எஸ்ஐபி முதலீட்டில் மாதம் ரூ.1000 செலுத்தி பல கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும் என்பது உண்மையா? - நிபுணர்கள் கூறுவது என்ன?

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்கள் தொடங்கி பல இடங்களிலும் 200 ரூபாய் முதலீட்டில் லட்சாதிபதி ஆகலாம் என்பது போன்ற விளம்பரங்கள் தென்படுவதை பார்க்க முடிகிறது. எஸ்ஐபி முதலீட்டு திட்டம் என்ற பெயரில் ஊரெங்கும் பிரபலமாகி வரும் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் மூலம் கணிசமான வருமானம் ஈட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

இது என்ன முதலீட்டு திட்டம்? இதன் மூலம் உண்மையில் பணம் கிடைக்கிறதா? இதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

எஸ்ஐபி திட்டம் என்றால் என்ன?

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்(SIP) என்பது முறைசார் முதலீட்டு திட்டம் (systematic investment plan) என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்வதற்கான வழிமுறையே இந்த எஸ்ஐபி முதலீட்டு திட்டம்.

இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் உங்களது வங்கி கணக்கில் இருந்து EMI போல பணம் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் எடுத்துக்கொள்ளப்படும். அந்த நிறுவனம் அந்த நிதியை பல்வேறு பங்குசந்தையில் உள்ள பல்வேறு நிறுவன பங்குகள் மீது முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கான வருமானத்தை உறுதி செய்யும்.

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “எஸ்ஐபியில் வளர்ச்சி நிதி (Growth Fund) மற்றும் ஈவுத்தொகை நிதி (Dividend Fund) என இரு வகைகள் உண்டு."

எஸ்ஐபியின் முதலீட்டின் இரண்டு வகைகள்

இந்த எஸ்ஐபி முதலீட்டு திட்டத்தில் இரண்டு வகையான தேர்வுகள் இருப்பதாக தெரிவிக்கிறார் Wonkrew சிஎப்ஓ மற்றும் நிதி ஆலோசகருமான சதீஷ் குமார்.

அவரது கூற்றுப்படி, “எஸ்ஐபியில் வளர்ச்சி நிதி (Growth Fund) மற்றும் ஈவுத்தொகை நிதி (Dividend Fund) என இரு வகைகள் உண்டு. வளர்ச்சி நிதியில் உங்களது முதலீட்டின் மூலம் வரும் ஈவுத்தொகையை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்து இறுதியில் அதை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஈவுத்தொகை நிதி முதலீட்டில் உங்களுக்கு கிடைக்கும் ஈவுத்தொகையை மாதம் ஒருமுறை , மூன்று மாதத்திற்கு ஒருமுறை மற்றும் வருடம் ஒரு முறை என பெற்றுக்கொள்ளலாம்”

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்

பட மூலாதாரம், RAJESH

படக்குறிப்பு, பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ்

நடுத்தர குடும்பங்களுக்கு என்ன பலன்

இந்த எஸ்ஐபி முதலீடு மூலம் பெரிதும் நடுத்தர குடும்பங்களே பலனடைவதாக குறிப்பிடுகிறார் பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ்.

இதுகுறித்து விவரிக்கையில், "பங்குசந்தை என்று செல்லும்போது நல்ல நிறுவனத்தின் பங்கு என்பதே 700 ரூபாய்க்கு மேல்தான் இருக்கும். குறைந்தது 2000 இருந்தால் மட்டுமே பங்குச்சந்தைக்குள் நுழைய முடியும். அந்த பணத்தில் வெறும் 5 பங்குகளுக்குள் மட்டுமே வாங்க முடியும். எனவே மிக சிறிய அளவில் மட்டுமே முதலீட்டில் ஈடுபட முடியும். அதுவும் அந்த ஒரு சில பங்குகளும் கவிழ்ந்துவிட்டால் பணம் அவ்வளவுதான்."

"ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடே 500 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போட்டுள்ள நிறுவனம் உங்களது முதலீட்டை கொண்டு பல நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதால் ஒரு நிறுவனம் கவிழ்ந்தாலும் கூட, மற்றொரு நிறுவனம் கைகொடுக்கும் போது உங்களது பங்கு மதிப்பு உயர்ந்துக் கொண்டே இருக்கிறது" என்கிறார் அவர்.

எனவே ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவருக்கு குறைந்தபட்ச வருமானத்திற்கான உறுதியை தருவதிலும், இழப்பு குறித்த அபாயத்தை குறைக்கவும் இது உதவுவதாக ராஜேஷ் தெரிவிக்கிறார்.

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "அபாயம் குறைவாக இருக்கும் இடத்தில் வருமானமும் குறைவாக இருக்கும். அபாயம் அதிகம் உள்ள இடத்தில் வருமானம் அதிகமாக இருக்கும்”

வங்கிக் கணக்கு மற்றும் எஸ்ஐபி முதலீடு வேறுபாடு என்ன?

பணத்தை சேமிக்க மற்றும் பெருக்க பலரும் பல விதமான வங்கிக் கணக்குகளில் சேமித்து வைப்பதை நாம் அறிவோம். ஆனால், அதிலிருந்து இந்த எஸ்ஐபி முதலீடு எப்படி வேறுபடுகிறது என்ற கேள்விக்கு ராஜேஷ் கீழ்வருமாறு பதிலளிக்கிறார்.

“இது இரண்டுக்கும் உள்ள இரண்டு வேறுபாடு அதன் முதலீட்டு அபாயமும், அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் தான். அபாயம் குறைவாக இருக்கும் இடத்தில் வருமானமும் குறைவாக இருக்கும். அபாயம் அதிகம் உள்ள இடத்தில் வருமானம் அதிகமாக இருக்கும்” என்கிறார் அவர்.

உதாரணத்திற்கு, வங்கி உள்ளிட்ட எந்த வங்கி சார் நிறுவனத்திலும் உள்ள எந்த விதமான சேமிப்பு கணக்குகளில் பணத்தை முதலீடு செய்தாலும் அது அபாயமற்றது. ஆனால், அதிலிருந்து வரும் வருமானம் 7 – 8% மட்டுமே கிடைக்கும்.

அதேசமயம், எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்ட்டில் நீண்டகால திட்டத்தில் முதலீடு செய்யும்போது வருமானம் குறித்து அபாயம் இருந்தாலும், இறுதியில் உங்களுக்கு 15-18% வரை வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார் ராஜேஷ்.

மேலும், “வங்கியில் இருந்து 7% வருமானம் கிடைத்தாலும், அந்தாண்டு பணவீக்கம் 6% என்றால் வருமானத்தின் பெரும்பகுதி அதில் கழிந்துவிடும். ஆனால், சந்தையில் இருந்து கிடைக்கக்கூடிய மேற்சொன்ன மியூச்சுவல் ஃபண்ட் வருமானம் 15-18% என்பதால் பணவீக்கத்தை கழித்தாலும் கூட அதன் பயன் ஓரளவுக்கு நமக்கு கிடைக்கும்” என்கிறார் அவர்.

மியூச்சுவல் ஃபண்ட்

பட மூலாதாரம், Getty Images

மியூச்சுவல் ஃபண்ட்டுக்கும் , எஸ்ஐபிக்கும் என்ன வேறுபாடு?

பலரும் மியூச்சுவல் ஃபண்ட் , எஸ்ஐபி ஆகிய இரண்டையும் குழப்பிக் கொள்வதுண்டு. இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்து ராஜேஷிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “மியூச்சுவல் ஃபண்ட் என்பது நீங்கள் முதலீடு செய்யும் நிதி. எஸ்ஐபி என்பது நீங்கள் முதலீடு செய்வதற்கான வழிமுறை” என்கிறார்.

அவரது கூற்றுப்படி, “மியூச்சுவல் ஃபண்ட்டில் நீங்கள் இரு வகையில் முதலீடு செய்யலாம். லம்ப்சம்(Lumpsum) என்று சொல்லக்கூடிய ஒரே நேரத்தில் அதிக பணத்தை முதலீடு செய்ய கூடிய முறையும் உண்டு. ஒவ்வொரு மாதம் சிறிது சிறிதாக பணத்தை முதலீடு செய்யும் எஸ்ஐபி முறையும் உண்டு. இது இரண்டிலுமே பணமிழப்பு அபாயங்கள் உள்ளன. ஆனால், நீண்டகாலம் முதலீடு செய்து வருபவர்களுக்கு அந்த அபாயம் குறைவு.”

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "டீமேட்(Demat) கணக்கு ஒன்றை தொடங்கி லம்ப்சம் அல்லது எஸ்ஐபி முறையில் ஒரே தவணை அல்லது மாதத்தவணையில் நீங்கள் பணத்தை முதலீடு செய்துக் கொள்ளலாம்.”

புதிதாக முதலீடு செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பெரும்பாலும் முதலீடு சார்ந்த துறையில் புதிதாக வருபவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவறிழைக்கும் சாத்தியங்கள் உண்டு. எனவே, முதல்முறையாக முதலீட்டில் இறங்குபவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள் குறித்து விவரிக்கிறார் ராஜேஷ்.

அவரது கூற்றுப்படி, “ஒருவர் முதலில் தன்னால் எந்தளவிற்கு துணிந்து(Risk) இறங்க முடியும் என்பதை ஒருவர் தெரிந்துக் கொள்ள வேண்டும். பின்னர், தான் எவ்வளவு பணத்தை முதலீடு செய்யப்போகிறேன் என்பதை முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.”

“அதற்கு பிறகு ஒரு நல்ல நிறுவனத்தில் டீமேட்(Demat) கணக்கு ஒன்றை தொடங்கி லம்ப்சம் (ஒரே நேரத்தில் மொத்தமாகப் பணம் கட்டுவது) அல்லது எஸ்ஐபி முறையில் ஒரே தவணை அல்லது மாதத்தவணையில் நீங்கள் பணத்தை முதலீடு செய்துக் கொள்ளலாம்.”

மேலும், முக்கியமாக உடனடியாக பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் முதலீட்டில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கிறார் அவர்.

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்

பட மூலாதாரம், SATHISHKUMAR

படக்குறிப்பு, நிதி ஆலோசகர் சதீஷ் குமார்

திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும்

ஒரு எஸ்ஐபி கணக்கை தொடங்கும் முன் நம்முடைய எதிர்கால திட்டம், முதலீடு திட்டம், ஓய்வு திட்டம் என்ன என எல்லாவற்றையும் சிந்தித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் நிதி ஆலோசகரான சதீஷ் குமார்.

மேலும், “ஒருவரின் வயதை பொறுத்து அவர் எந்த மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்யலாம்” என்கிறார் அவர்.

உதாரணமாக, ஒரு இளைஞர் 100% பங்கு நிதியில்(Equity Fund) முதலீடு செய்யலாம். இதுவே ஒரு நடுத்தர வயதுடையவராக இருந்தால் ஹைபிரிட் நிதியில்(Hybrid Fund) முதலீடு செய்யலாம். இது இல்லாமல் வயது முதிர்ந்தவர்கள், பெரிய அபாயம் எதுவும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்புபவர்கள் கடன் நிதி(debt fund) மற்றும் கோல்ட் பாண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம் என்று அவர் ஆலோசனை தருகிறார்.

பாதியில் பணத்தை பெற முடியுமா?

பொதுவாக வங்கிக்கணக்கில் செலுத்தும் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும். அதே போல் இந்த பணத்தை பாதியில் பெற முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்.

அதற்கு முடியும் என்று பதிலளிக்கிறார் ராஜேஷ்.

“எஸ்ஐபி முறையில் வருமான வரிக்காக போடும் முதலீட்டை தவிர, மற்ற எந்த முதலீடாக இருந்தாலும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் போடலாம், எடுக்கலாம். மேலும், திடீரென்று முதலீட்டை நிறுத்த வேண்டுமென்றாலும் நிறுத்திக்கொள்ளலாம். இரண்டு மாதத்திற்கு மட்டும் நிறுத்தி வைக்க வேண்டுமானால் அதையும் செய்ய முடியும். ஒரு மாதம் கட்டாமல் கடக்க வேண்டுமென்றாலும் அதற்கான வாய்ப்பும் உண்டு” என்கிறார் அவர்.

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வொரு நிறுவனத்திடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஃபண்டுகள் இருக்கின்றன.

எந்த மாதிரியான ஃபண்டுகள் உள்ளன?

இந்தியாவை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான நிதிநிறுவனங்கள் உள்ளன. அதே சமயம் நூறுக்கும் குறைவான AMC என்று சொல்லக்கூடிய Assert Management Company -க்களே உள்ளன. இந்த ஒவ்வொரு நிறுவனத்திடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஃபண்டுகள் இருக்கின்றன.

இதுகுறித்து விவரித்த ராஜேஷ், பங்கு நிதி (equity fund) என்பது வெறும் பங்குகள் மீது மட்டுமே முதலீடு செய்யப்படுபவை. கடன் நிதி(debt fund) என்பது பாண்டு மற்றும் டெப்பாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்வது, ஹைபிரிட் நிதி (Hybrid fund) என்பது மேல்சொன்ன அனைத்தும் உள்ளடக்கியது.

லிக்விட் நிதி(Liquid Fund) என்பது குறுகிய கால பணச்சந்தை மற்றும் வங்கிகளுக்கு கடன் வழங்குவது போன்றவற்றில் முதலீடு செய்யப்படுவது. ஐடி நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்தால் அது ஐடி நிதி (IT Fund), அடிப்படை உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் அது உள்கட்டமைப்பு நிதி (Infrastructure Fund). இது போல் பல வகையான மியூச்சுவல் ஃபண்ட் உள்ளது என்கிறார்.

எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்?

இப்போதெல்லாம் எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மக்களின் ஆசையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவதற்கான பல நூதன மோசடிகள் நடக்கின்றன. அதுபோல் இந்த துறையிலும் மோசடிகள் நடக்குமா? எந்த நிறுவனத்தை நம்பி முதலீடு செய்வது என்று ராஜேஸிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “முதலீட்டு நிறுவனங்களை பொறுத்தவரை அவை கடுமையான விதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி, அஸோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா(AMFI) மற்றும் செபி ஆகிய அமைப்புகளுக்கு கட்டுப்பட்டே இயங்குவதால் எந்த நிறுவனம் குறித்தும் கவலைப்பட வேண்டியதே இல்லை. ஆனால், நீங்கள் எந்த ஃபண்டில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதற்கே கவலைப்பட வேண்டும்” என்கிறார்.

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, IT Fund, Infrastructure Fund உள்ளிட்டவை சீசனல் ஃபண்ட் வகையை சேர்ந்தவை. அதனால் அவற்றில் ஏற்றம் இறக்கம் எப்போதும் இருக்கும் என்கிறார் ராஜேஷ்.

எந்த மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்?

புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு தாங்கள் எந்த துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது என்பதில் குழப்பம் இருக்கும். ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு கணக்கு போட்டபடி வெற்றி கிடைக்காமல் பதற்றம் இருக்கும். இதற்கு தீர்வாக எப்போதும் பாதுகாப்பான மற்றும் அபாயம் குறைந்த சில மியூச்சுவல் ஃபண்ட் தேர்வுகளும் உள்ளன.

பொதுவாக ஐ.டி, உள்கட்டமைப்பு நிதி உள்ளிட்டவை சீசனல் ஃபண்ட் வகையை சேர்ந்தவை. அதனால் அவற்றில் ஏற்றம் இறக்கம் எப்போதும் இருக்கும் என்கிறார் ராஜேஷ்.

ஆனால், “இண்டக்ஸ் நிதி (index fund) என்பது மேல்சொன்ன அனைத்து வகை ஃபண்ட்களையும் உள்ளடக்கியது. எல்லா நிறுவனத்திலும் இந்த இண்டக்ஸ் நிதி இருக்கும். நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகியவற்றின் கடந்த கால வரலாற்றின்படி, அவை நிலையாக 16% வருமானத்தை கொடுத்துள்ளன. எனவே இண்டக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, உங்கள் முதலீட்டு நிறுவனம் நிஃப்டி அல்லது சென்செக்ஸ் ஆகிய எந்த பங்கை வாங்கினாலும் அதிலிலுள்ள நிறுவனங்கள் மூலம் உங்கள் பங்குகளுக்கு மதிப்பு வந்து சேரும்” என்கிறார் அவர்.

சாதக , பாதகங்கள் என்னென்ன?

எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் அதற்கான சாதக பாதகங்கள் உண்டு. அப்படி, இந்த எஸ்ஐபி திட்டத்திலும் சாதக, பாதகங்கள் உண்டு.

“3 முதல் 5 வருடங்கள் என்னும் குறைந்த இடைவெளியில் இவ்வளவு வருமானம் வரும் என்று உத்திரவாதம் கொடுக்க முடியாது. இதே நீங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திட்டம் மூலம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நிதியிழப்பு ஏற்படும் அபாயம் இருக்காது” என்கிறார் ராஜேஷ்.

ஆனாலும், உங்கள் ஒட்டுமொத்த முதலீட்டில் 30% - க்கு மேல் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறார் அவர்.

அதே சமயம், “எஸ்ஐபி முதலீட்டை பொறுத்தவரை பணம் இழக்கும் அபாயத்தை குறைப்பதற்கு இங்கு ஒரு நிறுவனம், அதன் நிதி மேலாளர், பங்குகளில் முதலீடு செய்வது குறித்தான உத்திகளை வகுப்பதற்கான குழு ஆகியவை உள்ளன. ஆனால், நேரடி பங்குச்சந்தை விற்பனை ஆகியவற்றில் ஈடுபடும்போது ஒரு பங்கை வாங்கி அதன் மதிப்பு குறைந்துவிட்டால் முதலீடு செய்த பணம் கிடைக்காது. எனவே குறைந்த அபாயத்துடன் இந்த முதலீட்டை செய்ய முடியும்” என்கிறார் சதீஸ்குமார்.

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோடிக்கணக்கில் லாபம் பெறுவதற்கான தளம் இந்த எஸ்ஐபி இல்லை என்று அழுத்தமாக கூறுகிறார் சதீஸ்குமார்

ரூ.1000 முதலீடு போட்டு கோடிகளை அள்ள முடியுமா?

பங்குச்சந்தை உள்ளிட்ட இதுபோன்ற முதலீடு சார்ந்து வரும் பலரது கனவும் குறைந்த பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெற வேண்டும் என்பதாகவே இருக்கிறது. பல மோசடி கும்பல்களும் இந்த ஆசை வார்தையைக் கூறி மக்களை தங்கள் வலையில் வீழ்த்துகின்றன.

அதுபோன்ற கோடிக்கணக்கில் லாபம் பெறுவதற்கான தளம் இந்த எஸ்ஐபி இல்லை என்று அழுத்தமாக கூறுகிறார் சதீஷ்குமார். அதற்கான பல முதலீடு தளங்கள் வேறு உள்ளது. ஆனால், இந்த எஸ்ஐபி முதலீடு என்பதே மெதுவான முறையில் குறைந்த அபாயம் கொண்ட முதலீட்டை செய்து நிலையான வருமானத்தை பெறுவதே ஆகும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

எஸ்ஐபி கால்குலேட்டர் என்றால் என்ன?

எஸ்ஐபி முதலீட்டில் ஈடுபடுபவர்கள் தங்களது எதிர்கால வருமானத்தை முழுமையாக கணிக்கமுடியாவிட்டாலும், ஓரளவு அவற்றை கணக்கிட ஒரு வழிமுறை உண்டு. அதுதான் எஸ்ஐபி கால்குலேட்டர்.

சாதாரண கணக்கிடும் கால்குலேட்டர் போல முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்றவாறு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு சொல்வதுதான் இந்த எஸ்ஐபி கால்குலேட்டர். இதற்கு சில சூத்திரங்களும் உண்டு. இது இல்லாமல் நேரடியாக கூகுள் வழியாக கூட உங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை நீங்கள் கணக்கிட்டு கொள்ளலாம்.

இதன்மூலம் உங்களது முதலீட்டை நீங்கள் நெறிப்படுத்தி கொண்டுசெல்லலாம்.

என்ஏவி(NAV) என்றால் என்ன?

பொதுவாக ஒவ்வொரு பங்குக்கும் ஒரு விலை இருக்கும். அதுபோல மியூச்சுவல் ஃபண்ட்டும் யூனிட் என்ற அளவில் தான் வழங்கப்படும். அப்படி ஒவ்வொரு யூனிட்டின் விலையை குறிப்பதுதான் இந்த நெட் அஸர்ட் வேல்யூ (NET ASSERT VALUE).

ஒரு நாளைக்கு ஒரு ஃபண்டின் வரவு, செலவு, இன்றைய மதிப்பு என்ன என்பதை சொல்வதுதான் இந்த மதிப்பீடு. ஒரு மியூச்சுவல் ஃபண்ட்டை வாங்கினாலும், விற்றாலும் இந்த விலையில் தான் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)