பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம்

பனாமா கால்வாய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகத்தின் முக்கிய கடல் வழிகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • எழுதியவர், மைக்கேல் ஃப்ளூரி
    • பதவி, வட அமெரிக்க வணிக செய்தியாளர், பனாமா

உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.

சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்தின் பனாமா கால்வாய் காதுன் எனும் நன்னீர் ஏரியின் மூலம் நிரப்பப்பட்டு செயல்பட்டு வரும் கால்வாய் ஆகும். இந்நிலையில் சமீப காலமாக அந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா, காதுன் ஏரியின் நீர் மட்டம் 5 அடி குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஏரியை உருவாக்கும்போது அங்கிருந்த காடுகளின் மரங்கள் பாதியளவு மட்டுமே வெட்டப்பட்டன. ஒவ்வொரு முறை இந்த மாதம் வரும்போதும் அவற்றில் சில தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்ப்பதுண்டு.

ஆனால், இன்னும் முழுமையாக கோடைக் காலம்கூட தொடங்காத நிலையில் இப்போதே ஒரு காடளவிற்கான மரங்கள் நீர் மட்டத்துக்கு மேலே நீட்டிக் கொண்டிருப்பதாகவும் பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா தனது பயணத்தின்போது கண்டறிந்துள்ளார்.

பனாமா கால்வாய்
படக்குறிப்பு, பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா

பனாமா கால்வாய் குறைந்த வரத்து கொண்ட மழைநீரையே சார்ந்துள்ளது. இந்நிலையில் கால்வாயின் 110 வருட வரலாற்றில் இரண்டாவது முறையாக குறைந்த மழையும், வானிலையும் அதன் வறண்ட ஆண்டுக்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த அக்டோபர் தான் அதன் வரலாற்றில் முதல் வறண்ட மாதம். அப்போது இயல்பைவிட 41% குறைவாக மழை பொழிந்தது. இது அமெரிக்க - பசிபிக் வழித்தடம் வாயிலாக பயணிக்கும் 270 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்தது.

இதற்காக கால்வாய் நிர்வாகம் ஒரு சில நீர்சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. குறிப்பாக ஒரு சில கப்பல்களே ஒரு நாளில் கால்வாயை கடக்க முடியும் என்று அது விதியை உருவாக்கியது. காரணம் கால்வாயை இயக்க ஏரியின் தண்ணீரே தேவை.

இதைத் தொடர்ந்து ஒரு நாளைக்கு கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 36 இலிருந்து 24ஆக குறைக்கப்பட்டது. அதிலும் எடைக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால், ஒவ்வொரு கப்பலும் குறைந்த அளவு சரக்கையே கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இந்த தேக்கம் உலக வர்த்தகத்தில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

பனாமா கால்வாய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனாமா கால்வாய்

என்ன சிக்கல் ஏற்படும்?

பொதுவாக 5 சதவீத உலக கடல்சார் வர்த்தகம் மற்றும் 40% அமெரிக்க கண்டைனர்கள் அட்லாண்டிக் - பசிபிக் வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன. எனவே, இந்த வழித்தடம் வறண்டு விட்டால், கப்பல் நிறுவனங்கள் வேறு வழித்தடத்தை கண்டுபிடிக்க வேண்டிய தேவை வரும். இது நேரச்செலவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பண விரயத்தையும் அதிகப்படுத்தும்.

மேலும் தண்ணீர் வறட்சி உலக வர்த்தகத்திற்கு மட்டும் பாதிப்பல்ல. பனாமா கால்வாய் நிர்வாகம்தான், அந்நாட்டின் பாதி மக்கள்தொகைக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. எனவே, தொடர் தண்ணீர் வறட்சி இதிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால், தற்போதைக்கு கால்வாய் நிர்வாகம் இந்த தண்ணீர் இன்னும் ஒரு நூற்றாண்டு தாக்குபிடிப்பதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரியான இலியா எஸ்பினோ டி மரோட்டா, கால்வாயின் பிரச்னையை தீர்ப்பதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பனாமா கால்வாய்
படக்குறிப்பு, பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரி இலியா எஸ்பினோ டி மரோட்டா

பனாமா கால்வாய் சிக்கலுக்கு என்ன தீர்வு?

இதுகுறித்து அவர் பேசுகையில், “இது ஒரு தொடர்ச்சியான பிரச்னையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. போக்குவரத்து குறைப்பு அல்லது எடைக்குறைப்பு ஆகியவற்றையும் நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த நிர்வாகம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கான 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிலையான திட்டங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பூமியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இந்த திட்டங்கள் இது போன்ற முக்கிய வழித்தடங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

காலநிலை மாற்றத்தை குறிப்பிட்டு பேசிய இலியா எஸ்பினோ டி மரோட்டா, “பனாமா மிக அதிக மழை பெய்யும் ஒரு நாடு. ஆனால், சமீபத்தில் பல இடங்களை போலவே இங்கும் மழைப் பொழிவு குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே நிச்சயமாக நாம் எதிர்காலத்தை நோக்கி தயாராக வேண்டும்” என்கிறார்.

அதில் முக்கியமான ஒன்று தண்ணீரை சேமிப்பது.

கடல் மட்டத்திற்கு மேலே உள்ள வாயில்கள் வழியாக காதுன் ஏரி மற்றும் சிறிய அலாஜுவேலா ஏரியின் தண்ணீரின் மூலம் படகுகளை கொண்டு செல்வதே பனாமா கால்வாயின் பணியாகும்.

ஒவ்வொரு படகும் அதை கடப்பதற்கு 5 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கால்வாயை புதிப்பித்த போது 60% தண்ணீரை சேமிக்கும் வகையிலான நியோ-பனாமாக்ஸ் பூட்டுகள் மாற்றப்பட்டன.

ஆனாலும், பழைய பனாமாக்ஸ் பூட்டுகளும் செயற்பாட்டில் தான் உள்ளன. அவற்றை மாற்றியமைப்பது பெரிய திட்டம். இதற்கிடையில், ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்கு அதே நீரை பயன்படுத்துவதற்கான குறுக்கு வழி ஒன்றையும் பனாமா கால்வாய் நிர்வாகம் கண்டுபிடித்தது.

குறுக்கு வழியில் நீர் நிரப்பும் இந்த திட்டம் மூலம் தினசரி 6 கப்பல்கள் இந்த வழியை கடக்கும்போது பயன்படுத்தும் அளவிற்கான தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

2016இல் புதிய பூட்டுகள் மாற்றப்பட்டதில் இருந்து, நீர்தேக்கங்களை அமைப்பது குறித்து பனாமா கால்வாய் நிர்வாகம் சிந்தித்து வருகிறது.

பனாமா கால்வாய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனாமா கால்வாயில் சிறிய கப்பல்கள் நிற்கும் காட்சி

மழைப்பொழிவு மாதங்களில் அதிக நீரை சேமிக்கவும், வறட்சி காலங்களில் தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கவும் அந்த நிர்வாகம் அருகில் உள்ள இந்தியோ நதியில் அணைக்கட்ட விரும்புகிறது. மேலும் காதுன் ஏரிக்கு பைப் வழியாக நன்னீரை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் கப்பல் போக்குவரத்தை ஒரு நாளுக்கு 12 முதல் 15 வரை அதிகரிக்கும்.

இந்த திட்டத்தை முன்னெடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. காரணம் இந்த திட்டத்திற்கு இன்னும் காங்கிரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் கூட இதன் கட்டுமானம் முடிய சில ஆண்டுகள் ஆகும்.

இதில் மற்றுமொரு திட்டம் என்னவென்றால் உப்புநீக்கும் ஆலைகளை உருவாக்குவது. தொடர் மழையின்மை ஏரிகள் மற்றும் நதிகளை அதிக உப்புத்தன்மை வாய்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால், நாட்டின் முக்கியமான குடிநீர் ஆதாரங்களை பராமரிப்பது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. அதே சமயம் இந்த திட்டம் விலை உயர்ந்தது மட்டுமின்றி கடல்நீரில் இருந்து உப்பை நீக்குவதற்கு அதிகளவிலான ஆற்றல் தேவைப்படுகிறது.

இவர்களது திட்டப்பட்டியலில் செயற்கை மழையை வர வைப்பதும் கூட உள்ளது. மேகக்கூட்டங்களில் மழை உருவாக்கும் வேதிப்பொருட்களை தூவி மழை வருவிக்கும் மேக விதைப்பு முறையே இந்த செயற்கை மழை. இதை கேட்க அதிநவீன முறையாக தோன்றினாலும், இது 1940ஆம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறைதான்.

இந்த ஆண்டு ஏற்கனவே மோசமடைந்துள்ள உலக வர்த்தகம், மேலும் மோசமாகாமல் இருக்க வேண்டுமானால், இதற்கு உடனே தீர்வு கண்டறிய வேண்டும். தற்போது பனாமா கால்வாய் வழியாக நடக்கும் வர்த்தகத்தின் அளவை அதன் உச்ச அளவோடு ஒப்பிட்டால், 49% குறைந்துள்ளது.

இதனால் தங்களின் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ் . பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக ஜவுளிப் பொருட்களில் இருந்து உணவுகள் உள்ளிட்ட இரண்டு மில்லியன் டன் சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வேறேதும் நல்ல குறுக்குவழிகள் இல்லாததே பிரச்சனை என்கிறார் அவர்.

பனாமா கால்வாய்
படக்குறிப்பு, அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ்

பனாமா கால்வாய்க்கு மாற்று இருக்கிறதா?

செங்கடல் பிரச்னை எழுவதற்கு முன்பு, ஆசியாவிலிருந்து சில சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டன. அது பாதுகாப்பு குறைந்த தேர்வாக இருப்பதன் காரணமாக, பனாமா முழுவதும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

ஆனால், கப்பல்களில் இருந்து ரயில்கள் மற்றும் வாகனங்களில் சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கே அதிக செலவுகள் ஆவதாக கூறுகிறார் ஜோஸ் செர்வாண்டஸ். “அந்த செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர் மீதுதான் சுமத்தப்படுகிறது" என்றும் கூறுகிறார் அவர்.

எதிர்பார்த்தபடி மழை மே மாதத்தில் வந்தால், கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது நிர்வாகம். ஆனால், அது வெறும் தற்காலிக தீர்வு மட்டுமே.

மழைபொழிவதில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உலக வர்த்தகம் மற்றும் பனாமா கால்வாயின் நீண்ட எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் என்பதற்கான ஒரு நினைவூட்டல் இது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)