நீங்கள் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படை பறிமுதல் செய்தால் மீட்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். அப்படி நடந்தால் அதனைத் திரும்பப் பெறுவதற்கான விழிமுறைகள் என்ன?
அதேவேளையில் மக்கள் கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரொக்கத்தை ரூ.50,000-இல் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வணிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுவது என்ன?
என்னென்ன விதிகள் அமலில் உள்ளன?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நன்நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அகற்றுவது, சுவொட்டிகள், சுவர் ஓவியங்களை வண்ணம் பூசி மறைப்பது, தலைவர்களின் சிலைகளை மறைப்பது போன்ற பணிகளை மாநிலத் தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அரசு அலுவலர்களை வைத்து செயல்படுத்தி வருகின்றனர்.
இதில், குறிப்பாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சிறப்பு தேர்தல் பறக்கும் படை (Flying Squad Teams), நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்வார்கள்.

'தேர்தல் நடத்தை விதியால் சிறு, குறு தொழில் பாதிப்பு'
இந்நிலையில் இந்தக் குழுக்கள் பெரும்பாலும் சிறு, குறு வியாபாரிகள் பொருட்கள் வாங்குவதற்காக எடுத்துச் செல்லும் பணத்தையே பறிமுதல் செய்கின்றனர் எனவும், இதனால் வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழத் துவங்கி இருக்கின்றன.
தேர்தல் நடத்தை விதியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்கிறார் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் சரக்குகளை சோதனை செய்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டாலும் சிறு, குறு வியாபாரிகள் அவர்களது தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை் தேர்தல் விதி மீறல், ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட பணம் எனச் சொல்லி பறிமுதல் செய்கின்றனர், என்றார்.
“பெரிய முதலாளிகள் மட்டுமே வங்கிக் கணக்கின் வழியாக பணப் பரிவர்த்தனைகள் செய்வார்கள். ஆனால், சிறு வணிகர்கள் நேரடியாக பணத்தை கொண்டு சென்றால்தான் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும். அதற்கு எப்படி அவர்கள் ஆவணத்தை காண்பிக்க முடியும்,” என அவர் கேள்வி எழுப்புகிறார்.

'தெளிவான அறிவிப்பு இல்லாததால் குழப்பம்'
தொடர்ந்து பேசிய அவர் “எது ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் என்பது குறித்த சரியான தகவல் தேர்தல் ஆணையத்திடமிருந்து அதிகாரிகளுக்குச் சென்று சேரவில்லை. அவர்கள் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பத்தை தடுக்கும் பணியை செய்யாமல் வியாபாரிகளின் பணத்தை பிடித்து வருகின்றனர்,” என்றார்.
மேலும், “நாங்கள் எங்களது லெட்டர் பேடில் இவ்வளவு தொகையை கொண்டுச் செல்கிறோம் என டைப் செய்து எடுத்துச் செல்கிறோம். அதனை சில தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் அனைத்து ஆவணமும் இருந்தாலும் பிடித்துச் சென்று பின்னர் ஆவணத்தை வந்து காண்பித்து பெற்றுச் செல்லச் சொல்கிறார்கள்,” என்றார்.
தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை
மேலும் இது குறித்து பேசிய ரத்னவேல், “இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் எங்களது சங்கத்தின் சார்பில், வணிகர்கள் பொருட்களை வாங்குவதற்கான கூடுதல் பணத்தை எடுத்துச் செல்ல வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும், ஒரு லட்சம் ரூபாய் வரை ஆவணமின்றி ரொக்கத்தை கையில் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை முன் வைத்திருக்கிறோம்,” என்றார்.
“தமிழ்நாட்டில் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்குப் பிறகாவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் எல்லைகளில் தேர்தலுக்கான நடத்தைகளை பின்பற்றலாம்,” என்றார்.

‘தேர்தல் சமயத்தில் தங்கம் வியாபாரம் 10% குறையும்’
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை ஜூவல்லர்ஸ் மற்றும் புல்லியன் சங்கத்தின் செயலாளர் பி.கர்பூரம், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்து வர முடியாததால் தங்க வியாபாரம் பாதிப்பு அடையும். முன்பு 30% வியாபாரம் நடைபெற்றால் இனி தேர்தல் சமயத்தில் அது 10% குறைந்து விடும், என்றார்.
தங்க நகைக்கடை வியாபாரத்தில் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு உரிய ஆவணங்களை வைத்துதான் நகைகளை எடுத்துச் செல்வார்கள். அப்படித்தான் மார்ச் 17-க்குள் கொரியர் வழியாக மதுரைக்கு தங்கம் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், உரிய ஆவணம் இல்லை என அதிகாரிகள் கூறி பிடித்ததாக கூறுகின்றனர்.
தங்க நகை வைத்திருப்பவர்கள் அதற்கான அடையாள அட்டையை காண்பித்தால் அதிகாரிகள் ஆவணம் இருக்கும் பட்சத்தில் அதனை அனுப்பி வைக்க வேண்டும் என்றவர், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
“இதற்கு ஒரு முறையான வழிமுறையை தேர்தல் ஆணையம் கூற வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக தொழில் முடங்கும் சூழல் ஏற்படும்,” என்றார்.

எந்தெந்த ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்பப் பெறலாம்?
தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதனை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்த கேள்வியை பிபிசி தமிழ் திருநெல்வேலி மாவட்டத் தேர்தல் அதிகாரியான கா.ப. கார்த்திகேயனிடம் முன்வைத்தது.
அதற்கு பதிலளித்த அவர், பறிமுதல் செய்யப்பட்ட பணமோ பொருளோ ரூ.10 லட்சத்திற்குள் மதிப்பிடப்பட்டால் அவை மாவட்டக் கருவூலத்தில் வைக்கப்படும், என்றார். “அதற்கு மேல் மதிப்புள்ள பணம் அல்லது பொருட்கள் பிடிபட்டால் அதனை தேர்தல் அதிகாரிகள் வருமான வரிதுறையினரிடம் சமர்ப்பித்து விடுவார்கள்,” என்றார்.
“சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனம் அதற்கான உரிய ஆவணங்களை வருமான வரி துறையினரிடம் காண்பித்து தங்களுடைய பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்," என்றார்.
விவசாயிகள் வியாபாரிகள் என்ன செய்ய வேண்டும்?
தொடர்ந்து பேசிய அவர் "ஒரு விவசாயி நெல் கொள்முதல் நிலையத்தில் தனது நெல் மூட்டைகளை விற்று ரொக்கமாக வைத்திருந்து பிடிபட்டால் அவரிடம் நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுத்ததற்கான ரசீது இருக்கும். அதனை காண்பிக்கலாம் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின்பு தொகை மீண்டும் வழங்கப்பட்டும்,” என்றார்.
“அதேபோல், மக்கள் ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லும் போது பிடிபட்டால் அவர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை காண்பித்து பணத்தினை பெற்றுக் கொள்ளலாம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், வியாபாரிகள் தேர்தல் சமயத்தில் கூடுமானவரை ரூ.50,000-க்கு குறைவான பணத்தை எடுத்துச் செல்லலாம், அல்லது வங்கிப் பண பரிவர்த்தனைகள் மூலமாக தங்களது தொழிலை மேற்கொள்வது நல்லது, என்றார்.
“தேர்தல் விதி என்பது அனைவருக்கும் பொதுவானது அதனை பின்பற்ற வேண்டும்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












