில் விஷத்தை கொடுத்து, கொன்று விடுங்கள். அதைக் குடித்து நாங்கள் இறந்து விடுகிறோம்," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் குமாரவேல்.

இது தவிர குடியிருப்புகளுக்குள் சென்றுள்ள எண்ணெய் கழிவு “பல ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வாங்கிய பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சோஃபா என வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் நாசம் செய்து விட்டதாக” கூறுகிறார் காஞ்சனா. மேலும் இந்த பகுதியில் உள்ள மக்களின் பல பொருட்கள் ஒட்டுமொத்தமாக எண்ணெய் கழிவுகள் படிந்து மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மக்கள் 20 வருடங்கள் பின்னுக்கு இழுக்கப்பட்டுள்ளனர்.

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு, குற்றச்சாட்டை மறுத்துள்ளது சிபிசிஎல்

சிபிசிஎல் காரணமா?

இந்த எண்ணெய் கசிவு வெள்ள நீரில் கலந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என்று எண்ணூர் பகுதி மக்களும் , சூழலியல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், ஆரம்பம் முதலே இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது அந்நிறுவனம். இதுகுறித்து பிபிசி தமிழ் அந்நிறுவனத்திடம் கேட்டபோது, தங்கள் நிறுவனத்தில் எந்த விதமான கசிவும் இல்லை என்று பதிலளித்துள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன, இந்த பிரச்னையில் அவற்றையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் எண்ணெய் அப்புறப்படுத்தும் பணியில் தாங்கள் அதிக பங்களிப்பை செலுத்துவதாகவும், மக்களும் மருத்துவ முகாம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அரசுடன் சேர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்.

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு, குறிப்பிட்ட நிறுவனம்தான் இந்த கசிவிற்கு காரணம் என்று அரசு முடிவுக்கு வரவில்லை

தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

இந்த எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் காரணமா? நிவாரணம் சிபிசிஎல் வழங்குமா அல்லது அரசு வழங்குமா என்ற கேள்வியை முன்வைத்த போது, சிபிசிஎல் என்பது வேறு பிரச்னை. இதுவரை குறிப்பிட்ட நிறுவனம்தான் இந்த கசிவிற்கு காரணம் என்று அரசு முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் நிவாரண பணிகளுக்கான சிறப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ். மேலும், இந்த பகுதியில் உள்ள நிறுவனங்களிடம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவிகள் கேட்டுள்ளதாகவும், அதில் அதிக பங்களிப்பு சிபிசிஎல் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுமா?

வெள்ளம் பாதிக்கப்பட்ட இதர பகுதிகளை விட எண்ணூர் பகுதி மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் அதிகமாக வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, இந்த மக்களுக்கு தனி பேக்கேஜ் எனவும், அது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் முதற்கட்டமாக இவர்களுக்கு தேவையான உடைகள், அடுப்பு, பாத்திரங்கள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கந்தசாமி ஐஏஎஸ்.

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு, இந்த எண்ணெய் கசிவிற்கு சிபிசிஎல் தான் காரணம்

யார் பொறுப்பேற்பது?

“இந்த எண்ணெய் கசிவிற்கு சிபிசிஎல் தான் காரணம்” என்று உறுதியான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். ஆனால், அந்த சிபிசிஎல்-லை பொறுப்பேற்க வைக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறுகிறார் அவர்.

“ஆறும் கடலும் இணையக்கூடிய இயற்கையான ஆரோக்கியமான பரவல் அமைப்பு இருக்கக்கூடிய இடம்தான் இந்த எண்ணூர். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்கள் இந்த பகுதியை ஏதோ மதிப்பில்லாத பகுதி போல் அழித்து வருகின்றன. அனல் மின் நிலையங்கள், அதன் சாம்பல் குட்டைகள், துறைமுகம் அதன் கட்டுமானங்கள் மற்றும் சிவப்பு பட்டியலில் இருக்கும் 34 நிறுவனங்களின் கழிவுகள், பக்கிங்காம் கால்வாய் கழிவு என அனைத்தும் இந்த ஆற்றில் கலக்கப்பட்டுள்ளது. 1996இல் இருந்தே இந்த நீரில் சாம்பல் கலப்பது, எண்ணெய் கலப்பது நடந்து வருகிறது. ஆனால் அரசு மற்றும் நீதிமன்றங்களின் கண்களுக்கு இது போன்ற பேரிடர்கள் வரும்போது மட்டுமே இது தெரிகிறது” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

'ஆரோக்கிய அழிவை ஏற்படுத்தும் அரசு'

மேலும், “தற்போது சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் மக்களுக்கும் இது ஒரு ஆரோக்கிய அழிவுதான். அவர்களுக்கு முறையான முகக்கவசம் இல்லை. நவீன இயந்திரங்கள் பல இருந்த போதும் அவர்கள் வாளி மற்றும் பேப்பர் கொண்டுதான் இந்த எண்ணெய் கசிவுகளை அகற்றி வருகிறார்கள். இந்த எண்ணெய் கழிவில் இருந்து வரும் விஷ வாயுக்களை சுவாசிக்கும் அவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். ஸ்கிம்மர் இயந்திரம் உள்ள போதும் கூட மீனவர்கள் வாளியில் அள்ளி எண்ணெயை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். இது என்னை பொறுத்தவரை நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் குற்றமே” என்கிறார் அவர்.

நிவாரணம் என்ன?

“ஜூலை 2022ல் வெளியான நீதிமன்ற உத்தரவான, இந்த நீர்நிலையை பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். 6 மாதத்திற்குள் இதை சீர்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரிவான ஆய்வு செய்து நீண்ட கால விளைவுகளை கணக்கில் கொண்டு சுகாதார கண்காணிப்பு, பொருளாதார ரீதியான இழப்பீட்டை வழங்க வேண்டும்” என்று கூறுகிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

இந்நிலையில் அரசு தரப்பில் இருந்து எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 12,500, படகுகளுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)