சென்னை அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் கொடுத்தது ஏன்?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் வெள்ளத்தால், ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காமல் வீட்டிலேயே பிரசவிக்கப்பட்டு இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கியிருக்கிறது ஒரு அரசு மருத்துவமனை நிர்வாகம்.
இதனையடுத்து, கடையில் வெள்ளைத் துணியை வாங்கி, குழந்தையின் உடலின் மீது சுற்றி அடக்கம் செய்ய உதவியிருக்கிறார்கள் தன்னார்வலர்கள்.
இந்தச் சம்பவம், மருத்துவக் கட்டமைப்பில் பின் தங்கி இருப்பதகக் கருதப்படும் வட மாநிலங்களில் நிகழவில்லை.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு நிகழ்ந்து இருக்கிறது.

வீட்டில் நடந்த பிரசவம், இறந்து பிறந்த குழந்தை
சென்னையில் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. அப்போது பெய்த கனமழையால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியது.
வெள்ளம் வீடுகளைச் சூழ்ந்ததால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே சிக்கிக்கொண்டு பால், குடிநீர், உணவு தொலைத் தொடர்பு சேவை இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதில் சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த மசூத் பாட்ஷா, தினக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். கர்ப்பமாக இருந்த இவரது மனைவி செளவுமியாவுக்கு கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இவர்கள் வசித்து வந்த வீட்டினுள் மழைநீர் சூழ்ந்ததால் செளவுமியா வீட்டின் மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். வீட்டைச் சுற்றி மழை நீர் கழுத்தளவு இருந்ததால் வீட்டின் அருகே இருந்த பெண்களை உதவிக்கு அழைத்தனர். பெண்கள் வந்து பார்த்த போது செளவுமியாவிற்கு பிரசவ வலி அதிகரித்து, குழந்தை இறந்து பிறந்தது.

கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலகை, மீன்பாடி வண்டி ஆகியவற்றை ஏற்பாடுச் செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் உதவியுடன் தொப்புள் கொடி அகற்றப்பட்டது. பின் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த குழந்தையின் உடலை 5 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு பெட்டியில் வைத்து பெற்ற அவரது தந்தை மசூத் தன்னார்வலர்கள் உதவியுடன் வியாசர்பாடி மயானத்தில் அடக்கம் செய்து இருக்கிறார்.

‘ஆம்புலன்ஸ் கிடைக்காததால் குழந்தையை இழந்துவிட்டேன்’
பிபிசியிடம் பேசிய மசூத், தனது மனைவி செளவுமியாவிற்கு கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி காலை 11 மணியளவில் பிரசவ வலி வந்தது என்றார்.
“ஆம்புலன்ஸ் வரவழைத்து மனைவியை மருத்துவமனை அழைத்துச் செல்லலாம் என 108க்கு தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். மழை வெள்ளத்தால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால் சிக்னல் கிடைக்காமல் போனது. வெளியே சென்று வாகனம் தேடிச் சென்றேன் கிடைக்கவில்லை. தண்ணீர் கழுத்தளவிற்கு இருந்ததால் இதனால் வீட்டின் அருகே வசிக்கும் பெண்களை உதவிக்கு அழைத்தேன்,” என்றார்.
அவர்கள் உதவிக்கு வந்தனர் என்றும், குழந்தை இறந்தே பிறந்தது என்றும் அவர் கூறினார். “தொப்புள் கொடி அகற்றப்படாமல் இருந்தால் தாய்க்கும் ஆபத்து என பெண்கள் கூறினர்,” என்றார்.
“இதனால், எனது பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் ஒரு பலகையை மீன்பாடி வண்டி மீது வைத்து அருகில் இருந்த ஜி-3 அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு வெள்ளநீர் புகுந்ததால் அரசு மருத்துவமனையே பூட்டப்பட்டு இருந்தது," என கூறினார்.
போலீசார் உதவியால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
தொடர்ந்து பேசிய அவர் அதைத்தொடர்ந்து தனது மனைவியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், ஆனால் அவர்கள் பிரச்னை வந்துவிடும் என எண்ணி சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என்றும் கூறினார்.
“புளியந்தோப்பு காவல்துறை பெண் அதிகாரி உதவியதால் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் உள்நோயாளியாக அனுமதித்து தொப்புள் கொடியை அகற்றி அங்கிருந்து சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,” என்றார் மசூத்.
பிபிசியிடம் பேசிய குழந்தையின் தந்தை மசூத், அரசு மருத்துவமனையிடம் கொடுத்தபோது குழந்தையின் உடலை அட்டப்பெட்டியில் வைத்துக் கொடுத்ததாகக் கூறினார்.
ஆனால், பிபிசியிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் பிரவீன் குமார், தனியார் மருத்துவமனையிலிருந்து குழந்தையின் உடலைப் பெறும்போது, அது துணியில் சுற்றப்பட்டிருந்தது, அது அப்படியே தான் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

காவல் துறையிடம் கடிதம்
மேலும் பேசிய மசூத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் இறந்த குழந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்தது என்றார். “குழந்தையின் உடலை பெறுவதற்கு ஆதார் அட்டை எடுத்து வரும்படி பிணவறையின் முதல் நாள் இரவு ஊழியர் கூறினார்,” என்றார்.
மறுநாள் காலை வந்து கேட்ட போது இது போலீஸ் வழக்கு என்பதால் காவல் நிலையத்திலிருந்து கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே தான் உடலை அளிக்க முடியும் என அவர்கள் கூறியதாகக் கூறினார்.
“அந்நேரம் அருகில் இருந்த ஒருவர் 2,500 ரூபாய் கொடுத்தால் எல்லா வேலையும் வேகமாக நடைபெறும் எனக் கூறினார். அப்பொழுது நான் அவரிடம் பணம் இல்லை என்று கூறினேன்,” என்றார்.
மேலும், தனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் அவரை விட்டுவிட்டு காவல்நிலையம் வர இயலாது எனக் கூறியதாகவும், போலீசார் உறவினரை அனுப்பி வைக்குமாறு கூறியதாகவும் அவர் கூறினார். “தொடர்ந்து கடிதத்தை பெற்று குழந்தையின் உடலை வாங்குவதற்காக சென்றோம்,” என்றார்.
அட்டைப் பெட்டியில் குழந்தை உடல்
மருத்துவமனைக்குச் சென்ற போது செவிலியர் அட்டை பெட்டியுடன் தயாராக காத்திருந்ததாகக் கூறினார் மசூத்.
“அதனை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல் இருந்தேன். அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய உதவினர். வியாசர்பாடி சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்றுபெட்டியை திறந்து போது குழந்தையின் உடல் மீது ஒரு துணி கூட சுற்றாவில்லை,” என்றார்.
மேலும் பேசிய மசூத், பிணவறை ஊழியர் அவசரமாக உடலைக் கேட்டதால் துணி சுற்றாமல் கொடுத்ததாகக் கூறியதாகத் தெரிவித்தார்.
“மேலும், பணம் கொடுத்தது தொடர்பாக பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் பிணவறை ஊழியர்களையும் வரிசையில் நிற்க வைத்து என்னிடம் காட்டினார். என்னிடம் பணம் கேட்ட நபர் அந்த ஊழியர்களில் யாரும் இல்லை என தெரிய வந்தது", என்றார்.

‘கையில் இருந்து நழுவிய குழந்தையின் உடல்’
குழந்தையின் உடலை அடக்கம் செய்த ஆசாத் பிபிசி தமிழிடம் பேசினார்.
“குழந்தையின் உடலைப் பெற்று சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று திறந்து பார்த்த போது ஒரு சிறு துணிகூட இல்லாமல் குழந்தை இருந்தது அதனை வெறும் கையால் தூக்க முயன்ற போது குழந்தை கையில் இருந்து நழுவிச் சென்றது,” என்றார்.
“இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாங்களே எங்களது பணத்தில் வெள்ளைத் துணியை வாங்கி குழந்தையின் உடலைச் சுற்றி பின் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தோம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், கொரோனா காலத்தில் கூட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல உடல்களை அடக்கம் செய்து இருக்கின்றோம். ஆனால், உரிய முறையில் துணியைச் சுற்றியே அடக்கம் செய்து இருக்கின்றோம். இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய இயலாதவர்களுக்கு துணி, போர்வை வாங்கிக் கொடுத்து உடலை சுற்றிய பின்னரே அடக்கம் செய்வோம் என்றார்.

மருத்துவமனை பணியாளர் பணியிடை நீக்கம்
இது தொடர்பாக கீழ்பாக்கம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் டீன் முத்துச்செல்வம் பிபிசியிடம் பேசினார்.
“மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை காடா துணி என்று சொல்லப்படும் துணியால் சுற்றி வழங்குவது தான் நடைமுறை இந்தக் குழந்தையை அட்டைப்பெட்டிக்குள் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிணவரை உதவியாளர் பன்னீர் செல்வம் பணியிட நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்,” என்றார்.
“மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை துணியால் சுற்றி உறவினர்களிடம் வழங்க வேண்டும். குழந்தையின் உடலை எப்படி எடுத்துச் செல்வது என்பதனை உறவினர்களின் முடிவுக்கு விட்டுவிடுவோம்,” என்றார்.
குழந்தை அட்டைப்பெட்டிக்குள் துணி சுற்றப்படாமல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது அந்த குழுவினர் விசாரணையை துவங்கி நடத்தி வருகின்றனர்.
“இந்த விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனையில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது என", கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் " சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரை, மருந்து, மருத்துவ உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப கையிருப்பு உள்ளன பற்றாக்குறை இல்லை,” எனத் தெரிவித்தார்.
காவல் துறை சொன்னது என்ன?
குழந்தை இறப்பில் பெற்றோருக்கு எந்தச் சந்தேகமும் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என காவல் ஆய்வாளர் பிரவீன் குமார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












