தமிழ்நாட்டில் வட மாநில குழந்தை கடத்தல் கும்பல் உலவுவது உண்மையா? - அரசுத் தரப்பில் கூறப்படுவது என்ன?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த இரண்டு மாதங்களாக, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளைக் கடத்திச் செல்வதாக சமூகவலைதளத்தில் போலியான தகவல் பரப்பப்படுகிறது.
இதனால், சில வட மாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இந்நிலையில், இந்தப் போலிச் செய்தியை பரப்பிய இருவரை திண்டுக்கலில் போலீசார் கைது செய்துள்ளனர் .
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கும் குழு இந்த காணொளிகளைச் சரிப்பார்த்து அவை போலியானவை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
என்ன நடக்கிறது இந்தச் சம்பவத்தில்?
என்ன நடந்தது?
கடந்த இரண்டு மாதங்களாக, தமிழ்நாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் குழந்தைகளைக் கடத்திச் செல்வதாக ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதைப் பரப்புபவர்கள் ‘குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்ற தகவலையும் பகிர்ந்து வருகின்றனர். இதன்காரணமாக, சென்னை, திண்டுக்கல், உட்பட பல இடங்களில் வடமாநில இளைஞர்களை ‘குழந்தை கடத்தல்காரர்கள்’ என சந்தேகித்து அவர்களைப் பிடித்து பொதுமக்கள் அடிக்கும் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.
குறிப்பாக, கடந்த மாதம், சென்னை அருகே பம்மலில் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு திருநங்கையை வடமாநிலத்தவர் என்று தவறாகச் சந்தேகித்து மக்கள் தாக்கினர். இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில், திருவொற்றியூர் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டு வந்த பிகாரைச் சேர்ந்த வட மாநில இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தாக்கினர். அதேபோல் சென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இதன்பிறகு, காவல்துறையினர் அந்தக் காணொளி உண்மையானதல்ல யாரும் நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் செய்தியறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், இந்தக் காணொளி தற்போது சென்னையைத் தாண்டி நாகப்பட்டினம், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவத் துவங்கி இருக்கிறது.

திண்டுக்கலில் இளைஞர் மீது தாக்குதல்
மார்ச் மாதத்தின் துவக்கத்தில், இந்தக் காணொளி, திண்டுக்கலில் பரவியது. குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று சுற்றித் திரிவதாக செய்தி பரப்பப்பட்டது. இதன் விளைவாக, வேடசந்தூர் பகுதியில் வடமதுரை அருகே கொம்பேறிபட்டி கிராமத்தில் சுற்றித்திரிந்த ஓர் இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிடித்துள்ளனர். அவரிடம் பேச முயன்ற போது அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, அந்த இளைஞரை கிராம மக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அதன்பின்னர், வட மாநில இளைஞர் பிடிபட்டது தொடர்பான தகவலை காவல்துறைக்கு அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்நபரை மீட்டுச் சென்று விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் அவரை அங்கிருந்த ஒரு மனநல காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர்.

பட மூலாதாரம், TWITTER
வதந்தி பரப்பிய இருவர் கைது
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் அ.பிரதீப், வேடசந்தூரில் தனியார் தொலைகாட்சி சேனலின் லோகோவைப் போலியாகத் தயார் செய்து, இந்த போலிச் செய்தியைப் பரப்பிய பாம்புலுப்பட்டியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தங்கராஜ் (23), ஒட்டன்சத்திரம் பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய் செய்திபரப்பி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வடிவேல் முருகன் (30) ஆகிய இருவரும் இந்திய தண்டனைச் சட்டம் 504, 507, சமூக வலைதளத்தில் பயன்படுத்தி பொய் செய்தி பரப்பியதால் ஐடி பிரிவின் 65, 67 பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், “குழந்தைகள் கடத்தப்படுவதாகப் பரவும் தகவலை மக்கள் நம்ப வேண்டாம், இது போன்ற செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம்," என்றார் பிரதீப்.

பட மூலாதாரம், TWITTER
விளிம்பு நிலை சமூகம் குறிவைப்பு
இதுகுறித்து, பிபிசியிடம் பேசிய, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கும் குழுவின் திட்ட இயக்குநரான ஐயன் கார்த்திகேயன், இதுபோன்ற போலிச் செய்திகளின் முலம் விளிம்பு நிலை சமூகம் குறி வைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் குழந்தைகளை கடத்தும் கும்பல் சுற்றி வருவதாக பரப்பப்படும் செய்தி ஒரு வதந்தி. இந்தக் காணொளிகள் வட இந்தியா, வெளிநாடுகளில் எடுக்கப்பட்டவை. இங்கே தவறான தகவலுடன் பரப்பட்டு வருகின்றன. இதில் வடமாநிலத்தவருக்கு எதிராக மட்டுமே வீடியோக்கள் பரப்பப்படுவதில்லை," என்றார்.
“சென்னையில் ஒரு திருநங்கை, மன நலம் பாதிக்கப்பட்டவர், உணவு டெலிவரி செய்யும் பணியாளர் என விளிம்பு நிலையில்இருக்கக் கூடியவர்களை கடத்தல் கும்பல் என்ற தவறான கண்ணோட்டத்தில் பார்த்து மக்கள் அச்ச உணர்வில் தாக்கி வருகின்றனர். தமிழ்நாடு ஃபேக்ட் செக் யூனிட் ( TN Fact Check) என்ற சமூக வலைதளப் பக்கத்தில் இதுபோன்ற பொய் வீடியோக்களால் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்களின் உண்மைத் தகவலை பதிவு செய்து வருகிறோம்," என்றார்.
மேலும் பேசிய அவர், “குழந்தைகள் கடத்தப்படுவதாக வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. மக்களுக்கு சமூக ஊடகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முன்னர் தூய்மை வாகனத்தில் ஒலிப் பெருக்கி அறிவிப்பு ஆகிவவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இது போன்ற செய்திகள் வந்தால் மக்கள் 1098, 100, 120 என்ற எண்களுக்கு அழைத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கலாம்," என்றார்.

பட மூலாதாரம், SAMPATH
"குழந்தை கடத்தல் வதந்தி சமூகப் பதற்றத்தை உருவாக்கும்"
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டப் பொதுச்செயலாளர் ஜி. சம்பத், தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் குழந்தைகளை கடத்துவதாக பரப்பப்பட்டு வரும் வதந்தி, இனவாதக் கருத்துக்களை பேசுபவர்களால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது, என்றார்.
“இதுபோன்ற வதந்திகளால் திருப்பூர்,கோவை மாவட்டங்களில் பதற்றம் ஏற்படும். இப்படித்தான் கடந்த ஆண்டு, திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பிகாரிலிருந்து பொய் செய்தி பரப்பப்பட்டு வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறினர். எனவே, அரசு இதுபோன்ற வதந்திகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு, இவை தொடர்ந்து பரப்பப்படுவதை தடுக்க வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்களை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து, முறைப்படுத்தினால் இது போன்ற செய்திகள் பரப்பப்படும் போது அதனை தடுக்கலாம்", என்றார்.
தமிழ்நாட்டில், திண்டுக்கல், நாகை ஆகிய மாவட்டங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தியை பரப்பிய 6 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து சிலரைக் கைது செய்துள்ளது. மேலும் சமூக வலைதளத்தில் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். பொய்ச் செய்தி பரப்பும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












