தேமுதிக: தட்டுத்தடுமாறும் கட்சியை பிரேமலதா விஜயகாந்த் தூக்கி நிறுத்துவாரா?

பட மூலாதாரம், DMDK
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேமுதிக தொடங்கப்பட்டதில் இருந்து அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்த பிரேமலதா விஜயகாந்த், 2018ஆம் ஆண்டில் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில் விஜயகாந்த்தின் உடல்நலம் வெகுவாகக் குன்றிய நிலையில் முக்கிய முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வந்தார். தற்போது அதை அதிகாரபூர்வமாக்கும் வகையில், அவர் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் முழுமையான கட்டுப்பாடு பிரேமலதாவிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
தேமுதிகவிற்குள் எல்.கே.சுதீஷின் வளர்ச்சி
இது கட்சியின் செயல்பாட்டில் புதிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனக் கருதலாம். கட்சியின் தலைவரான விஜயகாந்த் உடல் நலம் குன்றியதில் இருந்து, கட்சியின் முக்கிய முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வந்தார். ஆகவே, வியாழக்கிழமை பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, கட்சிக்குள் பிரேமலதாவின் நிலை, அதிகாரப்பூர்வம் ஆகியுள்ளது.

பட மூலாதாரம், DMDK
தேமுதிகவைப் பொறுத்தவரை, கட்சி தொடங்கப்பட்டபோது விஜயகாந்த்தின் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த ராமு வசந்தனே கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார்.
விஜயகாந்த்தின் நீண்டகால நண்பராக இருந்தவரும் முதன்முதலில் விஜயகாந்த் பெயரில் நற்பணி மன்றம் அமைத்தவருமான மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டுத் தேர்தலில் கட்சிக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்த நிலையில், வேறு கட்சிகளில் இருந்து மருங்காபுரி பொன்னுச்சாமி, ஆஸ்டின், கு.ப. கிருஷ்ணன் போன்ற தலைவர்களும் தொண்டர்களும் இணைய ஆரம்பித்தனர். கட்சி வேகமாக வளரத் தொடங்கியது. இந்தத் தருணத்தில், அதாவது 2009 வாக்கில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ராமு வசந்தன் காலமானார்.
இதற்குப் பிறகு, விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷின் செல்வாக்கு வளர ஆரம்பித்தது. 2013 வாக்கில் கட்சியில் இருந்து பலர் வெளியேற ஆரம்பித்தனர். விஜயகாந்த்தின் நண்பராக இருந்த சுந்தர்ராஜன் உட்படப் பலர் தேமுதிகவின் அதிருப்தி எம்எல்ஏக்களாக மாறி, அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.
தொடர்தோல்விகளில் இருந்து தேமுதிகவை பிரேமலதா மீட்பாரா?

பட மூலாதாரம், DMDK
இதற்குப் பிறகு விஜயகாந்த் எடுத்த முடிவுகள் அனைத்தும் மோசமானதாக இருந்ததோடு, அவரது உடல்நலமும் மோசமடைய ஆரம்பித்தது. கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் பிரசாரத்திலும் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய இடத்தை வகித்தார். குறிப்பாக, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, கட்சியின் முக்கியக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது, கட்சியின் சார்பில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவது என கிட்டத்தட்ட கட்சியின் செயல் தலைவரைப் போலவே செயல்பட்டு வந்தார் பிரேமலதா விஜயகாந்த்.
விஜயகாந்த் மிகவும் உடல்நலம் குன்றியிருப்பதோடு, 2019லும் 2021லும் கட்சி படுதோல்வியைச் சந்தித்திருக்கும் இந்த சிக்கலான தருணத்தில் பிரேமலதா, கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார்.
"இது அந்தக் கட்சிக்கு ஒரு கடினமான காலகட்டம். பிரேமலதா நியமனத்தின் மூலம் அந்தக் கட்சிக்கு புதிய பொதுச் செயலாளர் கிடைத்திருக்கலாம். ஆனால், அந்தக் கட்சி இனி பழைய எழுச்சியை அடையுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

பட மூலாதாரம், DMDK
தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் அந்தக் கட்சியை, பிரேமலதா தூக்கி நிறுத்துவார் என்று நான் நினைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இது சில சலுகைகளை அக்கட்சிக்குப் பெற்றுத் தரலாம். வேறு எதுவும் நடக்காது," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.
தேமுதிகவிற்குள் தற்போது நடந்துகொண்டிருப்பது எல்லாமே சடங்குகள்தான்; அந்தக் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என்கிறார் அரசியல் நோக்கரான ஆழி. செந்தில்நாதன்.
"எல்லா கட்சிகளுமே ஒரு சமூக காரணங்களுக்காக, அரசியல் காரணங்களுக்காக உருவான கட்சிகள்தான். ஆனால், எந்தவிதமான காரணமும் இல்லாமல், விஜயகாந்த்தின் சினிமா செல்வாக்கை வைத்து மட்டுமே உருவான கட்சி இது.
அப்படி உருவான கட்சிகள் எதுவும் நிலைத்ததில்லை. விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்தபோது அவர் ஒரு வலுவான தலைவராக இருப்பார் என வாக்குகள் கிடைத்தன. ஆனால், ஒரு கட்டத்தில் கட்சி விஜயகாந்த்தின் குடும்பச் சொத்தாகிவிட்டது.
தற்போது விஜயகாந்த்திற்கு உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில், தற்போது நடப்பதெல்லாம் சடங்குகள்தான். அதற்கு மேல் இதற்கு எந்த அர்த்தமும் இல்லை," என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
முதலும் கடைசியுமான தேமுதிக

பட மூலாதாரம், DMDK
தமிழ்நாட்டின் சமீபகால வரலாற்றில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு கட்சி, ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த நிகழ்வு இறுதியாக நடந்தது தேமுதிக துவங்கப்பட்டபோதுதான்.
கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பரில் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் மதுரையில் தேமுதிக துவங்கப்பட்டது. இந்த மாநாட்டிற்காக மாநிலம் முழுவதும் இருந்து லாரிகளிலும் பேருந்துகளிலும் விஜயகாந்தின் ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் மதுரையில் குவிந்தனர்.
அந்த மாநாட்டில் தேசியம் - திராவிடம் - முற்போக்கு ஆகிய வார்த்தைகளை இணைத்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என கட்சிப் பெயரை விஜயகாந்த் அறிவித்தபோது, அது சற்றுக் குழப்பமானதாக இருந்தாலும்கூட கட்சித் தொண்டர்களாக உருவெடுத்திருந்த ரசிகர்களின் உற்சாகத்தை அது குலைக்கவில்லை.
மேலும், 2006ஆம் ஆண்டுத் தேர்தலில் 234 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவரான விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். ஆனாலும் கட்சி ஆரம்பித்தவுடனேயே நடந்த தேர்தலில் சுமார் 8.4 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது, எல்லாத் தரப்பினருக்குமே ஆச்சரியத்தை அளித்தது.
இதற்கு அடுத்து வந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பல முக்கியக் கட்சிகள், தேமுதிக மீது ஆர்வம் காட்டினாலும் தனித்துப் போட்டியிட முடிவுசெய்த விஜயகாந்த், நாற்பது தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.3 சதவீத வாக்குகள்.
தேமுதிகவின் விழ்ச்சி தொடங்கிய இடம் எது?

பட மூலாதாரம், DMDK
தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டுக் கொண்டிருந்த விஜயகாந்த், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்தார். தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேமுதிக 29 இடங்களையும் 7.9 சதவீத வாக்குகளையும் கைப்பற்றியது. தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்தது.
ஆனால், அந்தப் புள்ளியில் இருந்துதான் தேமுதிகவின் வீழ்ச்சி ஆரம்பித்தது. விரைவிலேயே அதிமுக கூட்டணி உடைந்துவிட, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக., பாமக., மதிமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது அக்கட்சி. அந்தக் கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. பதிவான வாக்குகளில் 5.1 சதவீத வாக்குகள் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தன.
இதற்குப் பிறகும் சரிவு தொடர்ந்தது. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி என்ற பெயரில் மதிமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லை. அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 2.41 சதவீதமாகக் குறைந்திருந்தது.
உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்ட கட்சித் தலைவர் விஜயகாந்த், சுமார் 34 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதற்குப் பிறகு, 2019, 2021ஆம் ஆண்டுத் தேர்தல்களில் கட்சியின் செல்வாக்கும் வாக்கு சதவீதமும் மேலும் வீழ்ச்சியடைந்தன. 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில்தான், பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஆகியிருக்கிறார்.
'இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்காத தேமுதிக'

பட மூலாதாரம், DMDK
"விஜயகாந்த் இருக்கும்போதே, கட்சியை கட்சியாக நடத்த எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. இப்போது கட்சிக்கு ஒரு முகம் வேண்டும், பேரம்பேச தலைவர் வேண்டும் என்ற அடிப்படையில் பிரேமலதா வந்திருக்கிறார். ஆனால், அக்கட்சிக்கு இனி எந்த எதிர்காலமும் கிடையாது," என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
குபேந்திரனும் இதேபோன்ற கருத்தை முன்வைக்கிறார். "தேமுதிகவைப் பொறுத்தவரை ஒருபோதும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களை உருவாக்கியதில்லை. அப்படி ஒரு கட்சி வெற்றிகரமாகச் செயல்படவோ, அடுத்த கட்டத்திற்குச் செல்லவோ முடியாது.
அந்த நிலைதான் தற்போது தேமுதிகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. 2017, 2018இல் ஜெயலலிதாவும் மு. கருணாநிதியும் மறைந்த காலகட்டத்திலேயே அந்த வெற்றிடத்தை விஜயகாந்த் மற்றும் தேமுதிகவால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இனிமேல் அக்கட்சி என்ன செய்யப்போகிறது?" என்கிறார் குபேந்திரன்.
தற்போது நடந்து முடிந்திருக்கும் தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் வரவிருக்கும் "நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் உத்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்துக்கு அதிகாரம் அளித்து" ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், பெரிய கட்சிகள் எதுவும் தேமுதிக கூட்டணியில் ஆர்வம் காட்டாத நிலையில், புதிய பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன் நிற்கும் பணி மிகக் கடினமானது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












