புதுச்சேரியில் 9 வயது சிறுமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுப்பு: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு - நடந்தது என்ன?

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி ஒருவர் கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தமிழகம், புதுச்சேரி தாண்டி இந்தியா முழுவதும் மற்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
காணாமல் போய் 72 மணி நேரத்திற்குப் பிறகு வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்டு கைகால்கள் கட்டபட்ட நிலையில் அச்சிறுமி நேற்று (புதன், மார்ச் 7) சடலமாக மீட்கபட்டார்.
இதனால், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக புதுச்சேரி போலீஸார் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (வியாழன், மார்ச் 7) சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன.
நேற்றிலிருந்து (புதன் மார்ச் 7) புதுச்சேரி முழுவதும் சமூக அமைப்புகளும் மாணவர்களும் சிறுமிக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

காணாமல் போன ஐந்தாம் வகுப்பு மாணவி
புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயதான சிறுமி கடந்த சனிக்கிழமை (மார்ச் 2) மதியம் 2 மணி அளவில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு நன்கொடை வசூலிக்க வந்தவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அதற்கு பின்னர் அவர் மாயமாகிவிட்டார். இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அவர் தெருவில் தனியாக நடந்து செல்வது மட்டுமே பதிவாகி இருந்தது. அதனால் அச்சிறுமி முத்தியால்பேட்டை பகுதியை தாண்டி செல்லவில்லை என்று காவல்துறையினர் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர், ஞாயிறுக்கிழமை முழுவதும் சோலை நகர் பகுதியில் உள்ள வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அதே நேரத்தில் மயான கொள்ளை நிதி வசூலிக்க வந்தவர்களையும் அழைத்து விசாரணை செய்துபோது அவர்கள் சிறுமியை கடத்தவில்லை என தெரியவர, அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல முடியாமல் போலீசார் தவித்தனர்.
தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடும் பணியையும் தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமை (மார்ச் 4) அன்று 40 மணி நேரத்திற்கு மேலாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை என போலீசாரை கண்டித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்று மாலைக்குள் சிறுமியை நிச்சயம் கண்டுபிடித்து விடுவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் அங்கு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கால்வாயிலிருந்து வீசிய துர்நாற்றம்
தொடர்ந்து பதற்றம் அதிகரிக்கவே, கூடுதலாக இரண்டு தனிப்படைகளுடன் சேர்த்து ஐந்து தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் தேடுதலை தீவிரப்படுத்தினர்.
சோலை நகர் அமைந்திருப்பது கடல் சார்ந்த பகுதி என்பதால், சிறுமி கடல் பகுதிக்கு சென்று இருக்கலாம் அல்லது அருகே ஏதாவது வாய்க்கால்களில் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மாற்று திசையில் கொண்டு சென்றனர். அப்பொழுது சோலை நகர் அருகாமையில் உள்ள அம்பேத்கர் நகர் வாய்க்காலில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இரண்டு குழுக்களாக இந்த வாய்க்கால் பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்ததில், குடியிருப்பு நிறைந்த ஒரு இடத்தில் துர்நாற்றம் வீசுவதை கண்ட போலீசார், அங்கு சென்று பார்த்தபோது வெள்ளைத் துணியில் உடல் ஒன்று இருப்பதை கண்டனர்.
தொடர்ந்து இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துவிட்டு அந்த துணியை திறந்து பார்க்க முற்பட்டனர். ஆனால் அது வாய்க்கால் நீரில் ஊறியிருந்ததால் அதனை திறக்க முடியாமல் அந்தத் துணியில் ஒரு பகுதியை மட்டும் கிழித்து பார்த்ததில் துணிக்குள் காணாமல் போன சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மேலும் 72 மணி நேரத்திற்கு பிறகு சிறுமியின் உடலை சடலமாக கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல முற்பட்ட போது ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கிருந்து உடலை கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
கதறியழுத சிறுமியின் தந்தை
இதைத்தொடர்ந்து கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி சாலையில் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றதால் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலுகாக புதுச்சேரிக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த மத்திய சி.ஐ.எஸ்.எஃப் படையினர் மறியல் நடக்கும் இடத்திற்கு வந்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இதற்கிடையே சிறுமியின் தந்தை சாலை மறியல் நடக்கும் இடத்திற்கு வந்து கதறி அழுது தன் மகளை கொலை செய்தவர்களை விட்டு விடாதீர்கள் என காவல்துறை அதிகாரியிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்தார். அப்போது அங்கிருந்த காவல் கண்காணிப்பாளர்கள் கொலையாலியை கண்டுப்பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் அவரை அங்கிருந்து அவரது உறவினர்கள் அழைத்து சென்றனர்.

அஞ்சலி, போராட்டம்
கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி முழுதும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் பட்டானூரில் இருந்து பேரணியாக வந்து தமிழக புதுச்சேரி எல்லையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டி புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி வேண்டியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் கடற்கரை வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோருக்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கி அறிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோரை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் வரவழைத்து சந்தித்துப் பேசினார். சிறுமியின் பெற்றோர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையில் சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. ஏராளமானோர் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் சொல்வது என்ன?
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனச் செல்வம், ஒரு சிலர் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவர்கள்தான் கைது செய்யப்பட்டவர்கள் என்றும், கொலையாளிகள் என்றும் செய்திகள் பரப்பி வருவதாகத் தெரிவித்தார்.
"குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலீசார் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்,” என்றார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி.கே. பழனிச்சாமி, கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்
விசாரணையைத் துவங்கிய சிறப்புக் குழு
இந்த வழக்கை விசாரிக்க, ஐ.பி.எஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு புதன்கிழமை இரவு உத்தரவு வெளியிட்டது. இந்தச் சிறப்புக் குழு விசாரணையை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் ஐந்து நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சிறுமி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வீட்டில், இன்று காலை தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்குள்ள தடயங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விசாரணை தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகையில், குற்றவாளிகள் இரண்டு பேர் மற்றும் சந்தேகப்படக்கூடிய ஐந்து நபர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக, ஜிப்மர் ஆய்வுகத்துக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, சிறுமி கொலையில் காவல்துறையினர் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரையும் மாற்ற அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













