உலகின் கவனத்தை ஈர்த்த அம்பானி வீட்டு விழா - இந்திய மக்கள் என்ன நினைக்கிறார்கள்? - காணொளி
ஜாம்நகர், குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம். கடந்த சில நாட்களாக இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஜாம்நகர் பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் முகேஷ் அம்பானியின் வீட்டு விஷேஷம்.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழா ஜாம்நகரில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பிரபல பாடகி ரிஹானா, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா உள்ளிட்ட வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் மட்டுமின்றி பாலிவுட் திரைக்கலைஞர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என பலரும் ஜாம்நகரில் ஒன்றுகூடினர்.
சமூக ஊடகங்களில் வெளிவரும் வீடியோக்களில், ஜாம்நகரே விழா கோலம் பூண்டிருந்தது தெரிகிறது.
பிரபல அரசியல் சிந்தனையாளரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் பங்களிப்பு ஆசிரியருமான பிரதாப் பானு மேத்தா, இந்தத் நிகழ்ச்சி குறித்து "திருமணம் நம்பர் ஒன்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
'மக்களை திசை திருப்பும் காட்சிகள்'
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழா பெற்ற ஈர்ப்பு, இந்தியாவின் கலாசாரம் மற்றும் அரசியல் பொருளாதாரத்தில் நடக்கும் பரந்த மாற்றங்களைக் காண்பதற்கான ஒரு ஜன்னல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். இதுபோன்ற காட்சிகள் மக்களிடையே கோபத்தையோ எரிச்சலையோ உருவாக்குவது அரிது. பொறாமை எந்தச் சூழ்நிலையிலும் போட்டியாளர் அருகில் இருக்கும்போது மட்டுமே ஏற்படுகிறது.
இந்தியா போன்ற சமத்துவமற்ற சமூகத்தில் இதுபோன்ற காட்சிகள் அரங்கேறும்போது, அது மிகவும் விசித்திரமாகவும் மக்களை திசை திருப்புவதாகவும் இருக்கிறது. ஒருவரின் வெற்றி மற்றும் செல்வத்தால் எரிச்சல் அடைவது ஒரு சிதைந்த சிந்தனை. பண பலத்தை இப்படிக் காட்டுவது தேவையற்றது என்றால் அதை வெறுப்பதும் தேவையற்றதுதான் என பிரதாப் பானு அந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.
ஆடம் ஸ்மித் கூறியது போல் பணக்காரர்களிடம் 'தனிப்பட்ட, வித்தியாசமான அனுதாபம்' உள்ளது. அதாவது பணக்காரர்கள் நிச்சயமாக சாதாரண மக்களுக்கு ஓர் உத்வேகமாகத் திகழ்கிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்கள் பணக்காரர்களின் வெற்றியில் ஈர்க்கப்படுவதற்கு இதுவே காரணம்.

பட மூலாதாரம், ANI
'ஜாம்நகரில் குவிந்த கவர்ச்சி, பணம், அதிகாரம்'
அவர்கள் பணக்காரர்களிடம் அனுதாபம் கொள்கிறார்கள், அவர்களிடம் இருந்து உத்வேகம் பெறுகிறார்கள், எரிச்சலை உணர மாட்டார்கள். பணக்காரர்கள் சிலரிடம் கவர்ச்சி, சிலரிடம் தொழிலால் குவிந்த பணம், சிலரிடம் அதிகாரம் தெரிகிறது. ஜாம்நகரில் இவை அனைத்தும் ஒரே இடத்தில் காணப்பட்டன.
மற்றொரு முக்கியமான அம்சம் இந்த நிகழ்வு பொதுவில் காட்டப்பட்ட விதம்தான் எகிறார் பிரதாப் பானு
இங்கு பெரிய திரைப்பட தயாரிப்பாளர்கள் திரைப்படங்களாக மாறினர், கேளிக்கைத் துறையைக் கட்டுப்படுத்துபவர்கள் இங்கு பொழுதுபோக்காக மாறினர், செய்திகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே செய்திகளாயினர் என குறிப்பிடும் பிரதாப் பானு, இந்த முழு நிகழ்வையும் பார்க்கும்போது மூன்று விஷயங்கள் நினைவுக்கு வருவதாக கூறுகிறார்
முதலாவதாக, பணம் படைத்தவனுக்கு அதிகாரம் உண்டு என்பது பழமொழி. ஆனால் பெரிய மூலதனம் என்ன செய்ய முடியும் என்ற வரையறை மாறிவிட்டது. சில கட்டுமானங்களை அம்பானி அல்லது அதானியால் மட்டுமே செய்ய முடியும்.
பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள், வேகமாகக் கட்டமைக்கும் துறைமுகங்கள், மலிவான தொலைத்தொடர்பு ஆகியற்றுக்கு 'பெரிய மூலதனம்' மட்டுமே ஒரே வழி.
இரண்டாவதாக, அம்பானியின் விஷயத்தில், உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் ஒரு காட்சியை பார்த்தனர். கத்தாரின் ஷேக் முதல் ரிஹானா வரை பல பிரபலங்கள் திரண்டதை உலகமே இந்தியாவில் கவனித்துக் கொண்டிருந்தது. இந்தியா ஒரு பணக்கார நாடாக இல்லாவிட்டால் என்ன செய்வது, குறைந்தபட்சம் அது உலகின் பணக்காரர்களைக் கொண்டுள்ளது.
மூன்றாவது இந்திய மூலதனம் இந்து தேசியவாதத்துடன் இணைந்தது. மூலதனம் கண்ணுக்குத் தெரியும். அதேநேரம் மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் வெளிப்பட வேண்டும். இதைக் காட்ட ஒரு சரியான முதலாளித்துவ பண்பட்ட குடும்பத்தைவிட வேறு என்ன இருக்க முடியும். இந்த மூன்றும் சேர்ந்து அதை ஒரு சரியான தேசியவாத நிகழ்வாக ஆக்குகிறது என தமது கட்டுரையில் பிரதாப் பானு எழுதியுள்ளார்
அம்பானி குடும்பத்தின் பூர்வீக கிராமமான ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து முடிந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற்றது.
அம்பானியின் மூன்று பிள்ளைகளில் இளையவர் ஆனந்த் அம்பானி. 28 வயதாகும் இவர், பல ரிலையன்ஸ் நிறுவனங்களின் குழுக்களில் இயக்குநராக உள்ளார். ராதிகா என்கோர் ஹெல்த்கேர் போர்டில் வணிக இயக்குநராக உள்ளார்.
முன்னதாக, அம்பானியின் மகள் இஷாவின் திருமணம் 2018ஆம் ஆண்டு நடைபெற்றபோது, அது இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான திருமணம் என பேசப்பட்டது. தோராயமாக 700 கோடி ரூபாய் செலவானதாக நம்பப்படுகிறது. மும்பையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் அமெரிக்க பாடகி பியான்ஸ் உள்பட பலவேறு முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



