'வெட் இன் இந்தியா' திட்டம்: பிரதமர் மோதி உள்நாட்டு ஆடம்பர திருமணங்களை ஊக்குவிப்பதன் பின்னணி

'வெட் இன் இந்தியா'

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

'மேக் இன் இந்தியா' முழக்கத்தைப் போல 'வெட் இன் இந்தியா' என்ற அடுத்த முழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. அது என்ன "வெட் இன் இந்தியா"?

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக இன்று காஷ்மீருக்கு சென்றார் பிரதமர் மோதி. தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்‌ஷி மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஜம்மு காஷ்மீரின் விவசாயம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூபாய் 5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோதி, "இந்தியப் பிரபலங்கள் திருமணம் செய்துகொள்வதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதைத் தவிர்த்துவிட்டு, இந்தியாவில் உள்ள காஷ்மீர் போன்ற அழகான இடங்களுக்கு வந்து திருமணங்கள் செய்து கொள்ள வேண்டும். காஷ்மீர் என்றால் இதுவரை திரைப்பட படப்பிடிப்புகளுக்கு மட்டுமே விருப்பமான இடமாக இருந்தது, இனி அது திருமணங்களுக்கும் விருப்பமான இடமாக இருக்க வேண்டும்.

'வெட் இன் இந்தியா' (Wed in India- இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்), இதுவே என்னுடைய அடுத்த முழக்கம். எனவே உங்களது ஆடம்பர திருமணங்களை இந்தியாவில் நடத்துங்கள்" என கூறினார்.

குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழா சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் சூழ்நிலையில் பிரதமரின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மோதியின் லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு, இந்திய மக்கள் மத்தியில் அது குறித்து அதிகமாக பேசப்பட்டது. லட்சத்தீவு சுற்றுலாத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடைய பிரதமரின் பயணம் உதவும் எனவும் கூறப்பட்டது. அதே போல, இப்போது பிரதமரின் 'வெட் இன் இந்தியா' முழக்கம் இந்திய மக்களின் கவனத்தை காஷ்மீரை நோக்கி திரும்புமா?

'நடுத்தர மக்களும் விரும்பும் வெளிநாட்டுத் திருமணங்கள்'

பிரதமர் மோதியின் 'வெட் இன் இந்தியா' முழக்கம், காஷ்மீருக்கு சாதகமாக அமையுமா?

பட மூலாதாரம், Getty Images

பிரபலங்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார் 'ஹரிதா ஈவண்ட்ஸ்' நிறுவனர் ரகு லக்ஷ்மிநாராயணன்.

"கொரோனா காலத்திற்கு பிறகு வெளிநாடுகள் அல்லது இந்தியாவின் சுற்றுலாப் பிரதேசங்களுக்குச் சென்று திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது. எனது நண்பர் ஒருவர் வியட்நாம் சென்று திருமணம் செய்துகொண்டார். குடும்பம், உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டும் விமானத்தில் அழைத்துச் சென்றார்."

"எங்களிடம் திருமணத்திற்காக அணுகும் வாடிக்கையாளர்கள் பலரும் வெளிநாட்டு தலங்களையே விரும்புகிறார்கள். இப்போது இலங்கையை எடுத்துக்கொண்டால், அங்கு 100, 200 பேர் வரை தங்கக்கூடிய நல்ல கடற்கரை ரிசார்டுகள் இருக்கின்றன. விசா கிடைப்பதும் சுலபம். எனவே சிலரை மட்டும் விமானத்தில் அழைத்துக்கொண்டு போய், திருமணத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிடுகிறார்கள். பின்னர் இந்தியாவில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி வைத்துவிடுகிறார்கள்" என்கிறார் ரகு.

வெளிநாட்டில் திருமணம் செய்ய எவ்வளவு செலவாகும்?

பிரதமர் மோதியின் 'வெட் இன் இந்தியா' முழக்கம், காஷ்மீருக்கு சாதகமாக அமையுமா?
படக்குறிப்பு, 'ஹரிதா ஈவண்ட்ஸ்' நிறுவனர் ரகு லக்ஷ்மிநாராயணன்.

"இதற்கு காரணம் வெளிநாடுகளில் ஆடம்பர திருமணங்களுக்கென்றே ஒரு தனி தொழில்துறை இயங்குகிறது. இதற்காகவே சிறப்பான கட்டமைப்புகள் அங்கு உள்ளன. ஒரு வாடிக்கையாளர் வெளிநாட்டில் திருமணம் செய்ய வேண்டும் என எங்களிடம் சொன்னால், நாங்கள் அங்குள்ள எங்களது பார்ட்னர்களிடம் கலந்து பேசி, விமான டிக்கெட் முதல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விடுவோம்", என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "வழக்கமான முறையில் நடத்தப்படும் திருமணங்களை விட இதற்கு ஆகும் செலவு அதிகம் தான். குறைந்தது 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை ஆகும். ஆனால் வாழ்வில் ஒருமுறை தானே என்று மக்கள் இதற்காக செலவழிக்க தயாராக இருக்கிறார்கள்" என்கிறார்.

"இந்தியாவின் சுற்றுலா தலங்களில் திருமணங்கள் செய்துகொள்ள வேண்டும் என பிரதமர் கூறியிருப்பது நல்ல விஷயம். எப்படி மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவுகள் பிரபலமடைந்ததோ அது போலவே ஸ்பெயின், இத்தாலி, துருக்கி போன்ற இடங்களுக்கு மாற்றாக திருமணங்களுக்கு என கேரளா, ரிஷிகேஷ், காஷ்மீர், ஜெய்ப்பூர் போன்ற இடங்களும் பிரபலமடைய வேண்டும்" என்று கூறுகிறார் 'ஹரிதா ஈவண்ட்ஸ்' நிறுவனர் ரகு லக்ஷ்மிநாராயணன்.

ஆடம்பர இந்திய திருமணங்கள்

பிரதமர் மோதியின் 'வெட் இன் இந்தியா' முழக்கம், காஷ்மீருக்கு சாதகமாக அமையுமா?

பட மூலாதாரம், Getty Images

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (Confederation of All India Traders- சிஏஐடி) கடந்தாண்டு திருமண சீசனில் (நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரை) வெறும் 15 நாட்களில் இந்திய சந்தைகளில் 4.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளதாக கூறுகிறது.

2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் 3.75 லட்சம் கோடிக்கும், அதற்கு முந்தைய ஆண்டு 3.10 லட்சம் கோடிக்கும் வர்த்தகம் நடந்துள்ளது. கொரோனா காலத்தின் போது கடுமையான சரிவைச் சந்தித்த திருமணம் சார்ந்த வர்த்தகங்கள், கடந்த இரண்டு வருடங்களில் மிக அபாரமான வளர்ச்சியை சந்தித்துள்ளன.

அழகான சுற்றுலா தலங்களுக்கு சென்று திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இந்திய மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், 2022இல் 18% ஆக இருந்த இத்தகைய திருமணங்கள் 2024இல் 21% ஆக உயரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இந்திய பொருளாதாரம் உயரும்'

பிரதமர் மோதியின் 'வெட் இன் இந்தியா' முழக்கம், காஷ்மீருக்கு சாதகமாக அமையுமா?

பட மூலாதாரம், VaNagappan/X

படக்குறிப்பு, பொருளாதார நிபுணர் நாகப்பன்

"இந்தியாவின் அழகான சுற்றுலாத்தலங்களில் திருமணங்கள் செய்துகொள்வதன் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பணம் குறையும். அந்நியச் செலாவணியில் இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் பொருளாதாரமும், இந்திய மக்களின் வாழ்வாதாரமும் உயரும்" என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

"ஒரு திருமணம் என எடுத்துக்கொண்டால், அலங்கார ஏற்பாடுகள் செய்பவர்கள், கேட்டரிங் சர்வீஸ் குழு, இசைக்குழு, அருகிலுள்ள விடுதிகள், திருமண மண்டப ஊழியர்கள் என குறைந்து 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்துகொள்வதால், இதற்கான இந்தியப் பணமும், வேலைவாய்ப்பும் அங்கு சென்றுவிடுகிறது.

வெளிநாடுகளில் நடக்கும் ஆடம்பர திருமணங்களை மட்டுமே பார்க்கும் நாம், இதற்கு பின்னால் இத்தனை பேரின் வாழ்வாதாரம் இருப்பதையும் பார்க்க வேண்டும். இன்னொரு விஷயம், வெளிநாடுகளுக்கு 100 அல்லது 200 பேரை விமானத்தில் அழைத்துச் செல்கிறார்கள். அது இந்திய விமான நிறுவனமாக இல்லையென்றால் அப்போதும் இந்திய பணம் வெளிநாட்டிற்கு தான் செல்கிறது.

இது சிறிய விஷயமாக தெரியலாம். ஆனால் இது போன்ற சிறிய விஷயங்களும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சியடைவதற்கு காரணம் தான்" என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

தொடர்ந்து பேசிய அவர், "முன்பு கச்சா எண்ணெய், தங்கம், மின்சாதனங்களுக்காக நம் நாட்டு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம். இப்போது சுற்றுலாவுக்காகவும், ஆடம்பர திருமணங்களுக்காகவும் வெளிநாட்டிற்கு சென்று செலவு செய்கிறோம். காஷ்மீர் அழகானதா அல்லது சுவிட்சர்லாந்து அழகானதா எனக்கேட்டால், காஷ்மீர் தான் அழகு என்று சொல்வேன். இரண்டு இடங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன்.

பணக்காரர்களுக்கு என் மகனுக்கு சுவிட்சர்லாந்தில் திருமணம் என்று சொல்வதில் ஒரு கௌரவம். எனவே அவர்களை மாற்ற முடியாது. ஆனால் நடுத்தர வர்க்க மக்களும் கூட வெளிநாடுகளில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள்" என்கிறார்.

"நம் நாட்டில் உள்ள அழகான இடங்கள் பல உள்ளன. ஆனால் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லை. அழகு மட்டும் போதாது, நல்ல சாலைகள், தங்குமிடங்களும் அவசியம் அல்லவா. எனவே கூடுதலாக செலவானாலும் வெளிநாடுகளைத் தேர்வு செய்கிறார்கள்.

இப்போது பிரதமரே இதைப் பற்றி பேசியிருப்பது நல்லது தான். காஷ்மீர் போன்ற அழகான இடங்களில் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தினால் மக்கள் நிச்சயம் அங்கு திருமணத்திற்காக செல்வார்கள்" என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)