4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி பங்குகளை வழங்கிய இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

இன்போசிஸ், நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி, ரோகன் மூர்த்தி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாகியிருக்கிறார்.

அவருக்கு வயது, வெறும் 4 மாதங்கள் தான்.

ஆம், அந்தக் கோடீஸ்வரர் இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் பேரனான ஏகாக்ராஹ் ரோஹன் மூர்த்தி.

தனது மகனான ரோகன் மூர்த்திக்கும் மருமகள் அபர்ணா கிருஷ்ணனுக்கும் புதிதாகப் பிறந்திருக்கும் மகனான ஏகாக்ராஹுக்கு, நாராயணமூர்த்தி ரூ.240கோடி அளவிலான இன்போசிஸ் நிறுவனப் பங்குகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

இந்தத் தகவல், சமீபத்தில் வெளியான பங்குப் பரிமாற்ற ஒழுங்குமுறைத் தாக்கல் ஆவணங்களில் இருந்து தெரியவதுள்ளது என்று ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

“ஒழுங்குமுறை தாக்கல் பத்திரங்களின்படி, 77 வயதான நாராயணமூர்த்தி, தனது பேரனுக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை தனது பேரன் பெயருக்கு மாற்றியிருக்கிறார். இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் 0.04% ஆகும். இந்தப் பரிவர்த்தனை சந்தைக்கு வெளியே நடந்திருக்கிறது,” என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் தனது செய்தியறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இன்போசிஸ், நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி, ரோகன் மூர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாராயணமூர்த்தி 2011-ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்

சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்

இந்தப் பரிவர்த்தனையின் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயணமூர்த்தியின் பங்கு 0.40%-இல் இருந்து 0.36%-ஆகக் குறைந்திருக்கிறது, என்று நிதிசார்ந்த செய்திகளை வெளியிடும் ‘லைவ் மின்ட்’ இதழ் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

மேலும், நாராயணமூர்த்தியின் இந்தப் ‘பரிசளிப்பினை’ இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மற்றப் பங்குதாரர்கள் விரும்பவில்லை என்றும் லைவ் மின்ட் இதழ் தெரிவித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 15) இருந்ததைவிட, திங்கட்கிழமை (மார்ச் 18) பங்குச்சந்தை மூடப்படுகையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 2% வீழ்ச்சியடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்போசிஸ், நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி, ரோகன் மூர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோகன் மூர்த்தி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் சொரோகோ (Soroco) எனும் மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து அதற்கு தலைமை வகித்து வருகிறார்

யார் இந்த ரோகன் மூர்த்தி?

நாராயணமூர்த்திக்கும் அவரது மனைவி சுதா மூர்த்திக்கும் பிறந்தவரான ரோகன் மூர்த்தி, அமெரிக்காவின் ஹார்வார்ட் பழ்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் சொரோகோ (Soroco) எனும் மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து அதற்கு தலைமை வகித்து வருகிறார். அவரது மனைவியான அபர்ணா கிருஷ்ணன், மூர்த்தி மீடியா என்ற நிறுவனத்திற்கு தலைமை தாங்கி வருகிறார்.

இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதி ஏகாக்ரஹ் என்ற மகன் பிறந்தார். இவர் நாராயணமூர்த்திக்கும் சுதா மூர்த்திக்கும் பிறந்த மூன்றாவது பேரக் குழந்தையாவார்.

நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியினரின் மூத்த மகளான அக்சதா மூர்த்தி பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக்கின் மனைவியாவார். அவர்களுக்கு கிருஷ்ணா, அனௌஷ்கா என்று இரண்டு மகள்கள் உள்ளனர் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தனது செய்தியறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இன்போசிஸ், நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி, ரோகன் மூர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுதா மூர்த்தி கடந்த மார்ச் 8-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்

நாராயணமூர்த்தி – சுதா மூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கள்

கடந்த 1981-ஆம் ஆண்டு, 7 பேருடன் வெறும் 250 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20,000 ரூபாய்) முதலீட்டில் துவக்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனம், சென்ற ஆண்டு மட்டும் 1.6 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது.

தனது நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் இலவசமாகவும் குறைந்த விலையிலும் நிறுவனத்தின் பங்குகளைக் கொடுத்த நாராயணமூர்த்தி, 2011-ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

சமீபகாலமாக தொழில்துறை குறித்த கருத்துக்களை பொதுவெளியில் பேசிவருகிறார் நாராயணமூர்த்தி. கடந்த ஜனவரி மாதம், ஒவ்வொருவரும் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையானது.

அதேபோல், அவரது மனைவி சுதா மூர்த்தி கடந்த வருடம் ஒரு யூடியூப் நிகழ்ச்சியில் தன்னை ஒரு ‘தூய சைவம்’ உண்பவர் எனவும், அசைவம் சமைக்கப் பயன்படுத்தப்பட்ட கரண்டிகள் சைவ உணவு சமைக்கவும் பயன்படுத்தப் பட்டிருக்கக்கூடும் என்பது அவரது மிகப்பெரிய அச்சங்களில் ஒன்று எனவும் பேசியிருந்தார். அதுவும் அப்போது சர்ச்சையானது.

சுதா மூர்த்தி கடந்த மார்ச் 8-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)