வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆய்வுகள் கூறும் புதிய தகவல்

வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லாரா ப்லிட்
    • பதவி, பிபிசி உலகம்

ஒருவருக்கு வயதானாலே முகங்களில் சுருக்கம் ஏற்படுவதும் வெள்ளை முடி எட்டிப் பார்ப்பதும் சாதாரண வீட்டு வேலைகளில் ஈடுபட்டால் கூட முதுகு வலி மூட்டு வலி வருவதும் இயல்புதான்.

ஆனால், இப்போது நாம் அதைப்பற்றிப் பேசப்போவதில்லை. நாம் பேசப்போவது முதுமைக்குள் ஒளிந்திருக்கும் நன்மைகள் பற்றி.

வயதாக ஆக உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால், ஆம், ஆரோக்கியம் மேம்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நமது சமூகத்தில் இளமையைதான் அனைவரும் விரும்புகிறார்கள். 35 அல்லது 40 வயதை ஒருவர் கடந்துவிட்டாலே அது ஏதோ பெரிய குற்றத்தைப் போல பார்க்கப்படுகிறது.

"முதுமை என்றாலே உடல் சீரழிவை நோக்கிதான் செல்லும் எனும் கருத்துதான் நம்மிடையே அதிகமாக உள்ளது. இந்த கருத்தின் அடிப்படையில்தான் ஏஜிசம் (Ageism) எனப்படும் ஒருவரின் வயதின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் செயல் கடைபிடிக்கப்படுகிறது,” என இங்கிலாந்தைச் சேர்ந்த ஏஜிங் பெட்டர் எனும் அரசு சாரா அமைப்பின் துணை இயக்குநர் ஜெம்மா மௌலாண்ட் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், “வயதாவது என்பது செறிவை நோக்கிய ஒரு பயணமாகவும் பல புதிய வாய்ப்புகளுக்கான நேரமாகவும் பார்க்கப்பட வேண்டும். வயதான காலத்தில் ஒருவர் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். சமூக சேவையில் கூட ஈடுபடலாம்,” என்கிறார்.

இது அனைவருக்கும் பொருந்தாதுதான். ஏனென்றால் ஒருவர் முதுமையில் என்னென்ன விஷயங்களில் ஈடுபடலாம் என்று பார்க்கும்போது அதற்கு நிறைய காரணிகளை நாம் கணக்கில் கொள்ள வேண்டிய சூழலும் உள்ளது. அவர்களது பொருளாதார நிலைமை, அவர்களின் உடலில் இருக்கும் நோய்கள் போல பல காரணிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

முதுமை

பட மூலாதாரம், Getty Images

வயதானால் தன்னம்பிக்கை அதிகரிக்குமா?

வயதானவர்களிடம் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். வயதானவர்கள் தாங்கள் உடுத்தும் உடை குறித்தும் தங்களது உடல் வடிவம் குறித்தும் பெரிதும் கவலைப்பட மாட்டார்கள். இதற்கு காரணம் வயதானால் ஒருவருக்கு தன்னம்பிக்கை அதிகமாகும் என்பதே.

இது மட்டுமல்ல. இது போன்று வயதாவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. உதாரணமாக மாரத்தான் ஓடுவதற்கு எல்லாரும் இளம் வயதுதான் சரியானது என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், 2020-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் மாரத்தான் ஓடுவதற்கு ஆண்களுக்கு 45 முதல் 49 வயதும் பெண்களுக்கு 40 முதல் 44 வயதும்தான் சிறப்பான காலம் என தெரிய வந்துள்ளது.

இது போல வயோதிகம் பற்றி வெளியே தெரியாத பல நன்மைகள் உள்ளன.

வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

முதுமையில் நமது மூளை சிறப்பாக செயல்படுமா?

இதுவரை, மனித மூளையின் செயல்பாடுகள் 20 வயதில் உச்சத்தை அடைந்து, நடுத்தர வயதை அடைந்ததும் நிலைபெற்று, பின்னர் வயதாகும்போது படிப்படியாக குறையத் தொடங்கும் என்று கருதப்பட்டது.

இது முழுதும் உண்மை கிடையாது. நியாபக சக்தி மற்றும் தற்காலிகமாக மூளையில் தகவல்களை சேமித்துக்கொள்ளும் திறன் ஆகியவை வயதாகும்போது குறையலாம். ஆனால், மேம்படக்கூடிய சில செயல்பாடுகளும் உள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வயது குறித்து வெளியிட்ட ஆய்வில், வயதாகும்போது இரண்டு தகவல்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை புரிந்துகொள்ளும் மூளையின் திறன் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரு நிகழ்வு நடக்கும்பொழுது அது குறித்த பரந்து பட்ட பார்வையை பெறுவது மற்றும் ஒரு நிகழ்வு எவ்வாறெல்லாம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் போன்றவற்றை அறியும் மூளையின் திறன் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுளது. இதுதான் வயதானவர்களிடையே அனுபவம் மூலமாக வெளிப்படும் ஞானத்தின் அடிப்படை.

வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறையின் பேராசிரியர் மைக்கல் டி உல்மன் மற்றும் போர்ச்சுகலின் லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ஜோவா வெரிசுமோ ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின்படி வயதானவுடன் இரண்டு முக்கிய மூளை செயல்பாடுகள் மேம்படும்.

அவர்கள் கூறுகையில், “ஒன்று, ஓரியண்டிங் (Orienting) எனப்படும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன். மற்றொன்று எக்ஸிகியூட்டிவ் இன்ஹிபிஷன் (Executive Inhibition) எனப்படும் கவனத்தை சிதறடிக்கும் அல்லது முரண்படும் எண்ணங்களை தடுக்கும் திறன். உதாரணமாக ஒருத்தர் நம்மிடம் பேசும்பொழுது அருகே கேட்கும் வேறு சத்தங்களில் கவனம் சிதறாமல் வைத்துக்கொள்வது.

"இந்த இரண்டு திறன்களும் வயதாகும்போது மோசமாகும் என இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில் மாறாக அவை மேம்படுகின்றன என தற்போது தெரியவந்துள்ளது,” என தெரிவித்தனர்.

மேலும், ஒரு வார்த்தைக்கு இருக்கக்கூடிய வேறு பெயர்களை (Vocabulary) நினைவு படுத்தும் ஆற்றல் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மேம்படும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக இரண்டு பேராசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.

61 வயதான உல்மன், தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் கூறுகையில், "நான் செய்யும் கடினமான விஷயங்களான அறிவியல் கட்டுரைகள் எழுதுவது மற்றும் ஆராய்ச்சி செய்வது போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படுகிறேன். இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் நான் இன்னும் சிறப்பாக செயல்படுவேன்," எனத் தெரிவித்தார்.

வயதானால் நோய் எதிர்ப்பு சக்தி உயருமா?

வயதுக்கு ஏற்ப நமது உடலில் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு மண்டலங்கள் பலவீனமடையும்.

காரணம், நாம் குறைவான வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறோம், அவை குறைவாக செயல்படுகின்றன. நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மற்றொரு பகுதி உள்ளது. இது பல ஆண்டுகளாக பல்வேறு நோய்க்கிருமிகளை எதிர்கொண்டதால் அவை குறித்து நோய் எதிர்ப்பு நினைவாற்றல் மண்டலம் நியாபகம் வைத்திருக்கும். இதனால், நோய் எதிர்ப்பு வயதானவர்கள் இடையே வலுவாக இருக்கும்.

நமது மூளையின் நினைவாற்றலைப் போலவே இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் நினைவாற்றல் உள்ளது. அந்த நோய் எதிர்ப்பு நினைவாற்றல் வயதானவர்கள் இடையே வலுவாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

"முதன்முறையாக நம் உடல் ஒரு குறிப்பிட்ட வகை தொற்றுநோயை சந்திக்கும் போது, ​​அது மிகவும் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது முறையாக நீங்கள் அதைச் சந்திக்கும் போது, ​​நாம் இனி நோய்வாய்ப்பட மாட்டோம் என்ற அளவிற்கு, நோய்க்கிருமிகளை உடல் திறமையாக கையாளும்,” என ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவத்தின் பேராசிரியர் ஜான் உப்ஹாம் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இந்த நினைவாற்றல் இளம் வயதில் சிறப்பாக இருக்காது. மேலும் இது உங்கள் 60களின் பிற்பகுதியில் இருந்து 70களின் முற்பகுதி வரை சிறப்பாகச் செயல்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

மற்றொரு கூடுதல் நன்மை ஒவ்வாமையின் (Allergy) தீவிரத்தை குறைப்பதாகும்.

"60 அல்லது 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் குழந்தைகள் அல்லது பெரியவர்களை விட ஒப்பீட்டளவில் குறைவான ஒவ்வாமைகள் எனப்படக்கூடிய அலெர்ஜிகளை கொண்டுள்ளனர்," என்று உப்ஹாம் கூறுகிறார். வயதானவர்களுக்கு புதிய அலெர்ஜிகள் ஏற்படுவதில்லை. இது வயதானவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிக வலுவாக செயல்படாததன் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

வயது அதிகமானால் மகிழ்ச்சியும் அதிகரிக்குமா?

நாம் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது நமது சமூகப் பொருளாதார நிலைமை, ஆரோக்கியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் ஒரு மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சி என்பது U வடிவத்திலானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, மக்கள் இளமைப் பருவத்தில் ஒப்பீட்டளவில் மகிழ்ச்சியாக நுழைகிறார்கள். ஆனால் 30 வயதிற்கு மேல் மகிழ்ச்சி குறைகிறது. வழக்கமான உதாரணம், 40 முதல் 60 வயது வரை ஏற்படும் நடுவயது நெருக்கடி (Midlife crisis). பின்னர் மீண்டும் 70 வயதை தொடும்பொழுது மகிழ்ச்சியான எண்ணங்கள் அதிகமாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான லாரா கார்ல்ஸ்டன் கூறுகையில், “வயதானவர்கள் தங்கள் மரணத்தை நெருங்கிவிட்டதை அறிந்திருப்பதால், அவர்கள் நிகழ்காலத்தில் சிறப்பாக வாழக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் இன்று என்ன முக்கியமோ அதில் கவனம் செலுத்தி நீண்ட கால இலக்குகளில் குறைந்த கவனம் செலுத்துகிறார்கள்,” எனத் தெரிவித்தார்.

வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

வயதானால் உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பலர் நினைப்பதற்கு மாறாக, வயதானவர்கள் அதிக அளவு பாலியல் திருப்தியைக் கொண்டிருப்பதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் செயல்பாடு மற்றும் வயதான பெண்களின் பாலியல் திருப்தி குறித்த ஆய்வில், 80 வயதிற்குட்பட்ட பெண்களில் பாதி பேர் எப்போதும் அல்லது பெரும்பாலான நேரங்களில் உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடைகிறார்கள்.

இது எப்படி சாத்தியம்?

“வயதாக ஆக, நாம் விரும்புவதை மீண்டும் மீண்டும் முயன்று மகிழ்வடைவதற்கான உணர்வு முதிர்ச்சியைப் பெறுகிறோம். அந்த இடத்திலிருந்துதான் நமது பாலியல் அனுபவம் விரிவடைகிறது,” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர், கேடலினா லாசின் தெரிவித்தார்.

வயதானவர்களிடையே வெளிப்படும் தன்னம்பிக்கையும் தங்களது உடலை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும் உடலுறவின் போது அவர்களுக்கு அதிக மகிச்சியை கொடுக்கிறது.

மேலும், வயதான காலத்தில், உடலுறவுக்கு இடமளிப்பதற்கு, வயதானவர்களின் அன்றாட வாழ்வில் அதிக ஓய்வு நேரமும், குறைவான மன அழுத்தமும் இருக்கும் என்ற எளிய உண்மையும் இதற்கு காரணம் என்கிறார் வயதானவர்களிடம் ஏற்படக்கூடிய பாலியல் பிரச்னைகளுக்கு ஆலோசனை அளிக்கும் சமூக சேவையாளர் நடாலி வில்டன்.

"முழுநேர வேலை, குழந்தைகள் மற்றும் பிறரைக் கவனித்துக்கொள்வது என நடுத்தர வயதினருக்கு நெருக்கடியான வாழ்க்கை உள்ளது. இவை அனைத்தும் வயதானவர்களின் வாழ்க்கையில் குறைவாகவே உள்ளது. எனவே வயதுக்கு ஏற்ப உடலுறவு மேம்படுகிறது,” என்கிறார் வில்டன்.

வயதாவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலுறவில் திருப்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

பாலியல் குறைபாடுகளைச் சரி செய்ய முடியுமா?

இவை தவிர்த்து, உடல் உழைப்பு தொடர்பான சிக்கல்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களில் பிறப்புறுப்புச் சிதைவு அல்லது ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை அடைவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளும் முதுமையில் ஏற்படும் என்பது உண்மைதான் என்றாலும் இவை சரி செய்துகொள்ளக் கூடியவைதான் என்று வில்டன் மற்றும் லாசின் ஒப்புக்கொள்கிறார்கள்.

எனவே, உங்கள் தலையில் ஏற்கனவே வெள்ளை முடிகள் தோன்றி, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பிறந்த நாள் ஏற்கனவே உங்கள் நினைவிலிருந்து அழிக்கப்பட்டிருந்தால், விரக்தியடைய வேண்டாம். இதர மேம்பட்ட திறன்கள் மற்றும் பல புதிய நல்ல அனுபவங்கள் முதுமைக்குள் மறைந்துள்ளன. அவற்றை அனுபவித்து வாழுங்கள். ஏனென்றால், வாழ்க்கை வாழ்வதற்கே.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)