யானையின் தாய்மை உணர்வு: தாயை இழந்த குட்டி யானையை அரவணைத்த வேறொரு பெண் யானை - வியக்கும் ஆர்வலர்கள்

தாயை இழந்த குட்டி யானை

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, கூட்டத்துடன் இணைந்து பெண் யானையுடன் செல்லும் குட்டியானை.
    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாய் யானை இறந்த நிலையில் பிறந்து இரண்டு மாதங்களேயான குட்டி யானையை, யானைக் கூட்டத்தில் இருந்த மற்றொரு பெண் யானை தாயைப்போல் அரவணைத்து அழைத்துச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த குட்டி யானை அந்தக் கூட்டத்துடனே வாழ முடியுமா? இது சாத்தியமா?

தமிழகத்தை பொறுத்தவரையில் தாய் யானையைப் பிரிந்த அல்லது கூட்டத்தில் இருந்து தவறுதலாக வெளியேறிய குட்டி யானைகளை மீட்டு, யானைகள் முகாமில் வைத்து பாகன்கள் உதவியுடன் வனத்துறையினர் பராமரித்து வளர்ப்பது வழக்கம்.

சில நேரங்களில் குட்டி யானையின் கூட்டம் அல்லது தாயை கண்டறியும் போது, அந்தக் குட்டியை கூட்டம் அல்லது தாயுடன் சேர்க்கும் முயற்சியையும் வனத்துறையினர் செய்கின்றனர். இப்படியான நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாய் இறந்த நிலையில், 2 மாதங்களான குட்டி யானையை வனத்துறையினர் யானைக் கூட்டத்துடன் சேர்த்துள்ளனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த குட்டி யானையை கூட்டத்தில் இருந்த மற்றொரு பெண் யானை தாயைப் போல் அதை அரவணைத்து கூட்டிச்சென்று பராமரிப்பது தான்.

இதுவரை, வழி தவறி வந்த குட்டி யானையை கூட்டத்துடனோ அல்லது தாய் யானையுடனோ சேர்த்திருந்தாலும், தாய் இறந்த நிலையில் மற்றொரு பெண் யானை வேறொரு யானையின் குட்டியை அரவணைத்து கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறை என வனத்துறையினர் கூறுகிறார்கள்.

தாயை இழந்த குட்டி யானை

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, வனத்துறை பராமரித்து வந்த குட்டி யானை.

தாயைப்போல் அரவணைத்த பெண் யானை

ஈரோடு மாவட்டம் பன்னாரி அருகே, சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் மார்ச் 3ஆம் தேதி, உடல் நிலை சரியில்லாமல் இரண்டு குட்டிகளுடன் சுற்றித்திரிந்த பெண் யானையை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

சம்பவம் இடத்திற்கு சென்று பார்த்தபோது, அது 45-50 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதும், 10 வயதான ஆண் குட்டி யானை மற்றும் பிறந்து இரண்டு மாதங்களே ஆன குட்டி யானை என்பதும் தெரியவந்தது.

அசையமுடியாமல் சிரமப்பட்ட அந்த பெண் யானைக்கு வனத்துறையினர், வனக்கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்தனர். மேலும், குட்டி யானைகளை பராமரித்து, இந்த மூன்று யானைகளும் எந்தக் கூட்டத்துடன் இருந்தது என டிரோன் வாயிலாக கண்காணித்தும் வந்தனர்.

ஒரு கட்டத்தில் யானைக் கூட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்த நிலையில், 10 வயதான ஆண் யானைக்குட்டி கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது. 3 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப்பின் தாய் யானை இறந்த நிலையில், இரண்டு மாதங்களேயான குட்டி யானையை மார்ச் 5ஆம் தேதி யானைக் கூட்டத்துடனேயே சேர்த்துள்ளனர் வனத்துறையினர்.

அந்தக்குட்டி யானையை, கூட்டத்தில் இருந்த மற்றொரு பெண் யானை தாயைப்போல் அரவணைத்து கூட்டிச் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்களையும் வனத்துறையினர் பகிர்ந்துள்ளனர்.

தாயை இழந்த குட்டி யானை

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, குட்டி யானையை அரவணைத்துச் கூட்டத்துடன் அழைத்துச் செல்லும் பெண் யானை.

‘தமிழகத்தில் இது முதல் முறை’

இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜ்குமார், ‘‘இதுவரை தமிழ்நாடு வனத்துறை, காட்டிலிருந்து வெளியேறிய குட்டி யானைகளை கூட்டத்தில் சேர்த்துள்ளது. ஆனால், அதே தாயுடன் சேர்க்கப்பட்டதா இல்லை வேறு தாய் யானையுடன் சேர்க்கப்பட்டதா என உறுதிப்பட தெரியாத நிலையே நீடித்தது. ஆனால், இந்த முறை தாய் யானை இறந்த பின், கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வேறொரு பெண் யானை இந்தக்குட்டி யானையை அரவணைத்து தன் கூட்டத்துடன் சேர்த்துக் கொண்டதால் தான் இதை தமிழகத்தில் நடந்த முதல் சம்பவம் எனக் கூறுகிறோம்,’’ என்றார்.

‘இது பலரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’

இந்த நெகிழ்ச்சி சம்பவம் பாகன், மருத்துவர்கள், வனத்துறை என பலரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனக்கூறுகிறார் கள இயக்குனர் ராஜ்குமார்.

இதை விளக்கிய அவர், ‘‘குட்டி யானையை கூட்டத்துடன் சேர்ப்பது சாதாரண விஷயம் அல்ல, மிகப்பெரிய கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமாகியுள்ளது. தாயை இழந்து மன உளைச்சலுக்கு உள்ளான இரண்டு குட்டி யானைகளில், 10 வயதான ஆண் யானை கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது. பிறந்து 60 நாட்களுக்குள் இருந்த குட்டி யானை, தாய் இறந்த சோகத்தில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தது."

"முதற்கட்டமாக அதை மீட்டு உணவு கொடுத்து ஒரே ஒரு பாகனை வைத்து பராமரித்தோம். அதேசமயம் மனிதர்களின் கை மற்றும் வாசனை அந்தக்குட்டி மீது பட்டால், யானைக்கூட்டம் இந்த குட்டியை தங்களுடன் சேர்க்காமல், விரட்டிவிடும் சூழல் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு மனித வாசனை அதன் மீது விழாமல், உணவு நீர் கொடுத்து பராமரித்து, குட்டி யானையின் எச்சம், சிறுநீரை அதன் மீதே தேய்த்து காட்டு வாசனை மாறாமல் பார்த்துக்கொண்டோம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த யானைகள் இருந்த கூட்டத்தை கண்டறிந்து, அவை வனப்பகுதி அருகே வந்ததும் வாகனத்தில் குட்டி யானையை அங்கு அழைத்துச் சென்றோம். அப்போது, நாம் ஆச்சரியப்படும் வகையில், கூட்டத்தில் இருந்த பெண் யானை ஒன்று ரோட்டிற்கு வந்து இந்த குட்டி யானையை தன் குட்டி போல் பாவித்து அரவணைத்து அழைத்துச்சென்றது,’’ என்றார்.

குட்டியை அந்தக் கூட்டம் சேர்த்துக் கொண்டதா? உணவு கிடைக்கிறதா? என்ற கேள்விகளை, நாம் கள இயக்குநர் ராஜ்குமாரிடம் முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த ராஜ்குமார், ‘‘டிரோன் வாயிலாக கண்காணித்ததில், இந்த வெயிலிலும் குட்டி யானை ஆரோக்கியமாக நடமாடுகிறது. இதை பார்க்கும் போதே அந்தக்குட்டி யானைக்கு போதிய அளவில் தாய்ப்பால் கிடைத்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

இதுவரை செய்த ஆய்வுகளில் கூட்டத்தில் சேர்ந்த குட்டி யானை மற்றொரு பெண் யானையின் அரவணைப்பில் உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து அந்தக்குட்டி யானைக்கு தாய்ப்பால், நீர் கிடைக்கிறதா, அந்த யானைக்கூட்டம் குட்டி யானையை கூட்டத்தை விட்டு வெளியில் விரட்டுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கிறோம்,’’ என்றார் விரிவாக.

தாயை இழந்த குட்டி யானை

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, வேறொரு பெண் யானை குட்டியை அரவணைத்துச் சென்றதே முதல் வெற்றி தான் என்கிறார் சூழலியலாளர் கோவை சதாசிவம்.

‘குட்டி யானை கூட்டத்துடன் வாழும்’

கூட்டத்துடன் சேரும் குட்டி யானை உயிர் பிழைப்பது சாத்தியமா? அந்த யானைக்கூட்டம் சேர்த்துக்கொள்ளுமா? என்ற கேள்விகளை, சூழலியலாளர் கோவை சதாசிவத்திடம் பிபிசி தமிழ் முன்வைத்தது.

அதற்கு பதிலளித்த சதாசிவம், ‘‘கூட்டத்தில் இருக்கும் ஒரு குட்டி யானையை அதன் தாய் மட்டுமின்றி மற்ற பெண் யானைகளும் பால், உணவு கொடுத்து காப்பதை பல முறை பார்த்திருக்கிறோம். யானைகள் இது போன்று பெண் யானைகள் அன்பில் வளருவது ஆய்வுகளின் மூலமும் கண்டறியப்பட்டுள்ளது."

"இந்தக்குட்டி யானையை பொறுத்தவரையில், ஒரு பெண் யானையே அரவணைத்துச் சென்றதே முதல் வெற்றி தான். இந்த பெண் யானை மற்றும் அந்தக்கூட்டத்தில் இருக்கும் மற்ற பெண் யானைகள் அரவணைப்பில் இந்த குட்டி யானை பாதுகாப்பாக வளர மிக அதிக வாய்ப்புள்ளது. நடந்த சம்பவங்களை பார்க்கும் போது கூட்டத்தை விட்டு குட்டி யானை வெளியேற்றப்பட வாய்ப்பு மிகக்குறைவு தான்."

"குட்டி யானைகள் எப்போதும் மிக அதிக சேட்டைகள் செய்பவை. இந்த சேட்டைகளை கூட்டத்தில் இருக்கும் அனைத்து யானைகளும் சகித்துக்கொண்டு, அன்பு செலுத்துவதை நாம் பார்க்க முடியும். அந்த வகையில் இந்த யானை அதே கூட்டத்துடன் சேர்ந்துள்ளதால் நிச்சயம் கூட்டத்துடன் வாழும்’’ எனக் கூறுகிறார்.

‘தாய்மை உணர்வு உயிர்களுக்கு பொதுவானது’

தாய்மை உணர்வு அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. குட்டி யானை கூட்டத்துடனேயே வாழும் என நம்பிக்கை அளிக்கிறார் மூத்த வனக்கால்நடை மருத்துவரும், கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குனருமான மனோகரன்.

பிபிசி தமிழிடம் பேசிய மனோகரன், ‘‘இயற்கையின் படைப்பில் அற்புதம் என்னவென்றால், தாய்மை உணர்வு என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. ஆடு, மாடு, நாய் துவங்கி யானை வரையில், உணவின்றி சிரமப்படும் தன் இனத்தை சேர்ந்த குட்டிகளை பெண் அரவணைத்து பராமரிப்பது சாதாரணமாக நடக்கக்கூடியது, இதை நாங்கள் பலமுறை பதிவும் செய்துள்ளோம்."

"சத்தியமங்கலத்தில் அதே தாய்மை உணர்வுள்ள ஒரு பெண் யானை தான், குட்டி யானையை அரவணைத்து கூட்டத்துடன் சேர்த்துள்ளது. இருந்தாலும் அரவணைத்த பெண் யானை இந்தக்குட்டிக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்குமா, அதற்கு அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்குமா இல்லை சுரக்காமல் விட்டால் குட்டியை வெளியேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்."

"எனினும் கூட்டத்துடன் ஆரோக்கியமான முறையில் குட்டி சேர்ந்துள்ளதால், அது கூட்டத்தின் கவனிப்பில் தொடர்ந்து வளரும் என்பதில் அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன,’’ என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)