நரேந்திர மோதியின் வட இந்திய உத்தியால், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு என்ன பலன் கிடைக்கும்?

நாடாளுமன்றத் தேர்தல், நரேந்திர மோதி, அதிமுக, பாமக, தமிழ்நாடு

பட மூலாதாரம், X/NarendraModi

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த ஒரு மாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து செல்கிறார். அவரது வருகை பா.ஜ.க-வுக்கு வாக்குகளைப் பெற்றுத் தருமா?

கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு முறைக்கு மேல் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை திறந்து வைப்பது, திருநெல்வேலியில் பொதுக்கூட்டம், பல்லடத்தில் பொதுக்கூட்டம், கோயம்புத்தூரில் ‘ரோட் ஷோ’ என வாரம் ஒரு முறையாவது தமிழக மக்கள் பிரதமர் நரேந்திர மோதியை பார்த்துவிட முடிகிறது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடக்கும் என சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை அவர் கோவையில் மேற்கொண்ட 'ரோட் ஷோ' வெகுவாகக் கவனிக்கப்பட்டது.

கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் நான்கு கி.மீ. தூரத்திற்கு இந்த ரோட் ஷோ நடத்தப்பட்டது. மேலும், இன்று (செவ்வாய்க் கிழமை, மார்ச் 19) சேலத்தில் ஒரு பொதுக் கூட்டத்திலும் பேசவிருக்கிறார் நரேந்திர மோதி.

தமிழ்நாடு முதல் கட்டத்திலேயே தேர்தலைச் சந்திக்கும் நிலையில், பா.ஜ.கவின் முக்கியத் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோதி மாநிலத்திற்கு அடிக்கடி வருவது இயல்பானதுதான். ஆனால், கடந்த தேர்தலின் புள்ளிவிவரங்களை வைத்துப்பார்க்கும்போது இந்திய அளவில் தமிழகத்திற்கு பெரிய அளவில் பலனளிக்காத மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிரதமரின் இந்தப் பயணங்கள் தமிழக பா.ஜ.கவுக்கு சிறிய அளவிலாவது உதவுமா?

நாடாளுமன்றத் தேர்தல், நரேந்திர மோதி, அதிமுக, பாமக, தமிழ்நாடு
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

‘ரோட் ஷோ-வால் என்ன பலன்?’

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வந்துபார்த்துவிட்டு, ஏதாவது மத்திய அரசின் மூலமாக உதவி செய்திருந்தால், இப்போது பிரதமர் வரும்போது எல்லோரும் வரவேற்றிருப்பார்கள். ஆனால் அப்போது பிரதமர் எட்டியே பார்க்கவில்லை. மத்திய குழு வந்து பார்த்த பிறகு, நிவாரணத் தொகை வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. குறைந்தபட்சமாக ஏதாவது கொடுத்திருக்கலாம். மாறாக, கடந்த ஆண்டு பேரிடர் மேலாண்மை நிதியையும் இந்த ஆண்டு நிதியையும் கொடுத்தார்கள். இதைத் தவிர என்ன செய்தார்கள் என்ற கேள்வி சாதாரண பொதுமக்கள் மத்தியில் எழும், என்கிறார்.

“இதுபோன்ற ரோட் ஷோக்களால் என்ன பலன்? திருவரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கு வந்து மணிக்கணக்கில் பூஜை செய்கிறார். அதனால் மக்களுக்கு என்ன பலன்? மக்கள் துயரத்தில் இருக்கும்போது அவர்கள் கண்ணீரைத் துடைக்க வேண்டாமா? ராமர் கோவில் கட்டியது சிலருக்கு மகிழ்ச்சியளிக்கலாம். ஆனால், தமிழக மக்களின் துயரத்தைத் துடைப்பதில் உங்கள் பங்களிப்பு என்ன? ஏதாவது உதவி செய்வதாகச் சொல்லியிருந்தால் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு எழுச்சி வந்திருக்கும்,” என்கிறார் குபேந்திரன்.

ஆனால், அதை விட்டுவிட்டு, ரோட் ஷோ நடத்துவது உதவாது, என்கிறார் அவர்.

“அதற்குக் காரணம் இருக்கிறது. வட மாநிலங்களில் இப்படி ஒரு கலாச்சாரம் இருக்கிறது. இது இரண்டு விதங்களில் சிக்கலானது. முதலாவது காரணம், பாதுகாப்பு. பிரதமர் ரோட் ஷோ செய்யும்போது அவருக்கான பாதுகாப்பை அளிப்பது மிகச் சிக்கலானது. பொதுக்கூட்டம் என்றால் பரவாயில்லை. ஆட்கள் முன்பே சோதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள். ஆனால், ரோட் ஷோ அப்படியல்ல. கூட்டத்தில் ஒரு சின்ன கல் விழுந்தாலும் தமிழ்நாட்டிற்குத்தான் அவப்பெயர். இது ஒரு வட இந்தியக் கலாச்சாரம்."

"இதற்கு முன்பும் வட மாநிலத் தலைவர்கள் திறந்த வெளி ஜீப்பில் வந்திருக்கிறார்கள். 80-களில் ராஜீவ் காந்தி தன் மனைவி சோனியா காந்தியுடன் தானே ஜீப்பை ஒட்டிக்கொண்டு வந்திருக்கிறார். ஆனால், அந்த காலகட்டம் வேறு. தமிழகத் தலைவர்கள் வாகனங்களில் வருவார்கள், பேசுவார்கள். கைகாட்டிவிட்டுச் செல்வார்கள். ஆனால், இப்போது ஒரு தலைவர் வரும்போது பூக்களைத் தூக்கி வீசுவது போன்றவற்றையெல்லாம் இங்கே பெரிதாக ரசிக்க மாட்டார்கள்," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

நாடாளுமன்றத் தேர்தல், நரேந்திர மோதி, அதிமுக, பாமக, தமிழ்நாடு

பட மூலாதாரம், X/NarendraModi

படக்குறிப்பு, கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோதி நடத்திய ரோட் ஷோ

‘மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்’

பிரதமரின் பயணத்தின்போது பாதுகாப்பு மிக முக்கியமானது என்று குறிப்பிடும் குபேந்திரன் நகருக்குள் ரோட் ஷோ நடக்கும்போது ஏற்படும் அசௌகர்யங்கள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் என்கிறார்.

"கர்நாடக மாநிலத்தில் இதுபோல ரோட் ஷோவை நடத்தினார் பிரதமர். அப்போது பலர் தமிழிலேயே தங்கள் அசௌகர்யங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். கோவையில் ஞாயிறு மாலையில் இருந்தே சாலைகளை மூட ஆரம்பித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட 25 மணி நேரம் அந்த சாலைகளை காவல்துறையினர் எடுத்துக்கொண்டார்கள். மக்கள் வசிக்கும் பகுதியில் இப்படி 25 மணி நேரம் சாலைகளை மூடிவைக்கலாமா? மேட்டுப் பாளையத்தில் இருந்து ஜி.என். மில்ஸ் ரோடு வரும் இடத்தில் சாலையை மூடியிருக்கிறார்கள். பாலம் மூடப்பட்டது. பிரதான சாலையை பயன்படுத்த முடியாது. அப்படியானால் மக்களுக்கு எந்த அளவுக்கு கஷ்டம் இருந்திருக்கும்? அப்படிப் பார்க்கும்போது இது பா.ஜ.க. மீதுதான் அதிருப்தியை ஏற்படுத்தும்," என்கிறார் குபேந்திரன்.

‘தமிழகத்தில் பா.ஜ.க ஆதரவு வெறும் தோற்றமே’

கடந்த காலங்களோடு ஒப்பிட்டால், தற்போது தமிழகத்தில் பா.ஜ.கவுக்கான ஆதரவு அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்ட தோற்றம் என்கிறார் அவர்.

"எடப்பாடி கே. பழனிச்சாமி மீது வழக்கு இருக்கிறது. அவரது அமைச்சரவை சகாக்கள் மீது வழக்கு இருக்கிறது. இதையெல்லாம் மீறி பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என எடுத்த முடிவுக்காக தொண்டர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இவ்வளவு பெரிய கட்சியை மீறி பா.ஜ.க. இரண்டாவது இடத்திற்கு வரும், ஐந்து எம்.பிக்களை பெறுவார்கள், அ.தி.மு.கவுக்கு 4 எம்.பிக்கள்கூட வரமாட்டார்கள் என ஒரு செய்தி போலியாகக் கட்டமைக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய அளவில் பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது என்பதை ஏற்க முடியாது. 3.75% இருந்த அதன் வாக்கு வங்கி, 8%-9%தொடலாம். இரட்டை இலக்கத்தைத் தொடவே முடியாது," என்கிறார் குபேந்திரன்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், NarendraModi/X

குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

கோவை சாய்பாபா காலனி சாய்பாபா கோவில் அருகே துவங்கிய மோதியின் வாகன பேரணி, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது.

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே 1998ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருந்ததால், பிரதமரின் வாகன பேரணி நிறைவு பெறும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் பா.ஜ.கவினர், குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

துவக்கம் முதல் வாகனத்தில் இருந்து மக்களை சந்தித்த பிரதமர் மோதி, பேரணியில் நிறைவுப்பகுதியில், 1998ல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்த 58 பேருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், சிவன் பார்வதி வேடணிந்து பஞ்சவாத்தியம் நடத்தப்பட்டதுடன், தொண்டாமுத்தூரை சேர்ந்த இருளர் பழங்குடியின மக்கள் மற்றும் நீலகிரியை சேர்ந்த படுகர் இன பழங்குடியினரின் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

இந்தப்பேரணியில் மக்களை வாகனத்தில் இருந்தபடி சந்தித்து, குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதைத் தவிர, பிரதமர் மோதி மக்களிடம் பேசுவது போன்று வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை.

வரலாற்றில் கோயம்புத்தூரும் பா.ஜ.கவும்

தமிழகத்தை பொறுத்தவரையில் 1998ம் ஆண்டு, மக்களவை தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த பா.ஜ.க, கோவை, நீலகிரி மற்றும் திருச்சி என மூன்று இடங்களில் வென்றது. பின், அதே ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த பின், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி 1999ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க தமிழகத்தில் போட்டியிட்டது.

இதிலும், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோவை, நீலகிரி, திருச்சியில் வென்றதுடன், கூடுதலாக நாகர்கோவில் தொகுதியிலும் வென்றது. அதன்பின், 2014ல் கன்னியாகுமரியில் மட்டுமே பா.ஜ.க வென்றது, இந்த வெற்றிக்குப்பின் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வென்றது இல்லை.

கோவை, நீலகிரியை பொறுத்தவரையில், 1999ம் ஆண்டுக்குப்பின் நடந்த எந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தன்வசப்படுத்த முடியவில்லை.

கூட்டணியின்றி பா.ஜ.க தனித்து போட்டியிடும் நிலையில், கோவையில் பிரதமர் வாகன பேரணி நடத்தியுள்ளது, கோவை, நீலகிரியை ’டார்கெட்’ செய்து நடத்தப்பட்டதா? மோதியின் பிரச்சாரம் உண்மையில் பா.ஜ.கவுக்கு பலனளிக்குமா? என்ற கேள்விகளையும் எழுச்செய்துள்ளது.

கூடுதல் தகவல்கள்: ச. பிரசாந்த், பிபிசி தமிழுக்காக

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)