விஷப் பல் பிடுங்கப்படாத பாம்பை கழுத்தில் போட்ட ரஜினி - அண்ணாமலை படப்பிடிப்பில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Valli Velan movies
- எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ரஜினிகாந்த் இன்று தனது 74- ஆம் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
தனது 74-ஆம் வயதிலும், தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக தன்னை தக்க வைத்துக் கொண்டு, சினிமா வியாபாரத்தில், இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் தனித்து, இன்றும் ஒரு 'பிராண்டாக' சாதனைகள் பல புரியும் ரஜினிகாந்தின் வெற்றிக்கான பார்முலா இது தான் என்று எதையும் தனியாக கூற முடியாது.
அவரது ஸ்டைல், ஜனரஞ்சகமான நடிப்பு, ஹேர் ஸ்டைல், துள்ளலான நடனம், நகைச்சுவை உணர்வு, இயல்பான சாமானியனின் உடல்மொழி, இப்படி பல காரணங்கள் இணைந்து, திரையில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி, இதுவரை 169 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கருப்பு, வெள்ளை சினிமாவிலிருந்து, டிஜிட்டல் சினிமா தலைமுறை வரையிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். திரையில் தோன்றும் காட்சி ரசிகனை எவ்வளவு தூரம் தன்னை மறந்து ஒன்றிட செய்கிறதோ, அந்த காட்சி சிறந்த காட்சி. அந்த வகையில் ரஜினியின் திரைப்படங்களில் தோன்றும் பாம்பு வரும் காட்சி இதுவரை ரசிகர்களை திரையரங்குகளில் ஆர்ப்பரிக்க செய்துள்ளது.
அப்படி "பைரவி" திரைப்படத்தின் போஸ்டர் தொடங்கி, சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த "2.0" திரைப்படம் முதல் ரஜினியும், அவரது பாம்பு சென்டிமெண்டும் திரையரங்குகளில் வொர்க் அவுட் ஆனது. பாம்பு என்றால் பயம் தானே. சில காட்சிகளில் ரஜினிகாந்தின் பய உணர்வும், அவரது காமெடியான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
'தம்பிக்கு எந்த ஊரு' முதல் 'ரோபோ 2' வரை...

பட மூலாதாரம், Getty Images
"தம்பிக்கு எந்த ஊரு" திரைப்படத்தில் ரஜினிகாந்த் பாம்பு தன் மீது ஊர்வதை கவனிக்காமல் புத்தகம் படிப்பதிலேயே கவனமாக இருப்பார்.
ஒரு கட்டத்தில், பாம்பு அவர் மீது ஊர்ந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து அலறி, பாம்பு என்று கூற முடியாமல் தத்தளிக்கும் காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
அதேபோல், "அண்ணாமலை" திரைப்படத்தில் ரஜினிகாந்த் பால் ஊற்றுவதற்காக குஷ்பூவின் விடுதிக்கு செல்வார். அங்கு, குஷ்பூவின் குளியலறைக்குள் பாம்பு சென்று விடும். பாம்பிடமிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு குஷ்பூ ரஜினியை கூப்பிடுவார். இந்தக் காட்சியில், பாம்பினை பார்த்து ரஜினிகாந்த் அலறும் காட்சிகள் காமெடியை வர வரவழைத்தன.
கதாநாயன் என்றால் இலக்கியம் தொட்டு, சினிமா வரை வீரம் என வரையறை செய்யப்பட்டதாலோ என்னவோ, படையப்பா திரைப்படத்தில் ஹீரோ அறிமுகக் காட்சியில் ரஜினிகாந்த் பாம்பினை அதன் புற்றுக்குள் கை விட்டு எடுத்து அதற்கு முத்தம் கொடுத்து விட்டு திருப்பி, பாம்பு புற்றுக்குள்ளேயே விட்டு விடுவார். இக்காட்சி ரசிகர்களை பரவசப்படுத்தியது.
இதில் விதிவிலக்காக சந்திரமுகி திரைப்படத்திலும், ரோபோ 2 திரைப்படத்திலும் ரஜினியுடன் பாம்பு தோன்றாவிட்டாலும், பாம்பினை திரைப்படத்தின் ஒரு அங்கமாக வைத்திருப்பார்கள்.
சந்திரமுகி திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் சந்திரமுகியின் அறையில் 30 அடி பாம்பு ஒன்று இருப்பதாக பேசிக்கொள்வார்கள். அவர்கள் யாரும் அதனை பார்ப்பது போலவோ, பயப்படுவது போலவோ காட்சிகள் அமைக்கப்பட்டிருக்காது. ஆனால், பாம்பு திரைப்படம் முழுவதும் காட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
அதேபோல், 2.0 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் பல வடிவங்களில் வரும்போது அதில் பாம்பு வடிவத்தில் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
பின்னாட்களில் ரஜினியின் பாம்பு சென்டிமென்ட் வெற்றியை உறுதிப்படுத்தியதால், அதனை இயக்குநர்களும் ஒரு சென்டிமெண்டாக எடுத்துக் கொண்டு அதே போல சீன் பிடித்தார்கள்.
அவ்வாறு பாம்பு தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது படப்பிடிப்பு தளத்தில் பல சுவாரசியமான சம்பவங்களும், அதனையொட்டி தொழில்நுட்ப கலைஞர்களின் நினைவலைகளை பல தருணங்களில் ரஜினி படத்தின் இயக்குநர்கள் பகிர்ந்துள்ளனர்.
விஷப் பல் பிடுங்கப்படாத பாம்பை கழுத்தில் போட்ட ரஜினி

பட மூலாதாரம், Getty Images
அண்ணாமலை திரைப்படம் பற்றியும், அதில் பாம்பு தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டது தொடர்பாக கூறியுள்ள இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, "அண்ணாமலை திரைப்படத்தில் குஷ்பூ குளித்துக் கொண்டிருப்பார். அப்போது குளியலறைக்குள் பாம்பு சென்றுவிடும். பால்காரர் ரஜினி அவர்கள் குஷ்பூ அலறும் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்து விடுவார்.
இந்த இடத்தில் ரஜினி வசனம் பேசுவதாக வசனகர்த்தா எழுதியிருந்தார். அது எனக்கு இயல்பாக இல்லாதது போன்று தோன்றியது. எனவே, நான் படப்பிடிப்பு தளத்தில் எதார்த்தமாக ஒன்று வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி விட்டுவிட்டேன்.
நான் எதிர்பார்த்தது போலவே, ரஜினிகாந்த் அவர்கள் தனது துள்ளலான நடிப்பில் மொத்த யூனிட்டையும் வியப்பில் ஆழ்த்தினார். பாம்பு அவர் மீது ஏறும்போது ஒரு மாதிரி சிரித்துக் கொண்டே, பயப்பட ஆரம்பித்தார்.
அது ஒரு மாதிரி வித்தியாசமாக, நன்றாக இருந்தது. அது மட்டுமல்லாமல், பாம்பு அவரின் மேலே ஏறி படமெடுத்தது. எப்படி சிவனின் கழுத்தில் பாம்பு படமெடுக்குமோ அதே போன்று. ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் அவர்கள் பய உணர்வில் என் பெயரை உச்சரிக்க ஆரம்பித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து டேக் ஓகே ஆனது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சலசலப்பு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. நான் பின்னால் திரும்பிப் பார்த்ததுபோது, மேனேஜரும், பாம்பாட்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
நான் மேனேஜரிடம் சென்று காட்சி முடிந்து விட்டது. அவருக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பி விடுங்கள். என்ன சத்தம்? என்று கேட்டேன். அதற்கு மேனஜர், "பாம்பாட்டி, பாம்பின் வாயை தைத்து கொண்டு வந்திருக்க வேண்டும். அவர் மறந்து வாய் தைக்காத பாம்பினை கொண்டு வந்ததாக கூறினார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நல்ல வேளையாக ரஜினி அவர்களின் கழுத்தில் பாம்பு இருந்த போது விபரீதமாக எதுவும் நடக்கவில்லை," என 'My Days with Baasha' என்ற புத்தகத்தில் தனது அனுபவங்களை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியிருந்தார்.
சந்திரமுகியும், பாம்பு சீனும்

பட மூலாதாரம், Getty Images
ரஜினியின் ஒவ்வொரு திரைப்படத்திலும், கதையின் ஒரு பகுதியாக அல்லது ஓர் அம்சமாக பாம்பு தோன்றினாலும், சந்திரமுகி திரைப்படத்தில் 30 அடியில் ஒரு பாம்பு வெறுமனே, எந்த ஒரு காட்சி வடிவமைப்பும் இல்லாமல் அவ்வப்போது தனியாக தோன்றி மறையும்.
இது குறித்து இன்று வரையும் நெட்டிசன்கள் இணையத்தில் பகடி செய்து வருகிறார்கள்.
இது குறித்து சந்திரமுகி 2 பட வெளியீட்டின் போது இயக்குனர் பி. வாசு பதிலளித்திருந்தார்.
"பொக்கிஷங்கள் இருக்கும் இடத்திலெல்லாம் பாம்பு இருக்கும். அதனால் சந்திரமுகியின் பொக்கிஷம் இருக்கும் அறையில் பாம்பு இருந்தது. பத்மநாபன் கோவில் பற்றி அறிந்திருப்பீர்கள். அங்கு நான்கு, ஐந்து அறைகள் இருக்கும். பல வருடங்களுக்கு பிறகு கதவு திறக்கப்பட்டபோது அங்கு நிறைய பாம்புகள் இருந்தன.
மூடப்பட்ட அறைக்குள் எப்படி பாம்பு வந்தது என டிஸ்கஷனுக்கு வரும் பல எழுத்தாளர்களிடமும் நான் கேட்பேன். சீனியர் எழுத்தாளர்களிடமும் கேட்பேன். கலைஞர் ஐயாவிடம் கேட்டேன். அவரும் பொக்கிஷம் இருக்கும் இடத்தில் பாம்புகள் இருக்கும் என்றார். அதனால் தான் அந்த படத்தில் பாம்பு வரும் காட்சிகள் வைக்கப்பட்டது", என்று இயக்குநர் பி. வாசு கூறினார்.
மேலும் ரஜினியின் முந்தைய படங்களில் பாம்பு சீன் நன்றாக வொர்க் ஆகியிருந்ததால், அது ஒரு கேரக்டராக இருந்தது. ஆனால் சீன் படி அதை ரஜினியோ, ஜோதிகாவோ தொந்தரவு செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை என பி. வாசு கூறினார்.
சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு 2.0 படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் பக்சிராஜன் மொபைல் போன் மூலம் பல வடிவடங்கள் எடுப்பார்.
அதில் பாம்பு வேடத்தில் வந்து ரஜினியிடம் சண்டையிடுவார். அதற்கு பிறகு ரஜினியின் சமீபத்திய திரைப்படங்களில் பாம்பு காட்சிகள் ஏதும் இடம்பெறுவதில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












