கோவை தொகுதியில் போட்டியிட திமுக உறுதி காட்டுவதன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் அதே தொகுதியை மீண்டும் கேட்டது. ஆனால், திமுக கோவையை விட்டு தரவில்லை. அதற்கு பதிலாக ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கோவை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கும் திமுக அந்த தொகுதியை ஒதுக்கவில்லை.
மேற்கு மண்டலம் திமுகவுக்கு பாரம்பரியமாக ஆதரவு இருக்கும் பகுதி கிடையாது. 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது கூட கோவையில் உள்ள ஆறு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது.
திமுகவுக்கு மேற்கு மாவட்டங்களில் சொல்லும்படியான வலுவான தலைவர் இல்லாதது ஒரு பலவீனமே. கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த பகுதியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வந்தவர். அவர் மீதுள்ள வழக்குகள் காரணமாக திமுக அவரை இந்த தேர்தலில் நம்பியிருக்க முடியாது.
திமுக கோவையில் நேரடியாக போட்டியிட்டு வென்றது, கோவை குண்டுவெடிப்புகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் 1996ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில். 28 ஆண்டுகளாக தனக்கென நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டிராத தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாக களம் இறங்க வேண்டும் என விரும்புவதற்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
கோவையில் யார் யார் வெற்றி பெற்றுள்ளனர்?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி ஆர் நடராஜன் 1.7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவின் வேட்பாளர், தற்போதைய ஜார்கண்ட் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் பிடித்திருந்தார்.
அதற்கு முன்பு 2014ம் ஆண்டு அதிமுகவின் பி நாகராஜன் 41 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அப்போதும் பாஜகவின் சி பி ராதாகிருஷ்ணன் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
2009ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பி ஆர் நடராஜன் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் பிடித்தது.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இது வரை ஏழு முறை கம்யூனிஸ்டுகள், ஆறு முறை காங்கிரஸ், இரண்டு முறை திமுக, இரண்டு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கோவை நாடாளுமன்ற தொகுதி பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் என்ற ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. அங்கு தற்போது ஐந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினரும் உள்ளனர்.
இந்துக்கள், தொழில்துறையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், என கலவையான மக்களை கொண்ட தொகுதியாகும் கோவை. எனவே தான் அதிமுகவின் கோட்டையாகவும், கம்யூனிஸ்டுகள் ஏழு முறை வெற்றி பெற்ற தொகுதியாகவும், பாஜகவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரை கொடுத்த பகுதியாகவும் இருக்கிறது. இந்த முறை பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுவதால், அவர்களின் வாக்கு வங்கி சிதறக் கூடும்.
கோவையில் திமுகவின் பலம் என்ன?
2021ம் ஆண்டு மாநில ஆட்சியை பிடித்த பிறகு திமுக கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கவனம் செலுத்த தொடங்கியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டலத்துக்கு பொறுப்பாக நியமித்தது. சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியை தழுவினாலும், உள்ளாட்சித் தேர்தல்களில் நிலைமைகள் மாறின. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் 1.44 லட்சம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மகேந்திரன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
திமுக கோவை நாடாளுமன்ற தொகுதியை இது வரை இரண்டு முறை வென்றுள்ளது. 1980-ல் இரா. மோகன், 1996-ல் ராமநாதன் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2009-ம் ஆண்டும், 2014ம் ஆண்டும் கோவையில் நேரடியாக போட்டியிட்ட திமுக தோல்வியை தழுவியது. 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 18% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கோவை மட்டுமல்லாமல், கூட்டணி கட்சிகளுக்கு மேற்கு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட ஈரோடு, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளிலும் திமுக இந்த முறை நேரடியாக போட்டியிடுகிறது.

பட மூலாதாரம், Facebook
"கோவையில் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது"
கோவை மீது திமுக ஏன் இவ்வளவு கவனம் செலுத்துகிறது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் செய்தித் தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவனிடம் கேட்ட போது, “சமீபத்திய ஆய்வின் படி திமுகவுக்கு கோவையில் ஆதரவு இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே கோவையில் நிற்க முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேற்கு மண்டலம் திமுகவுக்கு பலவீனமான பகுதி கிடையாது என்பதற்கு கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த வெற்றியே சான்றாகும் என்றார். “கடந்த முறை பாஜக கோவை சட்டமன்ற தொகுதியில் வென்றிருக்கலாம். ஆனால், இப்போது நிலைமைகள் வேறு. சொல்லப்போனால் பாஜக அச்சத்தில் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள தொழில்துறையினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.” என்றார்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் பெற்று தரக்கூடிய தொகுதிகளில் கன்னியாகுமரிக்கு அடுத்து கோவை உள்ளது என்று கூறலாம். 1998ம் ஆண்டு குண்டு வெடிப்புக்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றும், கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது பாஜக. 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
தமிழக பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி “கோவை பாஜகவுக்கு தனி முக்கியத்துவம் கொண்ட தொகுதியே. தொழில் நகரமான கோவையில் பாஜகவுக்கு எப்போதுமே ஆதரவு உண்டு. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் கோவையில் பாஜகவின் கட்டமைப்பு வலுப்பெற்றுள்ளது. அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து வாக்குச்சாவடி அளவில் மக்களுடன் ஒன்றி பணியாற்றி வருகிறோம். எனவே கோவை பாஜகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்படும்.” என்றார்.

கோவையில் இந்த வாரம் சாலை பேரணி நடத்திய பிரதமர் நரேந்திர மோதி, கோவை மக்கள் தன் மனதுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியுள்ளார். 1998ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மக்களவை தேர்தல் அறிவித்த பின்னர் நரேந்திர மோதி தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ளும் முதல் தொகுதி கோவையாகும். சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மோதி நா தழுதழுக்க ஆடிட்டர் ரமேஷை நினைவு கூர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை அதிமுகவும் பாஜகவும் கூட்டாக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டன. மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த பகுதியில் செல்வாக்கைப் பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி கோவையில் அதிமுகவின் முக்கிய நபர் ஆவார். கரூரை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மேற்கு மண்டலத்தில் கணிசமான வரவேற்பு கிடைக்கும் என்று பாஜக நினைக்கிறது.
சாதிய சக்திகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள கொங்கு மண்டலத்தில், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் சில இடங்களில் ஒரே மாதிரியான வாக்கு வங்கி உள்ளது. இந்த முறை இருவரும் வெவ்வேறு கூட்டணியாக இருப்பதால், இந்த வாக்குகள் பிரியக்கூடும். எனவே அதிமுகவுக்கும் பாஜகவுக்குமே கூட கோவை தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.

பட மூலாதாரம், X/NARENDRAMODI
அண்ணாமலையை எதிர்க்கவே திமுக களமிறங்குகிறதா?
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் திமுக தானே போட்டியிட விரும்புவதாகும் கூறப்படுகிறது. இது குறித்து திமுகவின் டி கே எஸ் இளங்கோவன் , “ அப்படியும் இருக்கலாம். அண்ணாமலை நிறுத்தப்பட்டால், திமுகவின் வெற்றி மேலும் எளிதாகும். அதிமுகவும், பாஜகவும் ஒன்றாக இருந்த போதே, திமுக அங்கு வெற்றி பெற்றுள்ளது. இப்போது பிரிந்து இருப்பதால், திமுகவுக்கு சாதகமே” என்றார்.
பாஜகவின் சார்பாக அண்ணாமலை அல்ல, மோதியே நின்றாலும் கோவையில் வெற்றி பெற முடியாது என்கிறார் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பி ஆர் நடராஜன். “1998ம் ஆண்டு உயிரிழந்தவர்களுக்கு 26 ஆண்டுகள் கழித்து அஞ்சலி செலுத்துகிறார் மோதி. குண்டு வெடிப்புக்கு பிறகு பாஜக அங்கு வெற்றி பெற்றது. ஆனால் அதுவும் கூட்டணியில் இருந்ததால் தான். ஆனால் தற்போது தாங்கள் பலம் பெற்று விட்டதாக நம்புகின்றனர். ஆனால் அது உண்மையல்ல” என்றார்.
தொழில்துறையினர் ஆதரவு யாருக்கு?
தொழில் துறையினர் மத்தியில் தங்களுக்கு ஆதரவு இருக்கிறது என பாஜக கூறுகிறது. ஆனால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக எதிர்தரப்பினர் கூறுகின்றனர்.
பி ஆர் நடராஜன், “ரெய்டு காரணமாக சில தொழிலதிபர்கள் பயந்து இருக்கலாம். பாஜக கார்ப்பரேடுக்கு தான் தங்கள் ஆதரவு, சிறு தொழில்களுக்கு இல்லை என வெளிப்படையாகவே கூறுகிறது. அவர்களின் வரி விதிப்பு முறை பெரும் பாதிப்பை தொழில்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இவற்றை எல்லாம் தொழில்துறையினர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
பணக்காரர்கள் பலரை கொண்ட கொங்கு பகுதியில் பாஜகவுக்கு பணம் தான் கை கொடுக்கிறது என்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி பொன்னையன். “ கொங்கு மண்டலம் நிறைய பணக்காரர்களை, தொழிலதிபர்களை கொண்ட பகுதி. அவர்கள் ஆளுங்கட்சியுடன் நெருக்கமாக இருப்பது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறார்கள். எனவே அதிகமான பணம் செலவு செய்யப்படுகிறது. அண்ணாமலையின் கூட்டத்துக்கு ரூ.1000 வரை செலவு செய்து மக்களை வரவழைக்கிறார்கள். தமிழகத்தில் திமுகவின் விளம்பரங்களை விட பாஜகவின் விளம்பரங்களே அதிகமாக உள்ளன. திமுக இந்த முறை அதிக களப்பணியாற்றி வருகிறது. அவர்களும் நிறைய பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், படுதோல்வியை அடைய போகிறார்கள். கட்சியில் சிறந்த பணியாற்றும் தொண்டருக்கு கோவையில் வேட்பாளராக நிற்கும் வாய்ப்பு வழங்குவோம்” என்றார்.

கோவை தொகுதி கிடைக்காதது குறித்து வருத்தம் இருக்கிறதா என பி ஆர் நடராஜனிடம் கேட்டதற்கு, “கோவையில் ஏழு முறை கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றுள்ளோம். எனவே அந்த தொகுதியை கேட்பதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கோவையில் வெற்றி பெறவில்லை. ஆனால் அதன் பின் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றது. எனவே களத்தில் நிலைமைகள் மாறி இருப்பதாக திமுக நினைக்கிறது. கூட்டணி பலமும் இருப்பதால் வெற்றி பெறும். அதிமுகவும் பாஜகவும் இரண்டாவது இடத்துக்கான போட்டியை போடுகின்றனர்.” என்றார்.
அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், “கோவை தொகுதியில் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்த பிறகு தான் களத்தில் போட்டி எப்படி உள்ளது என்பது குறித்து தெரியவரும். திமுக எதிர்பாராத நபர் ஒருவரை கோவையில் நிறுத்தலாம். 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் பற்றி பேசி பிரச்சாரம் செய்வது, பாஜகவின் கையாலாகத் தனத்தை காட்டுகிறது. திமுகவின் அரசியலுக்கு வலுவான எதிர்ப்பை பாஜகவால் வழங்க இயலவில்லை” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












