சர்வதேச அரிசி சந்தையை இந்தியா சீர்குலைக்கிறதா? தாய்லாந்தின் குற்றச்சாட்டும் பின்னணியும்
உலக வர்த்தக சபையின் கூட்டத்தில் அரிசி விவகாரத்தில் இந்தியா மீது குற்றஞ்சாட்ட தாய்லாந்து முயன்றது. இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
’இந்தியா பொது விநியோக முறைக்காகக் குறைந்த விலையில் அரிசியை வாங்கி, சர்வதேச அரிசி ஏற்றுமதி சந்தையை ஆக்கிரமிப்பதாக’ உலக வர்த்தக அமைப்பிற்கான தாய்லாந்தின் தூதர் பிம்சானோக் வோன்கோர்போன் பிட்ஃபீல்ட், குற்றம் சாட்டினார்.
தாய்லாந்தின் இந்தக் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சில குழு உரையாடல்களில் பங்கேற்கவும் இந்திய பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தாய்லாந்தின் கருத்தை சில செல்வந்த நாடுகளின் பிரதிநிதிகள் வரவேற்றனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உண்மையில் பொதுமக்களுக்கான உணவு கையிருப்பிற்கு வரம்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதற்கான நிரந்தரத் தீர்வை பலமுறை நிறுத்திவிட்டன.
உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டிலுள்ள மொத்த அரிசி உற்பத்தியில் 40 சதவிகிதத்தைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இந்தியா கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள விளைபொருட்கள் சந்தை விலையில் விற்கப்படுகின்றன.
“பொது விநியோக முறைக்கு அதாவது PDSக்கு கொள்முதல் செய்ய இந்தியா MSP அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குகிறது. PDSக்காக வாங்குவதற்கான ’பப்ளிக் ஸ்டாக் லிமிட்டில்’ இந்தியா விலக்கு பெற்றுள்ளது. அதாவது இந்திய அரசு பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொள்முதல் செய்யும் அரிசியின் மீது சேமிப்பு வரம்பு பொருந்தாது,” என்று மூத்த பத்திரிக்கையாளரும் வேளாண்மை நிபுணருமான ஹர்வீர் சிங் கூறினார்.
தாய்லாந்தின் இத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று அவர் கருதுகிறார்.
“பதிவுகளின்படி அப்படி இல்லை. பொது விநியோக முறைக்காக வாங்கும் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்வதில்லை. மாறாக இந்திய ஏற்றுமதியாளர்கள் அரிசியை சந்தை விலையில் வாங்கி அதை ஏற்றுமதி செய்கிறார்கள் என்று இந்திய அரசு கூறுகிறது. இந்தியா மலிவு விலையில் அரிசியை வாங்கி ஏற்றுமதி செய்து அதன் மூலம் சந்தையை சீர்குலைப்பதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு உண்மை அல்ல,” என்று அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



