அரபு நாடான ஓமனில் வீட்டு வேலை செய்த பெண்களுக்கு பாலியல் கொடுமை - வாட்ஸ்அப் மூலம் 50 பேர் மீட்கப்பட்டது எப்படி?

- எழுதியவர், ஃபுளோரன்ஸ் ஃபிரி மற்றும் தம்சின் ஃபோர்டு
- பதவி, பிபிசி ஆப்பிரிக்கா ஐ
மலாவியில் இருந்து ஓமனுக்கு கடத்தப்பட்டு அடிமைகளாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களை மீட்க வாட்ஸ்அப் குழு எப்படி உதவியது என்பதை ‘பிபிசி ஆப்ரிக்கா ஐ’ (BBC Africa Eye) ஆராய்ந்துள்ளது.
எச்சரிக்கை: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் சிலருக்குத் தொந்தரவை ஏற்படுத்தலாம்.
32 வயதான பெண் ஒருவர், ஓமனில் நல்ல வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்ததையும் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் நினைவுகூர்ந்து அழுகிறார்.
பிபிசியிடம் பேசிய, மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களை போலவே ஜார்ஜினாவும் தனது முதல் பெயரை மட்டுமே தெரிவிக்க விரும்பினார்.
துபாயில் ஓட்டுநர் வேலைக்கு தன்னை பணியமர்த்துவார்கள் என நினைத்ததாக அவர் கூறுகிறார். ஜார்ஜினா மலாவியின் தலைநகரான லிலாங்வேயில் சொந்தமாக சிறுதொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், முகவர் ஒருவர் அவரை தொடர்புகொண்டு, மத்திய கிழக்கில் உள்ள எந்த நாட்டிலும் இதைவிட அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறியுள்ளார். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அவர் பயணித்த விமானம் தரையிறங்கிய போதுதான் மோசடிக்கு பலியானதை அறிந்தார் ஜார்ஜினா.
வீட்டு வேலைக்கு பணியமர்த்தப்பட்ட குடும்பத்தின் பிடியில் தான் சிக்கியதை அவர் கூறினார். அவர்கள் ஜார்ஜினாவை வாரத்தின் ஏழு நாட்களும் பல மணிநேரம் வேலை செய்ய வைத்தனர். இரண்டு மணிநேரம் மட்டுமே அங்கு தூங்க முடிந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
"இந்த கொடுமையை இனியும் தாங்க முடியாத நிலையை நான் அடைந்தேன்” என்கிறார் அவர். தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறும் இல்லையென்றால் சுட்டுக் கொன்று விடுவேன் என்றும் அவருடைய முதலாளி வற்புறுத்தத் தொடங்கியபோது ஜார்ஜினா தனது வேலையை விட்டுவிட்டார்.
"அவர் தன் நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்து வருவார். பின்னர் அவர்களிடமிருந்து பணம் வாங்குவார்" என கூறுகிறார். இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ள தான் கட்டாயப்படுத்தப்பட்டது குறித்து தயக்கத்துடன் கூறுகிறார்.
"நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்" என்கிறார் அவர்.

வளைகுடா நாடுகளும் மனித கடத்தலும்
ஒரு மதிப்பீட்டின்படி, வளைகுடா அரபு நாடுகளில் சுமார் 20 லட்சம் பெண்கள் வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர்.
புலம்பெயர்ந்தோருக்காக செயல்பட்டு வரும் ‘டு போல்ட்’ (Du Bold) என்ற தொண்டு நிறுவனம், ஓமனில் வசிக்கும் 400 பெண்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வை அமெரிக்க வெளியுறவுத்துறை 2023-ம் ஆண்டில் தனது அறிக்கை ஒன்றில் சேர்த்திருந்தது. கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்ட அனைத்து பெண்களும் மனித கடத்தலுக்கு பலியாகி உள்ளனர்.
இந்த பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டதாகக் கூறினர். பாதி பெண்கள் பாகுபாடு மற்றும் உடல் ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
பல வாரங்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்ட ஜார்ஜினா பொறுமை இழந்து ஃபேஸ்புக் பதிவின் மூலம் உதவி கேட்டார்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள மலாவியைச் சேர்ந்த 38 வயது சமூக சேவகர் பிலிலானி மோம்பே நியோனி, அவரது பதிவைப் பார்த்து விசாரணையைத் தொடங்கினார்.
அவர் ஜார்ஜினாவைத் தொடர்புகொண்டு, பாதுகாப்பு கருதி அப்பதிவை நீக்குமாறு தெரிவித்தார்.
பிலிலானி ஜார்ஜினாவுக்கு தனது வாட்ஸ்அப் எண்ணைக் கொடுத்தார், இது படிப்படியாக ஓமனில் பலரைச் சென்றடைந்தது. இந்த பிரச்னை பரவலாக இருப்பதை பிலிலானி உணர்ந்தார்.
பிபிசியிடம் பேசிய பிலிலானி, "முதலில் இதுகுறித்து பேச முன்வந்தவர் ஜார்ஜினா. இதற்குப் பிறகு பல பெண்கள் முன்வந்தனர்" என்றார்.
"இது மனித கடத்தல் சம்பவமாகத் தோன்றியதால் வாட்ஸ்அப் குழுவை உருவாக்க நினைத்தேன்” என்கிறார் அவர்.
ஓமனில் வீட்டுப் பணிப்பெண்களாக பணிபுரியும் மலாவியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தக் குழுவில் இணைந்தனர்.
விரைவில் இந்த குழு குரல் பதிவுகள் மற்றும் வீடியோக்களால் நிரப்பப்பட்டது. இவற்றில் சிலவற்றைப் பார்க்கவே பயமாக இருந்தது. பெண்கள் எந்த மாதிரியான கொடூரமான நிலைமைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது இந்த வீடியோக்களில் இருந்து தெளிவாகத் தெரிந்தது. பல பெண்களின் பாஸ்போர்ட் ஓமன் சென்றவுடனேயே அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதவாறு அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.
சில பெண்கள் இக்குழுவில் செய்திகளை ரகசியமாக கழிவறைக்குள் பூட்டிக்கொண்டு அனுப்பியதாக கூறினார்கள்.
ஒரு பெண், "நான் சிறையில் இருப்பது போல் உணர்ந்தேன். நாங்கள் ஒருபோதும் இங்கிருந்து வெளியேற முடியாது" என அக்குழுவில் தெரிவித்திருக்கிறார்.
"என் உயிருக்கு உண்மையில் ஆபத்து உள்ளது," என்று மற்றொரு பெண் கூறினார்.

ஓமனில் வேலையாட்களுக்கான விதிகள் என்ன?
பிலிலானி மோம்பே நியோனி மனித கடத்தலைத் தடுக்கும் தொண்டு நிறுவனங்களுடன் பேசத் தொடங்கினார். இந்த நேரத்தில், அவர் கிரீஸ்-ல் இருந்த Du Bold இன் நிறுவனர் எகதெரினா போராஸ் சிவோலோபோவா-ஐ சந்தித்தார்.
Du Bold வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் அமைப்பு. மனித கடத்தல் அல்லது கட்டாய உழைப்பால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அவர்களின் முதலாளிகளிடமிருந்து அவர்களை விடுவிக்கவும் இந்த அமைப்பு செயல்படுகிறது.
அதன் நிறுவனர் பிபிசியிடம் பேசுகையில், "இந்த முதலாளிகள் வீட்டு வேலையாட்களை நியமிப்பதற்காக முகவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். வீட்டு வேலையில் சிக்கிக் கொண்டவர்களை விடுவிக்கும்போது முதலாளிகளும் முகவர்களும் அவர்களை விடுவிக்க தங்கள் பணத்தை திரும்பக் கேட்கும் பிரச்னையை நாங்கள் தொடர்ந்து எதிர்கொள்கிறோம்" என்றார்.
"ஓமனில் உள்ள சட்டங்கள் வீட்டுப் பணியாளர்கள் பணி செய்யும் இடங்களை விட்டு வெளியேறுவதைத் தடுக்கின்றன. அவர்கள் வேலையை மாற்ற முடியாது, அவர்கள் எப்படி நடத்தப்பட்டாலும் நாட்டை விட்டு வெளியேற முடியாது" என்கிறார்.
மத்திய கிழக்கு நாடுகளில், ஒப்பந்த காலம் முடியும் வரை, ஒரு தொழிலாளி தான் பணி செய்யும் இடத்திலிருந்து வெளியேறுவதை அனுமதிக்காத இந்த வகை அமைப்பு 'கஃபாலா' என்று அழைக்கப்படுகிறது.
ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான ஓமனின் தேசியக் குழு பிபிசியிடம், வீட்டுப் பணிப்பெண்ணுக்கும் அவர்களது முதலாளிக்கும் இடையேயான உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது என்றும், தகராறு ஏற்பட்டால், அத்தகைய வழக்குகளை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்றும் கூறியது.
எந்தவொரு உதவியாளரையும் பணிபுரியும்படி கட்டாயப்படுத்த எந்த முதலாளியும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் உதவியாளரின் பாஸ்போர்ட் அல்லது வேறு எந்த தனிப்பட்ட ஆவணத்தையும் அவரது எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அக்குழு கூறியது.
மஸ்கட்டில் மூன்று மாதங்கள் கழித்து, நியோனி மற்றும் ஓமனில் உள்ள வேறு ஒருவரின் உதவியுடன், ஜார்ஜினா ஜூன் 2021 இல் மலாவிக்குத் திரும்பினார்.
"ஜார்ஜினாவுக்கு உதவிய பிறகு, நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நான் மிகவும் கோபமாக இருந்தேன்," என்கிறார் நியோனி.
ஜார்ஜினா மீட்கப்பட்டதையடுத்து, அவர்கள் இந்த பிரச்னையை மலாவியில் எழுப்பினர். மேலும், அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது.
மலாவியின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கான தொண்டு மையம் (சிடிஇடிஐ) ஓமன் மீட்புப் பிரசாரத்தைத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பெண்களை மீட்குமாறு அந்த அமைப்பு அதிகாரிகளிடம் கோரியது.
நியோனியின் வாட்ஸ்அப் குழுவுடன் தொடர்புடைய 39 வயதான பிளெஸ்ஸிங்ஸ் என்ற பெண், 2022 டிசம்பரில் மஸ்கட் சென்றார். லிலாங்வேயில் தனது சகோதரி ஸ்டாவிலியாவுடன் தனது நான்கு குழந்தைகளை விட்டுச் சென்றார்.
ஒருநாள், அவர் மஸ்கட்டில் வேலை செய்யும் வீட்டின் சமையலறையில் தீ விபத்துக்கு ஆளானார். ஆனால், அவருடைய முதலாளி அவரை மலாவிக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
ஸ்டாவிலியா பிபிசியிடம் கூறுகையில், "என் சகோதரி பிழைக்க மாட்டார் என நான் நினைக்கும் அளவுக்கு அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது" என்றார்.
"ஸ்டாவிலியா, எனக்கு ஒரு சிறந்த வாழ்க்கை தேவை என்பதால் நான் இங்கு வந்தேன். ஆனால் நான் இறந்தால், என் குழந்தைகளை கவனித்துக்கொள்`என்று என தன் சகோதரியை நினைவு கூர்ந்தார் ஸ்டாவிலியா.
"இதைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன்," என்கிறார் ஸ்டாவிலியா.
கடந்த அக்டோபரில், லிலாங்வே விமான நிலையத்தில் ஸ்டாவிலியா தனது சகோதரி பிளெஸ்ஸிங்ஸ்-ஐ சந்தித்தார்.
ஸ்டாவிலியா தனது சகோதரியை வீட்டிற்கு அழைத்து வர முயற்சிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில், தன் சகோதரி இறந்துவிட்டதாக குடும்பத்தினரிடம் முகவர் கோபமாக கூறியுள்ளார். ஆனால் அது உண்மையல்ல, இறுதியில் மலாவி அரசாங்கத்தின் உதவியுடன், பிளெஸ்ஸிங்ஸ் கடந்த ஆண்டு தனது வீட்டிற்குத் திரும்பினார்.
அவர் திரும்பி வந்த சிறிது நேரத்திலேயே, பிபிசியிடம் பேசிய பிளெஸ்ஸிங்ஸ், எனது குடும்பம், என் குழந்தைகளை மீண்டும் பார்க்கக் கூடிய ஒரு காலம் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை" என்றார்.
"அடிமைகளைப் போல மற்றவர்களை நடத்தும் மனிதர்கள் பூமியில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மலாவி அரசாங்கத்தின் நிலைப்பாடு
ஓமனில் இருந்து 54 பெண்களை அழைத்து வர 1 லட்சத்து 60 ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.1 கோடியே 32 லட்சம்) செலவழித்துள்ளதாக Du Bold உடன் இணைந்து பணியாற்றிய மலாவி அரசு கூறுகிறது.
ஆனால், 23 வயதான அடா சிவாலோ சவப்பெட்டியில் தான் வீடு திரும்பினார். அவரது மரணத்திற்குப் பிறகு, ஓமனில் பிரேதப் பரிசோதனையோ விசாரணையோ நடத்தப்படவில்லை.
2022 ஆம் ஆண்டில் வீட்டு உதவியாளர்களாக பணிபுரியும் மலாவியர்களைப் பற்றி தொழிலாளர் அமைச்சகம் எந்த புகாரையும் பெறவில்லை என்றும் 2023 இல் ஒரு புகாரை மட்டுமே கையாண்டதாகவும் ஓமன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
"பெரும்பாலான பெண்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் ஒன்று முதல் இரண்டாயிரம் டாலர்கள் வரை பணம் அவர்களுக்கு பணம் கொடுத்தனர்," என்கிறார், Du Bold அமைப்பின் நிறுவனர்.
"இதன் அர்த்தம் அவர்களுடைய சுதந்திரம் வாங்கப்பட்டுவிட்டது என்பதுதான். இது என்னை தொந்தரவு செய்யும் விஷயம். நீங்கள் எப்படி ஒருவரின் சுதந்திரத்தை வாங்க முடியும்?" என அவர் கேட்கிறார்.
மலாவி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், கூறுகையில், "புலம்பெயர்ந்தோர், அவர்களது குடும்பங்கள் மற்றும் நாட்டிற்குப் பயனளிக்கும் பாதுகாப்பான குடியேற்றத்தை வழங்கும்' சட்டங்களை நாங்கள் இப்போது உருவாக்கி வருகிறோம்" என்று கூறினார்.
ஓமனுக்கு கடத்தப்பட்ட வீட்டு உதவியாளர்களின் பிரச்னை, மலாவியின் வறுமை மற்றும் வேலையின்மையின் பெரிய பிரச்னையை எடுத்துக்காட்டுகிறது என்று, வாட்ஸ் அப் குழுவை உருவாக்கிய நியோனி கூறுகிறார்.
"பெண்கள் மலாவியில் வேலைவாய்ப்பைப் பெற்றால், அவர்கள் இதுபோன்ற வலைகளில் சிக்க மாட்டார்கள். இப்பெண்கள் இனி ஒருபோதும் இந்த வலையில் விழக்கூடாது என்பதற்காக நம் நாட்டின் குறைபாடுகளை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை ஜார்ஜினா மறப்பது கடினம். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மலாவி ஏரியின் அருகே அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பது புத்துணர்வு அளிப்பதாக கருதுகிறார்.
அவர் கூறுகையில், "நான் நீரலைகளைப் பார்க்கும்போது, வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமாக இருக்காது என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் அது எல்லாம் வரலாறாகும்" என்றார்.
"இந்த எண்ணத்தால் நான் ஆறுதல் அடைகிறேன். தன்னம்பிக்கை கொண்ட பழைய ஜார்ஜினா எப்படி இருந்தாள் என்று எனக்கு நானே சொல்லி என்னை ஊக்கப்படுத்துகிறேன்" என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








