மலேசியா செல்ல இனி விசா வேண்டாம்! இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் 19 நாடுகள்

பட மூலாதாரம், Getty Images
வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியக் குடிமக்கள் விசா இல்லாமலேயே மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு 30 நாட்கள் வரை தங்கவும் செய்யலாம்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றியபோது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால், இந்தியர்களுக்கு இந்த வசதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர் கூறவில்லை.
இந்தியர்களுடன், சீன குடிமக்களுக்கும் விசா இலவச நுழைவு வசதியை அன்வார் அறிவித்துள்ளார்.
மலேசியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் சீனாவும் இந்தியாவும் நான்காவது மற்றும் ஐந்தாவது பெரிய நாடுகள்.
மலேசியாவுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்கள்
மலேசிய அரசின் தரவுகள்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்தியாவிலிருந்து 2,83,885 சுற்றுலாப் பயணிகள் மலேசியா சென்றிருக்கின்றனர்.
2019-ஆம் ஆண்டில், இதே காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து 3,54,486 சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்குச் சென்றிருக்கின்றனர்.
எற்கனவே, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்தியர்களுக்கு விசா இல்லாமல் நுழையும் வசதியை வழங்கியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் எவ்வளவு இந்தியர்கள் வசிக்கின்றனர்?
இந்தியா 1957-ஆம் ஆண்டு மலேசியாவுடன் (அப்போதைய மலாயா) இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது.
மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை, சுமார் 27 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது மலேசிய மக்கள் தொகையில் சுமார் 9% ஆகும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 90% பேர் தமிழர்கள். மீதமுள்ளவர்கள் தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மற்றும் பிற மொழிகளைப் பேசுகிறார்கள்.
இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் மலேசியாவில் தங்கி பணிபுரிகின்றனர்.
மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், இந்தியர்கள் ஆறாவது இடத்தில் உள்ளனர். 2018-இல் ஆறு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மலேசியா சென்றிருக்கின்றனர்.
அதேபோல், இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மலேசியா ஆறாவது இடத்தில் உள்ளது. 2018-இல் சுமார் 3.25 லட்சம் மலேசிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர்.
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 2010-ஆம் ஆண்டு மலேசியாவுக்குச் சென்றிருந்த போது சுற்றுலா தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
இந்தியா-மலேசியா வர்த்தக உறவுகள்
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளும் ஆரோக்கியமாக உள்ளன.
இந்தியாவுடன் வர்த்தகம் புரியும் நாடுகளில், மலேசியா 13வது பெரிய நாடாகும்.
2018-19ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் நடைபெற்றது.
இதில் இந்தியா சுமார் 54,000 கோடியை ஏற்றுமதி செய்தது, சுமார் 90,000 கோடியை இறக்குமதி செய்தது.
இந்தியா, மலேசியாவிற்கு கனிம எண்ணெய், அலுமினியம், இறைச்சி, இரும்பு மற்றும் எஃகு, தாமிரம், ரசாயனங்கள், அணு உலைகள், கொதிகலன்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது.
மலேசியாவில் இருந்து கனிம எண்ணெய், மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், விலங்கு மற்றும் காய்கறிக் கொழுப்பு, விறகு போன்றவற்றை இறக்குமதி செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் 19 நாடுகள்
மொத்தம் 19 நாடுகளுக்குச் செல்ல இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை.
இந்திய பாஸ்போர்ட் இருந்தால், இந்த 19 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
இது தவிர, வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, 26 நாடுகளில் இந்தியர்களுக்கு ‘விசா ஆன் அரைவல்’ வசதி உள்ளது. அதாவது அந்த நாடுகளுக்குச் சென்றபின் அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம்.
25 நாடுகளுக்குச் செல்ல இ-விசா பெறவேண்டும். மேலும் 11 நாடுகளுக்குச் செல்ல ‘விசா ஆன் அரைவல் அல்லது’ இ-விசாவை தேர்வு செய்யலாம்.
விசா இல்லாமல் இந்தியர்கள் இந்த 19 நாடுகளுக்குச் செல்லலாம்:
- பார்படோஸ்
- பூடான்
- டொமினிகா
- க்ரெனடா
- ஹைதி
- ஹாங்காங்
- மாலத்தீவுகள்
- மொரீஷியஸ்
- மான்ட்செராட்
- நேபாளம்
- நுயே தீவு
- செயின்ட் வின்சென்ட் மற்றும் தி க்ரெனாடின்ஸ்
- சமோவா
- செனகல்
- செர்பியா
- ட்ரினிடாட் மற்றும் டொபாகோ
- தாய்லாந்து
- இலங்கை
- மலேசியா

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் இந்தியர்களுக்கு விசா தள்ளுபடி செய்த நாடுகள்
கடந்த மாதம் இந்தியா மற்றும் தைவானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் ஆறு மாதங்களுக்கு தாய்லாந்து வரலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்தத் திட்டம் இந்த ஆண்டு நவம்பர் 10 துவங்கியது. 2024 -ஆம் ஆண்டு, மே மாதம் 10-ஆம் தேதி வரை தொடரும்.
தாய்லாந்து பிரதமர் ஷ்ரேதா தவிசின், “இந்தியர்கள் மற்றும் தைவானியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்து வரலாம். அந்நாடுகளிலிருந்து ஏராளமானோர் எங்கள் நாட்டிற்கு வருகிறார்கள்,” என்று தெரிவித்திருந்தார்.
இதேபோன்ற திட்டத்தை இலங்கையும் அறிவித்திருக்கிறது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டு மக்கள் 2024-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை விசா இல்லாமல் இலங்கை செல்லலாம்.
வியட்நாமும் இந்திய மற்றும் சீனக் குடிமக்களை விசா இல்லாமல் அனுமதிப்பது பற்றிப் பரிசீலித்து வருகிறது. தற்போது, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகளின் மக்கள் விசா இல்லாமல் வியட்நாம் செல்லலாம்.
மற்ற நாடுகளுக்கு வியட்நாம் 90 நாட்களுக்கான இ-விசா வழங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
எந்த நாடுகளில் ‘விசா ஆன் அரைவல்’ வசதி உள்ளது?
கீழ்கண்ட நாடுகளில் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது.
அதாவது, இந்த நாடுகளுக்குச் சென்று அங்கு விமான நிலையத்தில் விசா பெற்றுக்கொள்ளலாம்.
- அங்கோலா
- பொலிவியா
- கபோ வெர்த்
- கேமரூன்
- குக் தீவுகள்
- ஃபிஜி
- கினி பிஸ்ஸோ
- இந்தோனீசியா
- இரான்
- ஜமைக்கா
- ஜோர்டான்
- கிரிபாடி
- லாவோஸ்
- மடகாஸ்கர்
- மொரிஷியானா
- நைஜீரியா
- கத்தார்
- மார்ஷல் தீவுகள்
- ரீயூனியன் தீவுகள்
- ருவாண்டா
- செஷெல்ஸ்
- சொமாலியா
- துனிசியா
- துவாலு
- வனாட்டு
- ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images
இந்தியர்களுக்கு இ-விசா வழங்கும் நாடுகள் எவை?
- அர்ஜென்டினா
- அர்முனியா
- அசர்பைஜான்
- பஹ்ரைன்
- பெனின்
- கொலம்பியா
- கோத் திவா (Côte d'Ivoire)
- ஜிபூட்டி
- ஜார்ஜியா
- கஜகஸ்தான்
- கிர்கிஸ்தான்
- லெசோதோ
- மலேசியா
- மால்டோவா
- நியூசிலாந்து
- ஓமன்
- பப்புவா நியூ கினியா
- ரஷ்யா
- சிங்கப்பூர்
- தென் கொரியா
- தைவான்
- துருக்கி
- உகாண்டா
- உஸ்பெகிஸ்தான்
- ஜாம்பியா
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












