லட்சுமிகாந்தன் கொலை: தியாகராஜ பாகவதர் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், NFAI
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தனின் கொலை வழக்கில் நடிகர்கள் எம்.கே. தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணனும் தண்டிக்கப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியது. பலரது வாழ்வை நாசம் செய்தது. இந்த வழக்கின் விரிவான பின்னணி என்ன?
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்திருந்த காலகட்டம் அது. சென்னையில் பத்திரிக்கை காகிதத்திற்கு பெரும் தட்டுப்பாட்டு இருந்தது. ஆனால், சி.என். லட்சுமிகாந்தனுக்கு காகிதத்திற்கோ, அதில் எழுத வேண்டிய தகவல்களுக்கோ பெரிய பஞ்சமில்லை.
பெரிய மனிதர்களின் ரகசியங்கள் என்ற பெயரில் அந்தரங்க தகவல்களையும் அவதூறுகளையும், தான் நடத்தி வந்த பத்திரிகைகளில் எழுதி வந்தார் இவர்.
சி.என். லட்சுமிகாந்தன் திருச்சியைச் சேர்ந்தவர். இன்டர்மீடியேட் வரை படித்திருந்தாலும் நேர் வழியில் செல்வதற்கு அவருக்கு விருப்பமில்லை. ஒருமுறை போலியாகக் கையெழுத்திட்டு மோசடி செய்ய முயன்றபோது காவல்துறையிடம் பிடிபட்டார். ஆனால், வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது காவல்துறையிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இதனால், தீவாந்திரத் தண்டனை விதிக்கப்பட்டது.
பத்து ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருந்தவர், பிறகு விடுதலையாகி 1939 வாக்கில் சென்னை திரும்பினார். மௌனப் படங்கள் குறைந்து திரைப்படங்கள் பேச ஆரம்பித்திருந்த காலம் அது.
நான்கு பேர் சேர்ந்தால், சினிமாவை பற்றிய பேச்சுத்தான். அதில் நடிப்பவர்களைப் பற்றிய விவாதம்தான். ஆகவே, ஒரு பத்திரிகையைத் தொடங்கி சினிமா நட்சத்திரங்களைப் பற்றி எழுதினால் நன்றாக விற்பனையாகுமென லக்ஷ்மிகாந்தனுக்கு தோன்றியது.
'சினிமா தூது' என்ற பத்திரிகையை ஆரம்பித்த அவர், திரையுலக பிரபலங்கள் உட்பட பல பிரபலங்களைப் பற்றியும் அவர்களது அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும் எழுத ஆரம்பித்தார்.
ஆனால், அந்தப் பத்திரிகை பதிவு செய்யப்படாத பத்திரிகை. இது குறித்து அரசிடம் பலரும் புகார் செய்யவே, பத்திரிகை தடை செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, நல்ல முறையில், ஆனால் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த 'இந்து நேசன்' என்ற பத்திரிகையை வாங்கி, தன் வழக்கமான பணிகளைத் தொடர்ந்தார் லட்சுமிகாந்தன். இந்த நிலையில்தான் லக்ஷ்மிகாந்தன் கொல்லப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சி.என். லட்சுமிகாந்தன் கொலை
சி.என்.லட்சுமிகாந்தன் மீதான முதல் தாக்குதல் நடந்தது 1944 அக்டோபர் 19ஆம் தேதி. புரசைவாக்கம் வெங்கடாச்சலம் தெருவில் சென்றுகொண்டிருந்த அவரை ஒருவர் கழுத்தில் குத்தினார்.
தன்னை வடிவேலு என்பவர் கத்தியால் குத்திவிட்டதாக காவல்துறையிடம் புகார் செய்யப் போனபோது, அவர்கள் புகாரை வாங்கவில்லை. மிகச் சிறிய காயம் என்பதால் பேசி அனுப்பிவிட்டார்கள்.
இதையடுத்து, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர விரும்பினார் லட்சுமிகாந்தன். இதற்காக ஜெ. நற்குணம் என்ற வழக்கறிஞரை அணுகினார். அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாணப் பத்திரத்தை எழுதித் தந்தார். அதை தட்டச்சு செய்து காலையில் வந்து காண்பிக்கும்படி சொன்னார். இது நடந்தது 1944 நவம்பர் 7ஆம் தேதி இரவு.
அடுத்த நாள் காலையில், ஒரு கை ரிக்ஷாவில் ஏறி நற்குணத்தின் வீட்டிற்குச் சென்று புகாரைக் காண்பித்துவிட்டு, வீடு திரும்ப மறுபடியும் அதே ரிக்ஷாவில் ஏறினார். ரிக்ஷா ஜெனரல் காலின்ஸ் சாலையில் வந்தபோது இருவர் ரிக்ஷாவை வழிமறித்தனர். ஒருவர் கையிலிருந்த பிச்சுவா கத்தியால் லட்சுமிகாந்தனின் அடிவயிற்றில் குத்த, மற்றொருவர் பேனா கத்தியால் தாறுமாறாக உடலைக் கீறினார்.
வயிற்றில் குத்தியிருந்த கத்தியைப் பிடுங்கி வீசிய லட்சுமிகாந்தன், மீண்டும் நற்குணத்தின் வீட்டிற்குச் சென்று தான் தாக்கப்பட்ட விவரத்தைத் தெரிவித்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதற்காக இன்னொரு ரிக்ஷாவில் ஏற்றி அனுப்பினார் நற்குணம்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வேப்பேரி காவல் நிலையத்திற்குச் சென்ற லக்ஷ்மிகாந்தன், தன்னை வடிவேலு என்பவரும் மற்றொருவரும் கத்தியால் குத்தியதாகப் புகார் அளித்தார். பிறகு, அரசு தலைமை மருத்துவமனையில் (தற்போது ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனை) சேர்க்கப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து அவருக்கு மருத்துவர் பி.ஆர். பாலகிருஷ்ணன் அறுவை சிகிச்சை செய்தார். ஆனால், அதற்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அடுத்த நாள் அதிகாலை நாளே கால் மணியளவில் உயிரிழந்தார் லட்சுமிகாந்தன்.
நவம்பர் 8ஆம் தேதி மாலையே வடிவேலு கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில் வடிவேலுவின் நண்பர்களான ராமலிங்கம், ராஜரத்தினம், ராஜகோபால் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
லட்சுமிகாந்தனை குத்திய வடிவேலு யார்?
சி.என். லக்ஷ்மிகாந்தன் தனது வீட்டின் முன் பகுதியை ஜானகி என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அதை காலிசெய்யும்படி சொன்னபோது, ஜானகி மறுத்தார். அந்த ஜானகியின் மைத்துனர்தான் வடிவேலு.
அவர் அப்போது சென்னையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். ஜானகி தனது வீட்டைக் காலி செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் லட்சுமிகாந்தன். வழக்கு லட்சுமிகாந்தனுக்கு சாதகமாக முடிந்தாலும் ஜானகி வெளியேற மறுத்தார்.
இதனால் ஜானகியை பற்றியும் அவருடைய மைத்துனரான வடிவேலுவைப் பற்றியும் தாறுமாறாக இந்து நேசனில் எழுதினார் லட்சுமிகாந்தன். இந்த நிலையில்தான் அக்டோபர் 19ஆம் தேதி முதல் கத்திக் குத்து சம்பவம் நடந்தது.
வடிவேலு கைதுசெய்யப்பட்ட பிறகு, ஆர்ய வீர சேனன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் லட்சுமிகாந்தனின் பாதுகாவலராக இருந்தவர். குத்துச் சண்டை வீரரும்கூட. அதற்குப் பிறகு, நடிகை மாதுரி தேவியின் சகோதரரான ஜெயானந்தம் என்பவர் டிசம்பர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மாதுரி தேவி குறித்து லட்சுமிகாந்தன் தொடர்ந்து மோசமாக எழுதி வந்திருந்தார்.
இந்த ஜெயானந்தம் டிசம்பர் 22ஆம் தேதி ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தார். அந்த வாக்குமூலத்தில், நாகலிங்கம், கமலநாதன், ஆர்ய வீர சேனன், வடிவேலு, ராஜாபாதர், ஆறுமுகம் ஆகியோர் தாங்கள் லட்சுமிகாந்தனை கொல்ல முடிவு செய்துவிட்டதாகவும் தங்களுக்கு ஆதரவாக எம்.கே. தியாகராஜ பாகவதரும் என்.எஸ். கிருஷ்ணனும் இருப்பதாகவும் கூறியதாக ஜெயானந்தன் சொன்னார்.
பிறகு எல்லோரும் சேர்ந்து வால்டாக்ஸ் சாலையில் இருந்த ஒற்றைவாடை தியேட்டரில் பாகவதரையும் என்.எஸ். கிருஷ்ணனையும் சந்தித்துப் பேசியதாகவும் தெரிவித்தார். இந்தக் கொலையைச் செய்ய பாகவதரும் என்.எஸ். கிருஷ்ணனும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் பணம் பேசியதாகவும் சொன்னார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பாகவதரையும் என்.எஸ். கிருஷ்ணனையும் கைதுசெய்ய காவல்துறை முடிவுசெய்தது.
கோயம்புத்தூரில் இருந்த என்.எஸ். கிருஷ்ணின் வீடு சோதனையிடப்பட்டது. முடிவில் டிசம்பர் 27ஆம் தேதி சென்ட்ரல் ஸ்டுடியோஸில் நடித்துக்கொண்டிருந்த என்.எஸ். கிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டார். ரயிலில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
அதே நாளில் சென்னையில் 'உதயணன் வாஸவதத்தா' படத்தில் நடித்துக்கொண்டிருந்த பாகவதரும் கைது செய்யப்பட்டர். அவ்வளவுதான். இந்தக் கொலை விவகாரம், மாநிலம் முழுவதும் பேசப்படும் விவகாரமாக மாறியது.
அடுத்த இரு நாட்களில் பாகவதருக்கும் என்.எஸ். கிருஷ்ணனுக்கும் பிணை வழங்கப்பட்டது. ஆனால், இருவரும் சிறையிலிருந்து வெளிவந்த உடனே, சென்னையை விட்டு வெளியேறிவிட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர்களும் அதன்படியே சென்னையைவிட்டு வெளியேறினர்.
அந்த நேரத்தில் 'சிவகவி' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர் ஸ்ரீ ராமுலு நாயுடு. இதே வழக்கில் ஜனவரி ஐந்தாம் தேதி அவரையும் காவல்துறை கைது செய்தது. இவருக்கு பிணை மறுக்கப்பட்டது. கைது நடவடிக்கைகள் எல்லாம் முடிந்து, ஜனவரி 27ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வடிவேலு, எஸ். நாகலிங்கம், எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு, ஆர்ய வீர சேனன், ஏ. ராஜா பாதர், பி. ஆறுமுகம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ராமலிங்கம், ராஜரத்தினம், ராஜகோபால் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
பிணையில் இருந்த காலகட்டத்தில், என்.எஸ். கிருஷ்ணன் தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் வேகமாக நடித்தார். ஆனால், பாகவதரிடம் காளிதாஸ், ஜீவகன், ஸ்ரீ முருகன், வால்மீகி உள்ளிட்ட 9 படங்கள் கைவசம் இருந்தும் எதுவும் முன்னேறவில்லை.
இதற்கிடையில், பாகவதரும் என்.எஸ். கிருஷ்ணனும் வெளியில் இருப்பது வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்பதால், அவர்களை மீண்டும் கைதுசெய்ய வேண்டுமென அரசுத் தரப்பு கோரியது. இதையடுத்து இருவரும் பிப்ரவரி 12ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கி மார்ச் 13ஆம் தேதிவரை நடைபெற்றது. மொத்தமாக 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் குற்றத்தைச் செய்திருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறி, விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி துவங்கியது. நீதிபதி சர் வெரெ மாக்கெட் வழக்கை விசாரித்தார். 24 நாட்கள் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணையின்போது ஜெயானந்தன் பிறழ் சாட்சியானார்.
தான் முன்பு சொன்னதை அப்படியே மாற்றிச் சொன்னார். காவல்துறையினர் அடித்ததால்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகச் சொன்னார். இந்தக் கொலை விவகாரத்தைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றார். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் பாகவதரும் என்.எஸ். கிருஷ்ணனுமே கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இருந்தாலும் விசாரணை தொடர்ந்து நடந்தது. என்.எஸ். கிருஷ்ணனும் பாகவதரும் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் ஒற்றைவாடை தியேட்டருக்கு போகவே இல்லை என்றும் சொன்னார்கள். விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, ஸ்ரீ ராமுலு நாயுடுவுக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பில்லை என்று தெரிய வந்திருப்பதாகவும் அவர் மீதான குற்றச்சாட்டைத் தொடர விரும்பவில்லை என்றும் அரசுத் தரப்பு தெரிவித்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
விசாரணை, குறுக்கு விசாரணை முடிந்து 1945ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றி பெரும் கூட்டம் கூடியிருந்தது. மற்றவர்கள் தண்டிக்கப்பட்டாலும்கூட, பாகவதரும் என்.எஸ். கிருஷ்ணனும் எப்படியும் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
நீதிபதி மாக்கெட் தீர்ப்பைச் சொன்னார். வழக்கிலிருந்து ஆறுமுகம் என்பவரை முதலில் விடுவித்தார் நீதிபதி. பிறகு, வடிவேலு, நாகலிங்கம், எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், ஆரிய வீர சேனன், ராஜாபாதர் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயானந்தம் மீது பொய் சாட்சி சொன்னதாக வழக்குத் தொடரப்பட்டது.
அனைவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். என்.எஸ். கிருஷ்ணன் தைரியமாக இருந்தாலும் பாகவதர் மனமுடைந்து போனார். பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும் பலன் ஏதும் கிடைக்கவில்லை. அங்கேயும் தண்டனை உறுதியானது.

பட மூலாதாரம், Getty Images
பிறகு, லண்டனில் உள்ள ப்ரைவி கவுன்சிலில் என்.எஸ்.கிருஷ்ணனும் பாகவதரும் மேல் முறையீடு செய்ய முடிவு செய்தனர். இந்த இருவரைத் தவிர மற்றவர்கள், அவ்வளவு செலவு செய்ய முடியாது என்பதால் மேல் முறையீட்டிற்குச் செல்லவில்லை.
முறையீடு செய்வதற்கான அனுமதி 1946ஆம் ஆண்டின் மத்தியில்தான் கிடைத்தது. 1947 பிப்ரவரியில் விசாரணை துவங்கியது. பிரைவி கவுன்சிலில் பிரபல வழக்கறிஞரான வி.எல். எத்திராஜ் முதலியார் இவர்களுக்காக சிறப்பாக வாதிட்டார். ஏப்ரல் 25ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த பிரைவி கவுன்சில் என்.எஸ். கிருஷ்ணனையும் பாகவதரையும் விடுவித்தது.
அடுத்த நாள் பிற்பகல் ஒன்றேகால் மணியளவில், இருவரும் சென்னை சிறையிலிருந்து விடுதலையானார்கள். அவர்களை வரவேற்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. என்.எஸ். கிருஷ்ணன், நாடக சபைக்குச் சென்றுவிட, எம்.கே. தியாகராஜ பாகவதர் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்றார். இருவரும் மொத்தமாக 27 மாதங்கள் அதாவது 2 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறையில் இருந்தனர்.
பொய் சாட்சி சொன்னதாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயானந்தத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டது. லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மற்றவர்கள், முழு தண்டனையையும் அனுபவித்துவிட்டு விடுதலையாயினர்.
என்.எஸ். கிருஷ்ணன் அதற்குப் பிறகும் தொடர்ச்சியாக நடித்தார். 1947இல் விடுதலையானது முதல் 1957ல் இறக்கும்வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் என்.எஸ். கிருஷ்ணன்.
ஆனால், தியாகராஜ பாகவதரின் செல்வாக்கு அதற்குப் பிறகு இறங்கு முகத்திலேயே இருந்தது. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, அவர் நடித்த ஐந்து படங்கள் வெளியாயின. ஆனால், எதுவும் பெரிதாக ஓடவில்லை. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர், 1959இல் காலமானார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












