பெருமுதலாளிகளை உருவாக்கிய தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பது ஏன்? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
- எழுதியவர், சாரதா. வி
- பதவி, பிபிசி தமிழ்
பாரம்பரியமும், வரலாற்று முக்கியத்துவமும் பெற்ற தமிழகத்தின் தென் பகுதி, தொழில்வளர்ச்சியின் தொடக்கத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறது. தேர்ந்த திறனையும், வளத்தையும் கொண்ட போதிலும், சென்னை கோவை பகுதிகளை விட தென் மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கு சவால்கள் அதிகமாகவே இருக்கின்றன.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொழிற்சாலைகளுக்கான நிலம் அதிகமாக உள்ளது. ஜி.ஐ.எஸ் வசதியுடன் கூடிய மதிப்பீட்டின் படி மாநிலத்தில் 21ஆயிரத்து 456 ஹெக்டேர் நிலம் தொழில்துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் சென்னை, கோவை சுற்றியுள்ள பகுதிகளிலேயே தொழிற்சாலைகள் குவிந்துள்ளன. தூத்துக்குடியில் சில தொழிற்சாலைகளும், விருதுநகர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள சிமெண்ட் ஆலைகளும் தவிர தென் மாவட்டங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான கனரக தொழிற்சாலைகள் இல்லை. இந்த நிலை ஏன்?
சாதக அம்சங்களுக்கு குறைவில்லை
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறைந்த விலையில் அதிகமான நிலப்பரப்பை வாங்கும் சாத்தியம் உள்ளது. உழைப்பதற்கு தயாரான நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். மதுரையில் இருந்து தெற்கே இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 150க்கும் கூடுதலாக உள்ளது. அங்கு படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு தேவைப்படுகிறது.
பெயர் குறிப்பிட்டு சொல்லத் தக்க தொழில் நிறுவனங்களான ஹெச்.சி.எல்., தினத்தந்தி, ஹட்சன் என ஏராளமான குழுமங்களை தென் மாவட்டங்களை சேர்ந்த முதலாளிகளே நிர்வகித்து வருகிறார்கள். தொழில்துறை வளர்ச்சிக்கு அவசியமான இத்தனை அம்சங்களை ஒருங்கே கொண்டிருந்த போதிலும், தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின் தங்குவது ஏன் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்த சூழலை மாற்ற விரும்பும் தமிழ்நாடு முதலமைச்சர், தங்களை தென் தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாகவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பு, முதலீடுகள் தெற்கு நோக்கி செல்வதை காண முடியும் என்றும் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
‘வளர்ச்சி சீராக இல்லை’
தென் மாவட்டங்களில் கனரக தொழிற்சாலைகளுக்கான வாய்ப்பு இருந்தும் அவை உருவாக்கப்பட்டவில்லை, அதனால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி சீராக இல்லை என்கிறார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என் ஜெகதீசன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு தென் தமிழகத்தை கை காட்டி, அங்குள்ள நேர்மறையான அம்சங்களை அரசுதான் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.
“உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 6லட்சத்து 34 ஆயிரத்து 180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அரசு கூறுகிறது. இதில் 1.5 லட்சம் கோடி முதலீடு மட்டுமே தென் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. அந்த முதலீடுகளும் கூட தூத்துக்குடி, திருநெல்வேலி சுற்றியே அதிகமாக கிடைத்துள்ளது. விதிவிலக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன் ராமநாதபுரத்தில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் வரவுள்ளது” என்றார்.
தூத்துக்குடியை ஒட்டி துறைமுகம் இருப்பதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் அந்த பகுதியில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பரவலான கவனம் செலுத்தப்படுகிறதா என்பது முக்கியமான கேள்வி.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
மதுரை - தூத்துக்குடி தொழில் காரிடாரின் நிலை என்ன?
கரிசல் நிலமாக உள்ள தென் மாவட்ட பகுதிகளில் அபரிமிதமான பருத்தி விளைகிறது. அதனை சார்ந்து தொழிற்சாலைகள் உருவானதால் மதுரா கோட்ஸ், நெல்லை காட்டன், சங்கர் காட்டன், டி வி எஸ் மில் பஞ்சாலைகள் அதிகம் இருந்தன. ஆனால், இப்போது மதுரையில் ஆதிக்கம் செலுத்துபவை பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழில்களே.
தொழில்களை பெருக்கும் நோக்கத்துடன் பத்து ஆண்டுகளுக்கு முன் 2013ஆம் ஆண்டு மதுரை தூத்துக்குடி தொழிற் காரிடர் திட்டம் அறிவிக்கப்பட்டது. ரூ. 1.9 லட்சம் கோடி தொழில்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பது அந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
மதுரையையும் தூத்துக்குடியையும் இணைக்கும் விதமாக சிறப்பான சாலைகள், ரயில்வே திட்டங்கள் உருவாக்குவது, குறிப்பிட்ட முதலீட்டு பகுதிகளை ஏற்படுத்தி குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற சமூக கட்டமைப்புகளும் உருவாக்குவோம் என அரசு கூறியது.
“ஒரு புறம் தூத்துக்குடியில் துறைமுகம், மறுபுறம் மதுரையில் விமான நிலையம் இரண்டையும் இணைத்து வர்த்தகப் போக்குவரத்துக்கு ஏதுவாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கான SPV எனும் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. ஆனால் பத்து ஆண்டுகளாக இந்த திட்டத்தின் கீழ் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை” என்கிறார் ஜெகதீசன்.
அறுபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மதுரை விமான நிலையம், இன்னமும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயரவில்லை. விமானங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்குகிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்கு மதுரையிலிருந்து நேரடியாக விமானப் போக்குவரத்து இருந்தாலும் கூட இதே நிலைமை தொடர்வது தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. “திருப்பதி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படாத நிலையிலும், அது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை விமான நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும்” என்கிறார் ஜெகதீசன். இதற்கான கோரிக்கையை பிரதமரிடம் அவர் மதுரை வந்தபோது நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
பெருநிறுவனங்கள் வந்தால் தொழில் வளருமா?
மதுரை மாவட்டத்தில் அமைந்த கப்பலூர் தொழிற்பேட்டை 1965ம்ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பணியாற்றும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் சரி பாதி பெண்கள்.
இங்கு செயல்படும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் ஆலை உரிமையாளரான செந்தில், “சிப்ஸ், முறுக்கு போன்ற உணவு வகைகளை பேக் செய்வதற்கான பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கிறோம். தண்ணீர் பாட்டில்களின் பிளாஸ்டிக் மூடிகளும் தயாரிக்கிறோம். ஆனால் இவை சிறுதொழில் நிறுவனங்கள் என்பதால், நாங்கள் பெரிய அளவில் ஆர்டர்கள் பெற முடியாது. சென்னை, கோவை, கேரளாவில் உள்ள நிறுவனங்களுக்கும் பிளாஸ்டிக் பைகள் அனுப்பி வைக்கிறேன். சென்னையில் உள்ள ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு பொருள் வழங்கும் நிறுவனம் 45 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும் என்று நிபந்தனை கொண்டுள்ளன. எனவே எங்களுக்கு திறன் இருந்தும், ஒரு கட்டத்துக்கு மேல் எங்களால் போட்டியிட முடியவில்லை” என்றார்.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
தொழில் வாய்ப்புகள் குறைவாக இருப்பதன் காரணமாக, அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து குடிபெயர்ந்து கப்பலூரில் 20 ஆண்டுகளாக வசிக்கிறார் முத்துமாரி.
பிளாஸ்டிக் ஆலையில் பணி செய்யும் அவர், “எனது கணவருக்கும் எனக்கும் அருகில் இருக்கும் பொன்னமங்கலம் தான் சொந்த ஊர். வேலைக்காக 20 ஆண்டுகள் முன் கப்பலூர் வந்தோம். நான் இங்கு 15 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். எனக்கு கிடைக்கும் 10ஆயிரம் ரூபாய் சம்பளம், ஓட்டுநரான கணவரது வருமானத்துடன் சேர்த்து குடும்பத்தை நடத்த உதவியாக உள்ளது. எனக்கு மூன்று பெண் பிள்ளைகள், ஒருவர் மட்டுமே கல்லூரி முடித்துள்ளார். இரண்டு பேர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே முடித்துள்ளனர்” என்றார்.

பட மூலாதாரம், Jerin Samuel /BBC
தென்மாவட்ட தொழில்களுக்கு தனி துறை !
தென் மாவட்டங்களின் தனித்துவமான சவால்களை மனதில் கொண்டு அரசு தனி ஒரு துறை உருவாக்க வேண்டும் என கப்பலூர் தொழிற்பேட்டைத் தலைவர் ரகுநாத ராஜா வலியுறுத்துகிறார்.
“தென் மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதுடன் நிற்கிறது. எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. கனரக தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இங்கு உள்ளன. எனினும், தொழில் முன்னேற்றம் நடைபெறவில்லை. எனவே தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கான தனி துறையை தமிழக அரசு அமைக்க வேண்டும்” என்றார் அவர்.
வறண்ட வானிலை கொண்ட விருதுநகர் மாவட்டம் பெரும்பாலும் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. தமிழ்நாட்டின் முன்னணி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. மற்றொரு புறம், சிவகாசியில் பட்டாசு மற்றும் அச்சு தொழிற்சாலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
கல்விக்கு பெயர் போனதாக விருதுநகர் மாவட்டம் இருந்தாலும், அந்த கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இந்த மாவட்டத்தில் இன்னும் உருவாகவில்லை என்கின்றார்கள் மக்கள். ஐடிஐ படித்து விட்டு போக்குவரத்து துறையில் பயிற்சி பெற்று வரும், சபரிவாசன், “நான் டிகிரி முடித்தாலும் திருச்சிக்கு அப்பால் சென்றால் தான் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சென்னை போன்று பெரிய ஐடி நிறுவனங்கள் இங்கு இருந்தால், நாங்களும் சாதித்து காட்டுவோம்” என்றார்.
முகேஷ் சங்கர் என்ற மற்றொரு இளைஞர், “ சென்னைக்கு சென்று வேலை பார்த்தால் ரூ.18ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். விருதுநகரில் 10 ஆயிரத்துக்கும் குறைவாக தான் சம்பளம் கிடைக்கிறது. எனவே வங்கி மற்றும் ரயில்வே தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற முயற்சி செய்கிறோம். அப்போதுதான் நல்ல வேலை கிடைக்கும்,” என்றார்.
சாதி மோதல்கள் தீருமா !
தாமிரபரணி ஆற்றின் மடியில் இருக்கும் திருநெல்வேலி மாவட்டம் விவசாயம் சார்ந்த வேலைகள் கொண்ட மாவட்டமாகும். 1990களில் இந்தியா தொழில்வளர்ச்சி நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்த போது, திருநெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சாதிய வன்முறைகளில் சிக்கி தவித்தன.
அப்போது அமைக்கப்பட்ட நீதிபதி ரத்னவேல் பாண்டியன் ஆணையம், இந்த பகுதிகளின் வேலையின்மை சாதிய மோதல்களுக்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டியது. “அந்த அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை தான் நாங்குநேரி தொழிற்பேட்டை மற்றும் கங்கைகொண்டான் தொழிற்பேட்டை” என்று வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
நாங்குநேரியில் அமைக்கப்பட்ட தொழிற்பேட்டை 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டதாகும். அப்போது மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் கனவுத் திட்டமாக இது கொண்டுவரப்பட்டது.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
2500 ஏக்கர் கொண்ட இந்த தொழிற்பேட்டையில் கால் நூற்றாண்டு கடந்தும் 100 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சாலை, தண்ணீர், மின் இணைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத சிறப்பு பொருளாதார மண்டலமாக நெடுஞ்சாலையின் ஓரத்தில் யார் கண்ணுக்கும் புலப்படாமல் நிற்கிறது இந்த தொழிற்பேட்டை. இங்கு தற்போது 15 நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
பல்பொருள் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில், தொழில் தொடங்குவதற்கு பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
“2011ம் ஆண்டு நிலம் வாங்கினோம். பதிமூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் உற்பத்தி தொடங்கவுள்ளோம். மருத்துவ கையுறைகள் உற்பத்தி செய்யவிருப்பதால் சுகாதாரத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. அருகில் உள்ள தாத்தாக்கமங்கல் என்ற கிராமத்தில் தடை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறது. எங்கள் ஆலைக்கு அருகில் பணியாளர்கள் விடுதி கட்ட திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த வழியில் உள்ள ஒரே ஒரு பனை மரத்தை வெட்ட துணை ஆட்சியர் அனுமதி கிடைக்காததால் 18 கி.மீ தள்ளி விடுதி கட்டுகிறோம்” என்றார்.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
மறுசீரமைக்கப்படுமா நாங்குநேரி?
மேலும், “நாங்கள் இது வரை பயன்படுத்திய நீருக்கான தொகையை, இந்த நிலத்துக்கு பொறுப்பான தனியார் நிறுவனத்திடம் செலுத்தினோம். ஆனால் ரூ.25 லட்சம் தொகையை அந்த நிறுவனம் நீர் வாரியத்துக்கு செலுத்தவில்லை. எனவே எங்களுக்கு நீர் நிறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் வெளியிலிருந்து வாங்க வேண்டியுள்ளது.” என்றார்.
நாங்குநேரி தொழிற்பேட்டையில், “எங்கள் நிறுவனம் பிரதான வாயிலிலிருந்து சுமார் 3 கி.மீ தள்ளி இருக்கிறது. இங்கு வருவதற்கான பாதையில் சாலை கிடையாது, மின் விளக்கு கிடையாது. எனவே மாலை 5 மணிக்கு வேலையை முடித்துவிட்டு சென்றுவிடுகிறோம். இதனாலேயே பெண்களை வேலைக்கு எடுக்க முடியவில்லை” என்று மகேஷ்குமார் தெரிவிக்கிறார். அந்த தொழிற்பேட்டையில் பணியாற்றும் லக்ஷ்மண குமார், “ அரசு இங்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள் வசதி வழங்கவில்லை. எனவே வைஃபை மூலமே இணைய வசதி பெறுகிறோம். காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், அதுவும் கிடைக்காது” என்றார்.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
கங்கை கொண்டான் வெற்றி !
அதே சமயம் இதே மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் அரசின் தொடர் முயற்சியால், டாடா பவர் சோலார், பாஷ், பிரிட்டானியா, ஏ டி சி டயர்ஸ், ராம்கோ ஆஸ்பெஸ்டாஸ் என பல முன்னணி நிறுவனங்கள் வெற்றிகரமாக முதலீடு செய்து இயங்கி வருகின்றன. இந்த தொழிற்பேட்டையில் கிட்டத்தட்ட 100% இடமும் பயன்படுத்தப்பட்டு விட்டது.
பன்னாட்டு பொறியியல் நிறுவனமான பாஷ் வளாகத்தைப் பார்வையிட்ட போது அந்த ஆலையின் வணிகத் தலைவர் விஜய், “இங்கு வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் அனைவரும் 40கி.மீ தூரத்துக்குள் இருக்கும் கிராமங்களிலிருந்து வருகிறார்கள். அவர்கள் வேலையில் நுழைந்த உடன் இரண்டு வார பயிற்சி வழங்கப்படும். அவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கற்றுக் கொண்டு பணிபுரிகின்றனர்” என்றார்.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
இந்தியாவின் குண்டூசி தயாரிப்பின் முன்னோடியாக இருப்பது பாளையங்கோட்டையில் உள்ள பெல் பின் நிறுவனம். 2000த்தில் கணினியின் அறிமுகத்துக்கு பிறகு, குண்டூசி பயன்பாடு குறைந்திருக்கும் என்று ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால், அது உண்மையல்ல என்கிறார் பெல் பின் நிறுவனத்தின் இயக்குநார் சஞ்சய் குணசிங்.
“இந்தியர்களின் மனநிலை எப்போதுமே ஒரு சாஃப்ட் காபி மற்றும் ஒரு ஹார்ட் காபி வைத்துக் கொள்வது தான். குறிப்பாக அரசு அலுவலகங்களில் இன்னும் இதன் பயன்பாடு அதிகமாகவே உள்ளது, ஒரு நாளுக்கு சராசரியாக ஒரு டன் குண்டூசி தயாரிக்கிறோம். ஒரு கிராமுக்கு 7 குண்டூசி தயாரிக்க முடியும்” என்றார்.
1950களில் இந்த பகுதியினரின் வேலை வாய்ப்புக்கு முக்கிய தொழிலாக இது இருந்தது. தற்போது இங்கு சுமார் 400 பேர் வேலை பார்க்கின்றனர். இரண்டாவது தலைமுறையாக வேலை பார்ப்பவர்களும் உள்ளனர். ஆனால் சமீப காலமாக தொழிலாளர்கள் கிடைப்பது சவாலாக இருப்பதாக சஞ்சய் குணசிங் கூறுகிறார்.
“ஆட்கள் கிடைக்காததால், குண்டூசியை காகிதத்தில் சொருகும் பணியை கிராமங்களிலேயே செய்துபெற்றுக் கொள்கிறோம். இளைஞர்கள் இது போன்ற வேலைகளுக்கு வருவதில்லை. நிர்வாக ரீதியிலான வேலைகளுக்கு கூட தயாராக இருப்பதில்லை” என்கிறார்.
நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளாக நடத்தப்பட்டு வரும், பாத்திர உற்பத்தி தொழில்கள் தற்போது சந்தைக்கு ஏற்ற வகையில் தங்களை புதுப்பித்துக் கொண்டுள்ளன. நவீன குக்கர்கள், சமையல் பாத்திரங்கள் தயாரித்து வரும் நிறுவனங்களும் சில குறிப்பிடத்தக்க பிராண்டுகளும் திருநெல்வேலி சுற்றியுள்ள பகுதியில் இருக்கின்றன. இது ரூ.300 முதல் ரூ.500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிலாகும். தென்னிந்தியாவில் விற்கப்படும் முறுக்கு அச்சுகளில் கணிசமானவை இங்கிருந்து தயாரிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
சாலை வசதிகள் குறைவு !
உலக வங்கியின் 2021ம் ஆண்டு அறிக்கையின் படி, தென் மாவட்டங்களில் சாலை அடர்த்தி, மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. மேலும், கிராமப்புற சாலைகள் அதிகமாகவும், போடப்பட்ட சாலைகள் குறைவாகவும் இருப்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 2022ம் ஆண்டு ஆய்வின் படி, தென் மாவட்டங்களில் திறன் பெற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
“இது விவசாயம் சார்ந்த நிலம். எனவே இங்கு தொழில்துறைக்கு ஆள் தேவை என்றால், நான் ஒரு விவசாயியை தான் வேலைக்கு அழைக்க வேண்டும். அவரிடம் தொழில்துறைக்கு தேவையான திறன்கள் இருக்காது. வேலைக்கு வரும் அனைவருக்கும் தொழில் நிறுவனங்களே முழுமையான பயிற்சிகள் வழங்க வேண்டியுள்ளது. இது மிகவும் சிரமமாக உள்ளது. அரசு இந்தப் பகுதிக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்” என்கிறார் திருநெல்வேலி மாவட்ட சிறுகுறு நிறுவனங்களின் சங்கத் தலைவரும் குக்கர் உற்பத்தி நிறுவன மேலாளருமான ஆனந்த சேகர்.
ஒரு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வருமானம் ஈட்டிய திண்பண்டம் தயாரிக்கும் நிறுவனம் தற்போது ஒரு நாளுக்கு ரூ.4.5 லட்சம் ஈட்டுகிறது. இருபது ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை கண்டுள்ள நிறுவனம், தற்போது நான்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. முறுக்கு, தட்டை போன்ற நொறுக்குதீனி, இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Jerin Samuel/BBC
முறையாக சந்தைப்படுத்துவோம் – அமைச்சர் !
தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பிபிசி தமிழிடம் பேசும் போது, “தென் மாவட்டங்களில் தொழில்துறைக்கு சாதகமான அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றை மார்க்கெட் செய்ய நாம் தவறியது பின்னடைவு தான். அதை தற்போது சரி செய்து வருகிறோம். முதலீட்டாளர்களிடம் சென்னை, கோவை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பிற பகுதிகளும் தொழில் முதலீட்டு தகுதியானவையே என்று கூறுகிறோம். அந்த வகையில் தான் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வின்ஃபாஸ்ட் மின் வாகன தயாரிப்பு நிறுவனம் தூத்துக்குடியில் தொழில் தொடங்குகிறது. அதையொட்டி பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்கள் வரும். அந்தப் பகுதியே உற்பத்தித் துறைக்கான மையமாக மாறும். அதே போன்று நெடுநாட்களாக உள்ள கோரிக்கையான நாங்குநேரி தொழிற்பேட்டையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












