தினசரி 16 மணிநேரம் விரதம் இருந்து உடல் எடை குறைக்கும் முயற்சி - யாரெல்லாம் செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images
உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு புதிய 'டயட்' திட்டங்கள் அவ்வப்போது டிரெண்டாகும். பெரும்பாலானோர் அந்த 'டயட்' திட்டங்களை பின்பற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். அப்படி, பேலியோ, கீட்டோ என பல்வேறு 'டயட்டுகள்' உள்ளன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பு முயற்சியில் பெரும்பாலானோர் பின்பற்றும் டயட் திட்டமாக இருக்கிறது 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும் 'இடைநிலை உண்ணாவிரதம்'. இதுவொரு வகை விரத முறையே.
பொதுவாக நாம் ஒருநாள் முழுதும் காலையிலிருந்து இரவு வரை 3-4 முறை உணவு எடுத்துக்கொள்வது வழக்கம்.
இதில், குறைவான கால இடைவெளியில் உணவை உட்கொண்டுவிட்டு, அதைத்தொடர்ந்து அதிகமான நேரம் விரதமிருப்பதே இந்த 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்'. 8 மணிநேரம் உணவு - 16 மணிநேரம் விரதம் (16:8) என்ற முறையை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். தங்களின் வசதிக்கேற்ப இந்த நேரம் 14:10, 12:12, 18:6 என நேர இடைவெளிகளை மாற்றிக்கொள்கின்றனர்.
இப்படி அதிக நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லதா? இதனால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? இந்த விரதமுறையை யாரெல்லாம் கடைபிடிக்கக் கூடாது?
இதுகுறித்த கேள்விகளுக்கு பிபிசியிடம் பதிலளித்தார் ஈரோட்டை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரும் யூடியூபில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வருபவருமான அருண்குமார்.

பட மூலாதாரம், Getty Images
உடல் எடையை குறைப்பதில் 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
உடல் எடையை குறைக்க சமவிகித உணவை மூன்று வேளையும் உண்கிறோம் என எடுத்துக்கொண்டால், அப்போது இன்சுலின் அதிகமாகிக் கொண்டே இருக்கும். நாம் குறைவாக சாப்பிட வேண்டும் என நினைத்தாலும் உணவு மீதான ‘கிரேவிங்’ இருந்துகொண்டே இருக்கும். ஒருநாளைக்கு 1,200 கலோரிகள் கணக்கிட்டு உண்ணலாம் என நினைத்தாலும் அதில் தோல்வியடைவதற்கான காரணம் இதுதான்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டும். உடல் எடை அதிகமாவதற்கு முக்கியமான ஹார்மோன் இன்சுலின். எவையெல்லாம் இன்சுலினை அதிகரிக்கிறதோ, அவை உடல் எடையையும் அதிகரிக்கும். இன்சுலினை எவையெல்லாம் குறைக்கிறதோ, அவை உடல் எடையை குறைக்கும். இதனால் நாம் இன்சுலினுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இதுதான் அடிப்படை. இதற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்க வேண்டும். மாறாக, புரோட்டீன், கொழுப்பு, காய்கறியை அதிகமாக எடுத்தால் இன்சுலின் கட்டுப்பாட்டுடன் இருக்கும். உடல் எடை குறையும். ‘கிரேவிங்’ குறையும்.
இந்த அடிப்படையில்தான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்கும் வேலை செய்கிறது. ஒருநாளைக்கு மூன்று வேளை உணவு, நான்கு வேளை 'ஸ்நாக்ஸ்' எடுக்கும்போது இன்சுலின் அதிகரிப்பதால், விரதத்தில் இருக்கும்போது இன்சுலின் கட்டுப்படும். எட்டு அல்லது பத்து மணிநேரம் மட்டுமே நீங்கள் உணவு எடுத்துக்கொண்டு, 14 அல்லது 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கும்போது, அந்த 16 மணிநேரம் உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்காமல் இருக்கிறது. அப்போது உடலில் கொழுப்பு சேராது.
உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்திலும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், காய்கறிகளை எடுத்துக்கொண்டால் பசியை நன்றாக கட்டுப்படுத்த முடியும். இன்சுலின் கட்டுக்குள் கொண்டு வரும்போது உடல் எடை குறையும், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
இந்த முறையை கடைபிடிக்கும் முன் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமா?

பட மூலாதாரம், Getty Images
உடல் எடையைக் குறைப்பதற்காக எந்தவொரு உணவுத்திட்டத்தையும் எடுப்பதற்கு முன் ஒவ்வொருவரின் உடல் வளர்சிதை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சில அடிப்படையான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.
ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்த்தால்தான் நீரிழிவு நோய் இருக்கிறதா, யூரிக் அமிலம் அதிகமாக இருக்கிறதா என்பது தெரியவரும். அதற்கேற்றவாறு நாம் டயட்டை எடுத்துக்கொள்வது அவசியம், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
18 மணிநேரம் விரதம் இருந்தால் உடல் எடை வேகமாக குறையுமா?
16:8, 14:10, 12:12 என எந்த நேர இடைவெளியை எடுத்துக்கொண்டாலும் முடிவுகள் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த விரத முறையில் சாப்பிடும் நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். நீங்கள் ஆறு மணிநேரம் மட்டுமே சாப்பிட்டாலும், அதில், நொறுக்குத் தீனிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட கெடுதல் விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இதனை பின்பற்ற நினைப்பவர்கள், தங்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கால இடைவெளியில் ஆரம்பிக்கலாம். எடுத்ததும் 16:8 இடைவெளியை பின்பற்ற முடிந்தாலும் அதனை கடைபிடிக்கலாம். ஒன்றும் பிரச்னை வராது, என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
யாரெல்லாம் இதனை தவிர்க்க வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இதை அவர்களின் உடல் ஏற்காவிட்டால், பிரச்னைகள் அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஏற்கனவே அவர்களின் உடல் பல மாற்றங்களுக்குள் சென்றிருக்கும். அதனுடன் இதையும் சேர்க்க வேண்டாம் என நினைக்கிறோம்.
குழந்தைகளால் விரதத்தைத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் அவர்களும் இம்முறையை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.
நீரிழிவு அதிகமாக உள்ளவர்கள், மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம் விரத முறையை கடைபிடித்தால், சர்க்கரை அளவு வெகுவாக குறையும். அதேபோன்று பல்வேறு பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
நீரிழிவு நோயை இந்த முறையால் கட்டுப்படுத்த முடியுமா?
கார்போஹைட்ரேட்டை குறைப்பதனால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். இந்த விரத முறை நீரிழிவு நோயின் ஆரம்பத்தில் உள்ளவர்கள் அதனை அந்நோயிலிருந்து விடுபடுவதில் உதவிபுரியும்.
ஆனால் நாள்பட்ட நீரிழிவு நோயை இதனால் குணப்படுத்த முடியாது, என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
இந்த முறையால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா?
ஓரிரண்டு வாரங்கள் சில விளைவுகள் இருக்கும். சிலருக்கு மயக்கம் ஏற்படலாம், நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். சிலரால் விரதம் இருக்க முடியாது. அவர்கள் 1-2 வாரங்கள் கடந்தும் பிரச்னை தொடர்ந்தால், இதிலிருந்து வெளியேறலாம், அல்லது சாப்பிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது பெரிய விஷயமல்ல. விரத நேரத்தில் தண்ணீரோ, சூப்போ அருந்துவதன் மூலம் இதனை தவிர்க்கலாம், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கேள்விக்கு பதிலளித்தார், ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன். சில வழிமுறைகளைப் பின்பற்றி இம்முறையில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதையோ, தசை இழப்பையோ தவிர்க்கலாம் என்றார் அவர்.
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை முதல் மாலை வரைதான் இம்முறையை பின்பற்ற வேண்டும். காலை உணவைத் தவிர்த்துவிட்டு எடுத்ததும் மதிய உணவுக்குள் செல்லக் கூடாது. உணவைத் தவிர்க்க வேண்டும் என்றே, பலர் அதிக நேரம் தூங்கிவிட்டு, மதியம் எழுந்து உண்கின்றனர். இது தவறு.
இரண்டு வேளை முழு உணவு, ஒரு வேளை ஸ்நாக்ஸ் எடுக்க வேண்டும். இருவேளை உணவிலும் நிச்சயம் புரோட்டீன் இருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். சிறிதளவு கார்போஹைட்ரோட் எடுக்கலாம். ஒரு கப் சாதம் அல்லது சப்பாத்தி அல்லது தோசை எடுக்கலாம். இன்னொரு கப்பில் பருப்பு, முட்டை, மீன், இறைச்சி எடுக்க வேண்டும். அதற்கு இரு மடங்கு காய்கறிகள் எடுக்க வேண்டும்.
காபி அல்லது டீ, சுண்டல் ஆகியவற்றை ஸ்நாக்ஸ் ஆக எடுக்கலாம்.
உடற்பயிற்சி செய்து தசை இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தோல் தளர்ந்து வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படும்.
இந்த முறையை தவறாக பின்பற்றினாலோ என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டாலோ எதிர்பார்க்கும் விளைவுகள் இருக்காது, ஆபத்தில்தான் முடியும்.
நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் இதனை பின்பற்றக் கூடாது. சிஜிஎம் மூலம் சர்க்கரை அளவை கண்காணித்துதான் பின்பற்ற வேண்டும். சர்க்கரை அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் சத்துணவு நிபுணர் இருவரையும் ஆலோசித்துத்தான் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிகவும் வயதானவர்களுக்கு செரிமான பிரச்னைகள் ஏற்கனவே இருக்கும். அவர்களும் இதனை எடுக்கக் கூடாது, என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












